SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Ishara S. KODIKARA/AFP via Getty Images
17 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தற்போது டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே நிலையில் உள்ளன.
அரை இறுதிக்கு முன்னேற இரு அணிகளும் மற்ற அணிகளின் செயல்பாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
செவ்வாய்க்கிழமையன்று கண்டியில் நடந்த சூப்பர்-8 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறியது. இதனால், பாகிஸ்தான் அரை இறுதிக்குச் செல்ல இப்போது நியூசிலாந்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிகபட்சமாக 63 ரன்களையும், பாபர் ஆசம் மற்றும் ஃபகார் சமான் தலா 25 ரன்களையும் எடுத்தனர்.
பதிலுக்கு இங்கிலாந்தின் இன்னிங்ஸ் ஆரம்பத்தில் தடுமாறியது, ஆனால் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய கேப்டன் ஹாரி புரூக் விக்கெட் வீழ்ச்சியை தடுத்தார்.
புரூக் வெறும் 51 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 100 ரன்களை விளாசி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், இந்த உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் அணியாக இங்கிலாந்து உருவெடுத்துள்ளது.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
பட மூலாதாரம், MB Media/Getty Images
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தாலும், முந்தைய போட்டிகளை விட பாகிஸ்தான் சிறப்பாகவே செயல்பட்டது, ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணியே முன்னிலையில் இருந்தது.
ஹாரி புரூக்கின் இன்னிங்ஸை நிபுணர்கள் ‘வெற்றியைத் தீர்மானித்த ஆட்டம்’ என்று அழைக்கும் அதே வேளையில், கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தாததற்காக பாகிஸ்தான் அணி விமர்சிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார்.
அதில், “மூன்று சிறப்பு பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருந்தபோதும், பாகிஸ்தான் போட்டியை கடைசி ஓவர்கள் வரை கொண்டு சென்றது. இந்தியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அதிக ரன்கள் எடுத்த உஸ்மான் கான், இவ்வளவு கீழ் வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. கேப்டன் சல்மான் அலி ஆகா பந்துவீசவே இல்லை, அவர் எப்படி திடீரென்று ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் ஆனார் என்பது மர்மமாகவே உள்ளது. மறுபுறம், ஃபர்ஹானின் சிறப்பான ஆட்டமும் வீணாகிவிட்டது,” என்று எழுதியுள்ளார்.
கிரிக்கெட் நிபுணரும் முன்னாள் வீரருமான சோயப் மாலிக், பாகிஸ்தான் அணியின் ‘பலவீனமான முன்னேற்பாடுகளே’ தோல்விக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அடிப்படை விஷயங்களைச் சரியாகச் செய்யாமல் நவீன கிரிக்கெட்டை விளையாட முயற்சிப்பது, நர்சரியில் படிக்காமல் நேரடியாக 10-ஆம் வகுப்புக்குச் செல்வது போன்றது,” என்றார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், ஹாரி புரூக்கை வெகுவாகப் பாராட்டியதோடு, மூன்றாவது வரிசையில் அவர் களம் இறங்கிய முடிவையும் நியாயப்படுத்தினார்.
“இங்கிலாந்துஅணியில் ஒரு திறமையான மேதை இருக்கிறார் என்பதை புரூக்கின் இன்னிங்ஸ் நிரூபிக்கிறது,” என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் வீரர் அகமது ஷெஷாத்தின் கூற்றுப்படி, இங்கிலாந்து அணி தனது சிறந்த ஃபார்மில் இல்லாத போதும், பாகிஸ்தானால் அதைத் தோற்கடிக்க முடியவில்லை.
“மோசமான திட்டமிடல், தவறான ஷாட் தேர்வுகள் மற்றும் குழப்பமான பிளேயிங் லெவன் காரணமாக பாகிஸ்தான் இந்த பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டது,” என்று ஷெஷாத் சமூகவலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாபர் ஆசமின் மெதுவான பேட்டிங், சைம் அயூப்பின் தோல்வி மற்றும் கடைசி ஓவர்களில் பாகிஸ்தானின் பலவீனமான பந்துவீச்சு ஆகியவையே தோல்விக்குக் காரணம் என்று ஷெஷாத் குற்றம் சாட்டினார்.
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, ஹாரி புரூக்கின் இன்னிங்ஸைக் குறிப்பிட்டு, “சந்தேகத்திற்கு இடமின்றி, டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே இது மிகச்சிறந்த சதங்களில் ஒன்று. இது ஹாரி புரூக்கின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமையும்,” என்று கூறினார்.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளதா?
பட மூலாதாரம், MB Media/Getty Images
பாகிஸ்தானுக்கு ‘இப்படியானால், அப்படியானால் என்ற கணக்கு விளையாட்டு இப்போது தொடங்கிவிட்டது’ என்று பத்திரிகையாளர் ஃபைசான் லக்கானி கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 கட்டத்தில் பாகிஸ்தானின் பயணம், அதிர்ஷ்டத்தின் கதவு இனி அதன் கட்டூப்பாட்டில் இல்லை என்ற நிலையை எட்டியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு அரை இறுதிக்குச் செல்லும் பாதை குறுகிவிட்டது, இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் நியூசிலாந்து விளையாடும் போட்டிகளைக் கவனித்து வருகின்றனர்.
நியூசிலாந்துக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன.
பாகிஸ்தான் அரை இறுதி இடத்தைப் பிடிக்க அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் மற்றும் நியூசிலாந்தின் செயல்திறனும் தேவைப்படும்.
முதல் சாத்தியக்கூறு : நியூசிலாந்து இரண்டு போட்டிகளிலும் தோற்றால் :
நியூசிலாந்து மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோற்றால், பாகிஸ்தானுக்கு பாதை எளிதாகிவிடும்.
அத்துடன் இலங்கைக்கு எதிரான வெற்றி மட்டுமே பாகிஸ்தானை அரையிறுதிக்கு அழைத்துச் செல்லும். ஒவ்வொரு பாகிஸ்தான் ரசிகரும் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு இதுதான்.
இரண்டாவது சாத்தியக்கூறு : நியூசிலாந்து ஒரு போட்டியில் தோற்று, ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் :
கதை மிகவும் விறுவிறுப்பாக மாறும் ஒரு திருப்புமுனை இது.
இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் இலங்கையைத் தோற்கடிப்பது மட்டுமல்லாமல், தங்களின் நிகர ரன் ரேட்டை மேம்படுத்த ஒரு பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
ஒவ்வொரு பவுண்டரியும், ஒவ்வொரு சிக்ஸரும், ஒவ்வொரு விக்கெட்டும் மிக முக்கியமானதாக மாறும் கட்டம் இதுவாகும்.
மூன்றாவது சாத்தியக்கூறு : நியூசிலாந்து இரண்டு போட்டிகளிலும் வென்றால்:
அது நடந்தால், பாகிஸ்தானின் கதை இத்துடன் முடிந்துவிடும்.
அவர்களின் உலகக் கோப்பை பயணம் அரை இறுதிக்கு முன்பே முடிவுக்கு வரும். இது எந்தவொரு பாகிஸ்தான் ரசிகரும் விரும்பாத ஒரு முடிவாக அமையும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC



