Home தேசிய national tamil ‘நிலவுக்குச் செல்லும் உடல் தகுதி’ – உங்களுக்கு இருக்கிறதா என தெரிந்துகொள்வது எப்படி?

‘நிலவுக்குச் செல்லும் உடல் தகுதி’ – உங்களுக்கு இருக்கிறதா என தெரிந்துகொள்வது எப்படி?

6
0

SOURCE :- BBC NEWS

நிலாவுக்குச் செல்லும் உடல் தகுதி இருக்கிறதா? தெரிந்துகொள்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

அடுத்த சில ஆண்டுகளில் ஆர்ட்டெமிஸ் விண்கலம் நிலவில் தரையிறங்கும்போது, அதன் குழுவினர் சவாலான சூழலையும் தீவிர தனிமைப்படுத்தலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனிமை நிரம்பிய நிலவில் ஒருவர் செழித்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

நாசா விண்வெளி வீரர் விக்டர் க்ளோவர், “விண்வெளி மிகவும் சவாலானது. இது வெளித்தோற்றத்திற்குத் தெரிவதைவிட மிகக் கடினமானது. அதை நாங்கள் அதிகமாகச் சொல்லிக் கொள்வதில்லை,” என்கிறார்.

ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தனது பயணத்தைத் தொடங்குவதற்குச் சற்று முன்பு நான் அவரிடம் பேசினேன். ஆனால், விண்கலனை டாக்கிங் செய்யும்போது, அதன் இயந்திர அமைப்பில் ஒரு பிரச்னை ஏற்பட்டு வேலை செய்வதை நிறுத்தியது. இதன் காரணமாக, விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியாமல் எட்டு மாதங்களை விண்வெளியில் கழிக்க வேண்டியிருந்தது. க்ளோவர் முன்பு கூறியது உண்மை என்பதை இந்தச் சம்பவம் தெளிவாகக் காட்டியது.

விண்வெளி வீரர் விரைவில் ஆர்ட்டெமிஸ்-2வின் கட்டுப்பாடுகளைத் தன்வசப்படுத்தி, நிலவுக்கு அப்பால் செல்லவிருக்கும் முதல் குழுவுடன் கூடிய ஓரியன் விண்கலனை இயக்குவார். இது மனிதர்கள் இதற்கு முன்பு சென்றதைவிட அதிக தொலைவு. 10 நாட்களுக்கு, க்ளோவர் தனது குழுவினர் மூவருடன் ஒரு சிறிய பெட்டி போன்ற விண்கலனுக்குள் வாழ்வார்.

அவர் தனது பொறுப்புகளை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. “எங்களிடம் தண்ணீர் உள்ளது. ஆனால், அதைக் குடித்தவுடன், தீர்ந்துவிடும். உணவும் அப்படித்தான். அதைச் சாப்பிட்டவுடன் முடிந்துவிடும். அதை எங்களுக்கு அதிகமாகக் கொடுக்க யாரும் வேறு விநியோக விண்கலனை அனுப்பப் போவதில்லை” என்கிறார் அவர்.

எளிமையான அன்றாட நடவடிக்கைகள்கூட சவாலானவையாக எரிச்சலூட்டுபவையாக மாறக்கூடும். “தனியுரிமை என எதுவும் இருக்காது. கழிவறைக்குள் சென்று கதவை மூடலாம், ஆனால் அங்கு இயந்திரத்தை இயக்கியதும் அனைவரும் எழுப்பப்படலாம்.”

“இவையெல்லாம் வேறுபட்ட வகையிலான உளவியல் மேம்பாடு தேவைப்படும் விஷயங்கள்.”

ஆர்ட்டெமிஸ்-2 என்பது மனிதகுலம் இறுதியில் நிலவுக்குத் திரும்பிச் செல்வதற்கான முதல் படி. அமெரிக்கா தலைமையிலான எதிர்கால பயணங்கள் மனிதர்களை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கி அதன் தென் துருவத்திற்கு அருகில் ஒரு தளத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து பல நாட்களுக்கு வெகு தொலைவில் இருப்பார்கள். தங்கள் சக ஊழியர்களுடன் மட்டுமே மாதக்கணக்கில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வாழ்வார்கள். இரண்டு வாரங்கள் நீடிக்கும் இரவுகளில், வெளியே தூசு நிறைந்து, காற்றற்று இருக்கும் சூழ்நிலையில், தீவிர வெப்பநிலை மற்றும் சேதப்படுத்தும் அளவிலான கதிர்வீச்சு நிறைந்திருக்கும் பகுதியில் இருப்பார்கள்.

நிலவுக்குப் பயணம் செய்வது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சவாலானதாக இருக்கும். அதோடு, அந்தப் பணிக்குச் சரியான நபர்களைக் கண்டறிவது மிகவும் முக்கியம்.

“ஒரு விண்வெளி வீரரைத் தேர்வு செய்வது மிகக் கடினம். ஏனெனில், எந்தவொரு குறிப்பிட்ட துறையிலும் சூப்பர்மேனாக இருக்கும் ஒருவரை இதற்குத் தேடவில்லை. எல்லா துறைகளிலும் வல்லமை கொண்ட ஒருவரைத் தேட வேண்டும்,” என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்வெளி மருத்துவக் குழுவை வழிநடத்தும் செர்ஜி வாக்கர் அராஜோ கூறுகிறார். இவர், எதிர்கால நிலவுப் பயணங்களுக்கான விண்வெளி வீரர் தேர்வை மேற்பார்வையிட உதவுவார்.

நிலாவுக்குச் செல்லும் உடல் தகுதி இருக்கிறதா? தெரிந்துகொள்வது எப்படி?

பட மூலாதாரம், NASA/Getty Images

கடந்த 1950களில் நாசா தனது முதல் விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்தபோது, பட்டியலில் இருந்தவர்கள் அனைவரும் உச்சகட்ட உடல் தகுதியைக் கொண்ட சோதனை விமானிகளாக இருந்தனர். தேர்வின்போது, இந்த ஆண்கள் (பட்டியலில் இருந்த அனைவரும் ஆண்கள்) வாரக்கணக்கில் சோதனைகளைச் செய்ய வேண்டியிருந்தது. நுரையீரல் திறன் முதல் பார்வை வரை, குடல் அசைவுகள், விந்தணு எண்ணிக்கை என அனைத்து சோதனைகளையும் அது உள்ளடக்கி இருந்தது. இந்தக் கடினமான பரிசோதனைகள் அனைத்திலும் வெற்றிகரமாகத் தேர்ச்சியடைந்த ஆண்கள், விண்வெளி வீரர் ஆவதற்குத் தேவையான “சரியான தகுதிகளை” கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

இன்றைய விண்வெளி வீரர்கள் இனி விதிவிலக்காக உச்சகட்ட உடல் தகுதியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அவர்கள் சில அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

“பயணத்தின்போது உடல் செயல்பாட்டைத் தடுக்கும் எந்தவொரு நாள்பட்ட நோயைக் கொண்டிருப்பதும் தகுதியற்றதாக இருக்கும்,” என்கிறார் வாக்கர் அராஜோ. எனவே, கிட்டப்பார்வை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், நுரையீரலின் நிலைமை (ஆஸ்துமா போன்றவை), இதயக் கோளாறுகள் அல்லது நிறங்கள் தொடர்பான பார்வைக் குறைபாடு ஆகியவை சிறப்பான தகுதியைக் கொண்டிருப்பவர்களைக்கூட நிராகரிக்க வைக்கக்கூடும்.

“நாம் ஓர் ஆய்வுப் பணியில் உள்ளோம். நம் கைவசம் பூமியிலுள்ள மருத்துவ உபகரணங்கள் இல்லை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். பணியின் நடுவில் உங்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு சிகிச்சையளிக்க முடியாது. எனவே அத்தகைய ஆபத்துகளைக் குறைக்க, நன்கு பரிசோதிக்கப்பட்ட நபர்களை நாம் வைத்திருக்க வேண்டும்” என்கிறார் வாக்கர் அராஜோ.

நிலாவுக்குச் செல்லும் உடல் தகுதி இருக்கிறதா? தெரிந்துகொள்வது எப்படி?

பட மூலாதாரம், NASA

பல சாத்தியமான நபர்களை அது நிராகரிக்கக்கூடும் (இந்த நிருபர் உள்பட). அதேநேரம் மிகவும் தகுதியானவர்கள் உடல் ரீதியாகத் தேர்ச்சி பெறுவதற்கான நல்ல வாய்ப்புள்ளது. ஆனால், இவையெல்லாம் “எவையெல்லாம் சரியான அம்சங்கள்” என்பதற்கான ஆரம்பம் மட்டுமே. தேர்வு செயல்முறையின் பெரும்பகுதி விண்வெளி பயணங்களுக்கான அறிவாற்றல் திறன்கள், உளவியல் திறன்கள் ஆகியவற்றை மதிப்பிடுவதை அடிப்படையாகக் கொண்டது.

முதல் விண்வெளி வீரர்கள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் எப்போதும் வெற்றி பெற விரும்பினர். தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருந்தனர். அவர்கள் உற்சாகமான மனிதர்களாக இருந்தனர். ஆனால், ஒரு சிறிய, வரையறுக்கப்பட்ட இடத்தில் நீண்ட காலம் அவர்களுடன் வாழ்வது எப்போதும் எளிதாக இருக்கவில்லை. இன்று, ஒரு விண்வெளி வீரருக்கான மிக முக்கியமான குணங்களில் ஒன்றாக, ஒரு குழுவாக பிறருடன் சிறப்பாகச் செயல்படும் திறன் கருதப்படுகிறது. ஆகையால், அதிக போட்டித்தன்மையுடன் இருப்பது அல்லது எப்போதும் வெற்றி பெற விரும்புவது இனி விண்வெளி வீரர் தேர்வில் ஒரு சாதகமான விஷயமாக கருதப்படுவதில்லை.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் மிகச் சமீபத்திய விண்வெளி வீரர் தேர்வுச் செயல்பாட்டின்போது, விண்வெளி வீரராவதற்கு விண்ணப்பித்தவர்கள் குழு சார்ந்த சவால்களின் போது எப்படிச் செயல்படுகிறார்கள் என்பது கவனிக்கப்பட்டது. “அணியின் வெற்றி தனிப்பட்ட வெற்றியைவிட முக்கியமானது. வெற்றிபெற, அணியின் நலனுக்காக தனிநபர் தோற்க வேண்டிய கட்டாயத்திற்கு அது இட்டுச் சென்றது” என்கிறார் வாக்கர் அராஜோ.

நிலவில் கால் பதிக்க உங்களுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிய மற்றொரு வழி, பூமியின் துருவங்களில் வாழ முயல்வதாகும். பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர் நினா பர்விஸ் சமீபத்தில் அன்டார்டிகாவில் உள்ள பிரெஞ்சு இத்தாலிய கான்கார்டியா ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து திரும்பியுள்ளார். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தேர்வு செய்யப்பட்ட அவர், முழு குளிர்காலத்தையும் வெறும் 12 பேருடன் கழித்தார்.

நிலாவுக்குச் செல்லும் உடல் தகுதி இருக்கிறதா? தெரிந்துகொள்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

“இது ‘வெள்ளை செவ்வாய்’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதுவொரு தனிமைப்படுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட, தீவிரமான சூழல் அமைப்பு. துருவ இரவில் சூரிய ஒளி இருக்காது, ஒவ்வொரு நாளும் -80 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை எட்டும்,” என்கிறார் பர்விஸ்.

“பிப்ரவரி முதல் நவம்பர் வரை ஆய்வு நிலையம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும். எனவே, உணவு, எரிபொருள், மருத்துவப் பராமரிப்பு ஆகியவற்றை நாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். யாராவது நோய்வாய்ப்பட்டால் இணைந்து சிகிச்சையளிக்க, நானும் அவசர மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த மருத்துவர் ஒருவரும் இருந்தோம்” என்று அவர் விளக்கினார்.

அதிர்ஷ்டவசமாக, கான்கார்டியாவில் அவசர நிலைகள் அரிதாக நிகழ்பவை. மேலும் பர்விஸ் தனது பெரும்பாலான நேரத்தை அவரது சில சகாக்கள் மீது பரிசோதனைகளை மேற்கொள்வதில் செலவிட்டார். தனிமைப்படுத்தப்பட்ட குழுவில் குடல் ஆரோக்கியம் எவ்வாறு இருக்கிறது என்பது உள்ளிட்ட ஆய்வுகளுடன், உளவியல் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டார். அன்டார்டிகாவில் பணிபுரியத் தேர்வு செய்யப்பட்ட எவரும் விண்வெளி வீரர்களைப் போலவே தேர்வு செயல்முறைக்கு உட்பட்டிருப்பார்கள். எனவே அவர்களின் மனநிலையையும் மீள்தன்மையையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதை ஆராய்வது எதிர்கால விண்வெளி பயணங்களுக்குப் பலனுள்ள தகவல்களை வழங்கக்கூடும்.

“முதலில், நீங்கள் பணியாற்ற ஏதுவான, நல்ல, நட்பான நபராக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமான விஷயம். மன அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலைகளைக் கையாள வேண்டும். அதே நேரத்தில் உங்கள் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். பல சாத்தியமான சூழ்நிலைகளுக்கு பயிற்சி பெறலாம், ஆனால் எதிர்பாராத ஒன்று எப்போதும் நடக்கும்,” என்று பர்விஸ் கூறுகிறார்.

பல தசாப்த கால துருவ ஆய்வுகளில் இருந்து தெளிவாகத் தெரிந்த விஷயம் என்னவெனில், அவ்வப்போது உற்சாகம் இருந்தாலும், சலிப்பு ஒரு தீவிர கவலையாக உள்ளது. “சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை அங்கு அதிக தூண்டுதல் இல்லை. எனவே அது மிகவும் சலிப்பானது. இருட்டில் உங்கள் அறையில் உட்கார்ந்து எப்போதும் நெட்ஃப்ளிக்ஸையே பார்ப்பதை விரும்ப மாட்டீர்கள்,” என்கிறார் பர்விஸ்.

பர்விஸின் பரிசோதனைகளில் ஒன்று மனநிறைவு பற்றியது. முந்தைய ஆய்வின் அடிப்படையில், யோகா, லெகோ கட்டுமானம், ஓவியம் உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக அவர் குழுவினரை ஒன்றுகூட வைப்பார்.

“எங்களுக்கு இன்னும் அனைத்து முடிவுகளும் கிடைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பயனளித்ததாக உணர்ந்தேன். மேலும் குழு உண்மையில் செயல்பாடுகளைச் செய்ய ஆவலுடன் காத்திருந்தது. அவர்கள் ஒன்றுகூட முன்வந்தனர்,” என்கிறார் பர்விஸ்.

மேலும், “இது குறைந்த சுமை கொண்ட சோதனை. ஆனால், மிக அதிக வெகுமதியைக் கொண்டது. எதிர்காலத்தில் அவர்கள் நிச்சயமாக அதை விண்வெளி வீரர்களின் அட்டவணையில் சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்,” என்று கூறினார்.

நிலாவுக்குச் செல்லும் உடல் தகுதி இருக்கிறதா? தெரிந்துகொள்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

நிலவில் தளம் அமைத்து வாழ்வது போன்ற வாழ்க்கையை விண்வெளி நிறுவனங்கள் மட்டுமே பரிசோதித்துக் கொண்டிருக்கவில்லை. செப்டம்பர் 2020இல் கோவிட் பேரிடரின் உச்சத்தில், நம்மில் பலர் பிறரிடம் இருந்து தனிமைப்படுத்தப்படுவதில் சோர்வடைந்து இருந்தபோது, 24 வயதான கட்டடக் கலைஞர் செபாஸ்டியன் அரிஸ்டோடெலிஸ், அவரது 22 வயது சக ஊழியர் கார்ல்-ஜோஹன் சோரென்சன் ஆகியோர் ஒரு பணியைத் தொடங்கினர்.

அதற்கு முன்பு ஒரு கருத்தாக்க செவ்வாய் கிரக வாழ்விடத்தை வடிவமைக்கும் போட்டியில் வென்ற பிறகு, அவர்கள் ஒரு முன்மாதிரி நிலவு வாழ்விடத்தை உருவாக்கி வடக்கு கிரீன்லாந்தில் 60 நாட்கள் அதில் வாழ முடிவு செய்தனர்.

“இந்தக் கருத்தாக்க விஷயங்களை இனி நாங்கள் செய்ய விரும்பவில்லை என முடிவு செய்தோம். மக்கள் ஏற்கெனவே நாங்கள் பித்துப் பிடித்தவர்கள் என்று நினைத்தார்கள். நான் வெறும் பைத்தியக்காரத்தனமான கனவு காண்பவன் அல்ல என்பதை நம்புவதற்கு நம்மால் உண்மையில் ஏதாவது ஒன்றை உருவாக்க முடியுமா என்பதை நான் பார்க்க வேண்டியிருந்தது,” என்று அரிஸ்டோடெலிஸ் கூறுகிறார்.

டேனிஷ் கடற்படை அவர்களை இறக்கிவிடும்போதுதான் அரிஸ்டாடெலிஸுக்கு சந்தேகங்கள் வரத் தொடங்கின. “இந்தத் தரிசு நிலப்பரப்பில் ஒரு சிறிய அளவிலான நிலத்தைப் பார்த்தேன். நாங்கள் என்ன காரணத்திற்காக வந்துள்ளோம் என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். அனைத்து ஆரவாரங்களும் உற்சாகமும் மறைந்து போயின. அது முற்றிலும் அமைதியான தருணம். முதல் முறையாக பதற்றத்தை உணர்ந்தேன்.”

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

லூனார்க் நிலவுத் தளம், கார்பன் ஃபைபரால் ஆனது. சூரிய மின் தகடுகளால் மூடப்பட்டிருந்தது. இது ஓரிகாமி போல திறந்து விரியும் வகையில் பகுதிகளாகக் கட்டப்பட்டது. அதேநேரம், துருவ கரடிகளின் தாக்குதல்களைத் தாங்கும் அளவுக்கு இது வலுவாக இருக்க வேண்டும் (இருப்பினும் நிலவில் அந்தப் பிரச்னை இல்லை). வாழுமிடம் சில மீட்டர் அகலம் மட்டுமே இருந்தது. ஆனால், அதில் மூன்று சிறிய அறைகள் ஒன்றன் மேல் ஒன்றாக கட்டப்பட்டிருந்தன. எனவே அங்கு தங்கியுள்ளவர்களுக்கு சிறிதளவு தனிப்பட்ட இடம் இருக்க முடியும். அவர்கள் இயற்கையான பகல் வெளிச்சத்தைப் பிரதிபலிக்க, உள்ளே ஒரு சிறப்பு விளக்கு அமைப்பையும் உருவாக்கினர். இது உடலின் தூக்கத்தையும் தினசரி நேர அளவுகளையும் இயல்பாக வைத்திருக்க உதவியது.

“முதல் நாளில் மிகவும் குறுகிய இடங்களில் ஏற்படும் அச்சம் இருந்தது. இந்தச் சிறிய காப்ஸ்யூலில் நாங்கள் எழுந்து நிற்கும் அளவுக்கு நிறைய உபகரணங்கள் இருந்தன. பின்னர் பல நாட்கள் ஆன பிறகு, வெளிப்புறம் மிகத் தீவிரமாகவும் பயமாகவும் இருந்ததால், உட்புறம் மிக விரைவில் எங்கள் இல்லமாக மாறியது,” என்று அரிஸ்டாடெலிஸ் கூறுகிறார்.

பரிசோதனையின் விளைவாக, அரிஸ்டாடெலிஸின் நிறுவனமான சாகா இப்போது இரண்டு கண்டங்களில் செயல்பட்டு, சந்திர வாழ்விடங்கள் மற்றும் விண்வெளி நிலைய உட்புறங்களை வடிவமைக்க விண்வெளி நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது.

“நான் ஒவ்வொரு நாளும் பணியைப் பற்றி நினைக்கிறேன். நீங்கள் நிலவில் ஒரு வீட்டை வடிவமைக்கப் போகிறீர்கள் என்றால், சிறிய தொல்லைகள் மற்றும் பிரச்னைகள் எப்படி இருக்கும் என்பன போன்ற அனுபவத்தைப் பெற கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் தீர்வுகளைக் காண முடியும்,” என்கிறார் அவர்.

இதற்கிடையில், க்ளோவர், நாசாவில் நிலவுக்குத் திரும்புவதற்காகப் பல ஆண்டுகளாகப் பயிற்சி எடுத்து வருகிறார். மேலும், ஒரு நாள் அங்கு அவர் வாழ வேண்டியிருக்கும். பூமியை இவ்வளவு தூரம் பின்னால் விட்டுவிட்டுச் செல்வதற்கு அவர் உளவியல் ரீதியாகத் தயாராக இருக்கிறாரா என்று அவரிடம் நான் கேட்டேன்.

அதற்கு அவர், “எனக்குத் தெரியாது. நான் திரும்பி வரும்போது அதை என்னிடம் கேளுங்கள்” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU