SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகங்களில் கெட்ட வார்த்தைகளால் நிறைந்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காகவும் செவ்வாய்க்கிழமைக்குள் ஹோர்மூஸ் நீரிணையை திறக்க வேண்டும் என்று தான் விதித்த காலக்கெடுவை இரான் பூர்த்தி செய்ய தவறினால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அழிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
”நரகத்தில் வாழ்வீர்கள்” என்ற தனது முந்தைய அச்சுறுத்தலை அவர் மீண்டும் வலியுறுத்தினார், ஆனால் இரானுடன் ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான “நல்ல வாய்ப்பு” இருப்பதாக அமெரிக்க ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார்.
இரான் அவரது இறுதி எச்சரிக்கையைப் பார்த்து ஏளனம் செய்ததுடன், அது “இயலாமை, பதற்றம் நிறைந்தது மற்றும் முட்டாள்தனமானது” என்று கூறி நிராகரித்தது.
இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் இரண்டாவது விமானப் பணியாளரும், ”எதிரி நாட்டு எல்லைக்குள் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக” டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த புதிய அச்சுறுத்தல் வந்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
தொடர்ந்து மாற்றப்பட்ட காலக்கெடு
தென்மேற்கு இரானின் மலைப்பகுதியில் அந்த அமெரிக்க வீரரைக் கண்டுபிடிக்க அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளும் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த எஃப்-15 விமானம் சுடப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் விமானி மீட்கப்பட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அவ்விரு நாடுகளின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகள் மீது இரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், ஒரு மாத காலத்திற்கும் மேலான போருக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையில் போக்குவரத்தை இரான் கணிசமாகத் தடுத்துள்ளது.
இது உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்வதற்கும், உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கும் வழிவகுத்தது.
இந்த இடையூறு காரணமாக, நீரிணையை மீண்டும் திறக்க இரானுக்கு தொடர்ச்சியான காலக்கெடுவை டிரம்ப் மார்ச் மாதத்தில் அறிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தின் மூலம் இதனை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
எச்சரிக்கை: மிகவும் கடுமையான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
“செவ்வாய்க்கிழமை அன்று இரானில் மின் உற்பத்தி நிலைய நாள் மற்றும் பாலங்கள் நாள். ஒரே நேரத்தில் இரண்டும் குறிவைக்கப்படும். இது முன் எப்போதும் கண்டிராத ஒன்றாக இருக்கும். *%$%&%$ அந்த நீரிணையை (ஹோர்மூஸ்) திறந்துவிடுங்கள், இல்லையென்றால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும். பொறுத்திருந்து பாருங்கள். “என்று அதில் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
அதன்பிறகு, அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறுகையில், திங்கள்கிழமை ஓர் ஒப்பந்தம் எட்டப்பட “நல்ல வாய்ப்பு” இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படாவிட்டால், “அனைத்தையும் தகர்த்துவிட்டு எண்ணெயைக் கைப்பற்றுவது” குறித்துத் தான் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
பின்னர், அமெரிக்க அதிபர் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “செவ்வாய்க்கிழமை, கிழக்கு நேர மண்டலத்தின்படி இரவு 8:00 மணி” என்று கூறியிருந்தார்.
இது முதலில் ஏப்ரல் 6, திங்கள்கிழமை அன்று முடிவடைய வேண்டிய காலக்கெடுவின் நீட்டிப்பாகத் தெரிகிறது.
ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவை டிரம்ப் பலமுறை ஒத்திவைத்துள்ளார்.
மார்ச் 21 அன்று, ஹோர்மூஸ் நீரிணை 48 மணி நேரத்திற்குள் “முழுமையாகத் திறக்கப்படாவிட்டால்” இரானின் மின் உற்பத்தி நிலையங்களை “அழிப்பேன்” என்று டிரம்ப் முதலில் அச்சுறுத்தினார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, இரானுடன் “நல்ல” மற்றும் “ஆக்கப்பூர்வமான” பேச்சுவார்த்தைகள் தொடர்வதால், மார்ச் 28 வரை, இன்னும் ஐந்து நாட்களுக்குத் தாக்குதல்களைத் தொடங்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.
ஆனால் தனது அதிகாரிகளுக்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே எந்தத் தொடர்பும் நடைபெறவில்லை என்று இரான் மறுத்தது.
அந்தத் தேதி நெருங்கியதும், டிரம்ப் மீண்டும் காலக்கெடுவை ஏப்ரல் 6 வரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்தார். இந்தத் தேதியிலிருந்து தான் புதிய 48 மணி நேரக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஹோர்மூஸ் நீரிணையை திறக்க இரான் நிபந்தனை
இரான் அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் மெஹதி தபாதபாய் கூறுகையில், “கப்பல்களிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து சுங்கக் கட்டணத்தின் ஒரு பகுதி, போரில் ஏற்பட்ட சேதங்களை ஈடுகட்டப் பயன்படுத்தப்படும் போது ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் முழுமையாகத் திறக்கப்படும்” என்றார்.
நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதை இரான் சுட்டிக்காட்டியுள்ளது.
இரான் மத்திய ராணுவ கட்டளை மையத்தின் ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி, டிரம்பின் அச்சுறுத்தல் ஒரு “உதவியற்ற, பதற்றமான, சமநிலையற்ற மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கை” என்றும், அமெரிக்கத் தலைவருக்கு “நரகத்தின் கதவுகள் திறக்கும்” என்றும் கூறினார்.
இதற்கிடையில், இஸ்ரேல் இரானின் உள்கட்டமைப்பு தளங்களைத் தாக்கியுள்ளது. சமீபத்தில் சனிக்கிழமையன்று பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும் அடுத்த வாரம் கூடுதல் எரிசக்தி நிலையங்களைத் தாக்குவதற்கு அமெரிக்காவின் ஒப்புதலுக்காக அது காத்திருப்பதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமையன்று தென்மேற்கு இரானிலுள்ள காசிம் சுலைமானி சர்வதேச விமான நிலையத்தையும் தாக்கின.
அதே நேரத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள் மீது இரான் தொடர்ந்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி வருகிறது.
இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவிலுள்ள ஒரு குடியிருப்பு கட்டடம் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையால் நேரடியாகத் தாக்கப்பட்டது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
அன்றைய தினத்தில் முன்னதாக, இரானிய ஏவுகணையின் சிதறல்கள் விழுந்ததால் போரூஜ் பெட்ரோ கெமிக்கல் தளத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கப் போராடி வருவதாகத் அபுதாபி அதிகாரிகள் கூறினர்.
இரானிய டிரோன்களின் தாக்குதல்கள் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகளைக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. பஹ்ரைனிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் நிலையங்களும் இலக்கு வைக்கப்பட்டன.

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



