Home தேசிய national tamil துர்நாற்றம் உங்கள் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறையை எவ்வாறு பாதிக்கக்கூடும்?

துர்நாற்றம் உங்கள் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறையை எவ்வாறு பாதிக்கக்கூடும்?

8
0

SOURCE :- BBC NEWS

இத்தகைய துர்நாற்ற மாசுபாட்டினால் ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பான பாதிப்புகளுக்கு நாம் அதிகளவு  கவனம் செலுத்துவதில்லை.

பட மூலாதாரம், Serenity Strull/ BBC/ Getty Images

உங்கள் பக்கம் வீசும் துர்நாற்றம் உங்களை முகம் சுளிக்க வைப்பதோடு மட்டும் நின்றுவிடாது. அது உங்கள் உடல் மற்றும் மனத்தையும் பாதிக்கக்கூடும்.

எலைன் கார்னரைப் பொறுத்தவரை, ஒரு கோடை நாளில் தனது தோட்டத்துக்குள் நுழைவது என்பது தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அதை “திறந்து வைக்கப்பட்ட ஒரு குப்பை லாரியின் பின்னால் நடப்பதைப்” போல இருப்பதாக அவர் விவரிக்கிறார்.

பிரிட்டனின் வெஸ்ட்பரி நகரில் உள்ள தனது வீட்டின் அனைத்து ஜன்னல்களையும் மூடி வைத்திருந்தாலும் கூட, அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் குமட்டலை உண்டாக்கும் துர்நாற்றத்திலிருந்து தப்ப முடிவதில்லை என்று ஓய்வுபெற்ற ஆசிரியரான எலைன் கார்னர் கூறுகிறார்.

“எங்களால் எங்கள் தோட்டத்தைப் பயன்படுத்தவோ அல்லது நடைபயிற்சி செல்லவோ முடிவதில்லை, வாந்தி எடுப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என்கிறார் கார்னர்.

ஒரு கட்டத்தில், நாம் அனைவரும் குப்பையை வெளியே எடுக்கும் போதோ , குப்பை கிடங்குகளைக் கடந்து செல்லும்போதோ அல்லது தொழிற்சாலையிலிருந்து வரும் கெட்ட வாசனையை நுகரும் போதோ, அழுகிய கழிவுகளின் துர்நாற்றத்தை எப்போதாவது உணர்ந்திருப்போம்.

அத்தகைய துர்நாற்றத்துடன் தொடர்ந்து வாழ்வதை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள்.

இருப்பினும், இத்தகைய துர்நாற்றத்தால் வரும் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பான பாதிப்புகளுக்கு நாம் அதிகளவு கவனம் செலுத்துவதில்லை.

துர்நாற்றங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட கருத்து சார்ந்தது அல்லது அற்பமானது என்று நிராகரிக்கப்படுகின்றன.

பார்வை, கேட்டல், தொடுதல் மற்றும் சுவையை விட மக்கள் பொதுவாகத் தங்களின் நுகரும் திறனுக்குக் குறைந்த மதிப்பையே அளிப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சில அமெரிக்க கல்லூரி மாணவர்கள், தங்கள் தொலைபேசியை இழப்பதை விட நுகரும் திறனை இழப்பதையே விரும்புவதாகக் கூட கூறியுள்ளனர்.

மோசமான துர்நாற்றங்களுடன் வாழ்வதால் மக்கள் அனுபவிக்கும் அசௌகரியம் மட்டும் இவற்றில் இல்லை.

நகர்ப்புறங்களில் வீசும் விரும்பத்தகாத துர்நாற்றங்கள் தலைவலி மற்றும் குமட்டல் முதல் சுவாசக் கோளாறு அல்லது தூக்கமின்மை வரையிலான உடல்நலக் குறைபாடுகளுடன் தொடர்புடையவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவை நீண்டகால உளவியல் மற்றும் உடலியல் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். நமது உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தில் வாசனை எவ்வளவு வியக்கத்தக்க வகையில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் உதவுகின்றன.

ஆபத்தை உணர்த்தும் அறிகுறி

நுகரும் திறன் என்பது நோய்த்தொற்று அல்லது உடல்நலக்குறைவு ஏற்படுவதைத் தவிர்க்க நமக்கு உதவக்கூடிய ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை சமிக்ஞையாக ஓரளவு உருவெடுத்துள்ளது.

அழுகிய வாசனை வீசும் ஒரு பொருளில் நமக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

அந்த வகையில், இது நமது ‘நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தின்’ ஒரு பகுதியாகும் என்று ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வாசனை அறிவியல் பேராசிரியர் ஜோஹன் லண்ட்ஸ்ட்ரோம் கூறுகிறார்.

“சுற்றுச்சூழலில் உள்ள ஆபத்துகளைப் பற்றி நமக்கு எச்சரிக்கக் கற்றுக்கொடுக்கும் ஒரு தவிர்ப்பு மண்டலமாகவே வாசனை அறியும் மண்டலம் முதன்மையாகச் செயல்படுகிறது,” என்கிறார் லண்ட்ஸ்ட்ரோம்.

துர்நாற்றம்

பட மூலாதாரம், Getty Images

மூக்கின் வழியாக சுவாசிக்கப்பட்ட சுமார் 300 மில்லி விநாடிகளுக்குள்ளேயே துர்நாற்ற சமிக்ஞைகள் மூளையில் செயலாக்கப்படுவதை அவரது ஆய்வு காட்டுகிறது.

ஆய்வில் பங்கேற்றவர்கள் துர்நாற்றத்திற்கு ஆளானபோது, இயல்பாகவே அந்த வாசனையின் மூலத்திலிருந்து விலகிச் செல்லும் விரைவான உடல் ரீதியான எதிர்வினையைக் காட்டினர்.

நுகரும் திறனின் இந்தத் தற்காப்புத் தன்மையின் காரணமாக, பொதுவாக இனிமையானதாகக் கருதப்படும் ஒரு வாசனையைக்கூட அது எதிர்மறையானது என்று ஒருவரை நம்ப வைப்பது வியக்கத்தக்க வகையில் எளிதானது.

“நாம் ஒரு வாசனையை உணரும்போது, அது என்னவென்று நமக்குத் தெரியவில்லை என்றால், அது பெரும்பாலும் ஒரு எதிர்மறையான அனுபவமாகவே இருக்கும்” என்கிறார் லண்ட்ஸ்ட்ரோம்.

ஒரு வாசனை ஓர் அச்சுறுத்தலோடு தொடர்புடையதாக இருக்கும்போது, அதைப் புரிந்துகொள்ளும் நமது உணர்திறனும் வியத்தகு முறையில் அதிகரிக்கக்கூடும்.

ஒரு வாசனையை மின்சார அதிர்ச்சியுடன் இணைக்கும்போது, மக்கள் அந்த வாசனையை மிகக் குறைந்த செறிவில் கூட கண்டறிய முடியும் வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் என்று லண்ட்ஸ்ட்ரோமும் அவரது நண்பர்களும் ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

வாசனைகள் மிகக் குறைவாக இருக்கும்போது கூட, சாத்தியமான ஆபத்துகளுக்கு மனிதர்கள் விரைவாக எதிர்வினையாற்ற உதவும் வகையில் இந்தத் திறன் உருவெடுத்திருக்கலாம்.

அதேபோல், கழிவுநீர் சுத்திகரிப்பில் உருவாகும் ஹைட்ரஜன் சல்பைடு வாயுவின் அழுகிய முட்டை வாசனையை, ஒரு பில்லியன் பகுதிகளில் 0.5 பங்கு (0.5 பார்ட்ஸ் பெர் பில்லியன்) என்ற மிகக் குறைந்த செறிவில் கூட உணர முடியும்.

இது அதிக செறிவுகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும் ஒரு வாயுவிற்கான எச்சரிக்கை மணியாகும்.

துர்நாற்றம்

பட மூலாதாரம், Getty Images

உண்மையான சுகாதார பாதிப்புகள்

நுகரும் திறன் என்பது வெறும் அச்சுறுத்தல்களைக் கண்டறிவது மட்டுமல்ல.

வாசனைகள் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் உண்மையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

ஒரு காட்டின் நறுமணம் போன்ற நல்ல வாசனைகள் நமது மன ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது ஓரளவுக்கு உணர்ச்சி மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடைய மூளைப் பகுதிகளை அவை தூண்டுவதால் ஏற்படுகிறது.

அதே சமயம் இதற்கு நேர்மாறாகவும், அதாவது துர்நாற்றங்கள் நமது ஆரோக்கியத்தைச் சீரழிக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.

இருப்பினும், துர்நாற்ற மாசுபாட்டுக்கும் நேரடி உடலியல் பாதிப்புகளுக்கும் இடையிலான துல்லியமான தொடர்பைத் தெளிவுபடுத்த விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தொகுப்பு, துர்நாற்றத்தால் ஏற்படும் தலைவலி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகளுக்குப் பின்னால் சில “உயிரியல் ரீதியான சாத்தியக்கூறுகள்” இருப்பதைக் கண்டறிந்தது.

உதாரணமாக, மோசமான வாசனைகள் மூளையையும் குடலையும் இணைக்கும் நரம்பு மண்டலத்தின் முக்கியப் பகுதியான ‘வேகஸ்’ நரம்பைத் தூண்டி, ஒருவருக்கு உடல்நலக்குறைவு அல்லது குமட்டல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.

ஆனால், தெளிவான முடிவுகளை எடுக்க உடலியலில் வாசனை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று அந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் இறுதியாக முடிவெடுத்தனர்.

நமது ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பின் அளவு, அந்தத் துர்நாற்றத்தைக் குறித்து நாம் எவ்வளவு தூரம் கவலைப்படுகிறோம் என்பதையும் பொறுத்தது.

“ஆரோக்கியத்தின் மீதான தாக்கம் என்பது ஒரு தனிநபரின் அந்த வாசனை குறித்த வெறுப்பு அல்லது பயத்தின் மூலமாகவே கடத்தப்படுகிறது,” என்கிறார் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள மோனல் கெமிக்கல் சென்சஸ் சென்டரின் அறிவாற்றல் உளவியலாளர் பமீலா டால்டன்.

இவர் உடல்நலத்தின் மீது வாசனைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து 32 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.

ஒரு வாசனையைக் குறித்து நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கவலைப்படுகிறீர்களோ, அந்த அளவுக்கு அது உங்கள் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கக்கூடும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

தொடர்ச்சியான துர்நாற்றம் வாழ்க்கையின் பல பகுதிகளில் ஊடுருவக்கூடும். இது ஒருவரது வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்யத் தூண்டும், அந்த மாற்றங்கள் அவர்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவும் அமையலாம்.

இவை “சூழ்நிலைக்கு சரியாகப் பொருந்தாத செயல்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு வெப்பமான நாளில் ஜன்னல்களை மூடியே வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஒருவருக்கு ஏற்படலாம் அல்லது வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதையோ, நண்பர்களுடன் நேரம் செலவிடுவதையோ தவிர்க்க நேரிடலாம்.

வெஸ்ட்பரியில் நிலவும் துர்நாற்றத்துடன் வாழ்வது “உங்கள் சமூக வாழ்க்கையைப் பாதிக்கிறது” என்று கூறும் கார்னர்,”நீங்கள் கோடையில் ஒரு பார்பிக்யூ விருந்திற்குத் திட்டமிட்டால், அந்தத் துர்நாற்றம் உங்களை வெளியேற்றாது என்று நீங்கள் நம்ப வேண்டியுள்ளது”என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியான துர்நாற்றம் வாழ்க்கையின் பல பகுதிகளில் ஊடுருவக்கூடும். இது ஒருவரது வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்யத் தூண்டும், அந்த மாற்றங்கள் அவர்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவும் அமையலாம்.

பட மூலாதாரம், Serenity Strull/ BBC/ Getty Images

இருப்பினும், ஒரு சிறிய துர்நாற்றம் கூட சிலருக்குத் தாங்க முடியாததாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியாது.

“இதில் பலவிதமான பதில்கள் இருக்கும். சிலர் எப்போதாவது மணம் வீசுவதாகச் சொல்வார்கள் அல்லது அது தங்களைத் தொந்தரவு செய்யவில்லை என்பார்கள்,” என்கிறார் துர்நாற்றம் குறித்த புகார்களைத் தொடர்ந்து ஆராய்ந்து வரும் டால்டன்.

வயது, பாலினம், ஒவ்வாமைகள் மற்றும் புகைபிடித்தல் போன்ற வாழ்க்கை முறை தேர்வுகள் என அனைத்தும் மக்கள் வாசனைகளை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன.

காலப்போக்கில் மக்கள் ஒரு விரும்பத்தகாத வாசனைக்குப் பழகிவிடுவார்கள் என்று நீங்கள் நம்பலாம், ஆனால் குப்பை கிடங்குகள் போன்ற இடங்களிலிருந்து வரும் விரும்பத்தகாத வாசனைகளைத் தொடர்ந்து நுகர்வது, அவற்றை சகித்துக்கொள்வதை எளிதாக்கிவிடாது.

இதற்கு மாறாக, நடுநிலையான அல்லது இனிமையான வாசனைகளுக்குப் பழகிவிடுவது இயல்பானது.

“ஒருமுறை நீங்கள் ஒரு வாசனையை நுகர்ந்து, அது உங்களைப் பாதிக்காது என்று அடையாளம் கண்டுகொண்டால், பிறகு உங்களால் அதை நுகர முடியாமல் போய்விடும்” என்கிறார் லண்ட்ஸ்ட்ரோம்.

மனித மூக்கினால் ஒரு டிரில்லியன் வாசனைகளைக் கண்டறிய முடிந்தாலும், ஆபத்து அல்லாத பொருட்களின் வாசனைகளை பெயரிட்டுச் சொல்வது மக்களுக்குப் பொதுவாகக் கடினமாக இருப்பதற்கும் இதுவே காரணமாகும்.

உதாரணமாக, காபி அல்லது வெனிலா போன்ற அன்றாட வாசனைகளை நம்மில் பாதிக்கும் குறைவானவர்களே சரியாகப் பெயரிட முடியும் என்று நுகர்வுச் சோதனைகள் தெரிவிக்கின்றன.

துர்நாற்றம்

பட மூலாதாரம், Getty Images

துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடுதல்

ஒரு துர்நாற்றம் சில சமயங்களில் காற்று வீசும் திசையைப் பொறுத்து வரலாம் அல்லது போகலாம், அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சில இடங்களில் மட்டுமே உணரப்படலாம்.

“இது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்குள் மட்டுமே இருக்கலாம்,” என்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மாதிரியாக்கம் மற்றும் கொள்கைக்கான இணைப் பேராசிரியர் அமண்டா ஜியாங் கூறுகிறார்.

இவர் வான்கூவரில் வசிப்பவர்கள் மீது துர்நாற்ற மாசுபாட்டின் தாக்கங்களை ஆய்வு செய்துள்ளார்.

“நான் ஒரு தெரு தள்ளி வசிக்கலாம், ஆனால் பக்கத்து தெருவில் அழுகிய மீன் நாற்றம் அடிப்பது எனக்கு ஒருபோதும் தெரியாமலேயே போகலாம்”என்கிறார் அமண்டா ஜியாங்.

ஆனால் எல்லா துர்நாற்றங்களும் ஒரே மாதிரியாக உணரப்படுவதில்லை.

குறைவான வசதிகள் உள்ள வீடுகளைக் கொண்ட பின்தங்கிய பகுதிகள், பெரும்பாலும் துர்நாற்றம் வீசும் குப்பை கிடங்குகள் அல்லது கனரகத் தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வுகள், சில நாடுகளில் அதிக வருமானம் கொண்டவர்களை விட, குறைந்த வருமானம் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கழிவுகளை எரிக்கும் நிலையங்கள், குப்பை கிடங்குகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் உள்ள இடங்களிலிருந்து 1.25 மைல் (2 கி.மீ) சுற்றளவிற்குள் வசிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றன.

மோசமான துர்நாற்றம் குறித்த புகார்கள் மாற்றத்தைத் தூண்டக்கூடும்.

அப்பகுதியில் வசிக்கும் மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முதல் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் வரை பல இடங்கள் தங்கள் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளவோ அல்லது நிறுத்தவோ நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

சிலியில் மீன் தீவன ஆலைகளிலிருந்து வரும் துர்நாற்றம் குறித்த புதிய ஒழுங்குமுறை முதல் லிதுவேனியாவில் குடியிருப்பு பகுதிகளில் நிறுவனங்கள் எவ்வளவு துர்நாற்றத்தை ஏற்படுத்த அனுமதிக்கப்படுகின்றன என்பது குறித்த கடுமையான விதிகள் வரை, உலகெங்கிலும் துர்நாற்ற மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வளர்ந்து வரும், ஆனால் சீரற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை காட்டுகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

வாசனைக்குரிய பயன்கள்

விரும்பத்தகாத துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களுக்கு வாழ்க்கை கடினமாக இருக்கலாம், ஆனால் அதில் குறைந்தபட்சம் ஒரு சிறிய ஆறுதல் உள்ளது. அதாவது, நன்கு செயல்படும் நுகரும் திறனைக் கொண்டிருப்பது நல்ல ஆரோக்கியத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.

கூர்மையான நுகரும் திறன் கொண்டவர்கள் உண்பதிலிருந்தும், ஏன் உடலுறவிலிருந்தும் கூட அதிக மகிழ்ச்சியைப் பெறுவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

2018 ஆம் ஆண்டு 70 பெரியவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அதிக நுகரும் உணர்திறன் கொண்டவர்கள் பாலியல் செயல்பாடுகளில் அதிக இன்பம் பெறுவதாகவும், அவர்களில் பெண்கள் உடலுறவின் போது அதிகப்படியான உச்சக்கட்டத்தை அடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நேர்மாறாக, ‘ஸ்மெல் பிளைண்ட்னஸ்’ அல்லது ‘அனோஸ்மியா’ என்று அழைக்கப்படும் நுகரும் திறன் அற்ற சுமார் 5% மக்கள் பெரும்பாலும் பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

அனோஸ்மியா உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்கள், உணவை ரசிக்க முடியாத காரணத்தால் அவர்களுக்குப் பசி குறைவதற்கும் மற்றும் ஊட்டச்சத்துக் குறைவான உணவை உட்கொள்வதற்கும் அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றன.

“உங்கள் நுகரும் திறனை நீங்கள் இழந்தால், உங்கள் பசி மறைந்து போவதை நீங்கள் கவனிப்பீர்கள்” என்கிறார் லண்ட்ஸ்ட்ரோம்.

இதைவிட இன்னும் மோசமாக, முதியவர்களிடையே மணத்தை உணரும் திறன் குறைவாக இருந்தால், 10 ஆண்டுகளுக்குள் இறப்பதற்கான அபாயம் 46% அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

இதற்கான காரணம் என்ன என்பதை விளக்க விஞ்ஞானிகள் இன்னும் முயன்று வருகின்றனர்.

இருப்பினும் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் அல்சைமர், பார்கின்சன் போன்ற நரம்பு மண்டல பாதிப்பு நோய்களால் ஏற்படும் மரணங்களுடன் இதற்குத் தொடர்பு இருப்பதை அவர்கள் காண்கிறார்கள்.

“பல ஆண்டுகாலங்களாக வாசனைகள் குறித்து ஆராய்ந்த ஒரு நபர் என்ற முறையில், துர்நாற்றங்களை நுகர்வதை நான் பொருட்படுத்துவதில்லை, ஏனென்றால் எனது நுகரும் திறன் சிறப்பாகச் செயல்படுகிறது என்றுதான் அதற்கு அர்த்தம்” என்கிறார் டால்டன்.

நிச்சயமாக, வெஸ்ட்பரியில் உள்ள கார்னர் போன்றவர்களுக்கு அப்படித் தோன்றாமல் இருக்கலாம்.

அந்தப் பகுதியின் செயல்பாட்டாளரான ஹில்ஸ் வேஸ்ட் சொல்யூஷன்ஸ், துர்நாற்றம் குறித்த கவலைகளைத் தீர்க்க சுற்றுச்சூழல் முகமையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

பிரச்னைகளைப் பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU