SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
சாக்கடை ஓர குடிசைகள், குறுகலான தெருக்கள், பலவகையான தொழிற்சாலைகளுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான கனவுகள் தினமும் பிறக்கின்றன.
இது தாராவி.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் அமைந்திருக்கும் தாராவியின் மேம்பாட்டுப் பணிகளும், அதற்கு புதிய தோற்றத்தைத் தருவதற்கான முயற்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
600 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் தாராவியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் ஒன்றும் புதிதல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த ஆலோசனைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
தற்போது அங்குள்ள குடிசைப் பகுதிகளை நீக்கிவிட்டு டவுன்ஷிப் ஒன்றை உருவாக்கும் திட்டம் ஆலோசனையில் உள்ளது. இதற்கு தாராவி மறுசீரமைப்புத் திட்டம் (Dharavi Redevelopment Project) என்று பெயர்.
அங்கே வசிக்கும் 10 லட்சம் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு வசதிகளை உருவாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள ‘நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் லிமிட்டட்’ என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 80% பங்குகளை அதானி குழுமமும், 20% பங்குகளை மகாராஷ்டிரா அரசும் கொண்டுள்ளன.
இதற்கு முன்னதாக இதற்கான பணிகளை தாராவி ரிடெவலப்மெண்ட் ப்ரோஜக்ட் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
பலர் இந்த திட்டம் குறித்து நேர்மறையான கருத்துகளைக் கொண்டிருக்கும் அதே நிலையில் பலர் சந்தேகங்களையும் பதிவு செய்துள்ளனர்.
இந்த அறிவிப்பால் அச்சமடைந்த மக்களிடம் பேசிய போது, அவர்கள் கண்முன்னே மலைபோன்று சவால்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அங்கே வாழும் மக்கள் இது குறித்து நினைப்பது என்ன என்பதை புரிந்து கொள்ள களத்திற்கு சென்றது பிபிசி ஹிந்தி.
தாராவி மறுசீரமைப்பு எப்படி இருக்கும்?
இந்த திட்டத்தின் பெயர் தாராவி மறுசீரமைப்புத் திட்டம் (Dharavi Redevelopment Project). மகாராஷ்டிரா அரசு மற்றும் கௌதம் அதானியின் நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டத்திற்கு பிறகு, 10 லட்சம் மக்கள் சிறப்பான, மதிப்பிற்குரிய வாழ்க்கையை அங்கே வாழ முடியும் என்று அரசாங்கம் கருதுகிறது.
மறுசீரமைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு பிறகு தாராவியில் வசிக்கும் மக்களுக்கு அங்கே வீடு கிடைக்குமா என்பதை கீழே உள்ள மூன்று நிபந்தனைகள் முடிவு செய்கின்றன.
- ஜனவரி 1, 2000-த்திற்கு முன்பிருந்து தாராவியில் தரைத்தளத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு 350 சதுர அடி பரப்பு கொண்ட வீடு வழங்கப்படும். அவர்களிடம் இருந்து எந்தவிதமான பணமும் வாங்கப்படாது.
- ஜனவரி 1,2000 மற்றும் ஜனவரி 1, 2011 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்து தரைத்தளத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படும். ஆனால் தாராவிக்கு வெளியே வீடுகள் வழங்கப்படும்.
- தரைத்தளம் இல்லாமல் மேல் தளங்களில் வசித்து வருபவர்கள் மற்றும் ஜனவரி 2011 முதல் 15 நவம்பர் 2022 வரை தாராவியில் தரைத்தளத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு அங்கே வீடு கிடைக்காது.
இருப்பினும் மும்பையில் அவர்களை வாடகை வீட்டில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பின்னாட்களில் அவர்கள் அந்த வீட்டை வாங்க விரும்பினால் வாங்கிக் கொள்ளவும் இயலும்.

பட மூலாதாரம், Getty Images
குடிசைப் பகுதிகள் எவ்வாறு மேம்படுத்தப்படும்?
மும்பையில் குடிசைப் பகுதிகளில் மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகளை குடிசை மறுவாழ்வு ஆணையம் ( Slum Rehabilitation Authority (SRA)) மேற்கொண்டது. இந்த திட்டத்தின் கீழ் வீட்டைப் பெற, அந்த நபர் குறிப்பிடப்பட்ட குடிசைப் பகுதியில் ஜனவரி 1, 2000-ம் தேதிக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும்.
சில நேரங்களில் 2000 மற்றும் 2011 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அங்கே ஒருவர் வாழ்ந்திருந்தால் அவருக்கு வாடகைக்கு வீடு வழங்குதல் போன்ற மாற்று வாய்ப்புகள் வழங்கப்படும். இதற்காக மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிலத்தை கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அப்படியாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் ஒன்று கிழக்கு மும்பையில் அமைந்திருக்கும் தியோனார். இது ஒரு குப்பைக் கிடங்கு. அதாவது மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் இங்கே கொட்டப்படுகின்றன. எந்தப் பக்கம் திரும்பினாலும் குப்பை. தாராவி மக்கள், இது போன்ற ஒரு இடத்தில் வாழ்வது எப்படி என்று வருத்தம் அடைந்துள்ளனர்.
இருப்பினும், இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களின் படி, எந்த ஒரு குப்பைக் கிடங்கைச் சுற்றியும் 500 மீட்டர் சுற்றளவில் எந்த குடியிருப்புப் பகுதிகளையும் உருவாக்க அனுமதி இல்லை.
குடிசை மறுவாழ்வு திட்டத்தின் நோக்கமே, குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையை உருவாக்கித் தருவது தான்.

முதலில் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் புதிய குடியிருப்புப் பகுதிக்கு மாற்றப்படுவார்கள். பிறகு அவர்கள் வாழ்ந்த பகுதி மேம்படுத்தப்படும். அதுவரை, மக்கள் தற்காலிகமாக வேறொரு இடத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.
அந்த பகுதியில் குடியிருப்புகள் உருவாக்கப்பட்ட பிறகு, தகுதி உடையவருக்கு அங்கே வீடு வழங்கப்படும். அங்கே சில பகுதிகளை வர்த்தக தேவைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தின் கூட்டு நடவடிக்கைகளால் இது மேற்கொள்ளப்படும்.
குடிசை மறுவாழ்வு ஆணையத்தின் முன்னாள் தலைவர் சந்திரசேகர் பிரபு ஒரு ஆர்க்கிடெக்ட். ஆரம்பத்தில் இருந்தே இந்த திட்டம் சரியானதாக இல்லை என்று அவர் நம்புகிறார். “இங்கே மொத்தமாக 70 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்,” என்று கூறுகிறார்.
“நிரந்தர குடியிருப்புக்கு எப்போதும் ஒரு தேவை இருப்பதைப் போன்று மும்பையின் அமைப்பு உள்ளது. குடிசைப் பகுதிகளில் வாழும் நபர்கள் எப்போதும் தங்களுக்கென்று இலவச வீடுகள் வேண்டும் என்று கேட்டதில்லை. தங்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படாத வகையிலான வளர்ச்சியைத் தான் அவர்கள் விரும்பினார்கள். இது போன்ற திட்டத்தின் பிரதான நோக்கம் என்பது அங்குள்ள ஏழைகளை அப்புறப்படுத்திவிட்டு, செல்வந்தர்களுக்கு குடியிருப்புப் பகுதிகளை உருவாக்குவது தான்,” என்று கூறுகிறார்.

தாராவி என்பது என்ன? அதில் வசிக்கும் மக்கள் யார்?
தாராவி 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மும்பையின் 7 ரயில் நிலையங்களை இணைக்கிறது. இதன் அருகே பாந்த்ரா – குர்லா பகுதி அமைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் அங்கே அமைந்துள்ளன.
தாராவியில் இன்று புலம் பெயர்ந்த, உழைக்கும் வர்க்கத்தினர் வசிக்கும் பகுதி ஒரு காலத்தில் மும்பை மீனவர்களின் வசிப்பிடமாக இருந்தது.
தற்போது தாராவியை உலக தரத்திற்கான நகரமாக மாற்றுவதற்கு நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் அங்கே வாழும் மக்களுக்கு இது பெரிதும் சிறிதுமாக இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகள், தொழில்களின் மையப்பகுதி. இங்கு நிலவும் பன்முகத்தன்மையும் தனித்துவமானது.
ஒவ்வொரு ஆண்டும் தாராவியில் மட்பாண்டங்கள், தோல் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான தொழிற்சாலைகள் மூலமாக ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான வருவாய் ஈட்டப்படுகிறது.
இங்கே நிலவும் தனித்துவமான அமைப்பு, பல்வேறு விதமான தொழில்களை நடத்தவும் வழிவகை செய்கிறது. தற்போது மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் அவர்களின் தொழில்கள் இந்த மறுவளர்ச்சித் திட்டத்தின் கீழ் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
தாராவியில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கும்பர்வாதா அங்குள்ள குயவர் சமூகத்தினரின் வாழ்விடமாகும். அந்த சமூகத்தைச் சேர்ந்த பலரும் நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

கும்பர்வாதா பகுதியில் வசிக்கும் தீபக், “பல தலைமுறைகளாக என்னுடைய குடும்பத்தினர் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். களிமண்ணைக் கொண்டு வந்து நாங்கள் மட்பாண்டங்கள் செய்கின்றோம். பிரதான சாலைக்கு சென்று நாங்கள் அதனை விற்பனை செய்கிறோம். என்னுடைய அம்மாவும் குழந்தைகளும் இங்கு தான் இருக்கின்றனர். நாங்கள் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுகிறோம்,” என்றார்.
“இந்த சிறிய இடத்தில் எங்களுக்கான தனித்துவமான ஒரு ‘செட்-அப்பை’ உருவாக்கியுள்ளோம். இப்பகுதி மேம்படுத்தப்படும் போது நாங்கள் எங்கே சென்று எப்படி வேலை பார்ப்போம் என்று தெரியவில்லை,” என்று கூறுகிறார் தீபக்.
“நாங்கள் வேறு இடத்திற்கு சென்றால், எங்களின் பணி பாதிக்கும். எங்களின் வர்த்தகம் தடைபடும். அனைத்தையும் ஆரம்பத்தில் இருந்து துவங்க இயலாது,” என்று கூறுகிறார் அவர்.
குயவர்கள் மட்டுமின்றி, துடைப்பம் உருவாக்குபவர்கள், சுற்றுலா வழிகாட்டி, வீட்டில் இருந்து பணியாற்றுபவர்கள் என்று பலரும் தாராவியின் குறுகலான இந்த தெருவில் தான் பணியாற்றுகின்றனர். இங்கே செயல்பட்டு வரும் தோல் உற்பத்தி பணிகள் மிகவும் பெரியது. அனைத்து மதத்தினரும் ஒன்றாக பணியாற்றுகின்றனர்.

தாராவியில் இருந்து உலகின் பல பகுதிகளுக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தோலை பதனிடுவது முதற்கொண்டு அதில் இருந்து பல பொருட்களை உருவாக்குவது வரை அனைத்தும் இங்கே தான் நடைபெறுகிறது. இந்த திட்டத்தினால் தோல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
பிபிசியிடம் பேசிய இம்ரான், “சிறிய அளவிலான தொழிற்சாலைகளின் மையமாக இருக்கிறது தாராவி. இங்கே இருக்கும் தோல் தொழிலைப் பாருங்கள். அனைவருக்குமான வேலை இதில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
ஒரு உடலின் உறுப்புகள் போன்று அவர்கள் செயல்படுகின்றனர். இது பிரித்தெடுக்கப்பட்டால் அந்த உடல் இறந்துவிடும். இங்கு அனைவரும் இப்படித்தான் ஒன்றாக பணியாற்றுகின்றோம். இல்லையென்றால் அனைவரும் தங்களின் தொழிலை இழப்பார்கள். வேலையின்மையால் அவதிப்படுவார்கள். இது தாராவியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
தாராவியில் வீடு பெறுவதற்கான நிபந்தனை பற்றி மக்கள் கூறுவது என்ன?
ராக்கிகளை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார் சந்திரசேகர் பத்வா. தாராவி முழுவதும் அவருக்கான விநியோக சங்கிலி பரவியுள்ளது. சந்திரசேகர் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜை பூர்வீகமாகக் கொண்டவர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் தாராவிக்கு வந்தார். ராக்கிகளை உருவாக்கும் பணிகளில் பல பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுகின்றனர். ஆண்டு முழுவதும் ராக்கிகளை உருவாக்கும் பணிகள் நடைபெறும். மறுசீரமைப்புத் திட்டம் காரணமாக சந்திரசேகர் பத்வா வருத்தம் அடைந்துள்ளார்.
“தாராவி ஒரு தங்கப்பறவை. கடின உழைப்பால் இதனை நாங்கள் உருவாக்கியுள்ளோம். வெறும் வயிற்றோடு நாங்கள் தூங்கச் சென்றிருக்கிறோம். இப்போது நாங்கள் இந்த இடத்தை அடைந்துள்ளோம். எங்கள் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பல விதமான பணிகளை செய்து வந்தனர். மறுசீரமைப்பு என்ற பெயரில் இதனை எங்களிடம் இருந்து பறித்துக் கொண்டால், எங்களுக்கு நன்மை ஏதும் நிகழாது,” என்று கூறுகிறார்.
“வரலாற்றில் மிக முக்கியமான புள்ளியாக உள்ளது தாராவி. சிறிய இந்தியா என்று இதனை அழைத்தாலும் தவறில்லை. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களின் கனவைத் தேடி மக்கள் மும்பைக்கு வருகின்றனர்,” என்று தாராவி குறித்து பேசுகையில் ஜாவேத் கான் கூறுகிறார்.

“இதற்கு முன்பும் தாராவியின் மறுசீரமைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எவரும் இங்குள்ள மக்களை இடமாற்றுவது குறித்து பேசவில்லை. இல்லையென்றால் இங்குள்ள மக்கள் இதே பகுதியில் வாழ தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு வீடுகள் கிடைக்கும். ஆனால் அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். இங்கு நிலவும் சமூக நல்லிணக்கம் சீர்கெடும்” என்று அவர் கூறினார்.
“தியோனார் குப்பைக் கிடங்கிற்கு அருகே மக்கள் மறுகுடியமர்த்தப்பட்டால் பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்யும். அங்கே உள்ள நீர் மோசமானதாக இருக்கும். காசநோய் போன்ற நோய்கள் ஏற்படும்,” என்றும் ஜாவேத் கூறுகிறார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுகிறது. இந்ததிட்டத்திற்கான ஒப்புதலை கணக்கெடுப்பு மூலம் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கணக்கெடுப்பில் பங்கேற்காதவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படாது.
கணக்கெடுப்பிற்கு மத்தியில், தற்போது தாராவியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களில் ஒரு பகுதியினர் அங்கே வாழத் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

சல்மா வீட்டில் இருந்தே பணியாற்றும் நபர். அவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக தாராவியில் வசித்து வருகிறது. இந்த திட்டத்தின் காரணமாக அவர் வீடற்றவராகிவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
“அரசாங்கத்திடமிருந்தோ அல்லது டி.பி.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்தோ எங்களுக்கு இதுவரை எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு வீடு தருவார்களா இல்லையா? அல்லது எதன் அடிப்படையில் நாங்கள் வீட்டைப் பெற தகுதியானவர்களாக கருதப்படுவோம் என்று எங்களுக்கு எதுவும் தெரியாது,” என்று பிபிசியிடம் பேசிய சல்மா தெரிவிக்கிறார்.
வளர்ச்சிக்காக இதை செய்வதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் வளர்ச்சி என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஆனால் சமமாக நாங்கள் நடத்தப்படவில்லை என்று உணருகிறோம் என்றும் சல்மா தெரிவிக்கிறார்.
“எங்களை ஒரு பூச்சியைப் போன்று நடத்துகின்றனர். சாலையில் செல்லும் ஒரு பூச்சியைப் போன்று அரசாங்கம் எங்களை நசுக்க முயற்சிக்கிறது. நாங்கள் கணக்கெடுப்பிற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்களின் இந்த வீட்டிற்கு மாற்றாக மற்றொரு வீட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்,” என்று அவர் தெரிவிக்கிறார்.
தாராவியின் மக்கள் பலரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.
தாராவி பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பு ஆரம்பகாலத்தில் இருந்தே, தாராவியில் வீடு கிடைப்பதற்கான தகுதி மற்றும் மறுவாழ்வு விதிமுறைகளை எதிர்த்து வருகிறது.
“2009-ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் வீடு பெறுவதற்கான தகுதி என்று ஏதும் இல்லை. அனைத்து மக்களுக்கும் வீடுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அப்படி ஒன்றும் நடக்கவில்லை. வீடு பெறுவதற்கான ஆண்டு வரம்பை நீக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே கோரிக்கை. அதன் மூலம் அனைத்து மக்களும் வீடுகளைப் பெறுவார்கள்,” என்று தாராவி பச்சாவ் அந்தோலனின் ராஜூ கோர்தே கூறுகிறார்.
தையல் கலைஞராக இருக்கும் சபியா இந்த திட்டம், நல்ல எதிர்காலத்திற்கான முதல்படி என்று கருதுகிறார். ஆனாலும் அச்சமடைந்துள்ளார் அவர்.
“எங்களிடம் இருக்கும் அனைத்தையும் விற்று நாங்கள் இந்த வீட்டைக் கட்டினோம். அதற்கான ஆவணங்களும் எங்களிடம் உள்ளக. ஆனால் 2000-ஆம் ஆண்டுக்கான வாக்காளர் அட்டையை அவர்கள் கேட்கின்றனர். அது எங்களிடம் இல்லை.
எங்களின் குழந்தைகளுக்கான நல்ல எதிர்காலத்திற்காக நாங்கள் இந்த வீட்டைக் கட்டினோம். அவர்களின் எதிர்காலத்திற்காக இரவும் பகலுமாக நான் உழைக்கின்றேன். வீட்டையும், வேலையையும் இழந்துவிட்டால் எங்களின் வாழ்வு முடிந்துவிட்டது,” என்று சபியா தெரிவிக்கிறார்.

இந்த திட்டத்தின் தலைவர் கூறுவது என்ன?
தாராவி மறுவளர்ச்சி திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.வி.ஆர் ஶ்ரீநிவாஸிடம் பேசியது பிபிசி ஹிந்தி.
வீடுகளைப் பெறுவதற்கான தகுதிகள் குறித்து பேசிய போது, “உலகின் மிகப்பெரிய நகர மறுசீரமைப்பு திட்டம் இது. எங்களின் இந்த திட்டம் அனைத்தையும் மாற்றிவிடும்.
தாராவியின் தெருக்கள் குறுலானவை. அங்கு கழிப்பறைகளோ, நீர் இணைப்போ இல்லை. ஒருவர் வீடு பெற தகுதியுடையவரோ தகுதியற்றவரோ, அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகிறோம்.
பலருக்கும் வாடகை வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் நிர்ணயிக்கும் விலையில் அவர்களால் அந்த வீட்டை வாங்கவும் இயலும்,” என்று அவர் கூறுகிறார்.
தாராவியின் மறுசீரமைப்பு திட்டம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானது.
இந்த திட்டத்திற்கான முதல் பேச்சுவார்த்தை 2004-ஆம் ஆண்டு துவங்கியது. அப்போது இருந்தே, பல்வேறு சர்ச்சைகள் இதனால் எழுந்தது.
20 ஆண்டுகளாக இந்த திட்டத்தைப் பெற பல நிறுவனங்களும் முயற்சி செய்தன. ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. இறுதியாக நவம்பர் 2022 அதானி குழுமம் ஏலத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, 2019-ஆம் ஆண்டு துபையை அடிப்படையாகக் கொண்ட செக்லிங் டெக்னாலஜிஸ் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் அதானிக்கு எதிராக ஏலத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும், தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.
அந்த நிறுவனம் தங்களின் டெண்டரில் ரயில்வேக்கு சொந்தமான 47.5 ஏக்கர் நிலத்தை இணைக்கவில்லை. இது மற்றொரு சர்ச்சையாக மாறி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதியில் அதானி குழுமத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
மற்றொரு புறம், மும்பை மக்களுக்கு பயனளிப்பதற்கு பதிலாக இந்திய பிரதமர் மோதியின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவராக கருதப்படும் கௌதம் அதானிக்கு தான் பயன் கிடைக்கும் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது.
அதே நேரத்தில், மும்பையைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி அஷிஷ் செலார் இந்த திட்டம் காலத்தின் கட்டாயம் என்று கூறுகிறார். இது முக்கியத்துவமான திட்டம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரும், ‘அர்பன் நக்சல்கள்’ என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
சமீபத்தில் மும்பைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தாராவியில் தோல் தொழில் செய்து வரும் மக்களை சந்தித்து பேசினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வந்தாலும், தாராவி மறுசீரமைப்பு திட்டத்தின் மீது பலர் நம்பிக்கை வைத்துள்ளனர். மும்பையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களைப் போன்றே தாராவியில் உள்ளவர்களும் சிறப்பான வாழ்வை வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளோம்
இளைய பிராயத்தைச் சேர்ந்த பூஜா யோகா கற்றுக் கொடுக்கிறார். “நான் அலுவலகத்திற்கு செல்லும் போது, நல்ல வாழ்விடங்களில் இருந்து வரும் மக்களை நான் பார்ப்பேன்,” என்று கூறுகிறார்.
“அவர்களின் வசிப்பிடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அவர்களின் வாழ்க்கைத் தரம் நன்றாக இருக்கிறது. இங்கும் மக்கள் முன்னேறியுள்ளனர் ஆனால் இங்கே ‘ப்ரைவசி’ என்ற தனியுரிமை இல்லை. மற்ற பகுதிகளைப் போன்றே தாராவியும் சிறப்படைய வேண்டும். ரீல்ஸ்கள் எடுப்பதற்கான இடங்களும் எங்களுக்கு இங்கே வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
தங்களின் வாழ்நாள் முழுவதையும் தாராவியில் கழித்த பலரிடம் இருந்து நேர்மறையான நம்பிக்கை பிறந்துள்ளது.
இதே தாராவி சாலையில் வளர்ந்த ராமாகாந்தும் இந்த திட்டத்தின் மூலம் நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்.
“என்னுடைய தெருவில் உள்ள வீடுகள் அனைத்தும் குதிரை அல்லது எருமைகளைக் கட்டும் கொட்டகையைக் காட்டிலும் சற்று பெரிதாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்த நிலைமை மாறும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இதற்கு பிறகு தாராவியும் மாறிவிடும்.”
“எங்களால் நிறைவேற்ற இயலாத கனவுகளை எங்களின் குழந்தைகள் நிறைவேற்ற இயலும்”
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC