Home தேசிய national tamil ‘இருப்பது 28,000 டிக்கெட் 88,000 பேர் கேட்டனர்’: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நிலவரம் என்ன?

‘இருப்பது 28,000 டிக்கெட் 88,000 பேர் கேட்டனர்’: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நிலவரம் என்ன?

8
0

SOURCE :- BBC NEWS

இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பிருந்தே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள போட்டி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவெடுத்திருந்தது. இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் என பல தரப்பு தலையீட்டுக்கு பிறகு பாகிஸ்தான் தனது முடிவை மாற்றியது.

பிப்ரவரி 15 அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள போட்டி, சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் மற்றும் கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின்போது இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற சூடான நிகழ்வுகள் காரணமாக அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் அழைத்து டிக்கெட்டுகள் கேட்கின்றனர்’

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு பார்வையாளர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான போட்டி கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் 28,000 பேர் மட்டுமே அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது.

டி20 உலகக் கோப்பையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஐசிசி இணையதளத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டிக்கு தன்னாலும் தன் நண்பர்களாலும் ஒரு டிக்கெட்டை கூட வாங்க இயலவில்லை என, கிரிக்கெட் ரசிகரான தர்ஷனா சாமின்டா பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

“இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியை காண்பது எனக்கு பிடிக்கும். மைதானத்திற்கு நேரடியாக சென்று அங்கு நிலவும் உற்சாக சூழலை அனுபவிப்பது அரிதானது. இம்முறை அந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன், ஆனால் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.” என்றார்.

இதனிடையே, கொழும்புவை சேர்ந்த இளங்கோ (உண்மையான பெயர் அல்ல) பிபிசி சிங்கள சேவையிடம், இந்தியாவில் உள்ள தன்னுடைய நண்பர்கள் டிக்கெட் கேட்பதாகவும் ஒரு டிக்கெட்டை கூட தன்னால் பெற முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

”ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறுவதற்கு வழியில்லை என்பதால் இங்கு (இலங்கையில்) டிக்கெட்டுகளை வாங்க முடியுமா என இந்தியாவில் உள்ள என் நண்பர்கள் கேட்கின்றனர். இதுவரை, 20க்கும் மேற்பட்டோர் என்னை அழைத்து டிக்கெட்டுகள் கேட்டுள்ளனர். நான் எப்படி டிக்கெட்டுகளை கண்டறிவது?” என அவர் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

‘டிக்கெட் குறித்து கேட்டறிந்த சுமார் 88,000 பேர்’

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி சிங்கள சேவையிடம் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு டிக்கெட் வாங்குவது குறித்து கிட்டத்தட்ட 88,000 பேர் கேட்டறிந்தனர் என்றார்.

“இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவது குறித்து குறைந்தது 88,000 பேர் கேட்டறிந்துள்ளனர். எனினும், மைதானத்தில் அதிகபட்சமாக 28,000 முதல் 30,000 பேர் வரை மட்டுமே இருக்க முடியும். இந்த போட்டியைக் காண இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் பெரும்பாலானோர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்த போட்டிக்கு அதிக ஆர்வம் உள்ளது,” எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிசா செய்தியாளர் சந்திப்பில், பிரேமதாசா மைதானத்தை சுற்றி சிறப்பு பாதுகாப்பு திட்டம் குறித்த அமைச்சரவை முடிவுகளை அறிவித்தார்.

ஆரம்பத்தில் இப்போட்டியில் கலந்துகொள்ள வேண்டாம் என பாகிஸ்தானிய அரசு முடிவெடுத்ததாகவும் ஆனால், இலங்கை உட்பட பல்வேறு தரப்புகளின் தலையீட்டைத் தொடர்ந்து பாகிஸ்தான் தன் முடிவை மாற்றிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த போட்டியை காண ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை காவல்துறை ஏற்கெனவே அதற்காக சிறப்பு போக்குவரத்து திட்டம் தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘இந்தியா – இலங்கை விமான டிக்கெட்டுகளின் விலை உயர்வு’

இந்தியாவிலிருந்து இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகளும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளை தேடியபோது, பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 16க்கு இடையே டெல்லியிலிருந்து இலங்கையில் கதுநாயக்க சர்வதேச விமான நிலையம் செல்லும் விமானங்களில் டிக்கெட்டுகள் ரூ.76,000-1,00,000 வரை உள்ளது.

இதனிடையே, பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 16க்கு இடையே இண்டிகோ மற்றும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில் விலை ரூ.60,000-1,11,644 ஆக உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான், டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Make My Trip Web Site

டிக்கெட்டுகளின் விலை

டி20 உலகக் கோப்பையை ஒருங்கிணைக்கும் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பிப்ரவரி 11 அன்று சுமார் 5,000 டிக்கெட்டுகளை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த போட்டிக்காக விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலை குறித்து பிபிசி சிங்கள சேவை அவரிடம் கேள்வி எழுப்பியது.

“விஐபி டிக்கெட் ரூ. 50,000. அதேபோன்று, ரூ.25,000, ரூ. 20,000, ரூ. 15,000, ரூ. 10,000 விலைகளிலும் டிக்கெட்டுகள் இருந்தன. ரூ.1,500 விலையில் புல்தரையில் (Grass bank) அமர்ந்து பார்ப்பதற்கான டிக்கெட்டுகளும் இருந்தன.” என்றார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிகம் பேரால் பார்க்கப்படும் போட்டியாக கருதப்படுகிறது.

இந்த போட்டியால் இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் ஐசிசி ஆகியவற்றுக்கு டிக்கெட் விற்பனை, தொலைக்காட்சி உரிமங்கள், ஸ்பான்சர்ஷிப் மற்றும் விளம்பரங்கள் மூலம் பெரும் வருவாய் கிடைக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU