Home தேசிய national tamil சாதி மறுப்பு திருமணத்திற்கு அங்கீகாரம் தருவதை எதிர்த்த காந்தி கூறிய காரணம் என்ன?

சாதி மறுப்பு திருமணத்திற்கு அங்கீகாரம் தருவதை எதிர்த்த காந்தி கூறிய காரணம் என்ன?

15
0

SOURCE :- BBC NEWS

 சாதி மறுப்புத் திருமணம், காந்தி - ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில் குஜராத் சட்டமன்றத்தில் திருமணப் பதிவுச் சட்டம் குறித்து ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. குஜராத் அரசின் இந்த அறிவிப்பின்படி, ‘குஜராத் திருமணப் பதிவுச் சட்டம் 2006’-இல் (Gujarat Registration of Marriage Act 2006) ஒரு திருத்தத்தை செய்ய குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி வெளியிட்ட இந்த அறிவிப்பின்படி, திருமணத்தைப் பதிவு செய்யும் போது பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும், அதற்காகத் தனி இணையதளம் உருவாக்கப்படும். இதுகுறித்துக் குடிமக்களிடமிருந்து ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளன. அதன் பிறகு ஒரு குழு அமைக்கப்படும், அது அரசியலமைப்பு வரம்பிற்குள் இருக்கும் முறையான ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு அதைச் செயல்படுத்தும்.

“இந்த புதிய முன்மொழியப்பட்ட மாற்றங்கள் வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையை ‘அச்சுறுத்துவதாக’ சில சட்ட வல்லுநர்கள் நம்புகின்றனர். இத்தகைய அறிவிப்பானது ‘நம்மை 18-ஆம் நூற்றாண்டின் பழமைவாத சமூகத்திற்கு பின்னோக்கி அழைத்துச் செல்கிறது’ என்று சிலர் அஞ்சுகின்றனர்.”

திருமணங்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் கட்டுப்படுத்தும் குஜராத் அரசின் இந்த முன்மொழிவு பற்றிய அறிவிப்பிற்குப் பிறகு, சர்தார் வல்லபாய் படேலின் சகோதரர் விட்டல்பாய் படேலின் சாதி மறுப்புத் திருமணங்கள் குறித்த அந்த மசோதா நினைவுக்கு வருகிறது. குஜராத் அரசின் தற்போதைய அறிவிப்பிற்கு நேர் எதிரான அந்த மசோதாவை அவர் பிரிட்டிஷ் ஆட்சியில் இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலில் தாக்கல் செய்ய முயன்றார்.

சாதி மறுப்புத் திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் மசோதா எது?

  சாதி மறுப்புத் திருமணம், காந்தி - ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

விட்டல்பாய் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் பாரம்பரிய ‘இந்து மரபு மற்றும் வர்ண அமைப்பை’ சவாலுக்கு உட்படுத்தும் ஒரு மசோதாவைக் கொண்டு வரும் துணிச்சலைக் கொண்டிருந்தார். செப்டம்பர் 1918-இல், அவர் இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உறுப்பினரானார்.

ஜி.ஐ. படேல் எழுதிய ‘விட்டல்பாய் படேல்: லைஃப் அண்ட் டைம்ஸ்’ என்ற புத்தகத்தில், “அவர் இம்பீரியல் கவுன்சிலில் நுழைந்த மறுநாளே, இந்துகளின் பல்வேறு சாதிகளுக்கு இடையே செய்யப்படும் சாதி மறுப்புத் திருமணங்களைச் சட்டப்பூர்வமானதாக அறிவிப்பதற்கான ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யும் முன்மொழிவை முன்வைத்தார்” என்று எழுதப்பட்டுள்ளது.

“அந்த நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் ‘இந்து சட்டம்’ நடைமுறையில் இருந்தது, அதன்படி அந்த நேரத்தில் வெவ்வேறு சாதிகளுக்கு இடையில் நடக்கும் திருமணங்கள் செல்லாதவையாகக் கருதப்பட்டன. இந்தியாவில் அதுவே மரபாக இருந்தது. இதன் காரணமாக விவாகரத்து, பராமரிப்புச் செலவு அல்லது ஜீவனாம்சம், வாரிசு உரிமைகள் போன்றவற்றிற்காகப் பல நேரங்களில் (குறிப்பாகப் பெண்களுக்குப்) பிரச்னைகள் ஏற்பட்டன.”

5 செப்டம்பர் 1918 அன்று, இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலில் விட்டல்பாய் படேல் இந்து திருமண மசோதாவை தாக்கல் செய்தார். விட்டல்பாய் படேல், சாதி மறுப்புத் திருமணங்கள் மீதான பல நூற்றாண்டுகள் பழமையான தடையை நீக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

இது இந்து கட்டமைப்பில் சொந்தச் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தை உடைக்கும் ஒரு முயற்சியாகும். விட்டல்பாய் தாக்கல் செய்த இந்த மசோதாவில், சாதி தடைகளைத் தாண்டி ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் தனிநபர் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

விட்டல்பாய் இரண்டு உதாரணங்களை முன்வைத்தார்

 சாதி மறுப்புத் திருமணம், காந்தி - ஜின்னா

பட மூலாதாரம், PUNIT BARNALA/BBC

ஜி.ஐ. படேலின் புத்தகத்தில், இந்த மசோதாவைத் தாக்கல் செய்யும் போது விட்டல்பாயின் கவனத்திற்கு இரண்டு உதாரணங்கள் வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் இரண்டு சம்பவங்கள் விவாதத்திற்கு உள்ளாயின: முதலாவது காஷி மற்றும் ஜம்னாதாஸ் இடையேயானது, இரண்டாவது லட்சுமி மற்றும் கல்யாண் சிங் இடையேயானது.

இந்த இரண்டு சம்பவங்களும் ஜி.ஐ. படேலின் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. முதல் வழக்கில், காஷிக்கு 16 வயதாக இருந்தபோது அவர் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் 25 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். அவர்களுக்குத் திருமணத்தின் மூலம் 8 குழந்தைகள் இருந்தன. ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கணவன் மனைவியைக் கைவிட்டார்.

ஜீவனாம்சம் கோரி காஷி 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் வயது முதிர்வால் வாழ்க்கையை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால், அவர் நீதிமன்றத்திற்குச் சென்று கணவனிடம் ஜீவனாம்சம் கோரினார். ஆனால் ‘இந்து சட்டப்படி அவர்கள் வேறு சாதியில் திருமணம் செய்துள்ளதால் அது செல்லாதது; அதன் விளைவாக அவருக்கு ஜீவனாம்சம் கிடையாது’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரண்டாவது வழக்கில் கல்யாண் சிங் ஒரு ராஜபுத்திரர் மற்றும் லட்சுமி ஒரு பிராமணர். கல்யாண் சிங் லட்சுமியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்திருந்தார். பின்னர் கல்யாண் சிங் லட்சுமியை வீட்டிலிருந்து வெளியேற்றியதுடன் அவருக்குத் திருமண உரிமைகளை வழங்க மறுத்துவிட்டார்.

இந்த வழக்கிலும் ‘இந்து சட்டப்படி’ இந்தத் திருமணம் வேறு சாதியில் நடந்திருப்பதால் சட்டப்பூர்வமானது அல்ல என நீதிமன்றம் கல்யாண் சிங்கிற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. ஏனெனில் சாதி மறுப்புத் திருமணங்கள் இன்றி இந்துக்களிடையே நிலவும் ‘தீண்டாமை எனும் கொடுமை’ நீங்காது என்று விட்டல்பாய் படேல் நம்பினார். இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலில் உறுப்பினராவதற்கு முன்பே, விட்டல்பாய் படேல் பாம்பே மாகாண சட்டமன்றத்தில் தனது ‘சமத்துவவாதி எனும் பிம்பத்தை’ நிலைநாட்டியிருந்தார்.

விட்டல்பாயின் மசோதா ஒரு படி மேலே இருந்தது

 சாதி மறுப்புத் திருமணம், காந்தி - ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

அந்த நேரத்தில் சட்டப்பூர்வமாகச் சாதி மறுப்புத் திருமணம் சாத்தியமாக இருந்தது, ஆனால் அது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்தது. அதில் முதல் நிபந்தனை என்னவென்றால், திருமணம் முற்றிலும் மதச்சார்பற்ற முறையில் அரசியல் அதிகாரி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், இரண்டாவது நிபந்தனை, இரு தரப்பினரும் இந்து மதத்தைத் துறக்க வேண்டியது அவசியம்; இதன் காரணமாகச் சமூகப் புறக்கணிப்பு ஏற்படும் அல்லது குடும்ப வாரிசு உரிமையை இழக்கும் பயம் இருந்தது.

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் மூத்த ஆசிரியரும் எழுத்தாளருமான மனோஜ் மிட்டா எழுதிய ‘சாதிப் பெருமை: இந்து சமூகத்தில் சமத்துவத்திற்கான போர்’ (Caste Pride: Battle for Equality in Hindu Society) நூலில், “விட்டல்பாய் படேல் இந்த மசோதாவை இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலில் தாக்கல் செய்தபோது, அதன் மீது காரசாரமான விவாதங்கள் நடந்தன” என்று எழுதப்பட்டுள்ளது.

“இந்த விவாதங்களில் ‘பிராமணர்கள் சாதிப் பிரிவினையைத் தக்கவைப்பதில் முக்கியப் பங்கு’ வகித்ததாகக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மதன் மோகன் மாளவியா மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இந்து சமூகத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்கான படேலின் இந்த முயற்சிகளை எதிர்த்தனர்.”

விட்டல்பாயின் நோக்கம் இந்து சமூகத்தில் சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதாக இருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் சில அரசியல்வாதிகள் அரசியலில் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளித்தனர், ஆனால் சமூக சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. சிலர் இந்து சமூகத்தில் உள்ள பழக்கவழக்கங்கள் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களில் தலையிடுவதையும் விரும்பவில்லை.

“இந்த மசோதா இந்துக்களிடையே உள்ள சாதி அமைப்பு மீது தொடுக்கப்பட்ட பெரிய தாக்குதலாகும்,” என ஜி.ஐ. படேல் ‘விட்டல்பாய் படேல்: வாழ்க்கை மற்றும் காலம்’ என்ற நூலில் எழுதுகிறார்.

“சாதி முறையை உடைப்பதற்கு இந்த மசோதா முக்கியமான முதல் படியாகும். திருமணத்தின் மீதான சாதித் தடைகள் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பவை, ஏனெனில் இத்தகைய தடைகளால் விபசாரம் அதிகரிக்கிறது. அங்கீகரிக்கப்படாத திருமணங்களால் பிறந்த குழந்தைகளுக்குப் பல பிரச்னைகளும் அநீதிகளும் ஏற்படுகின்றன. குழந்தை திருமணங்கள் அதிகரிக்கின்றன, விதவைகளின் பிரச்னைகளும் அதிகரிக்கின்றன.” என விட்டல்பாய் வாதிட்டார்,

சாதிய முறை சமூகத்தைச் சிறு சிறு வட்டங்களாகப் பிரித்து விடுகிறது என்று விட்டல்பாய் கருதினார். சட்டத்தில் திருத்தம் மற்றும் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதன் மூலம் சமூகம் அதிக முற்போக்கானதாகவும் நீதியானதாகவும் மாறும் என்று அவர் கருதினார்.

ஜின்னா ஆதரவு, மாளவியா எதிர்ப்பு

 சாதி மறுப்புத் திருமணம், காந்தி - ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

இந்த மசோதாவை மணிந்திர சந்திர நந்தி, ராஜா ராம்பால் சிங், சீதாநாத் ராய், ரங்காசாமி மற்றும் மதன் மோகன் மாளவியா போன்ற தலைவர்கள் எதிர்த்தனர், அதே நேரத்தில் காபர்டே, சாஸ்திரி, ஜின்னா மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் ஆதரித்தனர்.

சுரேந்திரநாத் இந்த மசோதாவிற்கு ஆதரவாக இருந்தபோதிலும், இந்த மசோதாவிற்கான சரியான நேரம் இது அல்ல என்று கூறி விட்டல்பாயிடம் மசோதாவைத் திரும்பப் பெறுமாறு கோரினார்.

ஜின்னா இந்த மசோதாவிற்கு ஆதரவாக உரையாற்றினார். இந்த மசோதா குறித்து விவாதித்த ஒரே முஸ்லிம் உறுப்பினர் அவர்தான்.

“இந்த மசோதாவில் ஒவ்வொரு பிராமணரும் ஒரு சூத்திரரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இல்லை. ஒவ்வொரு சூத்திரரும் ஒரு பிராமணரைத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் இல்லை. இது எதையும் கட்டாயமாக்கும் (ஆணையாக மாற்றும்) மசோதா அல்ல.” அவர் கூறினார்,

“நான் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இதைப் பற்றிப் பேசுவது சில இந்துகளுக்குக் கவலையை ஏற்படுத்தலாம். ஆனால் நான் இந்த கவுன்சிலின் உறுப்பினர். நான் இந்த விஷயத்தில் வாக்களிக்க வேண்டும். நான் இந்த விவகாரத்தில் மௌனமாக இருக்க முடியாது. எனக்கு இந்த விவகாரத்தில் ஆர்வம் உள்ளது,” என அவர் மேலும் கூறினார்.

“முஸ்லிம் சமூகத்திற்குத் துயரம் ஏற்படும் போது மற்றவர்கள் அதன் தீர்வில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்களோ, அதே அளவு ஆர்வத்தை இன்று சட்டத்தால் (இந்து சட்டத்தால்) பாதிக்கப்பட்டுள்ள இந்து சிறுபான்மையினரின் நலனில் நான் அக்கறை கொண்டுள்ளேன்.”

கவுன்சிலில் ஜின்னா கேள்வி எழுப்பிய போது, “மேற்கத்திய சிந்தனைகள் மூலம் நீங்கள் யாரை கல்வியறிவு பெறச் செய்தீர்களோ, அவர்களை இன்னமும் சாதி விலங்குகளில் கட்டி வைத்திருக்கிறீர்களே, அவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் அளிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.

மதன் மோகன் மாளவியா இந்த மசோதாவை எதிர்த்தார். அவர் கூறினார், “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ‘பாசு மசோதா’ தாக்கல் செய்யப்பட்ட போதே இந்து மக்கள் இதற்கான தீர்ப்பை வழங்கிவிட்டனர்.”

முன்னதாக காங்கிரஸ் உறுப்பினர் பூபேந்திரநாத் பாசு சாதி மறுப்பு மற்றும் மத மறுப்புத் திருமணங்களை அனுமதிக்கக் கோரும் மசோதாவைத் தாக்கல் செய்திருந்தார், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் இந்த மசோதாவின் தகுதி குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை, ஆனால் ஒரு விஷயம் நிச்சயம், சாதாரண இந்து மக்கள் இந்த மசோதாவைத் தீவிரமாக எதிர்ப்பார்கள்,” என மாளவியா கூறினார்.

பிரிட்டிஷ் அரசு கூறியது என்ன?

 சாதி மறுப்புத் திருமணம், காந்தி - ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

அரசு இந்த மசோதா விவகாரத்தில் கவுன்சிலில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருந்தது. சில பிரிட்டிஷ் எம்.பி.க்கள் இந்த மசோதாவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டனர், ஆனால் சிலர் இந்த மசோதாவினால் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு எதிரான இந்துகளின் எதிர்ப்பு மேலும் வலுக்கும் என்று கருதினர்.

புதிய சீர்திருத்த கவுன்சில் அமைக்கப்படும் வரை விட்டல்பாய் இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று சில உறுப்பினர்கள் விரும்பினர், ஆனால் விட்டல்பாய் அதற்குத் தயாராக இல்லை. அவர் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

வைஸ்ராய் எக்ஸிகியூட்டிவ் கவுன்சில் மற்றும் இம்பீரியல் கவுன்சிலின் உறுப்பினர் வில்லியம் வின்சென்ட் அரசின் சார்பாகப் பேசுகையில், தற்போது இந்த மசோதாவைத் தாக்கல் செய்யும் முன்மொழிவை ஏற்க முடியாது என்றார். இந்த விவகாரத்தில் இந்து மக்களின் கருத்தை அறிவது அவசியம் என்றும் அவர் கூறினார். பிரிட்டிஷ் அரசு இந்த மசோதாவை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யும் உரிமையை இப்போது பயன்படுத்தாது; அதன் முடிவு பின்னர் எடுக்கப்படும் என கூறினார்.

இதுகுறித்து ஜார்ஜ் லோண்டேஸ் கூறுகையில், “அரசுக்கு இந்த விவகாரத்தில் கிடைக்கும் ஆலோசனைகளைப் பொறுத்தே அரசின் அடுத்தக்கட்ட முடிவு அமையும். ஆனால் எனது நண்பர் சர் வில்லியம் வின்சென்ட், பெரும்பான்மையினர் வழங்கும் ஆலோசனைகளின் அடிப்படையில்தான் இந்த மசோதாவின் எதிர்காலம் அமையும் என்று கூறவில்லை” என்றார்.

‘இந்து சட்டத்தில்’ நிபுணரான லோண்டேஸ் கூறுகையில், “ஒரு உயர் சாதி இந்து ஆணுக்கும் அவருக்குக் கீழான சாதிப் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தைப் பொறுத்தவரையில், சாஸ்திரங்களில் அனுமதி உண்டு. இது இந்து சாஸ்திரங்களின் மரபு மற்றும் வரலாறு இதற்குச் சாட்சியாக உள்ளது” என்றார். மாளவியா அவரை இடைமறித்து, “இது உண்மையல்ல. 3,000 ஆண்டுகளாக அதுபோன்ற எதுவும் நடக்கவில்லை” என்றார்.

ரவீந்திரநாத் தாகூரும் இந்த மசோதாவை ஆதரித்துக் கடிதம் எழுதியிருந்தார். லாலா லஜபதி ராயும் நியூயார்க்கிலிருந்து விட்டல்பாயின் மசோதாவிற்கு ஆதரவாகக் கடிதம் எழுதியிருந்தார்.

“விட்டல்பாயின் மசோதாவை எதிர்ப்பது வெட்கக்கேடான மற்றும் அவமானகரமான செயலாகும். இந்தச் சிறிய சட்டத் திருத்தத்தின் மூலம் நாம் முன்னேறினால், வெளிநாடுகளில் நமது மதிப்பும் பிம்பமும் பிரகாசமடையும். இந்து சாஸ்திரம் மற்றும் இந்து மதத்தின் பெயரால் இதை எதிர்ப்பவர்கள், இந்த மதத்தைப் பற்றி மிகக் குறைவாகவே தெரிந்தவர்கள்,” என அவர் எழுதினார்.

25 பிப்ரவரி 1920 அன்று, விட்டல்பாய் இந்த மசோதாவை கவுன்சிலின் தேர்வுக் குழுவிடம் ஒப்படைத்தார். இதற்கிடையில், இந்தியாவில் இந்த மசோதாவைப் பிரிட்டிஷ் அரசு கொண்டு வருவதாக ஒரு கருத்து நிலவியதால், ஜார்ஜ் லோண்டேஸ் இது ஒரு அரசு சாரா உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மசோதா என்று விளக்கமளித்தார். பிரிட்டிஷ் அரசின் உறுப்பினர்கள் இந்த மசோதாவைப் பாராட்டினர் மற்றும் அதைச் சீர்திருத்தவாதமானது என்று குறிப்பிட்டனர்.

காந்தி எதிர்த்தது ஏன்?

 சாதி மறுப்புத் திருமணம், காந்தி - ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

விட்டல்பாயின் சாதி மறுப்புத் திருமண மசோதா குறித்த காந்தியின் எதிர்வினை தயக்கம் நிறைந்ததாக இருந்தது.

‘சாதிப் பெருமை: இந்து சமூகத்தில் சமத்துவத்திற்கான போர்’ (Caste Pride: The Battle for Equality in Hindu Society) என்ற நூலில் மனோஜ் மிட்டா எழுதுகையில், “28 ஜனவரி 1919 அன்று காந்திஜி ஒரு கடிதம் எழுதி படேலிடம், ‘இந்து சமூகத்தில் இவ்வளவு குழப்பம் நிலவும் போது, உங்கள் மசோதா நாட்டிற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்று கேட்டிருந்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

23 பிப்ரவரி 1919 அன்று ‘இந்திய சமூக சீர்திருத்தவாதி’ (Indian Social Reformer) என்ற இதழில் வெளியான ஒரு செய்தியில் காந்தி ஒரு இடைநிலைப் பாதையைப் பரிந்துரைத்ததாக அதே புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் சாதி மறுப்புத் திருமணங்கள் சாதி உட்பிரிவுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் பொருள் அவர் முக்கியச் சாதிகளுக்கு இடையில் அல்லாமல், ஒரே சாதியின் உட்பிரிவுகளுக்கு இடையே திருமணங்களை ஏற்க தயாராக இருந்தார்.

இந்தச் சீர்திருத்தத்திற்கு மாளவியாவும் ஆதரவு தருவார் என்று மாளவியா தமக்கு உறுதி அளித்துள்ளதாகவும் காந்திஜி எழுதினார். காந்திஜி தேர்வுக் குழுவிடம் இந்த மசோதாவில் மேற்கூறிய திருத்தத்தைச் செய்யுமாறும் கூறியிருந்தார். வர்ண அமைப்பை வலியுறுத்திப் பேசிய அவர், நான்கு வர்ணங்களின் அமைப்பு உடைக்கப்படக் கூடாது என்றார்.

இருப்பினும், “எனது முந்தைய எதிர்வினைகள் அரை உண்மை மட்டுமே. மசோதா வர்ண அமைப்பு மீது தாக்குதல் நடத்தினால், நான் அதை எதிர்ப்பேன்,” என பிப்ரவரி 26 அன்று காந்தி மீண்டும் எழுதினார்.

பின்னாளில் காந்தி இந்தச் சாதி மறுப்பு மசோதா குறித்த சட்டப்பூர்வ விஷயங்களைப் பற்றித் தமக்கு முழுமையாகத் தெரியாது என்று ‘ஒப்புக்கொண்டார்’. இருப்பினும், விட்டல்பாய் படேல் இந்த விவகாரத்தில் காந்திக்கு வேண்டுகோள் விடுத்துக் கடிதம் அனுப்பியிருந்தார், என மனோஜ் மிட்டா எழுதுகிறார்.

காந்தி இதுகுறித்துக் கூறுகையில், தற்போது தன்னிடம் உள்ள வேலைகளின் நெருக்கடிக்கு மத்தியில் தன்னால் இதை ஆழமாகப் படிக்க முடியாது என்றார். அந்த நேரத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது, அதன் பிறகு காந்திஜிக்கு இந்த விவகாரத்தில் மேலும் எந்த கருத்தையும் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்காமல் போயிருக்கலாம்.

மசோதா என்ன ஆனது?

 சாதி மறுப்புத் திருமணம், காந்தி - ஜின்னா

தேர்வுக் குழு 17 மார்ச் 1920 அன்று இந்த மசோதா குறித்த தனது அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கை விட்டல்பாய் படேலுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

“இந்த அறிக்கையில் மசோதாவில் மாற்றம் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டது, அதன்படி சாதி மறுப்பு என்பதற்குப் பதிலாக உட்பிரிவுச் சாதிகளுக்கு இடையிலான திருமணங்களை மட்டுமே சட்டப்பூர்வமானதாகக் கருத வேண்டும் எனக் கூறப்பட்டது,” என மனோஜ் மிட்டா எழுதுகிறார்.

அறிக்கையின் சாரம் காந்தியின் ஆலோசனையோடு ஒத்துப்போனது. பிரிட்டிஷ் அரசு சமூக சீர்திருத்தத்திற்காக உடனடியாக எந்த ஒரு பெரிய நடவடிக்கையையும் எடுக்க விரும்பவில்லை என்பதும், ஆனால் அது மெதுவாகச் சீர்திருத்தங்களைச் செய்ய உறுதிபூண்டிருந்தது என்பதும் அந்த அறிக்கையில் தெரிந்தது.

1921-இல் புதிய லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உருவாகும் வரை, இந்த மசோதா மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று குழு முடிவு செய்தது.

காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாகக் காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்திருந்தது, எனவே படேல் இல்லாததால் எந்த ஒரு உறுப்பினரும் இந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யும் துணிச்சலைக் காட்டவில்லை.

இருப்பினும், காங்கிரஸிலிருந்து பிரிந்த உறுப்பினர்கள் ஸ்வராஜ் கட்சியை உருவாக்கினர். படேல் 1923-இல் தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய விடாமல் அவர் தடுக்கப்பட்டார். 1925-இல் விட்டல்பாய் படேல் சென்ட்ரல் லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளியில் சபாநாயகர் ஆனார், ஆனால் அதன் பிறகு அவர் மூலமாக இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட முடியவில்லை.

பிபிசி தமிழுடன் பகிருங்கள்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU