Home தேசிய national tamil கேகேஆர் வியூகங்களுக்கு பிளான் ‘பி’ மூலம் பதிலடி: சிஎஸ்கே அடுத்தடுத்து வென்றாலும் கவலை தரும் 3...

கேகேஆர் வியூகங்களுக்கு பிளான் ‘பி’ மூலம் பதிலடி: சிஎஸ்கே அடுத்தடுத்து வென்றாலும் கவலை தரும் 3 விஷயங்கள்

19
0

SOURCE :- BBC NEWS

CSK vs KKR, ஐபிஎல், சாம்சன், மாத்ரே, பிளான் பி

பட மூலாதாரம், ANI

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்களில் வீழ்த்தி இந்த சீசனில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

பேட்டிங், பௌலிங் என சூப்பர் கிங்ஸின் ஒவ்வொரு துறையுமே நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது.

சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ், கலீல் அஹமது, நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், அகீல் ஹொசைன் என பலவேறு வீரர்கள் இந்த வெற்றியில் பல்வேறு விதத்தில் பங்களிப்பைக் கொடுத்தார்கள். ஓரிரு வீரர்களின் செயல்பாட்டால் வெற்றி பெறுவதை விட இப்படி ஒரு அணியாக வெற்றி பெறும்போது அது நம்பிக்கையை பன்மடங்கு அதிகப்படுத்தும்.

களத்தில் காட்டிய செயல்பாடு மட்டுமல்லாமல் இந்தப் போட்டிக்காக சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டமிடல் என்னை மிகவும் கவர்ந்தது. பந்துவீச்சாளர் மாற்றம், பேட்டர்களுக்கு எதிரான பௌலர்களின் திட்டம், அவர்களுக்கு ஏற்ற ஃபீல்டிங் செட் அப் என அனைத்தும் அட்டகாசமாக இருந்தது.

ஹாட்ரிக் தோல்வியோடு சீசனைத் தொடங்கியவர்கள் தற்போது கொஞ்சம்கொஞ்சமாக முன்னேற்றம் கண்டுவருவது நிச்சயம் அனைவருக்கும் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்.

இந்தப் போட்டியில் எனக்கு நம்பிக்கையளித்த, சற்று கவலையளித்த சூப்பர் கிங்ஸ் அணியின் சில செயல்பாடுகள் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

நம்பிக்கை 1: சாம்சன் மற்றும் மாத்ரேவின் வேட்கை

CSK vs KKR, ஐபிஎல், சாம்சன், மாத்ரே, பிளான் பி

பட மூலாதாரம், ANI

சஞ்சு சாம்சன் (32 பந்துகளில் 48 ரன்கள்), ஆயுஷ் மாத்ரே (17 பந்துகளில் 38 ரன்கள்) இருவரும் ஒரு சிறந்த தொடக்கத்தை சூப்பர் கிங்ஸுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இருவருமே நல்ல ‘இன்டென்ட்’ காட்டினார்கள். பவர்பிளேவுக்குப் பின்பான சூப்பர் கிங்ஸின் பேட்டிங்கைக் கருத்தில் கொள்ளும்போது, அவர்கள் ஆடிய ஆட்டத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் சஞ்சு சாம்சன். டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் எங்கு விட்டாரோ அங்கிருந்தே தன் ஆட்டத்தைத் தொடங்கினார். ஆரம்பத்திலேயே ஒரு பேட்டர் அப்படி ஆடும்போது அது அவருக்கும் சரி, அணிக்கும் சரி பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

ஆயுஷ் மாத்ரேவின் அணுகுமுறை அபாரமாக இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் அவுட்டான பிறகு வந்த அவர், விக்கெட் போயிருந்தும் கூட முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினார். அவர் அந்த வேகம் காட்டியதுதான் பெரிய ஸ்கோர் வருவதற்கான முக்கியக் காரணமாக அமைந்தது. அவர் அப்படி ஆடாமல் இருந்திருந்தால் நிச்சயம் அது சாம்சனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக்கொண்டார்.

மாத்ரே பெரிய ஸ்கோர் அடிப்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ஸ்டிரைக் ரேட்டைத் தான் பிரதானப்படுத்துகிறார். இந்த அணுகுமுறையின் பலனாக அந்த பெரிய ஸ்கோர்களும் நிச்சயம் வந்துவிடும். ஆனால், அந்த அணுகுமுறை சூப்பர் கிங்ஸுக்கு மிகப் பெரிய பலம்.

அவர்களுக்கு அடுத்து, சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கில் அதிகம் கவனிக்கப்பட்டது டெவால் பிரெவிஸ். இந்த சீசனில் முதல் முறையாக பேட்டிங் செய்தவர் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து நல்ல பங்களிப்பைக் கொடுத்துச் சென்றார். ஒரு காயத்துக்குப் பிறகு வந்து நாற்பது ரன்கள் எடுப்பது என்று அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அவரால் எதிர்பார்த்தபடி வேகமாக ஆடமுடியவில்லை. சில இடங்களில் கஷ்டப்பட்டார். காயத்துக்குப் பிறகு வரும்போது அது நிச்சயம் இருக்கவே செய்யும். அதுமட்டுமல்லாமல் அவர் விளையாடிய இடமும் கடினமானது. கொல்கத்தா ஸ்பின்னர்கள் நன்றாகப் பந்துவீசி நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்.

இந்த இன்னிங்ஸில் பிரெவிஸ் நிறைய பந்துகள் நகர்ந்து வந்து அடிக்கப் பார்த்தார். அதுபோன்ற தருணங்களில் அனுகூல் ராய் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வைட் லைனுக்கு அருகே வீசினார். இதுவேண்டுமானால் அவர் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம். ஆஃப் சைடிலும் அவர் அடிக்க முயற்சி செய்யும்போது அது இன்னும் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றபடி அவரது செயல்பாடு திருப்திகரமாகவே இருந்தது.

நம்பிக்கை 2: கேப்டன் & வேகப் பந்துவீச்சாளர்களின் கூட்டு செயல்பாடு

CSK vs KKR, ஐபிஎல், சாம்சன், மாத்ரே, பிளான் பி

பட மூலாதாரம், ANI

பந்துவீச்சின்போது, சூப்பர் கிங்ஸின் வழக்கமான திட்டம் அகீல் ஹொசைனை பவர்பிளேவில் பயன்படுத்துவது. அதைப் பயன்படுத்திக் கொள்ள ஸ்பின்னுக்கு எதிராக சிறப்பாக ஆடும் சுனில் நரைனை ஓப்பனராகக் களமிறக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம். அந்த இடத்தில் சிஎஸ்கே ‘பிளான் பி’ வைத்திருந்தது எனக்கு பிடித்திருந்தது. அந்த இடத்தில் நரைன் ஆடும்போது முழுமையாக வேகப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார் ருதுராஜ் கெய்க்வாட்.

கலீல் அஹமது, அன்ஷுல் கம்போஜ் இருவரும் நன்றாக செயல்பட்டார்கள். நரைன் பொதுவாக பந்தை ஸ்விங் செய்யும்போதோ, இடுப்புக்கு மேலாகவோ அல்லது யார்க்கர் லென்த்தில் வீசும்போது தடுமாறியிருக்கிறார். சரியாக இப்படியான பந்துகளையே சிஎஸ்கே பௌலர்கள் வீசினார்கள். பௌலர்களின் இந்த செயல்பாடு நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.

சரியாக நரைன் அவுட்டாகும் வரை அகீல் ஹொசைனைப் பயன்படுத்தாமல் வைத்திருந்து, சரியாக ஆறாவது ஓவரில் அவரைப் பயன்படுத்தினார் ருதுராஜ் கெய்க்வாட். அதேபோல் நரைனுக்கு வைத்திருந்த ஃபீல்ட் செட் அப் (பவர்பிளேவில் லாங் ஆன் மற்றும் டீப் ஸ்கொயர் லெக் ஃபீல்டர்கள் பௌண்டரி எல்லையில் இருந்தது) சிறப்பாக இருந்தது.

அவருக்கு மட்டுமல்ல… ரஹானேவுக்கு டீப் பாயின்ட் ஃபீல்ட் வைத்தது, ஆலனுக்கு லாங் ஆன் மற்றும் டீப் ஸ்கொயர் லெக் வைத்தது போன்ற முடிவுகள் சரியாக இருந்தன. ரகுவன்ஷி, ரிங்கு சிங் போன்றவர்கள் ரிவர்ஸ் ஸ்வீப் நன்றாக ஆடுவார்கள் என்பதால் பாயின்ட் ஃபீல்டரை பவுண்டரி எல்லையில் வைத்துவிட்டு, 2 கவர் ஃபீல்டர்களை 30 யார்ட் வட்டத்துக்குள் வைத்திருந்தார்கள்.

ஆலன் அடிக்கும் பெரும்பாலான ஷாட்கள் லாங் ஆன் திசைக்குத் தான் செல்லும். கம்போஜ், அப்படியொரு ஃபீல்டை ஆலனுக்கு வைத்துவிட்டு சாதுரியமாக அவுட் ஸ்விங் வீசினார். அதனால் தான் அந்த டாப் எட்ஜ் கிடைத்தது. ஃபின் ஆலன் பெரும்பாலான போட்டிகளில் அவுட் ஸ்விங் பந்துகளுக்குத்தான் அவுட்டாகியிருக்கிறார். அதை சிஎஸ்கே-வும் சரியாக செய்தது. திட்டமிடுதல் மிகச் சிறப்பாக இருந்தது.

கேகேஆரின் ஒவ்வொரு பேட்டர்களின் திட்டத்துக்கும் ஏற்ற ஒரு மாற்றுத் திட்டத்தை சிஎஸ்கே வைத்திருந்தது பாராட்டுதலுக்குறியது.

நம்பிக்கை 3: சேப்பாக்கத்தில் மீண்டும் சுழல் வேட்டை

CSK vs KKR, ஐபிஎல், சாம்சன், மாத்ரே, பிளான் பி

பட மூலாதாரம், ANI

சேப்பாக்கத்தில் மீண்டும் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதைப் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அகீல் ஹொசைன், நூர் அஹமது இருவரும் இணைந்து 8 ஓவர்களில் 47 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். எந்த அளவுக்கு பேட்டிங்குக்கு சாதகமான விக்கெட்டாக இருந்தாலும், இரண்டு ஸ்பின்னர்கள் ஒன்றாகச் செயல்படும் போது நூர் அஹமது விக்கெட் வீழ்த்துவார் என்பதை இந்தப் போட்டி நிரூபித்திருக்கிறது.

இந்த சீசனில் இதுவரை பெரிய தாக்கம் ஏற்படுத்தாத நூர் அஹமது இந்தப் போட்டியில் நன்றாகப் பந்துவீசினார். இந்த சீசனிலேயே இந்தப் போட்டியில் தான் அவரது லென்த், லைன், வேகம் எல்லாம் சரியாக அமைந்தது. ஒருபக்கம் அகீல் நன்றாகப் பந்துவீசியதும் அவருக்கு உதவியது.

குறிப்பாக கேமரூன் கிரீன் விக்கெட்டை வீழ்த்த அவர் தீட்டிய திட்டம் எனக்குப் பிடித்திருந்தது. நூர் அஹமதுவின் பௌலிங் ஆக்‌ஷன் வழக்கமாக எல்லா ஸ்பின்னர்களுக்கும் இருப்பது போன்றது அல்ல. அவருடைய பௌலிங் ஆக்‌ஷன் (Past Vertical) தனித்துவமான ஒன்று. . அவருடைய பந்துவீச்சு முறையில் ஓவர் தி ஸ்டம்ப் வந்து பந்துவீசும்போது அந்தப் பந்து ஸ்டம்பை நோக்கிப் போகாது. அதனால், ஓவர் தி ஸ்டம்ப் வந்து ரஹானே விக்கெட்டை வீழ்த்திய அவர், கேமரூன் கிரீன் வந்தவுடனேயே அரௌண்ட் தி ஸ்டம்ப் சென்றார். நினைத்தபடி அவர் ஸ்டம்புகளை டார்கெட் செய்ய, முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினார் கிரீன். அற்புதமான திட்டமிடல் அது.

கடந்த சீசனில் சிறப்பாகச் செயல்பட்ட நூர் அஹமது இந்த சீசனில் விக்கெட்டுகள் வீழ்த்த ரொம்பவே தடுமாறினார். தற்போது அவர் விக்கெட் எடுக்கத் தொடங்கியிருப்பது மிகவும் நல்ல விஷயம். சூப்பர் கிங்ஸ் ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்தத் தொடங்கிவிட்டால் அவர்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அதுவும் நூர் அஹமது போன்ற ஒரு பௌலர் விக்கெட் வீழ்த்தத் தொடங்கினால், அது ஒட்டுமொத்த பௌலிங் யூனிட்டின் நம்பிக்கையுமே பன்மடங்கு அதிகப்படுத்தும்.

சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் 3 கவலைகள்

CSK vs KKR, ஐபிஎல், சாம்சன், மாத்ரே, பிளான் பி

பட மூலாதாரம், ANI

இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸின் செயல்பாடு நன்றாகவே இருந்தது. ஒருசில விஷயங்கள் சற்று பிரச்னையாக இருந்திருக்கின்றன. இருந்தாலும், இவை பெரிய கவலைகள் இல்லை. நிச்சயம் போகப்போக சரியாகக் கூடியவையே.

1) ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்ம்: டாப் ஆர்டரில் சாம்சன் & மாத்ரே இருவரும் ஆடியவிதம் சூப்பர் கிங்ஸுக்கு சாதகமான விஷயம் என்றால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் செயல்பாடு (6 பந்துகளில் 7 ரன்கள்) சற்று கவலை தருவதாக இருக்கிறது. சாம்சன், மாத்ரே இருவரும் சிறப்பாக ஆடிக் கொண்டிருப்பதால் ருதுராஜின் ஆட்டம் பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் இருவரும் ஏதாவதொரு போட்டியில் தாக்கம் ஏற்படுத்தத் தவறிவிட்டால் அது நிச்சயம் சிஎஸ்கே-வுக்குப் பிரச்னையாக அமையும்.

கெய்க்வாடின் திறமை, உறுதி நமக்குத் தெரியும். அவரால் நிச்சயம் பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியும். இந்தப் போட்டியில் கூட அவர் பந்தை ஓரளவு நன்குதான் அடித்தார். ஆனால், பந்து பிட்சான லென்த் அவரை சற்று ஏமாற்றிவிட்டது. அதனால், அவர் ஸ்கொயர் லெக் திசையில் அடிக்க நினைத்த பந்து மிட்விக்கெட் திசைக்குச் சென்றுவிட்டது. அவர் ஒரு 10-15 பந்துகள் ஆடினால் நிச்சயம் ஃபார்முக்கு வந்துவிட முடியும். அதுமட்டுமல்லாமல், அணி ஜெயித்துக் கொண்டிருப்பது நிச்சயம் அவர் மீதான நெருக்கடியைக் குறைக்கும். அது நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படுத்தும்.

2) டெத் பேட்டிங்: கடைசி கட்டத்தில் நரைன், கார்த்திக் தியாகி போன்ற கொல்கத்தா பௌலர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார்கள். ஆனாலும், சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கும் பேட்டர்களைப் பார்க்கும்போது நிச்சயமாக இன்னும் 20-30 ரன்கள் அதிகமாக வந்திருக்கவேண்டும். இதைப் பற்றி யோசிக்கும்போது தோன்றுவது சிஎஸ்கே பேட்டர்கள் விக்கெட்டுக்கு ஸ்கொயராக ஆடத் தொடங்கவேண்டுமோ என்பதுதான்.

பெரும்பாலான சூப்பர் கிங்ஸ் பேட்டர்கள் விக்கெட்டுக்கு முன்னாள் ஆடுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள், விக்கெட்டுக்குப் பின்னால் ஸ்கொயர் லெக், ஃபைன் லெக் திசைகளில் அடிக்கத் தொடங்கினால், பௌலர்கள் யார்க்கர்கள் லென்த் பந்துகளை போடும்போது அவர்களின் திட்டத்தை அது சற்று குலைக்கும். ஸ்கொயராக ஆடத் தொடங்குவது அந்த நெருக்கடியை ஏற்படுத்தாமல் இருக்கும்.

CSK vs KKR, ஐபிஎல், சாம்சன், மாத்ரே, பிளான் பி

பட மூலாதாரம், ANI

3) ஸ்பின் ஹிட்டிங்: மிடில் ஓவர்களில் கொல்கத்தா ஸ்பின்னர்கள் சிஎஸ்கே ரன்ரேட்டை நன்றாக கட்டுப்படுத்தினார்கள். சாம்சன் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்கள் ஆடமாட்டார் என்பதால் அரௌண்ட் தி ஸ்டம்ப் சென்று கால்களை நோக்கி ஃபுல் லென்த்தில் வீசியது அருமையான திட்டம். இருந்தாலும், சுழலை சிறப்பாக ஆடும் சிஎஸ்கே பேட்டர்களின் ஸ்டிரைக் ரேட் சுழலுக்கு எதிராகக் குறைவாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

ஒருவேளை சிஎஸ்கே அணி துபே, சர்ஃபராஸ் கான் இருவரையும் இன்னும் சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். சுழல் என்றால் துபேவையும், வேகப் பந்துவீச்சாளர் என்றால் சர்ஃபராஸையும் களமிறக்கலாம். சர்ஃபராஸ் கான் சுழலை நன்றாக ஆடுபவர்தான். ஆனால், ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த சீசசில் சுழலுக்கு எதிரான அவருடைய ஸ்டிரைக் ரேட் குறைவாக இருக்கிறது. அவர் வேகப் பந்துவீச்சை நன்கு ஆடுவதால், அவரை அந்த இடத்தில் பயன்படுத்தலாம்.

சூப்பர் கிங்ஸ் ஃபீல்டிங் கவலையளிப்பதாக நிறைய சொல்கிறார்கள். கடந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்கள், இந்தப் போட்டியில் 3 கேட்ச்களைத் தவறவிட்டார்கள். ஆனால், அதை நான் ஒரு பெரிய பிரச்னையாகப் பார்க்கவில்லை. அணிக்குள் எனர்ஜி சிறப்பாக இருக்கிறது. வீரர்கள் நன்கு உத்வேகமாக இருக்கிறார்கள். அதனால், அது அடுத்தடுத்த போட்டிகளில் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.

(கட்டுரையாளர் பாபா அபராஜித் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர். 2012ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போது கேரளா அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU