Home தேசிய national tamil “ஏமாற்ற முயலும் எந்தவொரு நாடும்..”-டிரம்பின் அச்சுறுத்தல் இந்தியாவை இலக்காகக் கொண்டதா?

“ஏமாற்ற முயலும் எந்தவொரு நாடும்..”-டிரம்பின் அச்சுறுத்தல் இந்தியாவை இலக்காகக் கொண்டதா?

5
0

SOURCE :- BBC NEWS

 டிரம்ப் -  மோதி

பட மூலாதாரம், Getty Images

3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கடந்த வாரம், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்ட் டிரம்பின் உலகளாவிய வரிகளை ரத்து செய்தபோது, இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விடும் என்று தோன்றியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அவமானகரமானது என்று அழைத்த டிரம்ப், நீதிபதிகள் மீது தனி நபர் தாக்குதல்களைத் தொடங்கினார். இப்போது, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையொட்டி வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யக் கருதும் நாடுகளை அவர் எச்சரித்து வருகிறார்.

திங்களன்று, டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், அந்த நாடுகள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தியுள்ளார்.

அப்பதிவில், “ஒரு அபத்தமான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் போர்வையில் எங்களை ‘ஏமாற்ற’ முயலும் எந்தவொரு நாடும், குறிப்பாக பல ஆண்டுகளாக அல்லது பல தசாப்தங்களாக அமெரிக்காவை ஏமாற்றிய நாடுகள், இன்னும் அதிக வரிகளை எதிர்கொள்ள நேரிடும். தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளை விட அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பயணத்தை ஒத்திவைத்த இந்திய குழு

பிப்ரவரி 22 அன்று, அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க் மற்றும் பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா தனது வர்த்தக பிரதிநிதி குழுவை இந்த வாரம் அமெரிக்காவுக்கு அனுப்பும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் வரிகளை ரத்து செய்துள்ளதால், நிச்சயமற்ற சூழல் நிலவுவதாகவும், இதைக் கருத்தில் கொண்டு, இந்தியா அதைத் தள்ளிப்போட முடிவு செய்துள்ளதாகவும் ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர்ஸ் கூறுகின்றன.

“இரு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையேயான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, பயணத்தை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்று இந்திய வர்த்தக அமைச்சக வட்டாரம் தெரிவித்தது.

“பயணத்திற்கான புதிய தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை” என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக அந்தத் தூதுக்குழு ஞாயிற்றுக்கிழமை புறப்படவிருந்தது.

இந்தியா, ரஷ்ய எண்ணெயை வாங்குவதுடன் தொடர்புடைய சில இந்திய ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்ட 50% வரிகளை அமெரிக்கா குறைக்கும் கட்டமைப்பின் கீழ் இரு நாடுகளும் உடன்பட்டிருந்தன.

இதன் மூலம் அமெரிக்க வரிகள் 18% ஆகக் குறைக்கப்படவிருந்தது, அதே நேரத்தில் இந்தியா ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க ஒப்புக்கொண்டது.

கடந்த வாரம், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், வாஷிங்டனுக்குத் தூதுக்குழு மேற்கொள்ளும் பயணத்தின் போது நிலுவையில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டால், இந்த இடைக்கால ஒப்பந்தம் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரக்கூடும் என்று தெரிவித்திருந்தார்.

அதிபர் டிரம்ப்பின் புதிய அச்சுறுத்தல் இந்தியாவை நோக்கியும் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

டிரம்பின் ‘ட்ரூத் சோஷியல்’ பதிவை எக்ஸ் தளத்தில் மறுபகிர்வு செய்த முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், “இந்தியாவுடனான ஒப்பந்தக் கட்டமைப்பு குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் தாக்கம் பற்றி ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், இந்தியாவைக் குறிப்பிடும்போது அவர் ‘ஏமாற்றுதல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அவரது அகங்காரம் சார்ந்த சிந்தனை ஒரு தீவிரமான பிரச்னையாகும்,” என்று எழுதியுள்ளார்.

டிரம்பின் பதிவு குறித்து அமெரிக்க வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் முன்னாள் ஆலோசகர் இவான் ஏ. ஃபீன்பாம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், “ரொனால்ட் ரீகனை மேற்கோள் காட்டிய ஒன்டாரியோ தொலைக்காட்சி விளம்பரத்தை எதிர்த்ததற்காக கனடா மீதான வரிகளை உயர்த்துவதாக டிரம்ப் அச்சுறுத்தினார். ஒரு தொலைபேசி அழைப்பின் போது அந்நாட்டு அதிபரின் பேச்சுத் தொனி அவருக்குப் பிடிக்கவில்லை என்பதால் சுவிட்சர்லாந்து மீதான வரிகளை உயர்த்தியதாக டிரம்ப் கூறினார்.” எனக் கூறியிருந்தார்.

மேலும் இவான்,”கடந்த வாரம், டிரம்ப் தனது சொந்த நீதித்துறை உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட அதே சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, 24 மணி நேரத்திற்கும் குறைவான காலத்திற்குள் வரி உயர்வை 10% இலிருந்து 15% ஆக அறிவித்தார். பிரேசிலில் தனது அரசியல் கூட்டாளிகளில் ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டதால் அதிருப்தியடைந்து, உலகின் மிக உயர்ந்த வரி விகிதத்தை அந்நாட்டின் மீது அவர் விதித்தார்.” என்று கூறினார்.

“ரஷ்ய எண்ணெயை வாங்குவது தொடர்பாக அவர் இந்தியா மீது வரிகளை விதித்தார். ஆனால் இந்தியாவை விட அதிக ரஷ்ய எண்ணெயை வாங்கும் சீனா மீது அத்தகைய வரிகள் எதையும் விதிக்கவில்லை. இருப்பினும், பிற நாடுகள் வரிகளை வைத்து ‘விளையாடுவதாக’ டிரம்ப் நம்புகிறார்.” என்றும் இவான் கூறுகிறார்.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து விலகுவது குறித்து இந்தியா இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து விலகுவது குறித்து இந்தியா இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

இந்தியா பயனடையுமா?

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

தனது வர்த்தக நலன்களை சமநிலைப்படுத்தி, டிரம்ப் நிர்வாகத்துடன் மோதலை தவிர்க்க முயற்சி செய்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம் என்று மட்டும் தெரிவித்தது.

உலக வர்த்தக அமைப்பிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் ஜெயந்த தாஸ்குப்தா, ப்ளூம்பெர்க் தொலைக்காட்சியின் ஹஸ்லிண்டா அமீனிடம் கூறுகையில், “அமெரிக்கா என்ன நினைக்கிறது, என்ன நடவடிக்கைகளை அவர்கள் பரிசீலிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்தியா அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். நாம் அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். இது எந்த திசையில் செல்லும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை,” என்றார்.

இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதைக் குறைத்துள்ளது, இருப்பினும் தனது எரிசக்தி தேவைகள் மற்றும் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் கச்சா எண்ணெயை வாங்குவதற்கான உரிமையைத் தான் கொண்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் மாதவி அரோரா ப்ளூம்பெர்க்கிடம் கூறுகையில், “ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மீதான வரி அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தியா இப்போது அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யலாம். இருப்பினும், டிரம்புடனான உறவைப் பேணுவதற்காக இந்தியா தொடர்ந்து கொள்முதலைக் குறைக்கக்கூடும். பேச்சுவார்த்தைகளில் இந்தியா இப்போது தங்களுக்குச் சாதகமான கூடுதல் நிபந்தனைகளைக் கோரலாம்,” என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும், தான் விரும்பியபடி தொடர்ந்து செயல்படப்போவதாக டிரம்ப் கூறுகிறார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணிப்பதற்கான அறிகுறிகள் எதையும் டிரம்ப் காட்டவில்லை என்றாலும், கிடைக்கக்கூடிய பிற வரம்புக்குட்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி விரைவாகப் புதிய வரிகளை விதிக்கத் தொடங்கியுள்ளார்.

டிரம்புக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்த உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில், பழமைவாத நீதிபதிகள் கூட அவருக்கு ஆதரவளிக்கவில்லை. டிரம்பால் நியமிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகள் கூட இந்த வரிகள் சட்டவிரோதமானவை என்று அறிவித்தனர்.

“பல ஆண்டுகளாக, பழமைவாத நீதிபதிகள் டிரம்புக்கு ‘கட்டுப்பட்டவர்களாகவே’ சித்தரிக்கப்பட்டனர். எனவே, நீதிபதிகள் எதிர்பார்த்தபடி செயல்படாதபோது, அதிபரின் அதே சிந்தனை கொண்டவர்கள் என்று விமர்சிப்பதும் அல்லது அவர்கள் மாறுபடும்போது விமர்சிப்பதும் சற்று முரணாகத் தோன்றுகிறது” என்று என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்போதும் கூட, ஒரு பழமைவாத நீதிபதி டிரம்புக்கு எதிராக எப்படித் தீர்ப்பளிக்க முடியும் என்று சில தாராளவாத சிந்தனையாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

இதுகுறித்து சட்ட நிபுணர் நோவா ஃபெல்ட்மேன் எழுதுகையில், “கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியோர் அதிபர் டொனால்ட் டிரம்பின் எல்லை மீறிய நிர்வாக அதிகாரத்தை எதிர்த்து நிற்பதற்கான ஒரு வழியை இறுதியாகக் கண்டறிந்துள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்புக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில், பழமைவாத நீதிபதிகள் கூட அவருக்கு ஆதரவளிக்கவில்லை. டிரம்பால் நியமிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகள் கூட இந்த வரிகள் சட்டவிரோதமானவை என்று அறிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் ஏற்பாடுகள்

டாவோஸ் நகரில் கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், வல்லரசுகளின் அரசியலை எதிர்கொள்ள நடுத்தர சக்திகொண்ட நாடுகள் தங்களுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த வேண்டும் என்று கூறியபோது, ஒருவேளை இந்தியா அதைத்தான் செய்து கொண்டிருந்தது போல தெரிகிறது.

அமெரிக்காவுடனான தனது வணிகச் சார்பைக் குறைப்பதற்காக இந்தியா ஏற்கனவே பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை முடித்திருந்தது.

அதிபர் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தால் இந்தியாவிற்கு எதிராகப் பல ஆக்ரோஷமான அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால் மோதி அரசாங்கம் அதற்கு மிகவும் எச்சரிக்கையுடனேயே பதிலளித்தது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற போட்டி நாடுகளுக்குப் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் டிரம்பின் வரிகள் முடிவுக்கு வருவது அமெரிக்காவிற்கான ஏற்றுமதி வரி விகிதங்களைக் குறைக்கும்.

மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் கணிப்புப்படி, சீனாவிலிருந்து வரும் பொருட்கள் மீதான சராசரி வரி 32%-லிருந்து 24%-ஆகக் குறையக்கூடும்,

அதே சமயம் ஆசியாவிற்கான சராசரி வரி விகிதம் 20%-லிருந்து 17%ஆகக் குறையக்கூடும்.

இருப்பினும், டிரம்ப் பின்னர் 15% வரிகளை அறிவித்தார். இதற்கு முன்பு 10% என்ற குறைந்த வரி விகிதங்களைப் பேச்சுவார்த்தை மூலம் பெற்றிருந்த பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இது சவாலாக அமையக்கூடும்.

இந்த வரி உயர்வு அமெரிக்காவிற்கான பிரிட்டன் ஏற்றுமதிச் செலவை 4 பில்லியன் பவுண்டுகள் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சுமார் 40,000 பிரிட்டிஷ் நிறுவனங்களைப் பாதிக்கும் என்றும் பிரிட்டிஷ் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் மதிப்பிடுகிறது.

அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ள டிரம்ப், அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வரும் சூழலில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இது அவரது பேரம் பேசும் வலிமையைக் குறைக்கக்கூடும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

ப்ளூம்பெர்க் செய்தியின்படி, வர்த்தக கூட்டாளிகளுடன் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அமலில் இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அவற்றை “நல்ல ஒப்பந்தங்கள்” என்று அழைத்தார். இருப்பினும், எல்லா நாடுகளும் இதற்கு உடன்பட வேண்டிய அவசியமில்லை.

டிரம்ப் நிர்வாகம் தனது கொள்கையைத் தெளிவுபடுத்தும் வரை, ஐரோப்பிய ஒன்றியம் – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒப்புதலை நிறுத்தி வைப்பதற்கான முன்மொழிவு தாக்கல் செய்யப்படலாம் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வர்த்தகத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அதேபோல், இந்திய அதிகாரிகளும் இந்த வாரம் அமெரிக்காவில் நடைபெறவிருந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை, நிச்சயமற்ற சூழலைச் சுட்டிக்காட்டி நிறுத்தி வைத்துள்ளனர்.

அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் உலகளாவிய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அழுத்தம் கொடுப்பதற்காக டிரம்ப் பயன்படுத்திய மிகவும் பயனுள்ள ஆயுதம் இப்போது பலவீனமடைந்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.” என ப்ளூம்பெர்க் கூறுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU