Home தேசிய national tamil தமிழ்நாடு தேர்தல்: வாக்களிப்பதற்கு முன் அறிய வேண்டிய 8 விஷயங்கள்

தமிழ்நாடு தேர்தல்: வாக்களிப்பதற்கு முன் அறிய வேண்டிய 8 விஷயங்கள்

23
0

SOURCE :- BBC NEWS

தமிழ்நாடு தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு அறிய வேண்டிய 8 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

பூத் ஸ்லிப் என்பது என்ன?

தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் ஒரு முக்கியமான சீட்டுதான் பூத் ஸ்லிப். வாக்காளர் ஒருவர் தன் வாக்கை செலுத்த வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கிருக்கும் உங்களின் விவரங்களை எளிதாக தெரிந்துகொள்ள இது உதவும்.

பூத் ஸ்லிப்பில் என்னவெல்லாம் இருக்கும்?

உங்களின் பெயர், வயது, உங்களுடைய எபிக் எண் (EPIC Number) எனப்படும் வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்குச்சாவடி விவரங்கள், தேர்தல் தேதி மற்றும் முக்கியமாக வாக்காளர் பட்டியலில் உங்களின் வரிசை எண் உள்ளிட்டவை இருக்கும்.

தேர்தல் தேதிக்கு முன்பாக, இந்தச் சீட்டை உங்களின் வீட்டுக்கே வந்து அதிகாரிகள் வழங்குவர்.

ஆனால், இந்த பூத் ஸ்லிப்பை வைத்து, நீங்கள் வாக்களிக்க முடியாது. இது, ஒரு வாக்காளர் பற்றிய விவரங்களை எளிதாக அடையாளம் காண்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். வாக்கு செலுத்த பூத் ஸ்லிப் உடன் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு சென்றால் தான் வாக்குச் செலுத்த அனுமதிப்பார்கள்.

ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் கவலை வேண்டாம்.

தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள வேறு சில ஆவணங்களை காண்பித்தும் வாக்கு செலுத்தலாம்.

அப்படி, 12 ஆவணங்களை தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. அதில் ஒன்றை காண்பித்து வாக்கு செலுத்த முடியும்.

அந்த 12 ஆவணங்கள் என்ன?

  • ஆதார் அட்டை
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் (MNREGA) பணி அடையாள அட்டை
  • புகைப்படத்துடன் இருக்கும் வங்கி/தபால் அலுவலக பாஸ்புக் (passbook)
  • தொழிலாளர் அமைச்சகத்துடைய திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • பான் அட்டை (PAN)
  • தேசிய மக்கள் தொகை பதிவின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
  • இந்திய பாஸ்போர்ட்
  • புகைப்படத்துடன் இருக்கும் ஓய்வூதிய ஆவணம்
  • புகைப்படத்துடன் இருக்கும் அரசு பணியாளர் அடையாள அட்டைகள்
  • எம்.பி/எம்எல்ஏ/எம்எல்சிக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை
  • இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்டவை

உங்கள் தொகுதி வேட்பாளர்களை தெரிந்துகொள்வது எப்படி?

தேர்தல் ஆணையத்தின் ECINET செயலியில் ‘Know Your Candidate’ என்பதை க்ளிக் செய்து, உங்களின் தொகுதியை தேர்ந்தெடுத்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். வேட்பாளர்களின் முகவரி, சொத்துப் பின்னணி, குற்ற பின்னணி, வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த முழு தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.

மேலும், வாக்குச்சாவடியிலும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சின்னங்கள் குறித்த விவரங்கள் பெரியளவில் வைக்கப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் சுமார் 4,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதேபோன்று, https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம்.

தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமாகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிக்கும் நேரம் என்ன?

காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணிவரை வாக்களிக்கலாம். மேலும், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

பட மூலாதாரம், TNelectionsCEO/X

தபால் வாக்குகள்

சில பிரிவினர் மட்டும் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி,

  • 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள்
  • மாற்றுத்திறனாளிகள்
  • அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர்
  • தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்
  • தவிர, அரசு பணியாளர்களும் தபால் வாக்குகளை முன்னதாக செலுத்தியுள்ளனர்.

அதன்படி, தமிழ்நாட்டில் 4.18 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பது எப்படி?

முதலில் வாக்குச்சாவடி அலுவலர் உங்களின் வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் மற்றும் அடையாள அட்டையை பரிசோதிப்பார். பின்னர், அடுத்த அலுவலர் இடது ஆட்காட்டி விரலில் நீல நிற மை வைத்து, ஸ்லிப் ஒன்றை கொடுத்து, பின் வாக்குப்பதிவுக்காக கையெழுத்து பெறுவார். மூன்றாவது அலுவலரிடம் நீங்கள் அந்த ஸ்லிப்பை கொடுத்து, விரலில் மை வைக்கப்பட்டதை காண்பிக்க வேண்டும். பின்னரே வாக்களிக்க முடியும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர் தாம் விரும்பும் வேட்பாளருக்கான பொத்தானை (நீல நிற பொத்தான்) அழுத்துவதன் மூலம் வாக்குப்பதிவு கருவியில் வாக்களிக்கும்போது, குறிப்பிட்ட வேட்பாளரின் பொத்தானுக்கு நேராக சிவப்பு விளக்கு ஒளிரும்.

வாக்களித்ததை சரிபார்ப்பது எப்படி?

வாக்காளர் ஈவிஎம் இயந்திரத்தில் வாக்களித்த பிறகு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபேட் இயந்திரத்தில் வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்னம் அடங்கிய ஒரு சீட்டு அச்சிடப்பட்டு சுமார் 7 விநாடிகளுக்கு தெளிவாக தெரியும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

பட மூலாதாரம், TNelectionsCEO/X

செய்யக்கூடாதவை என்ன?

  • எந்தவொரு அரசியல் கட்சியின் சின்னங்களையும் பிரதிபலிக்கும் வகையில் ஆடை அணியவோ, அல்லது ஏதேனும் எடுத்துச் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.
  • வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லுதல், புகைப்படம், வீடியோ எடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
  • ஆள்மாறாட்டம் செய்யக்கூடாது, அப்படிச் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை:

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 57,343,291 ஆகும்

ஆண்கள்: 2,80,30,658

பெண்கள்: 2,93,04,905

மூன்றாம் பாலினத்தவர்: 7,728

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU