Home தேசிய national tamil தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு ஒரு மாதத்திற்கும் அதிகமான அவகாசம் இருப்பது யாருக்கு சாதகம்?

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு ஒரு மாதத்திற்கும் அதிகமான அவகாசம் இருப்பது யாருக்கு சாதகம்?

16
0

SOURCE :- BBC NEWS

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், திமுக - அதிமுக, தவெக, பாஜக

பட மூலாதாரம், Getty Images

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கு ஒரு மாதத்திற்கும் அதிகமான அவகாசம் உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மறுபுறம் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

தேர்தலுக்கு புதுமுகமான விஜயின் தவெக தனித்து களம் காணுமா அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. நாம் தமிழர் கட்சி வழக்கம் போலவே தனித்து களம் காண்பதாக அறிவித்துள்ளது.

கள யதார்த்தம் இதுதான் என்கிற சூழலில், தேர்தல் அறிவிப்புக்கும் வாக்குப்பதிவுக்கு இடையே ஒரு மாதத்திற்கும் அதிகமான கால அவகாசம் இருப்பது யாருக்கு சாதகமாக இருக்கும்? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

2021–2026 பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு பற்றிய ஒப்பீடு

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்து விட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, பரப்புரையை நிறைவு செய்வதற்கு கடைசி நாளான ஏப்ரல் 21 வரையிலும் ஒரு மாதத்திற்கும் மேலாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு கால அவகாசம் உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 26-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கி, ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஆனால், கிட்டத்தட்ட 25 நாட்கள் கழித்து மே 2 ஆம் தேதி தான் வாக்குகள் எண்ணப்பட்டன.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி முடிவடைகிறது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்குமான கால இடைவெளி குறைந்துள்ளது.

தமிழ் மக்கள் வசிக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் அதே நாளில்தான் சமீபத்திய தேர்தல்கள் பெரும்பாலும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இம்முறை புதுச்சேரியில் தமிழ்நாட்டுக்கு இரு வாரங்களுக்கு முன்பே தேர்தல் நடக்கிறது.

பாஜகவுக்கு சாதகமாக அமையுமா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், திமுக - அதிமுக, தவெக, பாஜக

இப்போதைய நிலையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள கால அவகாசம் பாஜக–அதிமுக கூட்டணிக்கு தேவையாக இருப்பதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன். அந்தக் கூட்டணி இன்னும் முழுமையாக ஒட்டவில்லை என்று கூறும் அவர், விஜய் வருவதாக நம்பிக் கொண்டிருந்த நிலையில் அவர் வரவில்லை அந்த கூட்டணிக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.ராதாகிருஷ்ணன், ”அதேநேரத்தில், கேரளாவுக்கும் புதுச்சேரிக்கும் மிகக்குறுகிய கால அவகாசமே தரப்பட்டுள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணியையும், வேட்பாளர்களையும் இன்னும் இறுதி செய்யவில்லை. அதேபோன்று புதுச்சேரியில் ஆளும் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கு எதிரணியில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்குமான மோதல் முடிவுக்கு வரவில்லை.” என்றார்.

ஏறத்தாழ இதே கருத்தைக் கூறும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், ”இந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஏதாவது ஒரு வகையில் பாஜக நெருக்கடி கொடுக்கலாம். நிறைய நாட்கள் அவகாசம் இருப்பதால் பிரதமர் மோதி பரப்புரைக்கு அதிக முறை தமிழகம் வரலாம். பரப்புரையைத் தவிர்த்து, திமுகவுக்கு எதிராக வேறு ஏதாவது நடவடிக்கைகளும் இருக்கலாம்.” என்றார்.

வேட்புமனு தாக்கலுக்கே இன்னும் இரு வாரங்கள் இருக்கும் நிலையில், அதற்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தவெகவை கொண்டு வருவதற்கு பாஜக முயற்சிக்கலாம் என்றும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதே கருத்தையே திராவிட இயக்க ஆய்வாளரான துரை கருணாவும் குறிப்பிடுகிறார்.

வேட்பாளர்களுக்கு பரப்புரை செய்ய அவகாசம் வெறும் 12 நாள்தான்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைக்கு பெரிய அவகாசம் இருப்பதாகத் தோன்றினாலும், வேட்பாளர்களுக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின், அதிகபட்சம் 12 நாட்கள்தான் பரப்புரைக்குக் காலஅவகாசம் கிடைக்கும்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய துரை கருணா, ”தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு முன்பே கட்சிகள் பரப்புரையைத் துவங்கிவிட்டன. ஆனால் பொதுவான பரப்புரைகளை விட, தொகுதிக்குள் வேட்பாளர்கள் செய்யும் பரப்புரைதான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுதான் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும்.” என்றார்.

”இந்த காலஅவகாசத்தைப் பயன்படுத்தி, இனிமேல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை வைத்து பாஜக எந்த ஆட்டத்தையும் ஆடாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் சமீபமாக மாநில அரசுகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளை பாஜக அரசு குறைத்துக் கொண்டிருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மாற்றத்திற்கும் அதுவே பின்னணி என்று கருதுகிறேன்.” என்கிறார் துரை கருணா.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், திமுக - அதிமுக, தவெக, பாஜக

ஊழல் குற்றச்சாட்டுகளையே திமுக மீது பாஜக அதிகமாக வைத்து வரும் நிலையில் அவை சார்ந்த பல விஷயங்களை எடுத்து, தேர்தல் நெருங்கும் நிலையில் வெளியே விடுவதற்கு பாஜக ஒரு திட்டத்தை வடிவமைத்திருக்கலாம் என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், அதற்கு இந்த காலஅவகாசத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்பு அதிகமுள்ளது என்கிறார்.

”ஆனால் கே.என். நேரு மீதோ வேறு அமைச்சர்கள் மீதோ இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அது திமுக கூட்டணியை பெரிதும் பாதிக்குமென்று கருதமுடியாது. திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளே வந்து, அதற்கு சில சீட்களை கொடுத்ததால் சில சலசலப்புகள் எழுந்துள்ளன. தற்போதுள்ள நிலையில் இந்த காலஅவகாசத்தால் பெரிய அரசியல் மாற்றம் எதுவும் நிகழ வாய்ப்பில்லை. விஜய் தனித்து நிற்பது உறுதியாகிவிட்டால் திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிடும்!” என்றார் ராதாகிருஷ்ணன்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், திமுக - அதிமுக, தவெக, பாஜக

அதிமுக கூட்டணிக்குள் தவெக வந்தால் என்னவாகும்?

”இந்தத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க வேண்டுமென்ற அழுத்தத்தில் அண்ணாமலை, டிடிவி தினகரன் போன்றவர்கள் மிகக் கடுமையாக பரப்புரை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திமுகவுக்கு எதிரான மனநிலையில் ஒன்று பட்டு நிற்பதாகவே நான் கருதுகிறேன்.” என்றார் குபேந்திரன்.

அதேநேரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருக்கின்ற மார்ச் 15 தேதிப்படி, கூட்டணி பலம் உள்பட பலவும் திமுகவுக்கே சாதகமாக இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால் பலரும் கணிப்பது போல, அதிமுக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தவெக இரண்டாவது இடத்துக்கு வருவதற்கான வாய்ப்பு எதுவுமில்லை என்பது அவரது கருத்து.

”விஜய் இன்னும் தீவிரமாக பரப்புரை செய்வார் என்பது உண்மைதான். அவருக்கு கூட்டமும் வருகிறது. ஆனால் தேர்தல் அரசியல் என்று வரும் போது, இப்போதும் அதிமுகதான் முன்னிலையில் உள்ளது. அந்த கூட்டணிக்குள் தவெக வந்தால் என்னவாகுமென்று இப்போது கணிக்க முடியாது. ” என்றார் குபேந்திரன்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், திமுக - அதிமுக, தவெக, பாஜக

இந்த கருத்தில் மாறுபடும் துரை கருணா, சீமான், சசிகலா ஆகியோரையும் சேர்த்தால் இந்தத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நடக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார். சீமானுக்கும், சசிகலாவுக்கும் கிடைக்கும் வாக்குகள், பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்கிறார் அவர்.

”சசிகலாவின் கட்சியை யாரும் கவனிக்கவில்லை. அவர் எந்தக் கூட்டணியில் சேர்வார் என்று தெரியவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்க விரும்பாத, அவரை முதல்வர் வேட்பாளராக தினகரன் ஏற்றுக் கொண்டதை ஏற்காத, திமுகவுக்கு ஓ.பன்னீர் செல்வம் போனதையும் விரும்பாத முக்குலத்தோர் சமுதாய மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் சசிகலா கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடும். அது தொகுதிக்கு வெறும் 2 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் வாக்குகளாக இருந்தாலும், அந்த வாக்குகள் பல தொகுதிகளில் அதிமுக கூட்டணியை பாதிக்கும்.” என்கிறார் துரை கருணா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU