Home Latest news tamil சமீபத்திய செய்தி இஷான் கிஷன் அதிரடி குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் என்ன விவாதம் நடக்கிறது?

இஷான் கிஷன் அதிரடி குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் என்ன விவாதம் நடக்கிறது?

29
0

SOURCE :- BBC NEWS

இஷான் கிஷன், இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

“இஷான் கிஷன் இந்த போட்டியை மாற்றிவிட்டார். இஷான் கிஷனின் பேட்டிங் இவ்வாறு சிறப்பாக இருந்திருக்காவிட்டால், இந்திய அணி கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கக் கூடும்.”

முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் வார்த்தைகள் இவை. 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியதற்கு இஷான் கிஷன்தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த முக்கியமான போட்டியில் இஷான் கிஷன் எடுத்த 77 ரன்கள், இந்தியாவில் மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலும் பாராட்டப்படுகிறது.

இஷான் கிஷனின் இன்னிங்ஸ் இன்னொரு வகையிலும் சிறப்பானது, கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தின் ஆடுகளத்தில் இந்த போட்டியில் வேறு எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்கவில்லை. அந்த ஆடுகளத்தில் அரை சதம் அடிப்பது கடினமான ஒன்றாக கருதப்படுகிறது.

கேப்டன் சூர்யகுமார் போட்டி முடிவடைந்த பின்னர் கூறுகையில், “இஷான் கிஷன் வழக்கமாக அல்லாமல் வேறு மாதிரியாக சிந்தித்து, பொறுப்பை கையாண்ட விதம் ஆச்சர்யகரமானது” என்றார்.

டி20 உலகக் கோப்பையில் 27வது போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை இந்தியா பறிகொடுத்தது. முதல் ஓவரின் முடிவில் இந்திய அணி 1/1 என்ற நிலையில் இருந்தது.

ஆனால், இந்தியா மீதான அழுத்தத்தை பாகிஸ்தான் அதிகரிப்பதற்கு முன்பாகவே, இஷான் கிஷன் எதிர் தாக்குதலை தொடங்கினார்.

ஷாஹீன் அஃப்ரிடியின் அடுத்த ஓவரில் 15 ரன்கள் எடுத்த இஷான் கிஷன், அடுத்தடுத்த ஓவர்களிலும் ரன்களை குவித்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். அவரது அதிரடியால் இந்திய அணி விரைவாக 50 ரன்களை கடந்தது.

27 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த பிறகு, தனது அதிரடியில் அவர் இன்னும் வேகம் கூட்டினார். ஒன்பதாவது ஓவரின் நான்காவது பந்தில் இஷான் கிஷனை சையிம் ஆயுப் ஆட்டமிழக்கச் செய்த போது, அவர் தனது வேலையை செவ்வனே முடித்துவிட்டிருந்தார்.

இஷான் கிஷனின் கடுமையான காலகட்டம்

இஷான் கிஷன், இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன் குவித்தார். 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசினார். போட்டிக்குப் பிறகு பேசிய இஷான் கிஷன், அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினமானதாக இருந்ததாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஆனால், சில சமயங்களில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு உங்களின் பலத்தின் மூலம் ஷாட்டுகளை ஆட வேண்டும். அதுதான் நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விஷயம்” என்றார்.

உலகக் கோப்பையில் இந்திய அணியில் இஷான் கிஷன் இடம்பெறுவதற்கு சாத்தியமே இல்லை என்ற நிலைதான் ஒரு கட்டத்தில் இருந்தது. அதனாலேயே அவரது இந்த இன்னிங்ஸ் வெகுவாக பாராட்டப்படுகிறது.

இந்திய அணிக்கு இஷான் கிஷன் திரும்புவது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது. ஐபிஎல் தொடரில் நிலையாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுலின் இருப்பால் இந்திய அணியில் அவரால் இடம்பெற முடியவில்லை.

2022-ஆம் ஆண்டின் இறுதியில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த அவர், அடுத்த போட்டியிலேயே இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

2023-ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தன்னுடைய முதல் கிரிக்கெட் தொடரில் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தியிருந்தும், அதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 11 பேர் அணியில் இடம்பெறவில்லை.

இதன்பின், இஷான் கிஷனுக்கு கடுமையான நேரம் ஆரம்பித்தது, அந்த தொடர் நடந்துகொண்டிருக்கும் போதே தென்னாப்பிரிக்காவிலிருந்து அவர் வெளியேறினார்.

இஷான் கிஷனின் முடிவு குறித்து அந்த சமயத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கியிருந்தார். அவர் கூறுகையில், “மன சோர்வு காரணமாக தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து இடைவெளி எடுக்க வேண்டும் என அவர் கேட்டிருந்தார்” என தெரிவித்தார்.

ஆனால், அதன்பின் இஷான் கிஷன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றியது. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில், பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்திலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

அந்த ஆண்டின் முடிவில், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டு பின்னடைவை சந்தித்தார். இத்தனைக்குப் பிறகும் தன்னுடைய உறுதி குலையாமல் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினார்.

உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணிக்கு

இஷான் கிஷன், இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இங்குதான் இஷான் கிஷனின் அதிர்ஷ்டம் மாற ஆரம்பித்தது. சையது முஷ்டாக் அலி டிராஃபி போட்டியில் அதிகபட்ச அளவாக 517 ரன்கள் அடித்தார், அவரின் ஸ்டிரைக் ரேட் 197 ஆக இருந்தது. இறுதிப் போட்டியில் 45 பந்துகளில் அவர் சதமடித்து, ஜார்க்கண்ட் அணி முதன்முறையாக பட்டம் வெல்ல உதவினார்.

திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால், இஷான் கிஷன் இந்திய அணிக்கு திரும்பினார். இரண்டாவது டி20 போட்டியில் 32 பந்துகளில் 76 ரன்கள் அடித்தார், இது தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதில் அவருக்கிருந்த உறுதியை வெளிப்படுத்தியது.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 43 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்த இஷான் கிஷன், தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக மாறியுள்ளார்.

இஷான் கிஷன் மீண்டும் வெற்றிகரமாக அணிக்கு திரும்பியதற்கு அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதை காரணமாக கூறுகிறார் சஞ்சய் மஞ்ச்ரேகர். ஸ்போர்ட்ஸ் நெக்ஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், “இஷான் கிஷன் தன் பேட்டிங்கை மேம்படுத்த உள்நாட்டு கிரிக்கெட் உதவியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டு கிரிக்கெட்டில் நிறைய விளையாடியதால் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் அவரது திறன் மேம்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு பேசிய இஷான் கிஷன், “நான் என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த நிறைய உழைத்திருக்கிறேன். இப்போது என்னால் முன்பை விட ஆஃப் சைடில் சிறப்பாக விளையாட முடிகிறது.” என தெரிவித்தார்.

பாகிஸ்தானிலும் இஷான் குறித்து விவாதம்

இஷான் கிஷன், இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இஷான் கிஷனின் ஆட்டம் குறித்து அண்டை நாடான பாகிஸ்தானிலும் விவாதிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் செய்தியாளர் ஷாஸார் இக்பால் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் திட்டத்தில் கூட இஷான் கிஷன் இல்லை. ஆனால், இப்போது இந்தியாவுக்காக ஆடி பாகிஸ்தானின் பந்துவீச்சு தாக்குதலை அவர் சிதைத்துவிட்டார். என்னவொரு கம்பேக்.” என பதிவிட்டுள்ளார்.

இஷான் கிஷன் பாகிஸ்தானை ஆச்சர்யப்படுத்தியுள்ளதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானும் தெரிவித்தார்.

ஏபிபி (ABP) நியூஸிடம் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர், இஷான் கிஷன் ஆச்சர்யங்களை நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

“பல பேட்ஸ்மேன்கள் போராடிக் கொண்டிருக்கையில் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். நாம் மற்ற வீரர்கள் குறித்து தொடர்ந்து பேசினோம். அபிஷேக் ஷர்மா குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், இஷான் கிஷன் இந்த போட்டியின் நாயகனாகிவிட்டார்.” என்றார் அவர்.

இஷான் கிஷன், இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை

விளையாட்டுப் பிரிவு செய்தியாளர் போரியா மஜும்தார் கூறுகையில், அனைத்து தடைகளையும் எதிர்கொண்டு இஷான் கிஷன் சிறந்த கிரிக்கெட் வீரராக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “இஷான் கிஷன் தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளார். அவர் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள தன் உண்மையான அடையாளத்தை அவர் கண்டறிய வேண்டியிருந்தது” என பதிவிட்டுள்ளார்.

“தற்போது அவர் ஒரு சிறந்த வீரர், உலகை எதிர்கொள்ள சிறப்பாக தன்னை தயார்படுத்தியுள்ளார்.” என்றார்.

பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சனம்

இஷான் கிஷன், இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜாவேத் அக்தர் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவர் தன் பதிவில். “ஷாஹீன் அஃப்ரிடி பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். அலி ரஸா அல்லது வேறொரு சிறந்த இளம் வீரருக்கு அவருடைய இடத்தில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் கேப்டன் அதே தவறை செய்கிறார், பொறுப்பற்ற முறையில் கடைசி ஓவரை ஷாஹீன் அஃப்ரிடியிடம் ஒப்படைத்தார்.” என தெரிவித்துள்ளார்.

அவர், “அஃப்ரிடி, இளம் பவுலர்களின் கடினமான உழைப்பை நீங்கள் வீணடித்துவிட்டீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

யாசின் கான் யூசஃப்சாயும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஷாஹீன் அஃப்ரிடி அணிக்கு சுமையாக மாறிவருகிறார்.” என தெரிவித்துள்ளார்.

“அவர் ஒரு கிளப் கிரிக்கெட் வீரரை போன்று பவுலிங் செய்துள்ளார். இஷான் கிஷன் அவரை ஒரு கத்துக்குட்டி பவுலராக (net bowler) மாற்றியுள்ளார்.” என்று அவர் கூறியுள்ளார்.

யாசின் கான் மேலும் கூறுகையில், “ஒன்று பழைய ஷாஹீனை மீட்டு கொண்டு வாருங்கள் அல்லது அவரை நீக்குங்கள். இதை பார்ப்பது உண்மையில் கவலையாக உள்ளது,” என தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC