SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
51 நிமிடங்களுக்கு முன்னர்
இன்றைய (05/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் விமானத்தில் தீவிரவாதிகள் தப்பிச் செல்வதாக போலி இமெயில் அனுப்பியது யார் என இணையக் குற்ற காவல்துறையினர் விசாரணை என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புவுக்குச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் தப்பிச் செல்வதாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது.
இதனைத் தொடர்ந்து கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்தில் வந்த அனைத்து பயணிகளும் தனித்தனியாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தீவிரவாதிகள் தொடர்பாக போலி மின்னஞ்சல் அனுப்பியவர்கள் யார் என காவல்துறை விசாரித்து வருவதாக தினத்தந்தியில் வந்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சென்னை விமான நிலைய காவல்துறையினர் இணையக் குற்ற காவல்துறையினரின் உதவியுடன் மின்னஞ்சல் அனுப்பியவர்கள் ஏற்கனவே இத்தகைய புரளிகளைக் கிளப்பியவர்களா என்பது பற்றியும் விசாரணை நடைபெறுவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இருந்தாலும், குறிப்பிட்ட இ-மெயில் தகவலை போலி தகவல் என்று ஒதுக்கி விட முடியாது என்றும், அதில் உள்ள உண்மை தன்மையை தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் பயங்கரவாத கும்பலை சேர்ந்தவர்கள், காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தை திசை திருப்பும் நோக்கத்தில் இந்த தகவலை அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், விசாரணை நடத்தும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.” எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ கட்டண உயர்வு பற்றி அரசு பரிசீலனை

பட மூலாதாரம், Getty Images
ஆட்டோ கட்டணங்களை உயர்த்துவது பற்றி அரசு தீவிர பரிசீலனை இருக்கிறது எனப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம் கடந்த 2013ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2022 பிப்ரவரியில் பொதுநல வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த சென்னை நீதிமன்றம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் மீட்டர் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பு வரவில்லை என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை விரைந்து உயர்த்தக் கோரி போக்குவரத்துத் துறைக்கு உரிமை குரல் ஓட்டுநர் சங்க பொதுச்செயலர் ஜாஹிர் உசைன் மனு அனுப்பியிருந்தார். இதற்கு துறை சார்பில் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், கடந்த பிப்ரவரியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்னிலையில் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தின் பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது எனப் போக்குவரத்து துறை பதிலளித்துள்ளதாக தினமணி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானப் படை தளபதியுடன் பிரதமர் மோதி ஆலோசனை

பட மூலாதாரம், Getty Images
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடரும் பதற்றத்திற்கு மத்தியில் விமானப் படைத் தளபதியுடன் பிரதமர் மோதி ஆலோசனை நடத்தியதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவுகிற நிலையில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமானப் படை தளபத் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி சிங் ஞாயிறு அன்று பிரதமர் மோதியை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதி, பாதுகாப்பு படை தலைமை தளபதி ஆகியோருடன் பிரதமர் மோதி கடந்த வாரம் ஆலோசனை நடத்தியிருந்தார்.
கடந்த சனிக்கிழமை கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பிரதமரைச் சந்தித்து தனியாக ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து விமானப் படைத் தளபதியும் பிரதமர் மோதியை தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்புகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் எல்லையில் பதற்றம் நிலவுகிற நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் இயங்கி மணல் லாரிகளின் உரிமையாளர்கள் சங்கம் வருகிற மே 23ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு முறைகேடுகள் பற்றிய அமலாக்கத் துறையின் வழக்குகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மற்றும் பணிமனைகள் மூடப்பட்டிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ்நாட்டில் 55,000-க்கும் அதிகமான மணல் லாரிகளும் சுமார் ஒரு லட்சம் லாரி ஓட்டுநர்களும் வருமானம் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். பலரும் வாகனத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்” என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் தற்கொலையில் சக மாணவர்கள் நான்கு பேர் கைது

பட மூலாதாரம், Getty Images
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் தற்கொலை தொடர்பாக சக மாணவர்கள் நான்கு பேர் செய்யப்பட்டுள்ளதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை பொலிஸால் கைது செய்யப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணைகள் தொடர்பாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாணவர் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து, துன்புறுத்தலுக்கு ஆளான சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்களில் 20 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக மாணவர்கள் திங்கட்கிழமை பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்கள் அந்த செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU