Home தேசிய national tamil சிக்சர் மழைக்கு நடுவே நாயகனான பௌலர்: குஜராத்தை கேகேஆர் வென்றதால் பிளேஆஃப் சுற்றுக்கு அதிகரிக்கும் போட்டி

சிக்சர் மழைக்கு நடுவே நாயகனான பௌலர்: குஜராத்தை கேகேஆர் வென்றதால் பிளேஆஃப் சுற்றுக்கு அதிகரிக்கும் போட்டி

12
0

SOURCE :- BBC NEWS

GT vs KKR, சுனில் நரைன், பின் ஆலன், கிரீன், சுப்மன் கில்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (மே 16) பொழிந்த சிக்ஸர் மழைக்கு நடுவே குஜராத் டைட்டன்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மொத்தம் 465 ரன்கள் அடிக்கப்பட்ட இந்தப் போட்டியில் 34 சிக்ஸர்கள் பறந்தன. அதில் கேகேஆர் மட்டும் 22 சிக்ஸர்கள் அடித்து, ஒரு ஐபில் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச சிக்ஸர் எண்ணிக்கை என்ற சாதனையை சமன் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 247 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் தங்களுடைய 5வது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி, புள்ளிப் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இன்னும் தங்களுடைய பிளே ஆஃப் வாய்ப்பை அந்த அணி தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் இதற்கு முன் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 12 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்று 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த அந்த அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்க முடியும். ஆனால், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

தொடர் வெற்றிகள் பெற்றுவந்த குஜராத் டைட்டன்ஸ் அணி இந்தப் போட்டியில் தோற்றதற்கான 3 காரணங்கள் என்ன? ரன்மழை பொழிந்த இந்தப் போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் ஆட்ட நாயகன் விருது பெற்றது ஏன்? இந்தத் தோல்விக்கு மத்தியிலும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் அணுகுமுறை அவர்களுக்கு செய்திருக்கும் சிறு நன்மை என்ன?

காரணம் 1: ஃபின் ஆலன் காட்டிய அதிரடி

GT vs KKR, சுனில் நரைன், பின் ஆலன், கிரீன், சுப்மன் கில்

பட மூலாதாரம், ANI

இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் பந்துவீச்சின் மூலம் பவர்பிளேவிலேயே எதிரணிகளை மிரட்டிக் கொண்டிருந்தது. இந்தப் போட்டிக்கு முன்பாக விளையாடியிருந்த 12 போட்டிகளின் பவர்பிளேவில் மட்டுமே அந்த அணி 25 விக்கெட்டுகள் எடுத்திருந்தது. அதில் ககிஸோ ரபாடா மட்டுமே 16 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார். சிராஜ் உடன் இணைந்து அவர் வீசும் அந்த ஸ்பெல்களே டைட்டன்ஸின் வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்துவந்தன.

டைட்டன்ஸ் தொடர்ச்சியாக பெற்ற கடைசி 5 வெற்றிகளிலும் எதிரணிகளின் பவர்பிளே ஸ்கோர்:

  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 28/3
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 59/2
  • பஞ்சாப் கிங்ஸ் – 35/3
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – 78/3
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 34/4

இப்படி ஒவ்வொரு அணியையும் பவர்பிளேவிலேயே திக்குமுக்காட வைத்தார்கள் சிராஜ், ரபாடா இருவரும். இந்த 5 அணிகளுமே, பவர்பிளேவில் தற்போது டாப் 6 இடங்களில் இருக்கும் அணிகள் வேறு! விராட் கோலி, சஞ்சு சாம்சன் போன்ற அனுபவ வீரர்களும் சரி, வைபவ் சூர்யவன்ஷி, பிரியான்ஷ் ஆர்யா, அபிஷேக் ஷர்மா போன்ற இளம் வீரர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அதுதான் நிலை. ஆனால், ஃபின் ஆலனிடம் அது எடுபடவில்லை.

ஆரம்பத்தில் செட்டில் ஆக சில பந்துகள் எடுத்துக்கொண்ட ஆலன், முதல் 6 பந்துகளில் 6 ரன்கள் மட்டும் தான் எடுத்தார். அதன்பிறகு அதிரடியைத் தொடங்கிய அவர், தன்னுடைய ஷாட்களை மிகவும் உறுதியாக அடித்தார். அதனால், பெரும்பாலான எதிரணி வீரர்களைப் போல் அதிகளவில் பந்துகள் பேட்டில் எட்ஜ் ஆகவில்லை, பந்துகள் பவுண்டரிகளை அடைந்துவிட்டன.

டைட்டன்ஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் வழக்கமான ‘பேக் ஆஃப் லென்த்’ பந்துகளையும் சரி, ஃபுல் லென்த் பந்துகளையும் சரி, இரண்டையுமே சிறப்பாகக் கையாண்டார் ஆலன். டைட்டன்ஸ் அணியின் மிகப் பெரிய ஆயுதத்தால் இந்தப் போட்டியில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாமல் பார்த்துக்கொண்டார்.

ஆனால், அதன்பிறகு அவருக்கு ரஷீத் கான் ரூபத்தில் இன்னொரு சவால் காத்திருந்தது. அதுவும், கடைசி 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஃபார்முக்குத் திரும்பிக்கொண்டிருந்த ரஷீத் கான். ஆனால், அதை எதிர்பாராத வகையில் கையாண்டார் ஃபின் ஆலன். ரஷீத் கான் வீசிய முதல் 3 பந்துகளில் 16 ரன்கள் விளாசினார். அங்கிருந்து, கேகேஆர் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. அது டைட்டன்ஸ் கேப்டன் கில்லுக்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது.

35 பந்துகளில் ஆலன் 93 ரன்கள் விளாசிவிட்டுச் சென்றார். அவர் போட்டுவைத்த பாதையில் பயணித்த ரகுவன்ஷி, கேமரூன் கிரீன் இருவரும் அந்த அதிரடியைத் தொடர்ந்து அரைசதங்கள் விளாசினார்கள். அதன் காரணமாகத்தான், 247 ரன்கள் குவித்தது கேகேஆர். அதற்கு முந்தைய 5 போட்டிகளில் எந்த எதிரணியும் டைட்டன்ஸுக்கு எதிராக 170 ரன்களைக் கூடத் தொடவில்லை. காரணம், அவர்களின் பவர்பிளே ஆதிக்கம். ஆலன், அதைத்தான் இந்தப் போட்டியில் உடைத்தார்.

GT vs KKR, சுனில் நரைன், பின் ஆலன், கிரீன், சுப்மன் கில்

பட மூலாதாரம், ANI

காரணம் 2: குஜராத் டைட்டன்ஸ் ஃபீல்டிங்

இந்தப் போட்டிக்கு முன்பாக கேட்ச் பிடிக்கும் திறன் (Catch Efficiency) அடிப்படையில் 2வது இடத்தில் இருந்த அணி குஜராத் டைட்டன்ஸ். ஆனால், இந்தப் போட்டியில் அவர்களால் அதே தரத்தை தக்கவைக்க முடியவில்லை.

கேகேஆர் அணி கொடுத்த 6 கேட்ச் வாய்ப்புகளில் இரண்டை மட்டுமே சரியாகப் பிடித்தது குஜராத் டைட்டன்ஸ். அவர்கள் தவறவிட்ட 4 வாய்ப்புகளில் 3 எளிமையானவை. ஃபின் ஆலன் 14 ரன்கள் எடுத்திருந்த போது ஜேசன் ஹோல்டர் சற்றே கடினமான ஒரு கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார்.

பின்னர் ஆலன் 33 ரன்களில் இருந்தபோது கிடைத்த எளிமையான வாய்ப்பைத் தவறவிட்டார் சிராஜ். அந்தப் பந்தில் சிங்கிள் எடுத்த ஆலன், அடுத்த 17 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார்.

16வது ஓவரில் ரஷீத் கான் பந்துவீச்சில் கேமரூன் கிரீன் கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார் அர்ஷத் கான். அப்போது 23 ரன்களே எடுத்திருந்த கிரீன், ஆட்டம் முடியும்போது எடுத்திருந்த ரன்கள் 52.

அடுத்து, 18வது ஓவரை ரபாடா வீசிய போது ஒரு கேட்ச் தவறவிடப்பட்டது. ரகுவன்ஷி கொடுத்த வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் தவறவிட்டார். அந்த வாய்ப்புக்குப் பிறகு தான் சந்தித்த 8 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார் ரகுவன்ஷி. அதிலும் குறிப்பாக சிராஜ் வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும் விளாசினார் ரகுவன்ஷி.

குறைந்தபட்சம் கிரீன் மற்றும் ரகுவன்ஷி ஆகியோரின் கேட்ச்கள் பிடிக்கப்பட்டிருந்தால் சுமார் 20 ரன்கள் வரை கூட டைட்டன்ஸால் கட்டுப்படுத்தியிருக்க முடியும். அது, ஆட்டத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

காரணம் 3: சுனில் நரைன்

GT vs KKR, சுனில் நரைன், பின் ஆலன், கிரீன், சுப்மன் கில்

பட மூலாதாரம், ANI

மேலே சொன்னதுபோல், இந்தப் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தது. இரு அணியின் பேட்டர்களுமே நன்கு ரன் சேர்த்தார்கள். இந்தப் போட்டியில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகள் வெறும் 7 மட்டுமே. அரைசதம் அடித்தவர்கள் எண்ணிக்கை 6. இப்படியொரு போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய ஒரு பௌலர் தான் ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார். அவர் சுனில் நரைன்.

248 என்ற இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் இன்னிங்ஸை சிறப்பாகவே தொடங்கியது. முதல் 4 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 49 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. ஐந்தாவது ஓவரைப் பந்துவீச நரைன், முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார். நிஷாந்த் சிந்துவை அவுட்டாக்கிய நரைனின் அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அதிலும் ஒரு ரன் லெக் பை மூலம் வந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன் விகிதம் குறையும் வகையில் அந்த ஓவரிலேயே வேகத்தடை போட்டார் நரைன்.

அவரது அடுத்த 2 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்தார் நரைன். ஆனால், பவர்பிளேவில் வீசியதுபோல் ஒரு அட்டகாசமான ஓவரை கடைசி கட்டத்திலும் வீசினார் அவர். 17வது ஓவரை வீசிய அவர், சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஷுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார். 4 ஓவர்களுக்கு 71 ரன்கள் தேவை என்ற நிலையில் வந்து, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 85 ரன்கள் எடுத்த பேட்டரின் விக்கெட்டையும் வீழ்த்தினார் நரைன். அது, டைட்டன்ஸ் அணியின் நம்பிக்கையை மொத்தமாக உடைத்தது.

இந்தப் போட்டியில் பந்துவீசியவர்கள் மொத்தம் 13 பேர். அதில், 8 ரன்களுக்கும் குறைவான எகானமியில் பந்துவீசியவர்கள் இருவர் மட்டுமே. முதலாவது 8 பந்துகள் மட்டுமே வீசி காயமடைந்து வெளியேறிய மதீஷா பதிரானா (எகானமி 6.75). இரண்டாவது, சுனில் நரைன். 7.25 என்ற எகானமியில் பந்துவீசினார் அவர். அதில் 11 டாட் பால்கள். இந்தப் போட்டியில் அதிக டாட் பால்கள் வீசியதும் அவர்தான். அந்தப் பந்துகள் டைட்டன்ஸ் பேட்டர்கள் மீதான நெருக்கடியை தொடர்ந்து அதிகப்படுத்தியது.

பேட்டிங் செய்வது மிகவும் எளிதாக இருந்த அந்த ஆடுகளத்தில், 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பௌலரும் நரைன் தான். அப்படியொரு ஆடுகளத்தில் சிக்கனமாகப் பந்துவீசி முக்கியக் கட்டத்தில் விக்கெட்டுகள் வீழ்த்தியதால் தான் ஆட்ட நாயகன் விருது வென்றார் சுனில் நரைன். அதுவும், தன்னுடைய 200வது ஐபிஎல் போட்டியில். ஐபிஎல் அரங்கில் 200 போட்டிகளில் விளையாடும் முதல் வெளிநாட்டு வீரரும் இவர்தான்.

புள்ளிப்பட்டியலில் மாற்றம்

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் வென்றிருந்தால் முதல் அணியாக பிளேஆஃப் தகுதி பெறலாம் என்றிருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்த சீசனின் முதல் பாதியில் வெற்றியே கைக்கெட்டாமல் கடைசி இடத்தில் இருந்த கொல்கத்தா அணி பிற்பகுதி ஆட்டங்களில் வெற்றிகளை குவித்து வருகிறது. நேற்றைய வெற்றியின் மூலம் அந்த அணி பிளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நடப்பு சீசனில் இன்னும் ஓர் அணி கூட பிளேஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தவில்லை. புள்ளிப் பட்டியலில் டாப் 4 அணிகளில் ஒன்றாக இருந்த குஜராத் டைட்டன்சை பின்வரிசையில் இருந்த கேகேஆர் வீழ்த்தியிருப்பதன் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கான போட்டி மேலும் கடுமையாகியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU