SOURCE :- BBC NEWS

காணொளி: இந்தியாவின் ‘பிரெயில் செஸ்’ ராணிகள்
3 நிமிடங்களுக்கு முன்னர்
ஹிமான்ஷி ராட்டி மற்றும் சன்ஸ்கிரிதி மோரேவால் எதையும் பார்க்க முடியாது. ஆனால், செஸ் விளையாடும் அவர்களின் ஆர்வத்தை எதுவும் தடுக்கவில்லை.
இவர்கள் பிரெயில் செஸ் (Braille Chess) விளையாடுகிறார்கள். இது வழக்கமான செஸ் போன்றதுதான். ஆனால் செஸ் போர்டு மற்றும் காய்கள் சற்று வித்தியாசமாக இருக்கும்.
“பார்வையற்றவர்களும் செஸ் விளையாட முடியும் என சொல்லி பாருங்கள். 60% பேர் எப்படி என்று தான் கேட்பார்கள்?” என்கிறார் பார்வையற்ற செஸ் வீரரான ஹிமான்ஷி ராட்டி.
“அவர்கள் விளையாட்டை பார்த்துவிட்டு, நீங்கள் மிக உத்வேகமளிக்கிறீர்கள் என்று கூறுவார்கள்,” என்கிறார் சன்ஸ்கிரித் மோரா.
2023- ஆம் ஆண்டில், ஹிமான்ஷி மற்றும் சன்ஸ்கிரிதி ஆசிய பாரா போட்டிகளில் விருதி ஜெயினுடன் இணைந்து ஒரு அணியாக வெண்கலம் வென்றனர். பெண்கள் செஸ்ஸில் இந்த சாதனை படைத்த இரண்டாவது இந்திய அணி இதுவாகும். ஹிமான்ஷி தனிநபர் வெண்கலத்தையும் வென்றார். ஆனால் அந்தப் பதக்கத்திற்கான பயணம் எளிதானதாக இல்லை.
26 வயதான ஹிமான்ஷி குஜராத்தின் ஆமதாபாத்தில் வசிக்கிறார். இவருக்கு பார்வை இருந்தது. ஆனால், படிப்படியாக பார்வை இழப்பை ஏற்படுத்தும் பிரச்னையான ரெட்டினைடிஸ் பிக்மென்டோசா காரணமாக பார்வையை முற்றிலுமாக இழந்தார்.
மகாராஷ்டிராவின் சாதாரா-வில் வசிக்கும் சன்ஸ்கிரிதிக்கு அவர் தாயார் அஸ்வினி செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தினார். மகளுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக நகரத்திற்கு குடிபெயர்ந்தார்.
செஸ்ஸில் கிடைத்த வெற்றி காரணமாக சன்ஸ்கிரிதிக்கு 19 வயதில் மாவட்ட விளையாட்டு அதிகாரியாக அரசு வேலை கிடைத்தது.
சமீபத்தில், இந்தியா செஸ்ஸின் பவர்ஹவுஸ்ஸாக ஆக உருவெடுத்துள்ளது. ஆனால் நாட்டில் பலருக்கு பிரெய்ல் செஸ் பற்றி தெரியாது. அதில் ரஷ்யாவும் ஐரோப்பாவும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் ஹிமான்ஷியும் சன்ஸ்கிரிதியும் இதை மாற்ற விரும்புகிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



