Home தேசிய national tamil பாகிஸ்தானுக்கு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3 இந்தியர்கள் – 30 மாதங்கள் அங்கு என்ன செய்தனர்?

பாகிஸ்தானுக்கு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3 இந்தியர்கள் – 30 மாதங்கள் அங்கு என்ன செய்தனர்?

14
0

SOURCE :- BBC NEWS

ஜோகிந்தர் சிங், குர்மேஜ் சிங், சிந்தர் சிங், பாகிஸ்தான்

பட மூலாதாரம், KuldeepBrar/BBC

அது 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த விஷயம். பஞ்சாபில் பெய்த பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால், சட்லஜ் நதிக்கரையோர நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகளின் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

பெரோஸ்பூர் மாவட்டத்தின் கில்சே கிராமத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங், குர்மேஜ் சிங் மற்றும் சிந்தர் சிங் ஆகியோர் வெள்ளத்தின் போது தங்கள் டிராக்டரை உயரமான இடத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது சட்லஜ் ஆற்றில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்த வலுவான நீரோட்டம் அவர்களை அடித்துச் சென்றது.

அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து குடும்பத்தினருக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை. பின்னர், பாகிஸ்தானில் இருந்து கிடைத்த செய்திகளின் மூலம், அவர்கள் நதியின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு பாகிஸ்தானை அடைந்தது தெரியவந்தது.

அவர்களது குடும்பத்தினர், உள்ளூர் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. பின்னர், இரு நாடுகளின் ஒப்புதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசு சமீபத்தில் மூவரையும் இந்தியாவிடம் ஒப்படைத்தது.

‘திரும்பி வருவோம் என்ற நம்பிக்கை இல்லை’

ஜோகிந்தர் சிங், குர்மேஜ் சிங், சிந்தர் சிங், பாகிஸ்தான், சட்லஜ் நதி

பட மூலாதாரம், KuldeepBrar/BBC

“எங்கள் விவசாய நிலம் எல்லைக்கு அருகில் உள்ளது. அப்போது டிராக்டர் தண்ணீரில் சிக்கிக்கொண்டது. அதை மீட்பதற்காக நாங்கள் சென்றபோது, நதியின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு பாகிஸ்தானை அடைந்தோம்.” என்கிறார் ஜோகிந்தர் சிங்

அவர் மேலும் கூறுகையில், “அங்கே இருந்த சிலர் எங்களை அமரச் சொன்னார்கள், பிறகு போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் எங்கள் கண்களைக் கட்டி அழைத்துச் சென்றனர். ஆரம்பத்தில் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை எங்களை அடித்தார்கள். எங்களை வேண்டுமென்றே பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்களா என்றும் கேள்வி எழுப்பினார்கள்.”

“‘எங்களுக்கு எந்த தீய நோக்கமும் இல்லை என்றும், சட்லஜ் நதி வெள்ளத்தில் அடித்து வரப்பட்டே இங்கு வந்தோம்’ என்றும் அவர்களிடம் விளக்கமாகச் சொன்னோம். நாங்கள் சொன்னதில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, எங்களை அடிப்பதை நிறுத்திவிட்டனர்.”

“முதலில் எங்களை கசூர் சிறையிலும், பின்னர் லாகூர் சிறையிலும் அடைத்தனர். சிறையில் நாங்கள் தனித் தனியாக வைக்கப்பட்டோம். பல ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற இந்தியக் கைதிகளும் அங்கு இருந்தனர், ஆனால் யாரையும் சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை.”

“சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு, நீதிபதியின் அனுமதியுடன் வாரத்திற்கு ஒருமுறை எங்கள் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்து பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் எனது தந்தை இறந்துவிட்ட செய்தி எனக்குத் தெரியவந்தது.”

“நாங்கள் மீண்டும் இந்தியா திரும்புவோம் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. ஆனால், ஒருநாள் திடீரென்று நாங்கள் விடுவிக்கப்படுவதாக சொன்னார்கள். அதைக் கேட்டதும் எங்களுக்கு உண்டான மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. நாங்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்பக் காரணமான அரசாங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்கிறார் ஜோகிந்தர் சிங்.

சட்லஜ் நதி

பட மூலாதாரம், Getty Images

‘பெரும் மகிழ்ச்சி’

ஜோகிந்தர் சிங்கின் மனைவி சரோஜ் ராணி, “ஜோகிந்தர் சிங்கும் அவரது நண்பர்களும் சட்லஜ் நதியில் அடித்துச் செல்லப்பட்டு பாகிஸ்தானை அடைந்த செய்தி 25 நாட்களுக்குப் பிறகுதான் எங்களுக்குத் தெரியவந்தது. அதற்கு முன்பு அவர்கள் காணாமல் போனது குறித்து நாங்கள் புகார் அளித்திருந்தோம்.” என்கிறார்

“அவர்கள் பாகிஸ்தானில் இருந்ததை அறிந்ததும் மிகுந்த வருத்தமாக இருந்தது. குழந்தைகளும் அழுதுகொண்டே இருந்தனர், பள்ளிக்குச் செல்லவில்லை. எங்கள் வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் அவர் மட்டும்தான்.”

தனது கணவர் திரும்பியது குறித்து சரோஜ் ராணி கூறுகையில், “நாங்கள் குருத்வாராக்கள், கோவில்கள் மற்றும் மசூதிகளில் வேண்டிக்கொண்டோம். அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. தனியார் பள்ளியில் படித்து வந்த இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை என்பதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது, அவர் வீடு திரும்பியிருப்பது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.”

சட்லஜ் நதியின் பாகிஸ்தான் பகுதியில் 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

பட மூலாதாரம், Getty Images

“நீரில் அடித்துச் செல்லப்பட்டு பாகிஸ்தானை அடைந்தோம். அங்கு சென்றடைந்ததும் அங்கிருந்த பொதுமக்கள் எங்களைப் பிடித்து வைத்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்றும், எங்களை உள்ளூர் போலீஸ் அல்லது ராணுவத்திடம் ஒப்படைக்குமாறு அவர்களிடம் கெஞ்சினோம். அவர்கள் ஏதோ ஒரு துறைக்கு போன் செய்தார்கள், அதிகாரிகள் எங்கள் முகத்தை மூடி அழைத்துச் சென்றனர்.” என்கிறார் குர்மேஜ் சிங்.

“ஆரம்பத்தில் எங்களை அடித்தார்கள், ஆனால் பின்னர் நாங்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட செய்திகள் வெளியான பிறகு அடிப்பதை நிறுத்திவிட்டனர். சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவே எங்களுக்கும் வழங்கப்பட்டது.”

“நாங்கள் மீண்டும் திரும்புவோம் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. நாடு திரும்பப் போகிறோம் என்ற செய்தி கிடைத்ததும், மகிழ்ச்சியில் இரண்டு நாட்களாகத் தூக்கமே வரவில்லை.”

குர்மேஜ் சிங்கின் தாயார் மஞ்சித் கெளர், “எனது மகன் சட்லஜ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட செய்தி எங்களுக்குப் பல நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. மகன் இல்லாத வாழ்க்கை எங்களுக்கு அர்த்தமற்றதாக இருந்தது. மிகவும் கடினமான அந்த நாட்களை, பிரார்த்தனை செய்துக் கழித்தோம்.”என்கிறார்

இப்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் கூறினார். “கடவுளுக்கு நன்றி, அவர் என் மகனுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்,” என மஞ்சித் கெளர் மகிழ்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘விசாரணையைப் பொறுத்தே அனைத்தும் முடிவு செய்யப்படும்’

“வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ எல்லை தாண்டி பாகிஸ்தானைச் சென்றடைபவர்களை, அங்குள்ள பாதுகாப்பு முகமைகள் விசாரணை செய்த பிறகு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையுடன் தொடர்பு கொள்ளும்.” என்கிறார் வழக்கறிஞர் மெஹர் சிங் மால்.

அவர் மேலும் கூறுகையில், “வேண்டுமென்றே திட்டமிட்டு மற்றொரு நாட்டுக்குச் செல்லவில்லை என்பது உறுதியானால், அவர்களை அந்த நாடு திரும்ப அனுப்பும். அவர்கள் திரும்புவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் இல்லை. அனைத்தும் விசாரணையைப் பொறுத்ததே.”

“பாகிஸ்தானில் இருந்து திரும்புபவர்கள் ஒவ்வொருவர் மீதும் இந்தியாவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எல்லை தாண்டியது தற்செயலாக நடந்ததா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதைப் பொறுத்தே இது அமையும்” என்றும் அவர் கூறினார்.

“இப்போது அவர்கள் திரும்பி வந்தது குறித்த தகவல் மட்டுமே எங்களுக்குத் தெரியும். அதைத் தவிர எங்களிடம் வேறு எந்தத் தகவலும் இல்லை” என்கிறார் எல்லைப் பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் தீப் சிங்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU