SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
2026 டி20 உலகக் கோப்பையின் குரூப் சுற்றை தொடர்ந்து நான்காவது வெற்றியோடு சிறப்பாக முடித்திருக்கிறது இந்தியா. 100 சதவிகித வெற்றியோடு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தாலும், இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஒரு விஷயம் பெரும் கவலையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.
உலகின் நம்பர் 1 டி20 பேட்டரான அபிஷேக் ஷர்மா, நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டக் அவுட் ஆகியிருக்கிறார். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் உடல்நலக் குறைவு காரணமாக ஆடாத அவர், அமெரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து என மூன்று அணிகளுக்கு எதிராகவும் முதல் ரன்னை எடுப்பதற்கு முன்பே வெளியேறியிருக்கிறார்.
2024-ம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆன அபிஷேக் ஷர்மா, தன்னுடைய முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆனார். ஆனால், அடுத்த போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அந்த அறிமுக போட்டிக்குப் பிறகு 32 இன்னிங்ஸ்களில் அவர் தொடர்ச்சியாக ரன் எடுத்துக்கொண்டிருந்தார். 2025-ம் ஆண்டு அவர் பேட்டிங் செய்த 21 இன்னிங்ஸ்களிலுமே அவர் ரன் சேர்த்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு அது மாறிவிட்டது. 2026-ல் அவர் ஆடியிருக்கும் 8 இன்னிங்ஸ்களில் ஐந்து முறை டக் அவுட் ஆகியிருக்கிறார்.
உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் இந்தியாவின் மிகமுக்கிய ஆயுதமாகக் கருதப்பட்டிருந்த அபிஷேக் இப்படி தொடர்ந்து ரன் எடுக்க சிரமப்பட்டுக்கொண்டிக்கிறார். இதுபற்றி இப்போது ரசிகர்கள் பரவலாக விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அபிஷேக் ஏன் தடுமாறுகிறார், அவர் என்ன செய்தால் இதிலிருந்து மீண்டு வரலாம், அவருக்குப் பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டுமா என்பதுபோன்ற கேள்விகளை நாம் அலசுவோம்.
என்ன நடந்தது?
அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அபிஷேக் டக் அவுட் ஆனபோது அது பெரிதாக வருத்தம் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அந்த விக்கெட்டுக்கு முக்கியக் காரணம் – அமெரிக்க அணி வைத்திருந்த ஃபீல்டிங்.
அலி கான் வீசிய பந்தை ஸ்வீப்பர் கவர் திசையில் தூக்கி அடித்தார் அபிஷேக். அது நல்ல ஷாட்டாகவே அமைந்திருந்தது. ஆனால், அங்கு ஒரு ஃபீல்டர் நின்றிருந்தார். பவர்பிளேவின்போது பவுண்டரி எல்லையில் இரண்டு ஃபீல்டர்களை மட்டுமே நிறுத்த முடியும் என்ற சூழலில், அதில் ஒரு ஃபீல்டரை அமெரிக்கா நிறுத்தியிருந்தது அபிஷேக் உள்பட அனைவருக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
முதல் போட்டியில் நல்ல ஷாட் அடித்தும் ஆட்டமிழந்த அபிஷேக், கடைசி 2 போட்டிகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான திட்டத்துக்கே இரையானார்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா முதல் ஓவரில் பந்தை தானே கையில் எடுத்து ஆஃப் ஸ்பின் வீசினார். தொடர்ந்து ஸ்டம்ப் லான், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே என்று அவர் வீச, ஆஃப் சைடில் ’30 யார்ட் சர்க்கிள்’ உள்ளே நின்றிந்த ஃபீல்டர்களைத் தாண்டி அபிஷேக்கால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. தொடர்ந்து மூன்று டாட் பால்கள் ஆடிய அபிஷேக், ஸ்டம்ப் லைனில் வந்த நான்காவது பந்தை தூக்கி அடித்து மிட் ஆன் திசையில் கேட்ச் ஆனார். 3 டாட் பால்களால் ஏற்பட்ட விரக்தி இரண்டாவது டக் அவுட்டுக்கு வித்திட்டது.
நெதர்லாந்து அணியும் பாகிஸ்தானைப் போலவே யோசித்து முதல் ஓவர் வீச, ஆஃப் ஸ்பின்னர் ஆர்யன் தத் கையில் பந்தைக் கொடுத்தது. அவரும் சல்மான் அலி அகா போலவே ‘அரௌண்ட் தி ஸ்டம்ப்’ வந்து வீசினார். ஸ்டம்ப் லைனில் வந்த முதல் பந்து – டாட் பால். இரண்டாவது பந்து லெக் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே அபிஷேக் உடலை ஒட்டி வீசப்பட்டது – மறுபடியும் டாட் பால். மூன்றாவது பந்தை அபிஷேக் தூக்கியடிக்க முற்பட்டார். ஆனால், அவர் பந்தை அடிக்காமல் விட்டுவிட ஸ்டம்புகள் தகர்க்கப்பட்டன.
இந்த கடைசி 2 போட்டிகளிலுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பந்துகளுக்கு ஆட்டமிழந்திருக்கிறார் அபிஷேக் ஷர்மா. அந்த முதல் ரன்னுக்கான தேடலில் அவர் பெரிய ஷாட்கள் அடிக்கப்போகிறார். அது அவர் மனதில் ஒரு தாக்கம் ஏற்படுத்துவது போலவே தெரிகிறது.
ஏனெனில், அபிஷேக்கின் முந்தைய 2 இன்னிங்ஸ்களில் இஷான் கிஷனே ஆட்டத்தின் முதல் பந்தை எதிர்கொண்டிருந்தார். ஆனால், தொடர்ந்து 2 முறை டக் அவுட் ஆன அபிஷேக், நெதர்லாந்துக்கு எதிராக தானே முதலில் ஸ்டிரைக்கை எடுத்தார். இந்த முடிவிலும், அவர் ஆடிய ஷாட்களிலும் முதல் ரன் வேண்டும் என்ற அவரது எண்ணம் தெரிகிறது. அது வராததால் நெருக்கடியில் இருக்கிறாரோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே உலகக் கோப்பை என்ற மிகப் பெரிய அரங்குக்கு வரும்போது கூடுதல் நெருக்கடி அனைவருக்குமே ஏற்படும். அபிஷேக் இந்த இயல்பான நெருக்கடியையும் உணர்ந்திருக்கலாம் என்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
இதன் தாக்கம் என்ன?
இந்தப் போட்டி முடிந்த பிறகு இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், அபிஷேக் அவுட் ஆகும் விதம் அவரது நம்பிக்கைக்கு பாதகமாக அமையலாம் என்று கூறினார்.
“அபிஷேக் அவுட் ஆன பந்து அவர் ‘கிராஸ் பேட்’ மூலம் தூக்கி அடிக்க முற்பட்டார். அப்படி கிராஸ் பேட் கொண்டு ஆடியது நிச்சயம் அவரது நம்பிக்கைக்கு உதவாது. நீங்கள் அவுட் ஆவதுதான். ஆனால், இந்த முறையில் அவுட் ஆகியிருப்பது, அவர் அடுத்து அவர் எப்படி ஆடப்போகிறார் என்பதில் குழப்பத்தை விதைக்கும்” என்று கூறினார் பங்கர்.
அதே நிகழச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் வருண் ஆரோன், இது இந்திய அணியின் ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்துவதாகக் கூறினார். “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணி இந்த ஃபார்மட்டில் எப்படி ஆடிவந்ததோ, இப்போது இந்த உலகக் கோப்பையில் அதிலிருந்து மாறுபட்ட விதத்தில் ஆடவேண்டியிருக்கிறது. காரணம், அவர்களின் அதிரடியான அணுகுமுறை அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தை மையப்படுத்தியே இருந்தது. ஆனால், தற்போது அவருக்கு ரன் வரவில்லை. கடந்த போட்டியில் இஷான் கிஷன் அந்த வேலையைச் செய்தார்” என்று கூறினார்.
இந்த குரூப் சுற்றின் 4 போட்டிகளையுமே வென்றிருந்தாலும், ஆரோன் சொல்வது போல் இந்திய அணியின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதை உணரமுடிகிறது. தொடர்ச்சியாக இந்த ஃபார்மட்டில் 200+ ஸ்கோர்கள் எடுத்த இந்திய அணி, இந்த 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே (நமீபியாவுக்கு எதிராக) 200 ரன்களைக் கடந்தது. அபிஷேக் இல்லாத அந்தப் போட்டியில் இஷான், சஞ்சு சாம்சன் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்திருந்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக இஷான் அதிரடியைக் கையில் எடுத்ததால், அந்தக் கடினமான ஆடுகளத்திலும் இந்தியா 175 ரன்கள் எடுத்தது.
அப்படி நல்ல தொடக்கம் கிடைக்காத போட்டிகளில் இந்திய அணி முன்பைப் போல் முழு வீச்சில் அதிரடியைத் தொடர முடியவில்லை. அமெரிக்காவுக்கு எதிராக விரைவில் விக்கெட்டுகளை இழந்த இந்தியா 161 ரன்கள் எடுக்கவே போராடவேண்டியிருந்தது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் கூட ஷிவம் துபே கடைசி கட்டத்தில் அதிரடி காட்டியதால் இந்தியா 193 ரன்கள் எடுத்தது. ஆனால், முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் திலக் வர்மா இன்னும் தன் அதிரடி ஆட்டத்தைக் காட்ட முடியாத நிலையில், அபிஷேக் சீக்கிரம் அவுட் ஆவதால், அவரது அணுகுமுறையுமே சற்று டிஃபன்ஸிவாக மாறிவிடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
அபிஷேக் என்ன செய்யவேண்டும்?
இந்த சரிவிலிருந்து எழுச்சி பெற அபிஷேக் வேறு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு இரு வேறு விதமான ஆலோசனைகள் வருகின்றன.
அபிஷேக் ஷர்மா சற்று நிதானமாகத் தொடங்கிவிட்டு பின்னர் அதிரடியைத் தொடரலாம் என்கிறார் சஞ்சய் பங்கர். “தொடர்ச்சியாக இப்படி சீக்கிரம் அவுட் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் தனக்கு இன்னும் சற்று அவகாசம் கொடுக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் 4-6 பந்துகள் எடுத்துக்கொள்ளலாம். அவரால் அதன்பிறகு வேகமாக ஸ்கோர் செய்ய முடியும்” என்று கூறினார்.
பொதுவாக விரைந்து அவுட் ஆகும் சில வீரர்கள் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவார்கள். முதல் ரன் எடுத்துவிட்ட பிறகு, அந்த நெருக்கடி குறைந்ததும் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதனால், அபிஷேக் அந்த அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது என்று பங்கர் நினைத்திருக்கலாம்.
சொல்லப்போனால் அதிரடி ஆட்டக்காரர்கள் பலருமே இந்த அணுகுமுறையை தங்கள் வழக்கமான பாணியாகக் கொண்டிருந்தனர். கிறிஸ் கெய்ல், ரோஹித் ஷர்மா போன்றவர்கள் தங்கள் இன்னிங்ஸ்களை மெதுவாகவே தொடங்குவார்கள். ஓரளவு செட் ஆன பிறகே அதிரடியைத் தொடங்குவார்கள். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா 264 ரன்கள் அடித்தபோது, தன் முதல் 20 பந்துகளில் அவர் 6 ரன்களே அடித்திருந்தார். அதன்பிறகு அவர் தன் வழக்கமான அதிரடியைக் கையில் எடுத்தார்.
அபிஷேக் விரைந்து தன் கியர்களை மாற்றக்கூடியவர் என்பதால், பங்கர் சொல்வதுபோல் ஒருசில பந்துகள் அவகாசம் எடுத்துக்கொண்டு பின்னர் அதிரடியைக் கையில் எடுக்கலாம்.
அதேசமயம், அபிஷேக் அடுத்து என்ன செய்வது என்பதில் அவருக்குப் பெரிய குழப்பம் ஏற்படப்போகிறது என்கிறார் வருண் ஆரோன். “அபிஷேக் ஒரு கடினமான சூழ்நிலையை சந்திக்கக்கூடும். ஏனெனில் அவர் தன் கரியரில் இப்படியொரு இடத்தில் இருப்பதற்குக் காரணம் அவரது அதிரடி ஆட்டம் தான். சுமார் 200 என்ற ஸ்டிரைக் ரேட்டில், 30+ சராசரி வைத்திருக்க நீங்கள் சீராக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கவேண்டும். அதற்கு அவரது அதிரடி அணுகுமுறை தான் காரணம். ஆனால், இப்போது தொடர்ச்சியாக மூன்று டக் அவுட்களுக்குப் பிறகு அவர் அந்த அணுகுமுறை சரிதானோ என்று யோசிக்கக்கூடும். அந்த நிலை வரக்கூடாது என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார். “என்ன இருந்தாலும், அவர் இத்தனை காலம் என்ன செய்தாரோ அதையே செய்யவேண்டும்” என்றும் ஆரோன் கூறினார்.
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
பட மூலாதாரம், Getty Images
அபிஷேக் ஷர்மாவின் இந்த செயல்பாட்டின் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தொடர்ந்து இந்திய டி20 அணியின் அங்கமாக இருந்த சாம்சனுமே, உலகக் கோப்பைக்கு முன்னதாக தன் ஃபார்மை இழந்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 9.2 என்ற சராசரியில் 46 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த காலகட்டத்தில் இஷான் கிஷன் சிறப்பாக ஆடியதால், சாம்சன் பிளேயிங் லெவனில் தன் இடத்தை இழந்தார்.
நமீபியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் அபிஷேக் ஷர்மா உடல் நலக் குறைவால் விளையாடாமல் போக, அந்தப் போட்டியில் களமிறங்கி 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதனால், அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று ஒருதரப்பு ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்தாலும், அபிஷேக் ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக கொடுத்த செயல்பாட்டின் காரணமாக அவருக்கு கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் முடிந்ததும் பிபிசி தமிழிடம் பேசிய வர்ணனையாளர் பகவதி பிரசாத் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். “ஆதிக்கம் செலுத்தும் பெரிய அணிகள் எப்போதுமே ஒரு விஷயத்தை செய்வார்கள். ஒரு முன்னணி வீரர் சரியாக ஆடாமல் போனால் உடனே அவரை வெளியேற்றிவிடமாட்டார்கள். தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்கள். அவர்கள் முக்கியமான தருணங்களில் எழுச்சி பெற்று முக்கியமான செயல்பாட்டைக் கொடுப்பார்கள். உதாரணமாக 2003 உலகக் கோப்பையில் டேமியன் மார்டின், 2007 உலகக் கோப்பையில் கில்கிறிஸ்ட் போன்றவர்களைச் சொல்லலாம். அவர்கள் இருவருமே ஆரம்பத்தில் அவ்வளவாக பங்களிக்கவில்லை. ஆனால், இறுதிப் போட்டியில் அசத்தினார்கள். அவர்கள் போல் அபிஷேக் ஷர்மா முக்கியமான தருணத்தில் எழுச்சி காணலாம்” என்று கூறியிருந்தார்.
உலகின் நம்பர் 1 வீரராக இருக்கும் அபிஷேக் ஷர்மாவுக்கு அந்த கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்படலாம் என்றே பெரும்பாலும் கருதப்படுகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ஐசிசி ரேட்டிங் புள்ளிகள் (931) பெற்ற வீரர் இவர்தான்.

யுவ்ராஜ் சிங் போன்றே அபிஷேக்குக்கு நடக்குமா?
அபிஷேக் ஷர்மாவின் ‘மென்டர்’ யுவ்ராஜ் சிங், முதல் டி20 உலகக் கோப்பையில் (2007) முத்திரை பதித்ததை நாம் அறிவோம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் சிக்ஸர் விளாசியது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அரைசதம் அடித்தது இந்தியா கோப்பை வெல்ல பெரும் உதவி செய்தன. ஆனால், யுவ்ராஜ் சிங்குக்குமே அந்த உலகக் கோப்பையின் தொடக்கம் சிறப்பாக இருக்கவில்லை.
அவர் தன்னுடைய முதல் இரு இன்னிங்ஸ்களில் சேர்த்து 11 பந்துகளில் 6 ரன்களே எடுத்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தவர், நியூசிலாந்துக்கு எதிராக (சூப்பர் 8 போட்டி) 7 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு தான் அந்த இங்கிலாந்து ஆட்டம் அரங்கேறியது. அதேபோல், அபிஷேக் ஷர்மாவும் முக்கியமான கட்டத்தில் எழுச்சி பெறவேண்டும் என்பதுதான் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் ஒரு போட்டியைத் தவறவிட்டதுபோல், அந்த 2007 உலகக் கோப்பையில் காயம் காரணமாக யுவ்ராஜ் சிங்கும் ஒரு போட்டியைத் தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC



