Home தேசிய national tamil துறைமுகம் தொகுதியில் கர்ப்பிணி உட்பட தவெகவினர் மீது தாக்குதலா? நடந்தது என்ன?

துறைமுகம் தொகுதியில் கர்ப்பிணி உட்பட தவெகவினர் மீது தாக்குதலா? நடந்தது என்ன?

7
0

SOURCE :- BBC NEWS

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவெகவினர்

சென்னை துறைமுகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டபோது திமுகவினர் தங்களை தாக்கியதாக தவெகவினர் கூறுகின்றனர். இதை அமைச்சர் சேகர்பாபு மறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தேர்தல் பணிகள் சென்னை துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (பிப்ரவரி 10) துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கப்பன் தெருவில் தவெகவை சேர்ந்த ஒரு குழு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தது.

”அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் பின் மோதலாக மாறியது” என கூறும் தவெகவினர் திமுகவினர் தங்களை தாக்கியதாக கூறுகின்றனர்.

அதே சமயம் தவெகவினர் தங்களை தாக்கியதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

“கடந்த 10 நாட்களுக்கு மேலாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் எங்கள் கட்சி சார்பாக பொதுமக்களிடம் கணக்கெடுக்கும் பணிகளை எவ்வித பிரச்னையுமின்றி நடத்தி வந்தோம், வார்டு 59, 60 ஆகிய பகுதிகளில் எங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளும்போது எங்களை 100க்கும் மேற்பட்ட திமுகவினர் தாக்கினர்” என தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ” திமுகவினர் எங்களிடம் இருந்த படிவங்களை வலுக்கட்டாயமாக பிடுங்கி எறிந்தனர், கர்ப்பிணி இருப்பது தெரிந்தும் தாக்கத் தொடங்கினர்” என்று அவர் தெரிவித்தார்.

கர்ப்பிணி மீது தாக்குதலா?

“இதே பகுதியில்தான் அம்மாவுடன் இணைந்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம், அவ்வப்போது கட்சி பணிகளுக்கு செல்வோம், இந்த சம்பவம் நடந்த அன்று எனக்கு நன்றாக தெரிந்தவர்களே என்னை தாக்கினர்” என, பிபிசி தமிழிடம் பேசிய கர்ப்பிணி பவானி தெரிவித்தார்.

“இதற்கு முன்பு பலமுறை இந்த பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஆனால் இப்படி நடந்ததில்லை. இந்த தாக்குதலை திமுகவினர் தான் நடத்தினர்” என தவெகவை சேர்ந்த பவானி தெரிவித்தார்.

“அடி தாங்க முடியாமல் ஓடத்தொடங்கினோம், நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்ட ஒரு கடைக்காரர் என்னை கடைக்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்” என்றும் அவர் கூறினார்.

துறைமுகம் தொகுதியில் கர்ப்பிணி பெண் உட்பட தவெகவினர் மீது தாக்குதலா? நடந்தது என்ன?

மருத்துவமனையில் நடந்தது என்ன?

“தாக்குதலுக்கு உள்ளானதும் எங்களுடன் வந்தவர்கள் அருகில் இருந்த ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு எங்களை அழைத்துச் சென்றனர். ஆனால், 4 மணி நேரத்திற்கும் மேலாக எங்களுக்கு சிகிச்சை அளிக்கவில்லை” என தவெகவை சேர்ந்த ஜாஃபர் தெரிவித்தார்

சிகிச்சை அளிக்காமல் இருந்ததாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை முதல்வரை பிபிசி தமிழ் அணுகியது.

“மருத்துவமனை வந்த அனைவரையும் முறையாக பரிசோதித்து சிகிச்சை வழங்கியுள்ளோம்” என, மருத்துவமனையின் முதல்வர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “சிகிச்சைக்காக வந்த 5 பேரில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கி, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குழந்தை நன்றாக இருப்பதை உறுதி செய்தோம்” என்று அவர் தெரிவித்தார்.

“சிகிச்சை முடிந்ததற்கான உரிய ஆவணங்களின்படியே அவர்களை டிஸ்சார்ஜ் செய்தோம் ” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா

பட மூலாதாரம், @AadhavArjuna/X

தவெக குற்றச்சாட்டு என்ன?

தாக்குதலுக்கு உள்ளான கட்சியின் நிர்வாகிகளை தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் நேரில் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிடிஆர் நிர்மல் குமார், “திட்டமிட்டு அமைச்சர் சேகர்பாபு செய்த செயல்” என தெரிவித்தார்.

தவெக வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “தாக்கப்பட்டவர்கள் பொதுமக்கள், இந்த சம்பவத்தை வைத்து திமுகவுக்கு களங்கம் விளைவிக்க துடிக்கிறார்கள். அதற்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை” என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு

‘தவெகவினர் அத்துமீறினர்’

தவெகவினர் ஸ்டான்லி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த அதே நேரத்தில், தவெகவினர் எங்களை தாக்கிவிட்டனர் என, மூன்று பெண்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

“தனியாக இருந்த நேரத்தில் அத்துமீறி உள்ளே வந்த தவெகவினர் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள், உங்கள் ஆதார் அட்டையை கொடுங்கள் என எங்களை வற்புறுத்தினர்” என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீலேகா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“ஓட்டு போடுவது எங்கள் தனிப்பட்ட உரிமை, நாங்கள் அதை சொல்ல முடியாது என தெரிவித்ததால், எங்களை தரக்குறைவாக பேசி தாக்கினர்” என அவர் தெரிவித்தார்.

“ஸ்ரீலேகா தாக்கப்பட்டதை அறிந்து தட்டிக்கேட்ட என்னை மார்பில் கை வைத்து தள்ளிவிட்டனர்” என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணான வனஜா குறிப்பிட்டார்.

ஆனால், ”தவெகவினரை தாக்கிய திமுகவினர் தங்களை பொதுமக்கள் என சொல்லிக்கொண்டு மருத்துவமனையில் சிசிச்சைக்கு சேர்ந்துள்ளனர்” என்கிறார் தவெக நிர்வாகியும் வழக்கறிஞருமான விஜயகுமார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘நாங்கள் சம்மந்தப்படவில்லை’

திமுகவினர் மீது வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய துறைமுகம் சட்டமன்ற தொகுதியின் திமுக மாவட்ட பிரதிநிதி முருகன், “வீட்டில் இருந்த பொதுமக்களிடம் சுயவிவரங்களை தவெகவினர் கேட்டதாகவும், அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத்தான் நாங்கள் அறிந்தது. இதில் நாங்கள் சம்மந்தப்படவில்லை, இதனை முற்றிலும் மறுக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

நடவடிக்கை என்ன?

”இரண்டு தரப்பிலும் புகார் பெறப்பட்டு சி.எஸ்.ஆர் ( CSR ) பதியப்பட்டுள்ளது” என்கிறார் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பி1 வடக்கு காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராஜா பிரபு.

மேலும், “முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம், சம்மந்தப்பட்ட மோதலுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளோம்” என ராஜாபிரபு தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU