Home தேசிய national tamil ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபஞ்சங்கள் உள்ளனவா?

ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபஞ்சங்கள் உள்ளனவா?

15
0

SOURCE :- BBC NEWS

தனக்கு முன்னால் ஒன்றுடன் ஒன்றுடன் ஒன்று மேலெழுந்துள்ள பல வண்ணமயமான வட்டங்களைப் பார்க்கும் ஒரு மனிதனின் உருவ நிழல். ஒவ்வொரு வட்டமும் நட்சத்திரங்கள் மற்றும் பிற சிறிய பிரகாசமான பொருட்களால் நிரப்பப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Victor de Schwanberg/Science Photo Library via Getty Images

எங்காவது ஒரு இணையான பிரபஞ்சத்தில் உங்களை ஒரு ராக்ஸ்டார் அல்லது விண்வெளி வீரராக நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா?

ஒரு “மல்டிவர்ஸில்” பல பிரபஞ்சங்கள் உள்ளன என்ற யோசனை பகற்கனவுகளையும் அறிவியல் புனைகதைகளையும் ஒருசேரத் தூண்டியுள்ளது – ஆனால் இது சில விஞ்ஞானிகளால் தீவிரமாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆனால் இது பெரும்பாலும் ஹாலிவுட்டில் சித்தரிக்கப்படுவதைப் போல் இல்லாமல் இருக்கலாம். அது உண்மையில் என்னவாக இருக்கும் என்பதில் யாருக்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

துல்லியமாக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்சம்

நாம் நிச்சயமாக இருக்கும் இந்த பிரபஞ்சம் நமக்காக மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது.

“உதாரணத்திற்கு, ஈர்ப்பு விசை பலவீனமாக இருந்திருந்தால், நமது நட்சத்திரங்களும் கிரகங்களும் உருவாகியிருக்காது,” என்று அமெரிக்காவின் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளரும், ‘தி அலூர் ஆஃப் தி மல்டிவர்ஸ்’ புத்தகத்தின் ஆசிரியருமான பேராசிரியர் பால் ஹால்பெர்ன் விளக்குகிறார்.

“மறுபுறம், ஈர்ப்பு விசை மிகவும் வலுவாக இருந்திருந்தால், பிரபஞ்சம் அதன் ஆரம்பத்திலேயே அழிந்திருக்கும்,” என்று அவர் கூறுகிறார்.

உண்மையில், இயற்கையின் ‘அடிப்படை மாறிலிகள்’ என்று அழைக்கப்படுபவை சுமார் இரண்டு டஜன் உள்ளன – அவற்றின் துல்லியமான மதிப்புகள் நமது இயற்பியல் விதிகளைச் செயல்பட வைக்கின்றன.

ஆனால் அவை எங்கிருந்து வந்தன?

சூரிய ஒளி பின்னாலிருந்து பூமியின் மேற்பரப்பை ஒளிரச் செய்யும் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புகைப்படம். இது கதிர்கள் மற்றும் லென்ஸ் பிளேயர்களுடன் மிக பிரகாசமான புள்ளியாகக் காணப்படுகிறது.

பட மூலாதாரம், Roberto Machado Noa/Getty Images

சிலர் இவை ஒரு தெய்வீகப் படைப்பாளரை – நமது பிரபஞ்சத்தைக் கவனமான துல்லியத்துடன் வடிவமைத்த ஒரு கடவுளைச் சுட்டிக்காட்டுவதாக வாதிடுகின்றனர்.

இருப்பினும் மற்றவர்கள் ஒரு மல்டிவர்ஸ் இருப்பதாகக் கூறி அவற்றை விளக்குகிறார்கள். இந்த மாறிலிகளின் குறிப்பிட்ட கலவையைக் கொண்டிருக்கும் எண்ணற்ற பிரபஞ்சங்கள் எப்படியோ இருந்தால், அறிவுள்ள உயிரினங்கள் இருக்கக்கூடிய ஒரு சரியான பிரபஞ்சத்தில் நாம் தற்செயலாக இருக்கிறோம்.

இவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் என்ன? உயிரற்ற அந்த பிரபஞ்சங்களில் நாம் வாழ்ந்திருக்க மாட்டோம் என்பதால் இந்தக் கேள்வியைப் பற்றி அங்கே சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் வாய்ப்புகள் மிக அதிகம் என்று சிலர் கூறலாம். இது மானுடவியல் தத்துவம் (Anthropic principle) என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பிரபஞ்சங்கள் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதற்கான அனைத்து வகையான கற்பனை யோசனைகளையும் இயற்பியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர், இவை பெரும்பாலும் சிக்கலான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில் இரண்டை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

பல உலகங்கள் விளக்கம்

முதலாவது எலக்ட்ரான்கள் போன்ற சிறிய துகள்களின் விசித்திரமான உலகமான குவாண்டம் மெக்கானிக்ஸில் இருந்து வருகிறது.

இந்த நுண்ணிய உலகத்தை நாம் உற்றுநோக்கும்போது, ஒரு துகளின் பண்புகள் இயல்பாகவே நிலையானவை அல்ல என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகிறார்கள். ஒரு எலக்ட்ரான் இங்கேயோ அல்லது அங்கேயோ இருப்பதில்லை. மாறாக, அது இங்கேயோ, அங்கேயோ அல்லது சாத்தியமான வேறு எந்த இடத்திலோ இருப்பதற்கான சில நிகழ்தகவுகளைக் கொண்டுள்ளது.

கிளாசிக்கல் கோட்பாட்டின்படி, யாராவது அந்தத் துகளைப் பார்க்கும்போது, அந்த நிகழ்தகவுகள் ஓர் ஒற்றை எதார்த்தமாகச் சுருங்குகின்றன – எலக்ட்ரான் ஒரு நிலையான இடத்தைப் பெறுகிறது.

அது அனைத்தும் நமக்குத் தெரிந்த பிரபஞ்சத்திற்குள் நடக்கிறது.

இதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் இன்று அறிவியலில் குவாண்டம் மெக்கானிக்ஸ் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நடிகர் கே ஹுய் குவான், 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட ஒரு பெரிய திரைப்பட பேனருக்கு முன்னால் போஸ் கொடுக்கிறார்.

பட மூலாதாரம், Antonio Masiello/Getty Images

கடந்த 1957-ஆம் ஆண்டில், ஹக் எவரெட் III என்ற மாணவர் ஒரு மாற்று யோசனையை முன்வைத்தார், அது பின்னர் ‘பல உலகங்கள் விளக்கம்’ என்று அழைக்கப்பட்டது: அதாவது ஒரு குவாண்டம் துகள் ஒரே ஒரு நிலையான எதார்த்தத்தை எடுப்பதில்லை. மாறாக, அது ஒரே நேரத்தில் சாத்தியமான அனைத்து எதார்த்தங்களாகவும் கிளைத்துச் செல்கிறது, ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த பிரபஞ்சத்தில் இருக்கின்றன.

யாராவது இந்த குவாண்டம் துகளைப் பார்க்கும்போது, அந்த நபரின் உணர்வுள்ள இருப்பு பிரிகிறது என்று ஹால்பெர்ன் விளக்குகிறார்: ஒருவர் ஒரு எதார்த்தத்தைப் பார்க்கிறார், அவரது பிற பதிப்புகள் மற்றவற்றைப் பார்க்கின்றன. ஆனால் அந்த மாற்று வடிவங்கள் திரைப்படங்களில் நாம் காணும் அற்புதமான இணையான வாழ்க்கையைக் கொண்டிருப்பவர்கள் அல்ல என்று அவர் வலியுறுத்துகிறார்.

“நீங்கள் ஒரு சினிமாவுக்கு செல்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், அந்தப் படம் ஒருவரைப் பற்றியது, அவர் ஒரு எலக்ட்ரானை பூஜ்ஜிய நானோமீட்டர் தூரத்திலிருந்து கவனிப்பதற்குப் பதிலாக, ஒரு நானோமீட்டர் தூரத்திலிருந்து கவனிக்கிறார்,” என்று ஹால்பெர்ன் கூறுகிறார். இத்தகைய நுட்பமான வேறுபாடுகள் “ஹாலிவுட் பாணியிலான கதையாக இருக்காது”.

இந்த மல்டிவர்ஸ் யோசனைக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.

ஆனால் இது சிலரை அருவருப்படையச் செய்கிறது, அவர்கள் இதைச் சோதிக்க முடியாது என்கிறார்கள்: சரி பார்க்க நாம் நம்மை மற்றொரு பிரபஞ்சத்திற்கு அனுப்ப முடியாது இல்லையா? தத்துவஞானி கார்ல் பாப்பர் கருத்துப்படி, ஒரு கோட்பாடு தவறு என்று நிரூபிக்கப்படாவிட்டால், அது உண்மையான அறிவியல் அல்ல.

பிரான்சிஸ்கன் அங்கி அணிந்த ஒரு மனிதனின் தலை மற்றும் தோள்களின் கருப்பு மற்றும் வெள்ளை விளக்கப்படம், இடது ஓரத்தில் OKAMVS என்ற வார்த்தையுடன் ஒரு நிழலாடிய அரை வட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Universal History Archive/Getty Images

அந்த வாதம் சிட்னி பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் நிபுணரான பேராசிரியர் ஜெரான்ட் லூயிஸை பாதிக்கவில்லை. ஒரு நாள் நாம் மற்றொரு பிரபஞ்சத்திற்குச் செல்ல முடியலாம் என்று அவர் கூறுகிறார்.

“எதையாவது சாத்தியமற்றது என்று ஒதுக்கித் தள்ளுவது என்றால் உங்களிடம் முழுமையான படம் இருக்க வேண்டும், ஆனால் நம்மிடம் இன்னும் அது இல்லை,” என்று லூயிஸ் வாதிடுகிறார்.

அவர் ஒரு மாறுபட்ட எதிர்ப்பைச் சுட்டிக்காட்டுகிறார்: ஓக்காம்ஸ் ரேஸர் என்று அழைக்கப்படும் கொள்கை.

“மிக அதிகமானவற்றை விளக்க உங்களுக்கு மிக எளிமையான சமன்பாடுகள் தேவை,” என்று அவர் கூறுகிறார். “உங்கள் சிக்கலைத் தீர்க்க எண்ணற்ற பிரபஞ்சங்களை அழைப்பது, உங்கள் சிக்கலை முடிந்தவரை எளிமையாக்குவது போலத் தெரியவில்லை.”

நிலையான வீக்கம்

மற்றொரு மல்டிவர்ஸ் யோசனை நமது அண்டத்தின் ஆரம்ப தருணங்களை மையமாகக் கொண்டுள்ளது.

தற்போதைய முன்னணி கோட்பாடுகளின்படி, பிரபஞ்சம் ஒரு விநாடியின் மிகச்சிறிய பகுதியில் மிக வேகமாக விரிவடைந்தது.

“அதிவேக விரிவாக்கத்திற்கு வழிவகுத்த ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருந்தது,” என்று ஹால்பெர்ன் விளக்குகிறார்.

அது நின்றதும், அந்த ஆற்றல் பருப்பொருள் மற்றும் ஒளியாக மாறியது, இதைத்தான் நாம் பெரும்பாலும் பெருவெடிப்பு என்று நினைக்கிறோம், இது இன்று நம்மைச் சுற்றி நாம் காணும் பிரபஞ்சத்திற்கு வழிவகுத்தது.

வண்ணமயமான நட்சத்திரங்கள், நெபுளாக்கள் மற்றும் தொலைதூர விண்மீன் திரள்களால் நிரப்பப்பட்ட நமது விண்மீன் மண்டலத்தின் ஒரு பகுதியின் தொலைநோக்கி படம்.

பட மூலாதாரம், Nasa/Esa/CSA/STScI/Michael Ressler (Nasa-JPL)

இந்த அண்ட வீக்கம் நமது விண்வெளிப் பகுதியில் ஏன் தொடங்கியது அல்லது நின்றது என்பது சரியாகத் தெரியவில்லை. 1980-களில், சில இயற்பியலாளர்கள் வீக்கம் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் முடிவடையவில்லை என்று பரிந்துரைத்தனர்.

ஒருவேளை அது நமது பகுதிக்கு அப்பால் தொடர்ந்து கொண்டிருக்கலாம்.

இந்த “நிலையான வீக்கம்” யோசனையின் ஒரு பதிப்பில், வீக்கம் எங்கு நின்றாலும், விண்வெளியின் அந்தப் பகுதி அதன் சொந்த பிரபஞ்சமாகப் பிரிந்துவிடும். மேலும் ஒவ்வொரு பிரபஞ்சமும் வித்தியாசமாக இருக்கும்: சில மிக வலுவான ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கலாம், மற்றவை எதையும் கொண்டிருக்காமல் இருக்கலாம்.

“அவற்றில் பெரும்பாலானவை உயிரற்றவையாகவும் மலட்டுத்தன்மையுடனும் முடியப் போகின்றன,” என்கிறார் லூயிஸ். “அவ்வப்போது நீங்கள் வசிக்கக்கூடிய சிலவற்றைப் பெறுவீர்கள்.”

ஆனால் ஒரு குவாண்டம் மல்டிவர்ஸை போலவே, நமக்கிடையே எப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கும் அந்த இடைவெளி இருப்பதால், இந்த மற்ற பிரபஞ்சங்களைத் தொடர்பு கொள்ள முயல்வது சற்றே கடினமான காரியமாகும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

தடயங்களைத் தேடுதல்

இருப்பினும், இரண்டு பிரபஞ்சங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று நெருக்கமாக உருவானால், அவை பிரிக்கப்படுவதற்கு முன்பு குறுகிய காலம் மோதியிருக்க வாய்ப்புள்ளதாக மல்டிவர்ஸ் ரசிகர்கள் கருதுகின்றனர்.

வானியலாளர்கள் இந்த மோதல்களின் வடுக்களை அண்ட நுண்ணலை பின்னணியில் (CMB) தேடுகிறார்கள் – இது நமது ஆரம்பக்கால பிரபஞ்சத்தின் வழியாகப் பயணிக்கும் முதல் ஒளியின் எச்சங்கள். அது பின்னர் நுண்ணலை கதிர்வீச்சாகக் குளிர்ந்துள்ளது, விண்வெளி முழுவதும் அதைப் பார்க்க நாம் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தலாம்.

ஹால்பெர்ன் கருத்துப்படி, இந்த வடுக்கள் “ஒரு வகை புல்ஸ்-ஐ வடிவம் அல்லது இலக்கு வடிவம் போல் இருக்கும்.”

ஒரு ஓவல் வடிவம் சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் புள்ளிகளால் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது; அந்தப் பகுதி முழுவதும் சீரற்ற இடைவெளியில் அடர்த்தியான சிவப்பு அல்லது நீல புள்ளிகள் கொண்ட பகுதிகள் உள்ளன.

பட மூலாதாரம், Esa/Planck Collaboration

சுற்றியுள்ள பகுதிகளைவிட வித்தியாசமாக குளிர்ச்சியாகத் தோன்றும் ‘குளிர் புள்ளி’ (Cold spot) போன்ற CMB-இல் உள்ள விசித்திரமான அம்சங்களையும் சில வானியலாளர்கள் உற்றுநோக்கியுள்ளனர். மற்றொரு பிரபஞ்சம் நம்மைக் கவர்ந்ததால் இது ஏற்பட்டதாகச் சிலர் வாதிட்டனர்.

“எனக்குத் தெரிந்தவரை, ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு கருத்தை முன்வைக்கும்போது, மற்ற குழுக்கள் புள்ளிவிவர பகுப்பாய்வுகளைச் செய்து: ‘இல்லை, அந்த கருத்து தவறு’ என்று கூறியுள்ளன”.

‘வெறும் சில கருத்துகளின் தொகுப்பு’

CMB-இல் திட்டவட்டமான வடுக்களை நாம் கண்டறிந்தாலும், மற்ற பிரபஞ்சங்களை நாம் ஒருபோதும் சந்திக்கவில்லை என்றால் அவை இருப்பதாக நம்புவதற்கு அது போதுமானதாக இருக்குமா?

“அறிவியலில் நாம் மறைமுக ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளும் பல சந்தர்ப்பங்கள் உள்ளன,” என்று ஹால்பெர்ன் கூறுகிறார். உதாரணமாக, பூமியின் மையப்பகுதிக்கு நாம் ஒருபோதும் சென்றதில்லை என்றாலும், அது இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது என்று நாம் நம்புகிறோம்.

உண்மையில், பிற பிரபஞ்சங்கள் என்ற யோசனையை அவர் விரும்புகிறார்.

“அதைவிடச் சிறந்த மாதிரியை நாம் கண்டுபிடிக்கும் வரை, இப்போதைக்கு நிலையான வீக்கத்தை நம்புபவராக என்னை நான் நிறுத்திக் கொள்வேன்,” என்று அவர் வெளிப்படுத்துகிறார்.

லூயிஸ் ஏதோ ஒரு வடிவிலான மல்டிவர்ஸ் இருப்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். ஆனால் பல போட்டியிடும் யோசனைகள் முன்வைக்கப்படுவதால் அதை உண்மையில் வரையறுப்பதில் இருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம் என்று அவர் கூறுகிறார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்றில், மல்டிவர்ஸ் தற்போது “வெறும் ஒரு கருதுகோள்கூட அல்ல, வெறும் சில கருத்துகள் மற்றும் யூகங்களின் தொகுப்பு மட்டுமே” என்று அவர் எழுதுகிறார்.

“நாம் மல்டிவர்ஸை பற்றி ஒரு பொது இடத்தில் விவாதிக்கப் போகிறோம் என்றால், அதற்கு முதல் படி நாம் எதைப் பற்றி விவாதிக்கிறோம் என்பதை வரையறுப்போம்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU