Home தேசிய national tamil ‘உடலுக்குள் ஸ்டேபிளர் பின் வைத்துவிட்டனர்’ – கோவை நபரின் புகாருக்கு மருத்துவர்கள் விளக்கம் என்ன?

‘உடலுக்குள் ஸ்டேபிளர் பின் வைத்துவிட்டனர்’ – கோவை நபரின் புகாருக்கு மருத்துவர்கள் விளக்கம் என்ன?

9
0

SOURCE :- BBC NEWS

உடல்நலம், மருத்துவம், அறுவை சிகிச்சை, ஸ்டேபிளர் பின், கோவை

பட மூலாதாரம், Getty Images

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தபோது, சிகிச்சையில் பயன்படுத்தும் ஸ்டேபிளர் பின்களை உள்ளே வைத்து மூடிவிட்டதால் தன்னுடைய கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் புகார் எழுப்பியுள்ளார்.

மேலும் தனக்கு மறு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், இந்த ஸ்டேபிளர் பின்கள் உள்ளே இருப்பதால், உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.

விபத்தால் ஏற்பட்ட காயம்

உடல்நலம், மருத்துவம், அறுவை சிகிச்சை, ஸ்டேபிளர் பின், கோவை

திருப்பூர் காங்கேயத்தைச் சேர்ந்த சரத்பாபு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி 9 அன்று மனு கொடுத்துவிட்டு, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து தனது கோரிக்கை குறித்து விளக்கினார்.

கடந்த 2023-ஆம் ஆண்டில் தனக்கு விபத்து ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டபோது, வலது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அப்போது மருத்துவர்கள் ஸ்டேபிளர் பின்னை உள்ளே வைத்துவிட்டதாகவும், அது தற்போதுதான் தனக்குத் தெரியவந்ததாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

அதனால் தனது வலது கையில் தற்போது வலி ஏற்பட்டு சீழ் வருவதாகவும், எந்தப் பணிக்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு இரு நாட்களுக்கு முன்பே, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, தனக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் ஊடகங்களில் தெரிவித்து இருந்தார்.

புகார் தெரிவித்த சரத்பாபுவை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது.

அப்போது தனது வலது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான அடையாளங்களைக் காண்பித்துப் பேசிய அவர், தனக்கு ஏற்பட்ட விபத்து மற்றும் சிகிச்சை குறித்தும் விவரித்தார்.

பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்த முதல் தகவல் அறிக்கையின்படி, கடந்த 2023 -ஆம் ஆண்டு, தானாகவே டூ வீலரில் இருந்து விழுந்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டு, முதலில் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டு, பின்பு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

”அந்த விபத்தில் எனது வலது கையில் தசை கிழிந்து, எலும்புகள் உடைந்தன. கோவை அரசு மருத்துவமனையில் எனக்கு அறுவை சிகிச்சை செய்தனர். எலும்புகள் உடைந்த இடத்தில் ‘ராடு’ (IM nail or intramedullary rod) வைத்து தோலால் மூடினர். ஸ்டேபிளர் பின்களை வைத்து அதைத் தைத்தனர். ஆனால் ஸ்டேபிளர் பின்களை உடலுக்குள் வைத்துவிட்டனர்.” என்றார் சரத்பாபு.

சரத்பாபு

‘முதல்வர் அலுவலகத்திற்கு புகார்’

கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில், கோவை அரசு மருத்துவமனையில் தனது கைக்குள் வைக்கப்பட்டிருந்த ராடை (rod) அகற்றியபோதும் ஸ்டேபிளர் பின்கள் அகற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.

அதற்குப் பின் கடந்த அக்டோபரில் பாண்டிச்சேரி சென்றிருந்தபோது, தனக்கு ஏற்பட்ட கை வலி காரணமாக அங்குள்ள ஜிப்மர் மருத்துவமனையில் வெளிநோயாளியாகச் சேர்ந்தபோதுதான் இந்த ஸ்டேபிளர் பின் உள்ளே இருப்பது தெரியவந்ததாகவும் சரத்பாபு கூறினார்

தமிழக அரசின் சுகாதாரத்துறையிடம் எழுதி வாங்கி வந்தால்தான் அங்கு சிகிச்சை தரமுடியுமென்று கூறியதால் அங்கு சிகிச்சை எடுக்கவில்லை என்றார் அவர்.

சரத்பாபு கூறிய பல்வேறு தகவல்களை, பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.

முதல் தகவல் அறிக்கை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிகிச்சைகள், ஜிப்மர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிந்துரைகள் குறித்த அனைத்து ஆவணங்களையும், எக்ஸ்–ரேக்களையும் அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.

அவர் காண்பித்த எக்ஸ்–ரேக்களில் முன்பு அவரது வலது கையில் ராடு இருந்ததும், பின்பு அகற்றப்பட்டதும் தெரிகிறது. அந்த ராடு அகற்றப்பட்ட பின் எடுக்கப்பட்டுள்ள எக்ஸ் ரேயில் 2 ஸ்டேபிளர் பின்கள் இருப்பதாக சரத்பாபு கூறுகிறார்.

அதில் ஒரு ஸ்டேபிளர் பின், எலும்புக்குள்ளும், மற்றொன்று தசைக்குள்ளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

”எனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியிருந்தேன். அதன்பின் டீன் அலுவலகத்திலிருந்து கூப்பிட்டதால் அங்கு சென்று பேசினேன். ஆனால் என்னிடம் ஏதேதோ எழுதிக் கேட்டதால் மறுத்துவிட்டேன். அதனால் மாவட்ட ஆட்சியரிடம் எனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி மறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். உடனடியாக டீனிடம் பேசிய அவர், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.” என்று கூறினார் சரத்பாபு.

எலக்ட்ரீஷியன், பிளம்பர், ஓட்டுநர் போன்ற பல்வேறு பணிகளைச் செய்து வருவதாகக் கூறும் சரத்பாபு, தனக்கு திருமணமாகவில்லை என்றும், வயதான தனது தாய் மற்றும் தந்தையை தானே கவனித்து வருவதாகவும் கூறினார்.

சரியான முறையில அறுவை சிகிச்சை செய்யப்படாததால், தன்னால் வலது கையைத் தூக்கவோ, வேறு பணிகள் செய்யவோ இயலாமல் எந்தப் பணிக்கும் செல்வதில்லை என்றும் தெரிவித்தார். தற்போது தனது தாய் வயதான காலத்தில் வேலைக்குச் சென்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உடல்நலம், மருத்துவம், அறுவை சிகிச்சை, ஸ்டேபிளர் பின், கோவை

பட மூலாதாரம், Getty Images

உடலுக்குள் ஸ்டேபிளர் பின் இருந்தால் பாதிப்பு ஏற்படுமா?

இவருடைய குற்றச்சாட்டுகள் குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, எலும்பு அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் மருத்துவர் வெற்றிச்செல்வனிடம் இதுகுறித்து பேசுமாறு அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் வெற்றிச்செல்வன், ”அவருடைய எலும்புகள் உடைந்து இங்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். அவருடைய வெளிக்காயங்களை ஆற்றிய பின்பே 2 எலும்புகளுக்கும் பிளேட் வைத்திருக்கிறோம். வெளிக்காயத்தில் ஏற்பட்ட குழியை மூடும்போது அவருக்கு ஒட்டுத்தோல் துறையினர், ஸ்டேபிளர் பின் வைத்து மூடியிருப்பார்கள்.” என்றார்.

”எலும்புக்குள் ஸ்டேபிளர் பின் இருக்க வாய்ப்பேயில்லை. ஏனெனில் எலும்பு அறுவை சிகிச்சையின்போது ஸ்டேபிளர் பயன்படுத்தப்படுவதேயில்லை. ஒரு ஸ்டேபிளர் தோலுக்குள்ளே இருக்கிறது. எக்ஸ்ரே எடுக்கும் போது, ஒரு கோணத்தில் அது எலும்புக்குள் இருப்பதாகத் தெரிகிறது. சில நேரங்களில் தோல்களை வைத்து மூடும்போது, தோல் குழிக்குள் சுருண்டு மூடிவிடும். அப்படித்தான் ஸ்டேபிளர்பின் தோலுக்குள் சென்றிருக்கும். அதனால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அதை எடுக்க முயற்சித்தால்தான் மீண்டும் காயமாகும். தோலுக்கு அருகில் இருப்பது ஏதாவது ஒரு கட்டத்தில் தானாகவே வெளியேறிவிடும்” என்றார் மருத்துவர் வெற்றிச்செல்வன்.

சரத்பாபுவின் எக்ஸ்ரே மற்றும் மருத்துவக் குறிப்புகளை, தனியார் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக்கிடம் காண்பித்தபோது, அவரும் ஏறத்தாழ இதே கருத்தைத் தெரிவித்தார்.

அவருக்கு தற்போது ஒரே ஒரு ஸ்டேபிளர் பின் மட்டுமே தோலுக்குள் இருப்பதாகவும், அதுவே இரு கோணங்களில் எக்ஸ்ரே எடுக்கும்போது, ஒரு கோணத்தில் எலும்புக்குள் இருப்பதாகத் தெரிவதாக அவர் விளக்கினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் கார்த்திக், ”அறுவை சிகிச்சைகளில் தசையை தோலால் மூடும் சிகிச்சைகளில்தான் ஸ்டேபிளர் பின்கள் பயன்படுத்தப்படும். பொதுவாக இந்த ஸ்டேபிளர் பின்கள், உயர் ரக பிளாஸ்டிக் (High grade Medical Plastic), டைட்டானியம் மற்றும் எஃகு (Stainless Steel) ஆகிய 3 பொருட்களில் தான் தயார் செய்யப்படுகிறது. இவற்றில் டைட்டானியம் மிகவும் விலை மதிப்புடையது. அதனால் பெரும்பாலும் பிளாஸ்டிக் அல்லது எஃகு தான் பயன்படுத்தப்படுகிறது.” என்றார்.

இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ”இவற்றில் எந்த வகை ஸ்டேபிளர் பின் உடலுக்குள் இருந்தாலும் அதனால் ஒரு பாதிப்பும் நேர வாய்ப்பில்லை.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU