SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Ministry of Information & Broadcasting
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியா- பாகிஸ்தான் மோதல் தொடர்ந்து வருவது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வ்யோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.
இந்தியாவின் தாக்குதலில் இறந்தவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான் என்று கூறிய மிஸ்ரி, “பாகிஸ்தான் மேற்கொண்டு தாக்கினால், பதிலடி தரப்படும்” என்று கூறினார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் மே 7 அதிகாலையில் தாக்குதல் நடத்தியது.
இரு நாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பதற்றத்தைக் குறைக்குமாறு ஐ.நாவும் பாகிஸ்தானையும் இந்தியாவையும் கேட்டுக் கொண்டுள்ளன.
இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில், 57 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதல்களில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தற்போது வரை 16 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பான நிகழ்வுகள் குறித்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விளக்குவதற்காக, இந்திய அரசு தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. அதில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளன.
‘பாகிஸ்தான் இந்திய ராணுவ தளங்களை குறிவைக்கிறது’

பட மூலாதாரம், MEA
இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் இன்று நடத்திய கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வ்யோமிகா, இன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையிலிருந்த கருத்துகளையே மீண்டும் வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி, “தற்போதைய சூழ்நிலையைச் சுற்றியுள்ள தவறான தகவல்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை, ஆனால் ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதல் தான் பதற்றம் அதிகரித்ததன் தொடக்கம் என்பதை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்” என்று கூறினார்.
நேற்றைய வான்வழித் தாக்குதல், அந்த கொடிய பஹல்காம் தாக்குதலுக்கான ஒரு பதில் என்றும் அவர் கூறினார்.
மேலும், “பாகிஸ்தானின் ராணுவ தளங்களை நாங்கள் குறிவைக்கவில்லை. நாங்கள் எந்த மதவழிபாட்டு தலங்களையும் குறிவைக்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் இந்திய ராணுவ தளங்களை குறிவைக்கிறது. அதன் தாக்குதலில், அப்பாவி இந்தியர்கள் 16 பேர் உயிரிழந்தனர்” என்று கூறினார்.
இந்தியாவின் தாக்குதலில் இறந்தவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் தான் என்று கூறிய மிஸ்ரி, “இந்திய விமானத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கின் சில படங்களை நாங்கள் பார்த்தோம். பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள் என்றால், இறுதிச் சடங்கின் அந்தப் படம் என்ன செய்தியைத் தருகிறது என்று எனக்குத் தெரியவில்லை?” என்றார்.
அதன் பிறகு, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் இந்திய தாக்குதலில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டது தொடர்பான ஒரு புகைப்படத்தை காட்டினார்.
“ஒரு சாதாரண பாகிஸ்தான் குடிமகனின் இறுதிச் சடங்கு பாகிஸ்தான் கொடி மற்றும் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டதைப் பார்ப்பது விசித்திரமாக இருந்தது” என்று அவர் கூறினார்.
“எங்களை (இந்தியாவைப்) பொறுத்தவரை, அந்த இடங்களில் பயங்கரவாதிகள் இருந்ததாகவும், அங்கு கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்தத் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், அவரது இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டதாகவும் நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், MEA
இந்தச் செய்தியாளர் சந்திப்பில், “இந்திய வான்வழித் தாக்குதல்களால் நீலம்-ஜீலம் அணை சேதமடைந்ததாக பாகிஸ்தான் கூறுவது, அப்பட்டமான பொய், ‘பயங்கரவாத உள்கட்டமைப்புகள்’ மீது மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது” என்று மிஸ்ரி குறிப்பிட்டார்.
“தாக்குதல் நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத கட்டமைப்புகளுடன் தொடர்புடையவை” என அவர் வலியுறுத்தினார்.
‘பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க மத வழிபாட்டு தலங்களை பயன்படுத்துகிறது’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால், ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தங்களது நாட்டில் எந்தவொரு ‘பயங்கரவாத உள்கட்டமைப்பும்’ இல்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், சீக்கிய சமூகத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக மிஸ்ரி குற்றம் சாட்டினார்.
பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு குருத்வாரா மீது பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்ததாக அவர் கூறினார்.
மிஸ்ரியின் இந்த குறிப்பிட்ட கருத்துக்கு பாகிஸ்தான் இன்னும் பதில் அளிக்கவில்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் விமானங்கள் ரத்து

பட மூலாதாரம், Getty Images
விமான நிறுவனங்களின் பயண ஆலோசகர்கள் மற்றும் ஊடகத் தகவல்களின்படி, வட இந்தியாவில் இருக்கும் கிட்டத்தட்ட 20 விமான நிலையங்கள், மே 10ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
விமான நிலைய ஒழுங்குமுறை ஆணையமோ, விமான போக்குவரத்துத் துறை அமைச்சகமோ இது குறித்து அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
புதன்கிழமை, பாகிஸ்தான் மீது இந்தியா வான்வெளி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பல விமான நிலையங்கள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, விமான நிறுவனங்கள் வழிகாட்டுதல்களை வழங்கின.
நானூறுக்கும் அதிகமான விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தன. விமான நிலையங்களில் இருந்து பயணிகள் திருப்பி அனுப்பப்படுவதை தொலைக்காட்சி செய்திகள் காட்டின.
பாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் சியால்கோட் விமான நிலையங்களில் இருந்து ‘நிர்வாக காரணங்களுக்காக’ விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அந்த நாட்டின் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தர்மசாலாவில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி மாற்றம்

பட மூலாதாரம், Getty Images
ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் தர்மசாலாவில் வரும் ஞாயிறு நடப்பதாக இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்-க்கும், மும்பை இந்தியன்ஸுக்கும் நடக்க இருக்கும் அந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மதியம் அகமதாபாத்தில் நடைபெறும் என்று குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அனில் படேல், உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மே 10 வரை மூடப்பட்டிருக்கும் விமான நிலையங்களுள் தர்மசாலாவும் ஒன்று என்பதால், இந்தப் போட்டி நடப்பதைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
பாகிஸ்தானின் பாதிப்பை விளக்கும் புதிய செயற்கைக்கோள் படங்கள்

பட மூலாதாரம், Maxar Technologies
புதன்கிழமை மாலை, மாக்சர் டெக்னாலஜிஸ் எனும் அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் புதிய செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது. அதில் இந்திய ராணுவத்தால் தாக்கப்பட்ட பாகிஸ்தானின் இரண்டு முக்கிய இடங்களில் ஏற்பட்ட சேதத்தைக் காண முடிகிறது.
தாக்குதல்களுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட படங்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் மற்றும் நங்கல் சஹ்தான் ஆகிய இரண்டு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள சேதத்தைக் காட்டுகின்றன.
பஹவல்பூரில், நகரின் மேற்கு புறநகரில் உள்ள சுப்ஹான் அல்லா மசூதியின் கூரையின் ஐந்து குவிமாடங்களில் மூன்று சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. சுமார் 165 மீ தொலைவில், அதன் அருகிலுள்ள கட்டடங்களும் தாக்கத்தின் அறிகுறிகளைக் காட்டுகின்றன.
நங்கல் சஹ்தான் என்ற சிறிய நகரத்தில், சுமார் 150 மீட்டர் இடைவெளியில் இருக்கும் இரண்டு கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக படங்கள் காட்டுகின்றன. ஒன்று பகுதியளவு சேதமடைந்ததாகவும், மற்றொன்று முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

பட மூலாதாரம், Maxar Technologies
பாகிஸ்தான் தாக்குதலில் 16 பொதுமக்கள் உயிரிழப்பு – இந்தியா தகவல்
புதன்கிழமை காலையில் இருந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மூன்று பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 15-ல் இருந்து 16 ஆக உயர்ந்தது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து பாகிஸ்தான் முன்னறிவிப்பு இல்லாமல் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளதாக இந்தியா ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் குப்வாரா, பாராமுல்லா, உரி, பூஞ்ச், மேந்தர் மற்றும் ரஜோரி ஆகிய இடங்களில் பாகிஸ்தான் பீரங்கிகள் மற்றும் அதிக திறன் கொண்ட ராணுவ ஆயுதங்கள் மூலம் நடத்தி வருகிற தாக்குதல்களை பதில் நடவடிக்கைகளை எடுத்து தடுத்து நிறுத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி நிச்சயம் – ஜெய்சங்கர்

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுடனான ‘நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கம்’ இந்தியாவிற்கு இல்லை என்றும், ஆனால் இந்தியா மீதான எந்தவொரு ராணுவத் தாக்குதலுக்கும் ‘மிகவும் உறுதியான பதிலடி’ வழங்கப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 20வது இந்தியா-இரான் கூட்டு ஆணையக் கூட்டத்தில் ஜெய்சங்கர் உரையாற்றினார். அங்கு அவர் இந்தியாவிற்கு வந்திருக்கும் இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியை வரவேற்றார். இந்தியா-இரான் நட்பு ஒப்பந்தத்தின் 75 ஆண்டுகளை இரு நாடுகளும் கொண்டாடுகின்றன.
“ஒரு காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுக்கும் நேரத்தில் நீங்கள் இந்தியாவுக்கு வருகை தருகிறீர்கள்,” என்று ஜெய்சங்கர் கடந்த மாதம் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிப்பிட்டு பேசினார்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் பாகிஸ்தான் மறுத்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மீதான இந்தியாவின் வான்வழித் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், “நிலைமையை மேலும் மோசமாக்குவது எங்கள் நோக்கமல்ல. இருப்பினும், எங்கள் மீது ராணுவத் தாக்குதல்கள் நடந்தால், அதற்கு மிக உறுதியான பதிலடி வழங்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
“ஒரு அண்டை நாடு என்ற நோக்கத்திலும், ஒரு நட்பு நாடாகவும், நிலைமையை நீங்கள் நன்கு புரிந்துகொள்வது முக்கியம்” என்று இரானிய வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் கூறினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய இரான் முன்பு முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டிரோன்களை அழித்ததாகக் கூறும் பாகிஸ்தான்
நேற்றிரவு வெவ்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்ட 25 இந்திய டிரோன்களை அழித்துள்ளதாக பாகிஸ்தானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெஃப்டினெண்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி தெரிவித்தார்.
இந்தக் கூற்றுகளுக்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
லாகூர், குஜ்ரன்வாலா, சக்வால், அட்டாக், ராவல்பிண்டி, பஹவல்பூர், மினாவலி, கராச்சி ஆகிய பகுதிகளில் இந்த டிரோன்களை அழித்ததாக லெஃப்டினெண்ட் ஜெனரல் சௌத்ரி கூறியுள்ளார்.
இவற்றில் ஒரு டிரோன் கீழே விழுந்ததில் சிந்த் மாகாணத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
லாகூரில் உள்ள ஒரு ராணுவ முகாமைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும், ஒரு கட்டமைப்பு சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தநிலையில், பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை குறி வைத்து அழித்ததாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
“லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்பட்டுள்ளது,” என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியா எவ்வாறு அமைப்புகளை குறிவைத்தது என்பது பற்றிய விவரங்களை அறிக்கையில் அளிக்கவில்லை.
இருநாடுகளின் கூற்றையும் பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை
ஷார்ட் வீடியோ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

SOURCE : BBC