Home தேசிய national tamil பறவைக்காய்ச்சல் அச்சம்: கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாமா? மருத்துவர்கள் விளக்கம்

பறவைக்காய்ச்சல் அச்சம்: கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாமா? மருத்துவர்கள் விளக்கம்

14
0

SOURCE :- BBC NEWS

பறவை காய்ச்சல், முட்டை, கோழி இறைச்சி சாப்பிடலாமா?

பட மூலாதாரம், Getty Images

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பல காகங்கள் திடீரென உயிரிழந்ததையடுத்து, அவற்றின் மாதிரிகளை பரிசோதித்ததில் அவற்றுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுவரை, தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் மனிதர்களிடத்தில் உறுதி செய்யப்படவில்லையென்றாலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது.

மேலும், “திடீரென இறந்த கோழிகளின் இறைச்சியை சாப்பிட வேண்டாம், ஆஃப்-பாயில் எடுத்துக்கொள்ளக் கூடாது” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியான ஊடக செய்திகளில், முட்டையில் செய்யப்படும் ஆஃப்-பாயிலை சாப்பிடக் கூடாது என்று அமைச்சர் கூறியதாகவே இருந்தன. இதனால் தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர், ‘கோழி இறைச்சியை முழுமையாக சமைத்து சாப்பிட வேண்டும், அந்த இறைச்சியை ஆஃப்-பாயிலாக (அரைவேக்காடு) சாப்பிடக் கூடாது’ என்றே கூறியதாக விளக்கமளித்துள்ளார்.

பறவை காய்ச்சல் பரவும் சமயங்களில் உண்மையிலேயே கோழி இறைச்சி, முட்டை உண்ணும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்?

பறவை காய்ச்சல் என்பது என்ன?

பறவைகள், சில சமயங்களில் நரி, நீர்நாய் போன்ற விலங்குகளிடையே பரவும் வைரஸ் பாதிப்பே பறவை காய்ச்சல். H5N1 எனப்படும் வைரஸ் திரிபால் இந்த பறவை காய்ச்சல் ஏற்படுகிறது. 1990களின் பிற்பகுதியில் தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. 2024-ஆம் ஆண்டு அமெரிக்காவில் மாடுகளிடத்தில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

பறவை காய்ச்சல் ஏற்பட்ட பறவைகள் எவ்வித அறிகுறிகளும் இன்றி திடீரென இறக்கலாம். இருப்பினும்,

  • மூக்கில் நீர் வடிதல்
  • முட்டை குறைதல்
  • வயிற்றுப்போக்கு

உள்ளிட்ட பல அறிகுறிகள் பறவைகளிடத்தில் தென்படும் என, அமெரிக்க கால்நடை மருத்துவச் சங்கம் கூறுகிறது.

தமிழ்நாடு அரசு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

சில தினங்களுக்கு முன்பு சென்னையின் சில பகுதிகளில் இறந்து விழுந்த காகங்களின் மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவற்றுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கடந்த 5-ம் தேதி பறவை காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

பறவை காய்ச்சல், முட்டை, கோழி இறைச்சி சாப்பிடலாமா?

பட மூலாதாரம், Getty Images

அதன்படி,

  • ஃப்ளூ போன்ற அறிகுறிகள் – இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
  • பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும். ஏதேனும் ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம்/ அரசு மருத்துவமனை/மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
  • அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால்நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும். கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • முழுமையாக சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
  • பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • இந்நோய் சம்பந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.
  • கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண். 104-ஐ தொடர்புகொள்ளவும்.

பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா?

இது, அரிதாகவே பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுவதும் அரிதாகவே கண்டறியப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல், முட்டை, கோழி இறைச்சி சாப்பிடலாமா?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு பொது சுகாதார துறை அறிவிப்பில், “பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் இறந்த பறவைகளை பரிசோதனை செய்வதன் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது இந்த வைரஸ் பாதிப்பு மனிதர்களிடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கம்போடியா, சீனா, வியட்நாம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட பறவைகள், விலங்குகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1997-ஆம் ஆண்டிலிருந்து சில நூறு பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் பாதி பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கோழி இறைச்சி, முட்டையை எப்படி சாப்பிடுவது?

பறவை காய்ச்சல், முட்டை, கோழி இறைச்சி சாப்பிடலாமா?

பட மூலாதாரம், Getty Images

அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக உள்ள எஸ். சந்திரசேகர் கூறுகையில், “பறவைகளை கையாள்பவர்கள், அதை வளர்ப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனிதர்களுக்கு எப்படி சளி, காய்ச்சல் வந்தால் அருகிலிருக்கும் மற்றவர்களுக்கு பரவுகிறதோ, அதுபோன்றே பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு எளிதில் பரவுகிறது. கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றை முழுமையாக சமைத்தே சாப்பிட வேண்டும்.

அவற்றை முறையாக கழுவிதான் சாப்பிட வேண்டும். முட்டையில் சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கிறது. எனவே, முட்டையை முதலில் நீரில் கழுவ வேண்டும். பின்னர் முழுமையாக அவித்தோ, ஆம்லெட்டாகவோ சாப்பிடலாம். ஆஃப் பாயில் அல்லது அப்படியே சாப்பிடுவதையோ தவிர்ப்பது நல்லது” என்றார்.

கோழி இறைச்சி என்றால், அதை வெந்நீரில் மஞ்சள் கலந்து கழுவிய பின்னரே சமைத்து சாப்பிட வேண்டும் என்றார். “கோழி இறைச்சியில் கிராம் பாசிட்டிவ், கிராம் நெகட்டிவ் உள்ளிட்ட பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் இருக்கும். எனவே, அதை கழுவிய பின்னரே முழுமையாக சமைத்து சாப்பிட வேண்டும். மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி”.

தொற்றுநோயியல் மருத்துவர் விஜயலஷ்மி கூறுகையில், பறவை காய்ச்சல் சமயங்களில் மட்டுமல்லாமல் எப்போதும் இறைச்சியை முழுமையாக சமைத்து சாப்பிடுவதே நல்லது என்கிறார். ஆஃப் பாயில் போன்றவற்றால் பறவை காய்ச்சல் பரவும் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றும் கூறினார்.

“ஆஃப் பாயில் மூலம் பறவை காய்ச்சல் பரவும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. பொதுவாகவே எந்தவித ஃப்ளூவும் முட்டையிலிருந்து பரவும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. மூக்கிலிருந்து வெளியாகும் சளி திரவம் மூலமாகவே பரவும். ஆனாலும், எப்போதும் கோழி இறைச்சி, முட்டையை முழுமையாக வேகவைத்து சாப்பிடுவதுதான் நல்லது. அதன்மூலம் மட்டுமே முழுமையான சத்து கிடைக்கும்.” என்றார்.

பறவை காய்ச்சல், முட்டை, கோழி இறைச்சி சாப்பிடலாமா?

உலக சுகாதார மையம் கூறுவது என்ன?

பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிடைக்கும் வைரஸ் பாதிப்பு இல்லாத கோழி இறைச்சி, முட்டைகள், பால் போன்றவற்றை முறையாக சமைத்து சாப்பிட்டால் அதுவும் பாதுகாப்பானதே என்கிறது உலக சுகாதார மையம்.

அப்பகுதிகளில் இருந்து பெறப்படும் இறைச்சி, முட்டைகளை சமைக்காமலோ அல்லது முழுமையாக சமைக்காமலோ சாப்பிடுவது ஆபத்தானது, அதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று, உடல்நிலை சரியில்லாத அல்லது திடீரென இறந்த விலங்குகளின் இறைச்சிகளை உண்பதையும் தவிர்க்க வேண்டும்.

பசும்பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். கிருமி நீக்கப்பட்ட பாலையே அருந்த வேண்டும் என உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது. இந்த பால் கிடைக்கவில்லையென்றால், பசும்பாலை காய்ச்சி அருந்த வேண்டும் என்கிறது உலக சுகாதார மையம்.

யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

நீரிழிவு, உடல் பருமன், தைராய்டு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர் சந்திரசேகர் கூறுகிறார். கோழிப்பண்ணைகள் உள்பட பறவைகளை கையாளும் இடத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இருமல், தும்மல் வரும்போது வாயை மூடிக்கொள்ள வேண்டும், கண்கள், மூக்கு, வாய் போன்றவற்றை கைகளால் தொடுதல் போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU