Home தேசிய national tamil என்சிஈஆர்டி புத்தகம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு: இனி நீதிமன்றத்தை விமர்சிப்பது கடினமாக இருக்குமா?

என்சிஈஆர்டி புத்தகம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு: இனி நீதிமன்றத்தை விமர்சிப்பது கடினமாக இருக்குமா?

12
0

SOURCE :- BBC NEWS

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஈஆர்டி ) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் குறித்து உச்ச நீதிமன்றம் இரண்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஈஆர்டி ) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் குறித்து உச்ச நீதிமன்றம் இரண்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இந்த புத்தகத்தில் (எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி : இந்தியா அண்ட் பியாண்ட் ) நீதித்துறை குறித்த ஒரு அத்தியாயம் இடம் பெற்றிருந்தது. அதில் ஒரு பகுதிக்கு “நீதித்துறையில் ஊழல்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் மக்கள் ஊழலை எதிர்கொள்கின்றனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த புத்தகம் குறித்த செய்தி அறிக்கை ஒன்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் எம். பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த அத்தியாயம் குறித்த விவகாரத்தை எழுப்பினர்.

“நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம். எட்டாம் வகுப்பு படிக்கும் சிறு குழந்தைகளுக்கு நீதித்துறை ஊழல் நிறைந்தது என்று கற்பிக்கப்படுகிறது…” என கபில் சிபல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதுடன், சில நாட்களுக்குள் இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

பிப்ரவரி 26 அன்று பிறப்பிக்கப்பட்ட அதன் முதல் உத்தரவில், நீதிமன்றம் அந்தப் புத்தகத்திற்குத் தடை விதித்ததுடன், அதுவரை வெளியிடப்பட்ட அனைத்துப் புத்தகங்களையும் திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

நாடு முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இத்தகைய சூழல்சாராத பாடங்களைச் சேர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்,இது ஒரு சமச்சீரான கல்வியை சீர்குலைக்கிறது. என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிமன்றத்தின் கூற்றுப்படி, “இது மாணவர்களின் மனதிலும், அவர்களின் ஆசிரியர்கள், சிறு குழந்தைகளின் பெற்றோர்கள், ஒட்டுமொத்த சமூகம் மற்றும் இறுதியில் அடுத்த தலைமுறையினரிடமும் நீதித்துறை என்ற அமைப்பின் மீதான நம்பிக்கையை படிப்படியாக அரிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.”

என்சிஈஆர்டி இயக்குனர், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கக்கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில், மார்ச் 11 அன்று வழங்கப்பட்ட தனது இரண்டாவது தீர்ப்பில், இந்த அத்தியாயத்தை எழுதிய மூன்று நபர்களுக்கும் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது.

மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த மூன்று பேருடனும் இனி எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், “இந்தியாவில் நீதித்துறை பற்றி அவர்களுக்குப் போதுமான அறிவு இல்லை அல்லது மாணவர்களுக்கு நீதித்துறையைப் பற்றிய தவறான பிம்பத்தை சித்தரிப்பதற்காக அவர்கள் வேண்டுமென்றே உண்மைகளைத் தவறாகக் காட்டியுள்ளனர் என்று சந்தேகிக்க எங்களுக்கு எந்தக் காரணமும் இல்லை,” என்று எழுதியுள்ளது.

இந்த மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை முன்வைக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்பிறகு இந்த தீர்ப்பை மாற்ற வேண்டுமா என்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

மேலும், பிப்ரவரி 26ம் தேதி தீர்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் சில தனிநபர்கள் “பொறுப்பற்ற” விவாதங்களில் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இத்தகைய இணையதளங்கள் மற்றும் கணக்குகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் நீதிமன்றம் கோரியுள்ளது. அதன் பின்னர் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இருப்பினும், நீதிமன்றம் தனது தீர்ப்பில் ‘பொறுப்பற்ற தன்மை’ என்பதற்கு வரையறை அளிக்கவில்லை.

மேலும், இந்த அத்தியாயத்தைத் திருத்தி எழுதுவதற்கு நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

சட்ட வல்லுநர்களும் இவ்விரு தீர்ப்புகளையும் கூர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

அவர்களின் விமர்சனங்கள் என்ன என்பதையும், எதிர்காலத்தில் அவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் புரிந்துகொள்வோம்.

என்சிஈஆர்டி புத்தகத் தீர்ப்பு: குரல்களை அடக்கும் முயற்சியா?

பிப்ரவரி 26 அன்று அளித்த தீர்ப்பில், விமர்சனங்களை ஒடுக்குவது தனது நோக்கமல்ல என்று நீதிமன்றம் எழுதியிருந்தது.

இருப்பினும், குழந்தைகளுக்கு ஒருதலைப்பட்சமான தகவல்களை வழங்குவது நீதித்துறை குறித்த வாழ்நாள் முழுமைக்கும் தவறான புரிதல்களை உருவாக்கிவிடும் என்றும் குறிப்பிட்டிருந்தது. பல மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஆதரித்தனர்.

இருப்பினும், இந்த முடிவானது நீதித்துறை குறித்து, குறிப்பாக ஊழல் வழக்குகளில் ஏதேனும் கேள்விகளை எழுப்ப முற்படும் மக்களைத் தடுக்கும் என்று பல சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே நீதித்துறையை வெளிப்படையாக விமர்சிப்பவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் என்றும், இத்தகைய முடிவு அந்த எண்ணிக்கையை மேலும் குறைக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் சட்டம் கற்பிக்கும் பேராசிரியர் சுபங்கர் தாம், நீதித்துறையில் நிலவும் ஊழல்கள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

அவர் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “இது நீதித்துறைக்கு எதிராகப் பேச மக்களைப் பயப்பட வைக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, குறிப்பாக இந்தியாவில் வசித்து பணிபுரிபவர்கள் மத்தியில் இந்த அச்சம் இருக்கும்,” என்றார்.

தான் இந்தியாவிற்கு வெளியே வசித்து பணிபுரிவதால், இந்தத் தீர்ப்பு அவரைப் பாதிக்காது என்று அவர் கருதுகிறார்.

பேராசிரியர் சுபங்கர் கூறுகையில், “”பல பத்திரிகையாளர்களும் கல்வித்துறை வல்லுநர்களும் நீதித்துறை குறித்து எழுதுவதற்கு இன்னமும் தயக்கம் காட்டுகிறார்கள். இந்தியாவில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழகமும் தனது பேராசிரியர்களை இத்தகைய விவகாரங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்ய அனுமதிப்பதாக எனக்குத் தெரியவில்லை,” என்றார்.

பல்கலைக்கழகங்களின் பல செயல்பாடுகளில் நீதிமன்ற நீதிபதிகள் முக்கியப் பங்கு வகிப்பதே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “இன்று வெளிவரும் ஏதேனும் புத்தகத்தையோ அல்லது கட்டுரையையோ பாருங்கள். நீதித்துறையில் உள்ள ஊழலைத் தீவிரமாக விசாரிக்கும் கட்டுரைகள் மிகக் குறைவாகவே இருப்பதைக் காண்பீர்கள். இது தற்செயலானது அல்ல. இந்த விஷயம் குறித்துப் பேசினால் என்ன நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும்,” என்றார்.

தானும் இந்தியாவில் இருந்திருந்தால், இதுவரை செய்து வந்த ஆராய்ச்சிகளைத் தன்னால் செய்திருக்க முடியாது என்று அவர் நம்புகிறார்.

பிரசாந்த் ரெட்டி ஒரு சட்ட அறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர். அவர் சமீபத்தில் இந்தியாவின் கீழ்மை நீதிமன்றங்கள் குறித்து “தாரிக் பே ஜஸ்டிஸ்” என்ற ஆங்கிலப் புத்தகத்தை எழுதினார். அவர் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், பல ஆசிரியர்களும் செய்தி நிறுவனங்களும் நீதித்துறை பற்றி எழுதும்போது எச்சரிக்கையாக இருக்கிறார்கள். இது அவர்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்கும்,” என்றார்.

கடந்த சில ஆண்டுகாலங்களில் நீதித்துறையில் உள்ள ‘தவறான நிர்வாகம்’ மற்றும் ‘ஊழல்’ குறித்த செய்திகள் அல்லது கட்டுரைகளைப் பார்த்தால், அத்தகைய கட்டுரைகள் மிகக் குறைவாகவே இருப்பதைக் காண்பீர்கள் என்று அவர் கூறினார்.

இத்தகைய முடிவுக்குப் பிறகு, மக்கள் இது போன்ற விஷயங்களைப் பற்றி எழுதுவதை நிறுத்திக்கொள்வார்கள் என்று அவர் கருதுகிறார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றங்களும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாகக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்த முடிவு குறித்து நிபுணர்கள் வேறு என்ன கூறுகிறார்கள்?

சட்ட வல்லுநர்களும் இவ்விரு தீர்ப்புகளின் செல்லுபடியாகும் தன்மையைக் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.

இந்தத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்ட வல்லுநர் கௌதம் பாட்டியா இரண்டு கட்டுரைகளை எழுதினார்.

புத்தகங்களையும் தனிநபர்களையும் தடை செய்வது ஒரு அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஏதேனும் அடிப்படை உரிமை என்று வரும்போது, அரசாங்கம் எடுத்த எந்தவொரு முடிவும் அரசியலமைப்பிற்கு எதிரானதுதானா என்பதை மட்டுமே எந்தவொரு அரசியலமைப்பு நீதிமன்றமும் பார்க்க முடியும் என்று அவர் எழுதினார்.

ஒரு நபரின் வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்துவது அவர்களின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும், அவர்கள் எந்தச் சட்டங்களை மீறினார்கள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன், இந்த உத்தரவைப் பிறப்பிப்பதில், நீதிமன்றம் விசாரணையை நடத்தவோ அல்லது அதன் தீர்ப்புக்கான முறையான காரணங்களை வழங்கவோ இல்லை.

அந்த மூன்று நபர்களும் மேற்கொண்டு பணியாற்றுவதைத் தடை செய்யும் முடிவு “சட்டவிரோதமானது” என்று பேராசிரியர் சுபங்கர் தாமும் கூறினார்.

“குறிப்பாக, எதிர் தரப்பினரின் கருத்தைக் கேட்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அத்தகைய முடிவைச் நியாயப்படுத்தக்கூடிய எந்தவொரு சட்டப்பிரிவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய பிரசாந்த் ரெட்டி,”அந்த அத்தியாயத்தில் தவறாக எதையும் நான் காணவில்லை. அதில் உள்ள எந்த உண்மைகளும் தவறானவை அல்ல. யாராவது அந்த முழு அத்தியாயத்தையும் படித்தால், அது நீதித்துறையைப் பற்றிய மோசமான பிம்பத்தை முன்வைக்காது”என தான் நம்புவதாக கூறினார்.

மறுபுறம், இந்தத் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் அவர்களிடம் கேட்டபோது, “மூன்று அறிஞர்களையும் எந்தவொரு பொதுப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்ற விடாமல் தடுக்கும் இந்த உத்தரவு மிகவும் கடுமையானது என்று நான் நினைக்கிறேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,”இருப்பினும், இந்தத் தீர்ப்பு நீதித்துறையை விமர்சிப்பதில் இருந்து யாரையும் தடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. எளிதில் ஆட்கொள்ளப்படக்கூடிய இளம் மாணவர்களிடம் ஊழலைப் பற்றிப் பேசுவதில் மட்டுமே நீதிமன்றம் கவனம் செலுத்தியது” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU