Home தேசிய national tamil துரந்தர்: இந்திய உளவாளியாக நடித்த ரண்வீர் சிங் உண்மையில் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவரா?

துரந்தர்: இந்திய உளவாளியாக நடித்த ரண்வீர் சிங் உண்மையில் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவரா?

16
0

SOURCE :- BBC NEWS

இந்தியத் திரைப்பட நட்சத்திரம் ரண்வீர்  சிங் (வலது) மற்றும் அவரது பாட்டியின் சகோதரரான சாமுவேல் மார்ட்டின் பர்க்.

பட மூலாதாரம், Noel Parsons/Getty

ரண்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, இப்போது ‘துரந்தர் பாகம் 2’ வெளியாகியுள்ளது. இதையும் ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஒரு காட்சி உள்ளது.

அதில் அக்ஷய் கண்ணா ஏற்றிருந்த பாத்திரமான ரஹ்மான் டகய்த்தின் சகோதரர், ரண்வீர் சிங்கின் கதாபாத்திரத்திடம், நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? என்று கேட்கிறார்.

அதற்கு ரண்வீர், “கரோதாபாத், குவெட்டா. பெயர்: ஹம்ஸா அலி மசாரி,” என்று பதிலளிக்கிறார்.

திரைப்படத்தில், ரண்வீர் ஒரு இந்திய உளவாளியாக பாகிஸ்தானுக்குச் சென்று, அங்கு ஒரு பாகிஸ்தான் குடிமகனாக வாழ்கிறார்.

நிஜ வாழ்க்கையைப் பற்றி பேசினால், ரண்வீர் சிங்கின் குடும்ப உறவுகள் உண்மையில் பாகிஸ்தானுடன் தொடர்புடையவை தான்.

இந்தத் தொடர்பைப் புரிந்துகொள்ள, நாம் 1940களுக்குச் செல்ல வேண்டும்.

அப்போது, ​​கிறிஸ்டியன் பர்க் குடும்பம், பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் வசித்து வந்தது. அந்தக் கிராமம் இப்போது பாகிஸ்தானில் உள்ளது.

இந்தக் குடும்பத்தின் உறுப்பினராக இருந்தவர் இளைஞர் சாமுவேல் மார்ட்டின் பர்க், இவர் பின்னர் 11 நாடுகளுக்கான பாகிஸ்தானின் தூதரானார்.

அவரது சகோதரி சந்த் பர்க், இந்தித் திரைப்படங்களில் துணை நடிகையாக மாறினார்.

இதே சந்த் பர்க் தான் துரந்தர் திரைப்பட நட்சத்திரம் ரண்வீர் சிங்கின் பாட்டி ஆவார்.

பஞ்சாபின் ‘டான்சிங் லில்லி’ என்ற சந்த் பர்க்

பர்க் குடும்பப் புகைப்படத்தில் ரண்வீர்  சிங்கின் பாட்டி சந்த் பர்க் (வலதுபுறம்)

பட மூலாதாரம், Noel Parsons

சாமுவேல் மார்ட்டின் பர்க் பற்றிய தகவல்களைத் தேடிய எனது பயணம், லண்டனில் வசிக்கும் அவரது மகள் நோயல் பார்சன்ஸிடம் என்னை அழைத்துச் சென்றது.

ரண்வீரின் பாட்டியின் சகோதரரான சாமுவேல் மார்ட்டின் பர்க், 1906-ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள நங்கனா சாஹிப் அருகிலுள்ள மார்டின்பூர் கிராமத்தில் பிறந்தார்.

பிபிசியிடம் பேசிய நோயல் பார்சன்ஸ், “இந்தியப் பிரிவினையின் போது ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்கும் சங்கடம் என் தந்தையை ஆழமாகப் பாதித்தது. அவர் மிகவும் குழப்பமடைந்ததால், பிரிக்கப்படாத இந்தியாவையும் தனது வேலையையும் விட்டுவிட்டு பிரிட்டனுக்குச் சென்றார்” என்று கூறினார்.

 'துரந்தர் தி ரிவெஞ்ச்'

பட மூலாதாரம், DHURANDHAR THE REVENGE

ரண்வீர் சிங்கின் பாட்டி சந்த் பர்க், பிரிவினைக்குப் பிறகு அப்போதைய பம்பாய்க்கு குடிபெயர்ந்தார்.

‘சினிமாஸி’ என்பது இந்தியத் திரைப்பட வரலாற்றைப் பற்றிய ஒரு ஆவணத் திட்டமாகும், குறிப்பாக முந்தைய காலக் கலைஞர்கள் தொடர்பான விஷயங்களை இது ஆவணப்படுத்துகிறது.

சினிமாஸியின் இணை நிறுவனர் ஆஷா பத்ரா கூறுகையில், “சந்த் பர்க் ஹிந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் குணச்சித்திர நடிகையாக இருந்தார். அவர் லாகூரில் எடுக்கப்பட்ட படங்களில் பணியாற்றி வந்தார். தனது நடனத்திற்குப் பெயர் பெற்ற சந்த், பஞ்சாபின் ‘டான்சிங் லில்லி’ என்று அழைக்கப்பட்டார்” என்று விவரித்தார்.

நாட்டைத் தேர்வு செய்வதில் இருந்த குழப்பம்

சாமுவேல் மார்ட்டின் பர்க்

பட மூலாதாரம், Noel Parsons

ரண்வீர் சிங்கின் குடும்பம் பிரிக்கப்படாத இந்தியா மற்றும் வெளிநாடுகளின் பல்வேறு பகுதிகளில் வேர்களைக் கொண்டுள்ளது.

1946-ஆம் ஆண்டு, இந்தியப் பிரிவினை பற்றி விவாதிக்கப்பட்டபோது, சாமுவேல் மார்ட்டின் பர்க் பஞ்சாபில் முதல் தேர்தல் மனுக்கள் ஆணையத்தின் தலைவராக, அதாவது அவர் ஒரு நீதிபதியாக இருந்தார்.

பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து அப்போது கடும் விவாதம் நடந்ததாகவும், அந்த ஆணையத்தில் வாதிட்டவர்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இருந்ததாகவும் சாமுவேல் மார்ட்டின் பர்க்கின் மகள் நோயல் கூறுகிறார்.

தனது சுயசரிதையான ‘ஏ லைஃப் ஆஃப் ஃபுல்ஃபில்மென்ட்’ (A Life of Fulfillment) என்பதில் சாமுவேல் மார்ட்டின் பர்க் இவ்வாறு எழுதியுள்ளார்: “அந்த நேரத்தில் நான் நடுநிலையாக இருப்பதற்கான ஒரே வழி, பிரிவினைக்குப் பிறகு இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் அரசுப் பணியை ஏற்கும் எண்ணம் எனக்கு இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதே ஆகும். முன்கூட்டியே ஓய்வு பெறுவதே மிகவும் கௌரவமான விருப்பமாகத் தோன்றியது. இந்திய குடிமைப் பணியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெறக் கோரிய முதல் ஆசியர் நான் தான்.”

“இதன் விளைவாக, நான் புதிதாக சுதந்திரம் பெற்ற எனது நாடான பாகிஸ்தானில் வேலையிழந்தது மட்டுமல்லாமல், ஓர் இஸ்லாமிய குடியரசில் ஒரு சிறிய சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தின் அங்கமாகவும் மாறினேன். அதே சமயம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, நான் இந்திய குடிமைப் பணியில் நீதிபதியாக இருந்தேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, பிரிவினைக்குப் பிறகு சாமுவேல் மார்ட்டின் பர்க் தனது குடும்பத்துடன் பிரிட்டனுக்கு வந்தார், அதே நேரத்தில் அவரது மற்ற உடன்பிறப்புகள் கனடாவுக்குச் சென்றனர், மேலும் சந்த் என்ற பெயருடைய ஒரு சகோதரி பம்பாய்க்குச் சென்றார்.

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு பாகிஸ்தான் தூதராக ஆனது எப்படி?

நோயல் பார்சன்ஸ்

பட மூலாதாரம், Noel Parsons

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும், தனது பணியையும் விட்டுவிட்டு பிரிட்டனில் குடியேறிய சாமுவேல், மீண்டும் எப்படி பாகிஸ்தானின் தூதரானார் என்பது மர்மமாகவே நீடித்தது.

பிரிவினையின் போது பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜாபருல்லா கான் தனக்கு ஒரு வகையான வழிகாட்டியைப் போன்றவர் என்று நோயல் பார்சன்ஸ் கூறுகிறார்.

அவர் சாமுவேல் மார்ட்டின் பர்க்கை சமாதானப்படுத்தி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தை நிறுவுவதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்பிறகு சாமுவேல் மார்ட்டின் பர்க் லண்டனுக்கான பாகிஸ்தான் தூதராகி, அங்கு பாகிஸ்தான் தூதரகத்தை நிறுவினார்.

சகோதரி சந்த் பர்க் இந்தியாவுக்கு வந்து இந்தித் திரைப்படங்களில் பணியாற்றத் தொடங்கினார்.

சாமுவேல் மற்றும் சந்தின் தந்தை ஜனாப் கைருதீன் ஆவார், அவர் ‘பர்க்’ என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியதாகக் கூறப்படுகிறது. நோயக்கின் கூற்றுப்படி, அந்தக் குடும்பம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியது.

2009-ஆம் ஆண்டில், மூத்த பத்திரிகையாளர் சாஜிதா மோமின் 103 வயதான சாமுவேல் மார்ட்டின் பர்க்கைச் சந்தித்தார்.

பிபிசியுடன் பேசுகையில், சாஜிதா மோமின் சாமுவேல் மார்ட்டின் பர்க் தொடர்பான பல கதைகளை விவரித்தார்.

சாஜிதா கூறுகையில், “சாமுவேல் மார்ட்டின் ஒரு சிறந்த கிரிக்கெட் ஆர்வலர். இந்தியா பிரிக்கப்படாத காலத்தில், ஒரு போட்டியில் பாட்டியாலா மகாராஜாவை தனது தந்தை அவுட் செய்ததாக நோயல் என்னிடம் கூறினார். ஆனால் நடுவர் மகாராஜாவுக்கு பயந்ததால் எதையும் பார்க்காதது போல் நடந்து கொண்டார். சாமுவேல் மார்ட்டின் பர்க் நடுவரின் முடிவை எதிர்த்து சவால் விடுத்தார், ஆனால் நடுவர் தனது முடிவை மாற்றாதது போலவே மகாராஜா அதை எடுத்துக்கொண்டார். சாமுவேல், முகமது அலி ஜின்னா மற்றும் லியாகத் அலி கான் ஆகியோருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர்” என்றார்.

சந்த் பர்க்கிற்கு வாய்ப்பு கொடுத்த ராஜ் கபூர்

 ராஜ் கபூர்

பட மூலாதாரம், Film Heritage Foundation

தனது அத்தையும், ரண்வீரின் பாட்டியுமான சந்த் பற்றி நோயல் பார்சன்ஸுக்குத் தெரியுமா? என்ற கேள்விக்கு தொலைபேசியின் மறுமுனையில் நோயல் சிரித்துக்கொண்டே, “ஏன் தெரியாது? அவர் என் அத்தை தான்” என்றார்.

சந்தின் பழைய புகைப்படத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, அவரைப் பார்க்காமலேயே அவரது குரலில் இருந்த அதிர்வையும், முகத்தில் இருந்த புன்னகையையும் என்னால் உணர முடிந்தது.

பிரிவினைக்குப் பிறகு,சந்த் பல ஆண்டுகளாக திரையுலகில் காணாமல் போயிருந்தார், ஆனால் ராஜ் கபூர் அவரை மீண்டும் அழைத்து வந்தார் என்று ஆஷா பத்ரா கூறுகிறார்.

நீங்கள் ‘பூட் பாலிஷ்’ திரைப்படத்தைப் பார்த்திருந்தால், இரண்டு சிறு அனாதைக் குழந்தைகளுக்குக் கடுமையான மன ரீதியான மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளை அளிக்கும் அந்த இரக்கமற்ற, பேராசை கொண்ட, கிட்டத்தட்ட கொடூரமான பெண்ணின் கதாபாத்திரத்தை மறக்க முடியாது.

சந்த் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்னர் சுந்தர் சிங் பவ்னானியை மணந்தார். இந்த சந்த் பர்க்கின் பேரன் தான் இன்றைய ரண்வீர் சிங்.

பர்க் குடும்பம் மற்றும் ரண்வீர் சிங்

ரண்வீர்  சிங்

பட மூலாதாரம், Getty Images

2009-ஆம் ஆண்டு சாமுவேல் மார்ட்டின் பர்க்கைச் சந்தித்தபோது, அது அவரது 103-வது பிறந்தநாள் என்றும், பிரிக்கப்படாத இந்தியாவின் குடிமைப் பணியில் மிக நீண்ட காலம் பணியாற்றிய உறுப்பினர் என்பதால் இந்தியாவின் பல ஐஏஎஸ் அதிகாரிகளிடமிருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்தன என்றும் சாஜிதா கூறினார்.

மீண்டும் ‘துரந்தர்’ மற்றும் பர்க் குடும்பத்திற்கு வந்தால், இந்திய நீதிபதியாக இருந்து பின்னர் பாகிஸ்தானின் புகழ்பெற்ற தூதராக மாறிய ஒரு சகோதரரும், ராஜ் கபூர், நர்கிஸ், நிம்மி, பிரதீப் குமார், பிரான், மனோஜ் குமார் ஆகியோருடன் பணியாற்றிய ஒரு சகோதரியும் அங்கு இருந்தனர்.

பின்னர் அதே குடும்பத்தில் காலம் மாறுகிறது, தலைமுறைகள் மாறுகின்றன.

அவர்களில் ஒருவரான ரண்வீர், புகழ்பெற்ற பாலிவுட் நாயகனாக ஆகிறார்.

பிரிட்டனில் வசிக்கும் சாமுவேல் மார்ட்டின் பர்க்கின் மகள் நோயலுக்கு, இந்தியாவின் ரண்வீர் சிங் பற்றித் தெரியுமா?

நான் எனது கேள்வியை முடிப்பதற்கு முன்பே, “ஆம். ஆனால் அவர்கள் ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை,” என்று நோயல் சட்டென்று கூறினார்.

சில நேரங்களில், வெவ்வேறு நாடுகளில் வாழும் தலைமுறைகள் ஆண்டுகள் கடக்கும்போது ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி விடுகின்றனர்.

‘துரந்தர்’ படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிவிட்டது. இப்படத்தின் கதை, நடிப்பு மற்றும் பாடல்கள் பரவலாகப் பாராட்டப்பட்டாலும், பலர் இதனை ஒரு ‘பிரசாரப் படம் ‘ என்று விமர்சித்தனர்.

இருப்பினும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU