SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இன்றைய (01/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடன் பதற்றம் அதிகரித்து வருவதால் எல்லைப் பகுதியில் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை நேற்று (ஏப்ரல் 30) மீண்டும் ஆலோசனை நடத்தியது. இதனிடையே, இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை (சிசிஎஸ்) முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, விசா நிறுத்தம் உள்ளிட்ட சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்தது.
இந்நிலையில், “பிரதமர், மூத்த அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்கனவே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை (சிசிஎஸ்) கூட்டம் பிரதமர் மோதி தலைமையில் நேற்று நடைபெற்றதாக” இந்து தமிழ் திசையில் வெளியான செய்தி கூறுகிறது.
“இதில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
எல்லையில் தொடர்ந்து 6வது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்துவதால், அந்நாட்டுக்கு இந்தியா நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதனால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது,” என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை என, எதை வைத்து மிரட்டினாலும் கவலைப்பட மாட்டோம் – மு.க. ஸ்டாலின்
சி.பி.ஐ, அமலாக்கத்துறை என மத்திய அரசு எதை வைத்து மிரட்டினாலும் கவலைப்படவும் மாட்டோம் அச்சப்படவும் மாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்பாகவும் முதல்வர் பேசியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
அதில், “வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில், தி.மு.க., கூட்டணி 200, 220 இடங்களில் வெல்லும் என இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். அதில் என்ன கஞ்சத்தனம்? 234 என்றே சொல்லுங்கள். வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏன் என்றால், செல்லும் இடங்களில் எல்லாம், அந்த வரவேற்பைப் பார்க்கிறேன். நம்மை எதிர்ப்பவர்கள், எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம். வருமான வரித்துறை, புலனாய்வுத் துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எதை வைத்து மிரட்டினாலும் கவலைப்பட மாட்டோம், அஞ்சவும் மாட்டோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாக கூறப்பட்டுள்ளது.
அதே போல் ஏழாவது முறையும் தி.மு.க ஆட்சி அமையும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதைப் பற்றிக் குறிப்பிடுகையில், “ஒரு நாளும் சர்வாதிகாரத்திற்குத் துணை போகமாட்டோம் என்பதால், 1975இல் நெருக்கடி நிலையை அன்றைய முதல்வர் கருணாநிதி எதிர்த்தார். அப்படி உறுதியோடு இருந்ததால்தான், ஆறு முறை தி.மு.க., ஆட்சி அமைத்தது. ஏழாவது முறையாக தி.மு.க.. ஆட்சி அமையும்” என்றார்.
பாண்டியர் காலத்து வரி விதிப்பு முறை தொடர்பான கல்வெட்டு கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் பாண்டியர்களின் ஆட்சிக்காலமான 13ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த வரிமுறை தொடர்பான கல்வெட்டுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டுகள் பரமக்குடியில் உள்ள எமனேஸ்வரத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலின் மல்லிகர்ஜுனேஸ்வரர் சன்னதியில் சுயாதீன அகழ்வாராச்சியாளர் ராஜகுரு தலைமையிலான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டுகள் பாண்டிய மன்னரன மாரவர்மன் ஒன்றாம் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை என ராஜகுரு தெரிவிப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பதிவு செய்துள்ளது.
“சுந்தர பாண்டியன் சோழர்களின் பிடியிலிருந்து மதுரையை மீட்டதால் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ என்கிற பட்டம் உள்ளது. இந்த இரண்டு கல்வெட்டுகளையும் தாங்கி நிற்கும் கல் ஏற்கெனவே 1914ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டில் 11 வரிகள் உள்ளன. இவை நில தானங்கள், நில அளவுகள் மற்றும் கோவிலுக்கு நிலத்தைத் தானமாக அளித்த பிறகு விலக்கிக் கொள்ளப்பட்ட வரிகள் தொடர்பாக பேசுகின்றன” என்று ராஜகுரு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்வதால் போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்துகொண்டதால் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உதகையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போன வழக்கில் உதகை மகளிர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு குறித்த விசாரணையில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தச் செய்தியில் “உதகையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரை போலீசார் விசாரித்தபோது, விஜயகுமார் என்ற இளைஞருடன் அந்தச் சிறுமி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, விஜயகுமார் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில், விஜயகுமாரும், தானும் காதலித்து வந்ததாகவும் இதையறிந்த பெற்றோர் தனக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முயன்றதால் விஜயகுமாருடன் சென்றதாகவும் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த வழக்கில் உதகை மகளிர் சிறப்பு நீதிமன்றம், போக்சோ வழக்கில் இருந்து இளைஞரை விடுவித்து, கடத்தல் வழக்கில் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.” இந்த உத்தரவை எதிர்த்து விஜயகுமார் மற்றும் காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக அந்தச் செய்திக் குறிப்பு விவரிக்கிறது.
அந்தச் செய்தியின்படி, மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் போக்சோ பிரிவை மீண்டும் சேர்த்து, அந்தக் குற்றத்திற்காகக் கூடுதல் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது. நீதிபதி பி.வேல்முருகன் இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அப்போது, “திருமணத்தை நிறுத்த வேண்டுமென்றால் அவர் காவல்துறையிடம் தெரிவித்திருக்க வேண்டும். குற்றவாளி போக்சோ வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கில் திருமணம் செய்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்டதைக் காரணமாகக் கூறி இந்த வழக்கை ரத்து செய்தால் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டதற்கான நோக்கம் தோற்கடிக்கப்பட்டு விடும்” என்று நீதிபதி தெரிவித்ததாக அந்தச் செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான இலங்கை – பாகிஸ்தான் கலந்துரையாடல்

பட மூலாதாரம், Ministry of Defence/Sri Lanka
இலங்கை, பாகிஸ்தான் இடையிலான வருடாந்திர இருதரப்பு பாதுகாப்பு உரையாடல் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஆரம்பமானதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இந்த உரையாடல் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில் நடைபெறுவதாகவும் வீரகேசரி குறிப்பிட்டுள்ளது.
“இலங்கைக் குழுவுக்கு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமை தாங்குகிறார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) ஜயந்த எதிரிசிங்க ஆகியோரும் இணைந்துகொண்டனர்.
அதேபோன்று, பாகிஸ்தான் குழுவுக்கு பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முஹமது அலி (ஓய்வு) தலைமை தாங்குகிறார்” என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான இந்த உயர்மட்ட உரையாடல் ஆனது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்த பரஸ்பர புரிதலை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் வீரகேசரி தெரிவித்துள்ளது.
மேலும் அந்தச் செய்தியில், “இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பில் வேரூன்றிய நீண்டகால உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. தெற்காசிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதிலும் அமைதியை மேம்படுத்துவதிலும் கூட்டாண்மைகளின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இந்த உரையாடல் பிரதிபலிக்கிறது. இந்த உரையாடல், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு பரந்த பிராந்திய பாதுகாப்பு நோக்கங்களுக்குப் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU