Home தேசிய national tamil ‘சவரனுக்கு சுமார் ரூ 30,000 சரிவு’ – தங்கம் விலை திடீர் வீழ்ச்சி ஏன்? இனி...

‘சவரனுக்கு சுமார் ரூ 30,000 சரிவு’ – தங்கம் விலை திடீர் வீழ்ச்சி ஏன்? இனி எப்படி இருக்கும்?

10
0

SOURCE :- BBC NEWS

'சவரனுக்கு 31 ஆயிரம் வரை குறைவு' - தங்கத்தின் விலை திடீர் சரிவு ஏன்? இனி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

“கச்சா எண்ணெய் டாலரில் விற்பனை செய்யப்படுவதால் டாலருக்கான மதிப்பு கூடுகிறது, அதனால் தங்கம் விலை குறைகிறது” என பொருளாதார நிபுணரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவிக்கிறார்.

தங்கம் விலை குறைந்தாலும் கடன் வாங்கி தங்கம் வாங்குவது உகந்ததல்ல என்கிறார் தங்க நகை விற்பனையாளர்கள் சங்க செயலாளர் சாந்தகுமார்.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்து வருவது ஏன்? நிபுணர்கள் சொல்வது என்ன?

டிரம்பின் அறிவிப்பு தங்கம் விலையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

 தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. மார்ச் 23 காலை ஆபரண தங்கத்தின் விலை, முந்தைய நாளை காட்டிலும் கிராம் 670 ரூபாய் குறைந்து 12,950 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் மேலும் 280 ரூபாய் குறைந்து கிராம் 12,670க்கு விற்பனையானது.

அதே நேரத்தில் மாலையில் கிராம் 670 ரூபாய் வரை விலை உயர்ந்து 13,340க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (மார்ச் 24 ) மீண்டும் தங்கம் விலை கிராம் 340 ரூபாய் குறைந்து 13,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப தினசரி அடிப்படையில் ஒரு முறை மாற்றத்தை சந்தித்து வந்த தங்கம் நாளடைவில் நாளொன்றுக்கு இரண்டு முறையும் நேற்று மூன்று முறையும் மாற்றத்தை எதிர்கொண்டது சந்தை நிலவரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு ‘முழுமையான தீர்வு’ காண்பது குறித்து இரானுடன் ‘பயனுள்ள பேச்சுவார்த்தை’ நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு தங்கம் விலையிலும் பிரதிபலித்துள்ளதாகக் கூறுகிறார் தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் சலானி.

“சர்வதேச அளவில் தங்கம் விலை சவரனுக்கு 500 ரூபாய் வரை குறைந்தாலோ கூடினாலோ அது விற்பனை சந்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்கிறார் அவர்.

“இரான் போர் தொடர்பான அமெரிக்காவின் சமீபத்திய அறிவிப்பு சந்தையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியதால் தங்கம் விலை உயர்ந்தது. இந்த நிலை நீடிக்கும் வரை அடுத்த 5 நாட்கள் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

 தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

தங்கம் விலை குறைய என்ன காரணம்?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 12,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் கடந்த ஜனவரி 29ஆம் தேதி 16,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ற வகையில் விலையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் கடந்த 10 நாட்களாக தொடர் சரிவுகளை சந்தித்து வந்தது (மார்ச் 23 நீங்கலாக).

மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் தட்டுப்பாடு மக்களை கடுமையாக பாதித்த நிலையில் தங்கத்தின் தொடர் சரிவுகள் அவர்களிடையே மன நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனால் இது எத்தனை நாட்கள் நீடிக்கும் என்ற கேள்வியும் அவர்களிடம் எழாமல் இல்லை.

தங்கத்தின் விலை குறைவதற்கான காரணங்களை அறிந்துகொள்ள பொருளாதார நிபுணர் ஆனந்த ஸ்ரீனிவாசனை அணுகிய போது, “தங்கத்தின் விலை எப்போது வேண்டுமானாலும் ஏறலாம்” என்றார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இரான், இஸ்ரேல் அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதற்கான தேவை அதிகரித்துள்ளது, இதனால் கச்சா எண்ணெயில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தங்கத்தின் விலை குறைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இதற்கான காரணங்களையும் விளக்கிய அவர், “கச்சா எண்ணெய் டாலரில் வர்த்தகம் செய்யப்படுவதால் எண்ணெயின் தேவை அதனுடைய விலையை கூட்டியிருப்பது போல டாலரின் விலையையும் கூட்டியுள்ளது. டாலரின் விலை குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும் ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது” என்றார் அவர்.

மேலும், “தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறுவது ‘பெட்ரோ டாலர் போர்’. இதனால் டாலரின் விலை அதிகரிப்பதை தடுக்க முடியாது” என்கிறார் அவர்.

இனி எப்படி இருக்கும்?

1970களில் உலக நாடுகளுக்கு டாலரில் மட்டுமே எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என செளதி அரேபியாவை அமெரிக்க வலியுறுத்தியது. இதனை நாளடைவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் பின்பற்ற தொடங்கியதே ‘பெட்ரோ டாலர்’ என அழைக்கப்படுகிறது.

தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் தங்கத்தின் விலை வரும் நாட்களில் எப்படி அமையப்போகிறது?

“தங்கத்தின் விலை 12,500 ரூபாய்க்கு கீழ் செல்ல வாய்ப்புகள் குறைவு. அடுத்த 5 ஆண்டுகளில் கிராம் 25,000 முதல் 30,000 வரை செல்லக்கூடும்” என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

வரக்கூடிய காலங்களில் போரின் தாக்கங்களை பொறுத்தே விலை அமையும் என்று அவர் கூறினார்.

 தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

‘கடன் வாங்கி தங்கம் வாங்க வேண்டாம்’

“எண்ணெய் தேவை அதிகரித்திருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் எண்ணெயில் முதலீடு செய்துள்ளனர், இதனால் தங்கம் விலை குறைந்துள்ளது” என்றார் மெட்ராஸ் ஜுவல்லரி மற்றும் டைமண்ட் டிரேடர்ஸ் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார்.

அதேநேரத்தில் “தங்கத்தின் விலை ஒரு லட்சத்திற்கு கீழ் செல்லாது என்பது எங்கள் கணிப்பு” என்று குறிப்பிட்ட அவர் “கடந்த ஜனவரி 29-ஆம் தேதி விற்பனை ஆனதை விட சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை தங்கம் விலை சவரனுக்கு குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

“தேவை இருப்பவர்கள் தங்கத்தை வாங்கலாம் ஆனால் கடன் வாங்கி தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த முடிவை மாற்றிக்கொள்ளலாம்.” என்றார் அவர்.

“தற்போது போர் காரணமாக குறைந்துள்ள தங்கத்தின் விலை இந்த ஆண்டின் இறுதிக்குள் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அடையலாம்” என்றும் அவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU