SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், rajbhavan_tn
14 நிமிடங்களுக்கு முன்னர்
இன்றைய (20/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சனிக்கிழமை (ஏப். 19) சந்தித்துப் பேசியதாக, இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், “ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. அத்துடன், குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவையும் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா அல்லது அவசரச் சட்டம் பிறப்பிப்பதா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே, கடந்த ஏப்.17-ம் தேதி மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ரவி நேற்று சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்ததை துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில், ஜெகதீப் தன்கர் – ஆளுநர் ரவி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சந்திப்பின் போது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. விலகல்

பட மூலாதாரம், Edappadi K Palaniswami/X
அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், எஸ்டிபிஐ அக்கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளதாக, ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், “தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டன. அதன்படி, அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித் ஷா அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி (இந்திய சமூக ஜனநாயக கட்சி) அறிவித்துள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று எஸ்.டி.பி.ஐ. பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார்.” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்டன. இப்போது தமிழ்நாட்டில் ஒரு கட்சி அழியப்போவது உறுதி. தேவை என்றால் யார் காலிலும் விழுவார்கள், தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு” என தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.
கனடாவில் துப்பாக்கி சூடு – இந்திய மாணவி உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images
கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்ததாக தினத்தந்தி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்தச் செய்தியில், “கனடாவில் உள்ள ஆண்டாரியோ மாகாணம் ஹமில்டன் நகரில் உள்ள மொஹ்வாக் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த ஹர்சிம்ரத் ராதாவா (வயது 21) என்ற மாணவி கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில், ஹர்சிம்ரத் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு இரு கார்களில் வந்த நபர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
அப்போது எதிர்பாராத விதமாக பேருந்துக்கு காத்திருந்த இந்திய மாணவி ஹர்சிம்ரத் ராதாவா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஹர்சிம்ரத்தை மீட்ட அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமத்தனர்.
மருத்துவமனையில் ஹர்சிம்ரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு காரில் தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் கைது

பட மூலாதாரம், Getty Images
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூவர் காயமடைந்ததாக, தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், “திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பெண் உள்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டு கார் ஓட்டுநர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து புஷ்பராஜிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கிவிட்டு வீடு திரும்பும்போது ஓட்டுநர் மது போதையில் காரை இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிண்டி போலீசார் விபத்து குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபாய் கடன் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் – ஐக்கிய மக்கள் சக்தி

பட மூலாதாரம், Getty Images
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 6 மாதங்களில் 6,000 பில்லியன் ரூபாய் கடன் பெற்றுள்ளது, இதனை மீள செலுத்தும் சவாலை இந்த அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளவிருக்கிறது என்பது புரியவில்லை என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்ததாக வீரகேசரி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர், “தம்மிடம் ஆட்சியை ஒப்படைத்தால் 6 மாத காலம் போதும் என தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், நாட்டில் எவ்வித மாற்றமும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
மக்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அவர்களிடமே கேட்கின்றோம். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொய்களைக் கூறிக் கொண்டிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம் என லால் காந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.
6,000 பில்லியன் ரூபாயை இந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளது. இது வெளிநாட்டுக் கடன் இல்லை என்ற போதிலும், இதனையும் அரசாங்கம் மீள செலுத்த வேண்டும். சுற்றுலாத்துறை தவிர்ந்த வேறு எந்த வருமானமும் இன்றி அரசாங்கம் எவ்வாறு இந்த நிலைமையை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சமூகமயப்படுத்தல் தொடர்பில் பேசியவர்கள் இன்று தலதா வழிபாட்டுக்கு அரசாங்கத்திலுள்ளோருக்கு விசேட ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். ஆனால், பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கும் மேலாக வரிசைகளில் காத்திருக்கின்றனர். சமீபத்தில் பட்டலந்த குறித்து பேசப்பட்ட போதிலும், ரணில் விக்கிரமசிங்கவுடன் இவர்கள் சிறந்த நட்புறவையே பேணி வருகின்றனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நாட்டின் எதிர்காலம் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும்.
அதானி மற்றும் ஈலோன் மஸ்க் போன்றவர்களின் முதலீடுகளுக்கு ஜே.வி.பி. கடந்த காலங்களில் கடும் எதிர்ப்பினை வெளியிட்டது. ஆனால், இன்று அவர்கள் உலகில் பலம் மிக்கவர்களாகவுள்ளனர். அந்த முதலீடுகளை தக்க வைத்திருந்தால் அதிக நன்மைகளைப் பெற்றிருக்கலாம். இந்த சுமைகள் அனைத்தும் இறுதியில் மக்கள் மீது தான் சுமத்தப்படும். 2028ஆம் ஆண்டு மீண்டுமொரு கடன் மறுசீரமைப்புக்கு செல்ல வேண்டியேற்படும். கோட்டாபயவின் அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கமும் விரைவில் வீழ்ச்சியடையும்” என தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU