Home Latest news tamil சமீபத்திய செய்தி எகிப்து கல்லறைகளில் தமிழை எழுதி வைத்த ‘சிகை கொற்றன்’ யார்?

எகிப்து கல்லறைகளில் தமிழை எழுதி வைத்த ‘சிகை கொற்றன்’ யார்?

13
0

SOURCE :- BBC NEWS

எகிப்து கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள்

பட மூலாதாரம், Ingo

எகிப்தில் உள்ள ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ பகுதியில் இருக்கும் கல்லறைகளில் தமிழ் பிராமி, சமஸ்கிருதம், பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் – பிராமியில் எழுதப்பட்டவை என்கிறார்கள் ஆய்வார்கள். இந்தக் கல்லறைகளில் தமிழில் எழுதியது யார்?

எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) பகுதியில் இருக்கும் கல்லறைகளில் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் ஆறு கல்லறைகளில் இந்த 30 எழுத்துப் பொறிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் பிராமி எழுத்துகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சென்னையில் நடந்துவரும் தமிழ் கல்வெட்டியல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில் லோசான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இங்கோ ஸ்டராச்சும் தூர கிழக்கு ஆய்வுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தைச் (French Institute of Far Eastern Studies) சேர்ந்த பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் “மன்னர்களின் பள்ளத்தாக்கிலிருந்து இந்தியா வரை: எகிப்தில் இந்திய எழுத்துப் பொறிப்புகள்” (From the Valley of the Kings to India: Indian Inscriptions in Egypt) என்ற தலைப்பில் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டனர்.

இங்கோ ஸ்ட்ராச், 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றார். அதற்குப் பிறகு அவருடன் பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் இணைந்துகொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள ஆறு கல்லறைகளில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 30 எழுத்துப் பொறிப்புகளைக் கண்டறிந்தனர்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஜூல் பயாய் என்ற ஆய்வாளர் இங்குள்ள கல்லறைகள் அனைத்தையும் ஆராய்ந்து, அதில் உள்ள எழுத்துகளைத் தொகுத்திருக்கிறார். இருந்தபோதும் இந்தியாவைச் சேர்ந்த எழுத்துகளை அவரால் இனம்காண முடியவில்லை என்பதால், அவை இந்தியாவைச் சேர்ந்த எழுத்துகள் என்றே அறியப்படாமலேயே இத்தனை ஆண்டுகளாக இருந்தன.

தற்போது இந்தக் கல்லறைகளில் அடையாளம் காணப்பட்டிருக்கும் எழுத்துகள், இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தன. இந்த எழுத்துகளை எழுதியவர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி, மேற்குப் பகுதி, தென்னிந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்தப் பிரதேசங்களில் இதுபோல இந்தியாவைச் சார்ந்த எழுத்துகள் கிடைப்பது முதல் முறையல்ல என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சகுத்தரா (Socotra) தீவுகளில் உள்ள ஹாக் குகைகள், செங்கடல் பிரதேசத்தில் உள்ள துறைமுகமான பெரெனிகே (Berenike) ஆகிய இடங்களில் இந்திய எழுத்துப் பொறிப்புகள் இதற்கு முன்பு கிடைத்துள்ளன.

எகிப்து கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள்

மன்னர்களின் பள்ளத்தாக்குகளில் உள்ள கல்லறைகளில் தமிழ்

எகிப்தின் தற்போதைய லக்ஸர் நகருக்கு அருகில், நைல் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதி. பழங்கால எகிப்தின் புதிய ராஜாங்கத்தைச் (New kingdom – கி.மு. 16ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 11ஆம் நூற்றாண்டுவரை) சேர்ந்த பாரோக்கள், அவர்களுடைய பிரபுக்களுக்காக உருவாக்கப்பட்ட 65 கல்லறைகள் இங்கே கண்டறியப்பட்டுள்ளன. ரோமானியர்களின் காலத்தில் பலர் இந்த இடத்தை பார்த்துச் சென்றிருக்கின்றனர். அப்படி இந்தப் பகுதிக்கு வந்தவர்கள் அந்தக் கல்லறைகளின் சுவர்களில் தங்களது பெயர்களை எழுதிச் சென்றிருக்கின்றனர். ஜூல் பயாய், இந்தக் கல்லறைகளை 1888-89 காலகட்டத்திலும் 1913–14 காலகட்டத்திலும் ஆய்வுசெய்து, அங்கிருந்த 2,000 கிறுக்கல்கள் அல்லது எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டார்.

ஆனால், அவரால் இந்திய எழுத்துகளை அடையாளம் காண இயலவில்லை. அவற்றை அவர் Exotic, Asianic என்ற வார்த்தைகளில் குறிப்பிட்டாரே தவிர, அவை என்ன சொல்கின்றன என்பதை ஜூலை பயாயால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தற்போது நடந்த ஆய்வில், 1,2,6,8,9,14 என்ற இலக்கமிடப்பட்ட ஆறு கல்லறைகளில் இந்திய எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. தமிழ், பிராகிருதம், காந்தாரி (பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இருந்த ஒரு பேச்சு வழக்கு), சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தன. இந்த மொழிகளில் எழுத மூன்று விதமான எழுத்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காந்தாரி மொழியை எழுத கரோஷ்டி என்ற எழுத்து வடிவமும் பிராகிருதத்தையும் சமஸ்கிருதத்தையும் எழுத பிராமி எழுத்துகளும் தமிழை எழுத தமிழ் – பிராமியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கல்லறைகளில் கிடைத்த பெரும்பாலான எழுத்துப் பொறிப்புகள் தமிழைச் சார்ந்ததாகவே இருந்தன.

எகிப்து கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள்

பட மூலாதாரம், Timothee Sassolas

முதலாம் எண் கல்லறையில்தான் இருப்பதிலேயே அதிக இந்திய எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த 16 எழுத்துப் பொறிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழில் இருந்தன. அதேபோல, காந்தாரியில் எழுதப்பட்ட ஒரே எழுத்துப் பொறிப்பும் இந்தக் கல்லறையில்தான் கிடைத்தது. இந்த மொழியில் எழுதியிருப்பவர் தன்னை க்ஷத்திரியனாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேபோல இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில் கிடைத்த எழுத்துகளிலேயே மிக நீண்ட வரியும் இந்தக் கல்லறையில்தான் கிடைத்தது. இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது. க்ஷஹரத மன்னனின் தூதுவன் இங்கு வந்ததாக அந்த வரி குறிப்பிடுகிறது. இந்த க்ஷஹரத மன்னர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியை கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஆட்சி செய்தவர்கள் என்பதால், இந்திய எழுத்துகளின் காலத்தைக் கணிக்க இது உதவுகிறது.

இங்குள்ள பல கல்லறைகளில் கிடைக்கும் தமிழ் எழுத்துப் பொறிப்புகளில் Cikai Korran (சிகை கொற்றன்) என்ற வார்த்தை காணப்படுகிறது. இந்தப் பெயர் எட்டு இடங்களில் காணப்படுகிறது. முதலாவது கல்லறையில் ‘சிகைக் கொற்றன் வந்தான், பார்த்தான்’ என மூன்று முறை எழுதப்பட்டிருக்கிறது. கல்லறையின் வாசலில் எதிரெதிராக இரண்டு இடங்களில் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

அடுத்ததாக, இரண்டாவது கல்லறையில் மொத்தம் ஐந்து எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தன. இவை யாவும் தமிழில் எழுதப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றன. ஆனால், அந்த எழுத்துகள் சொல்ல வருவது என்ன என்பதில் தெளிவில்லை. இந்தக் கல்லறையிலும் ‘சிகைக் கொற்றன்’ தனது பெயரை எழுதி வைத்திருக்கிறார். ஆறாவது கல்லறையில் இரண்டு எழுத்துப் பொறிப்புகள் கிடைத்திருக்கின்றன. நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் சுவற்றில், உயரத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. இதிலும் ஒன்று ‘சிகைக் கொற்றன்’ எழுதியது. இந்தக் கல்லறையில் கிரேக்க எழுத்துகள் உள்ளே எழுதப்பட்டிருந்தாலும், அந்த உயரத்தில் வேறு யாரும் எழுத்துப் பொறிப்புகளைச் செய்யவில்லை.

ஜூல் பயாய் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்த போதும் அவரால்  இந்திய எழுத்துகளை அடையாளம் காண இயலவில்லை

பட மூலாதாரம், JULES BAILLET

எட்டாவது கல்லறையில் ஆறு எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. அதில் நான்கு தமிழிலும் இரண்டு மத்திய இந்தோ – ஆரிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கல்லறையிலும் முதலாவது கல்லறையில் எழுதியதைப் போலவே எதிரெதிராக இரண்டு இடங்களில் தனது பெயரை அவர் எழுதியிருக்கிறான் ‘சிகை கொற்றன்’. ஒன்பதாவது கல்லறையைப் பொறுத்தவரை, இங்குதான் பெரிய அளவில் கிரேக்க எழுத்துப் பொறிப்புகள் கிடைத்திருக்கின்றன. இந்த கல்லறையின் வாயிலில் தமிழில் எழுத்துப் பொறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

14வது கல்லறையில் ஒரே ஒரு மொழியில்தான் எழுத்துப் பொறிப்புதான் கிடைத்துள்ளது. அது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. அதை எழுதியவர் சிகைக் கொற்றன்தான். அதுவும் வாசலில் மட்டுமே எழுதப்பட்டிருப்பதால், அந்தக் காலகட்டத்தில் இந்தக் கல்லறைக்கு பெரிய அளவில் யாரும் வந்திருக்க மாட்டார்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எகிப்து கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள்

பட மூலாதாரம், JULES BAILLET

கல்லறைகளில் தமிழில் எழுதிவைத்த சிகைக் கொற்றன் யார்?

சிகைக் கொற்றன் என்ற பெயர் 1, 2, 6,8,14 ஆகிய கல்லறைகளில் கிடைத்திருக்கிறது. தான் மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு தான் வந்துபோனதை எல்லோருக்கும் சொல்ல விரும்பியவனாக சிகைக் கொற்றன் இருந்திருக்கிறான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 14வது குகையில் ஒரு விசித்திரமான வரி இருக்கிறது. அதாவது, “சிகை கொற்றன் வரும்போது/வந்ததால்/வந்துவிட்டதால் பார்த்துவிட்டான்.” என்கிறது அந்த வரி.

சிகைக் கொற்றன் என்ற வார்த்தைகளில், சிகை என்பது சமஸ்கிருத வார்த்தை. இது கிரீடத்தையோ, குடுமியையோ குறிக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கொற்றன் என்பது தமிழ்ப் பெயர். கொற்றவை, கொற்றவன், கொற்றம் ஆகியவற்றோடு தொடர்புடைய வார்த்தை. புறநானூற்றுப் பாடல் ஒன்றிலும் கொற்ற என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. புகளூரில் கிடைத்த சேர நாட்டுக் கல்வெட்டுகளிலும் இந்தப் பெயர் காணக் கிடைப்பதாக இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

“இந்தப் பகுதிக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வர்த்தகர்களாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், சிகை கொற்றன் என்பது ஒரு வர்த்தகனின் பெயராக இருக்கும் வாய்ப்புகள் குறைவு. அவர் ஒரு வீரராக இருந்திருக்கலாம். அல்லது வர்த்தகர்களுடன் பாதுகாப்பிற்காக வந்தவர்களாக இருக்கலாம்” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பேராசிரியர் சார்லட் ஸ்மித்.

வேறு மொழிகளில் கிடைத்த ‘க்ஷத்ரியர்’ என்ற வார்த்தை, ‘க்ஷஹரத அரசின் தூதர்’ என ஒருவர் தன்னைப் பற்றி குறிப்பிட்டுக்கொண்டிருப்பது ஆகியவற்றைப் பார்க்கும்போது, அந்தச் சூழலோடு சிகை கொற்றனும் ஒரு படை வீரனாக இருந்திருக்கலாம் என்ற கருத்தே பொருந்திப் போகிறது என்கிறார் சார்லட்.

கிரேக்க மொழியில் எழுத்துப் பொறிப்புகளைச் செய்திருப்பவர்களும், ‘வந்தேன், பார்த்தேன்’ என்ற வகையில் எழுதியுருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் ஆய்வாளர்கள். சிகை கொற்றனும் அதேபோல, ‘வர, கண்ட’ என்றே குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, இந்தக் கல்லறைகளில் இருந்த மற்ற கிறுக்கல்களை, குறிப்பாக கிரேக்கக் கிறுக்கல்களை சிகை கொற்றன் கண்டிப்பாக பார்த்திருக்கவேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏற்கனவே உள்ள கிரேக்க எழுத்துப் பொறிப்புகளுக்கு மேலே இருக்கும்வகையில் சிகை கொற்றன் தமிழ் எழுத்துப் பொறிப்புகளைச் செய்திருக்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தக் கல்லறைகளில் சிகை கொற்றனின் எழுத்துகள் இருக்கும் இடத்தைப் பார்க்கும்போது, அவர் ஏற்கனவே இருந்த கிரேக்க எழுத்துகளை படித்திருக்க வேண்டும் அல்லது யாராவது அவருக்கு அதன் பொருளைச் சொல்லியிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சிகை கொற்றன் தவிர, வேறு சில பெயர்களும் இங்கே காணக் கிடைக்கின்றன. ஒன்றாம் கல்லறையில் கோபன் என்பவர் தனது பெயரை, சிகை கொற்றனைப் போலவே எழுதியிருக்கிறார். அதாவது ‘கோபன் வரத கண்டன்’ என எழுதியிருக்கிறார். சேலம் அம்மன் கோவில்பட்டி கல்வெட்டிலும் இதே பெயர் வருவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 8வது எண் கல்லறையில் ‘சாத்தன்’ என்பவரது பெயர் வருகிறது. 9வது கல்லறையில் ‘கீரன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. கீரன் என்ற பெயர் புகளூர் கல்வெட்டிலும் ஓமனில் கிடைத்த ஒரு பானை ஓட்டிலும்கூட காணக்கிடைத்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒட்டுமொத்தமாக, இந்த எழுத்துகள் அடையாளம் காணப்பட்டது, ரோமானியர்களின் காலத்தில் நிலவிய இந்திய-எகிப்தியத் தொடர்புகளை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில், அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் எந்தெந்தப் பகுதிகள் ரோமானியப் பேரரசுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தன என்பது குறித்த சிறு வெளிச்சத்தையும் பாய்ச்சியிருக்கின்றன.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC