SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP via Getty Images
பாகிஸ்தான் அரசு தனது புறக்கணிப்பு முடிவை திரும்பப் பெற்றதால், இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக வருவாய் ஈட்டும் இந்தப் போட்டி, இலங்கையில் நடைபெறுகிறது.
கடந்த வாரம் பாகிஸ்தான் அரசு தனது அணியை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியதில் இருந்து போட்டி நடக்குமா இல்லையா என சந்தேகம் நிலவியது.
தங்களது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் தொடரில் இருந்து விலகிய வங்கதேசத்திற்கு “ஆதரவு” அளிப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் ஷாஃபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
ஆனால், ஒரு வார கால இழுபறி மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மற்றும் வங்கதேச வாரியத்தின் அறிக்கைகளுக்குப் பிறகு, திங்கள்கிழமை மாலை பாகிஸ்தான் அரசு தனது அணியை இந்தப் போட்டியில் விளையாடுமாறு உத்தரவிட்டது.
“கிரிக்கெட் உணர்வைப் பாதுகாக்கவும், தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளிலும் இந்த உலகளாவிய விளையாட்டின் தொடர்ச்சியை ஆதரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
அந்தப் போட்டி நடக்கவில்லை என்றால், கிரிக்கெட்டிற்கு நீண்டகால விளைவுகள் ஏற்படக் கூடும்.
இந்த போட்டி நடைபெறவில்லை என்றால் ஐ.சி.சியின் தற்போதைய ஒளிபரப்பு உரிமை ஒப்பந்தங்களில் சிக்கல்கள் ஏற்படும். 2027 உலகக் கோப்பைக்குப் பிறகு ஆசியாவில் சில பெரிய பண மதிப்புள்ள தொலைக்காட்சி ஒப்பந்தங்கள் முடிவடைய உள்ள நிலையில், இந்த நிச்சயமற்ற தன்மை வருங்கால ஒப்பந்தங்களையும் பாதித்திருக்கும்.
பல சிறிய கிரிக்கெட் நாடுகள் ஐ.சி.சி அளிக்கும் நிதியையே நம்பியுள்ளன. எனவே வருவாயில் ஏற்படும் எந்தவொரு இழப்பும் அத்தகைய நாடுகளை கடுமையாக பாதிக்கும்.
பட மூலாதாரம், Getty Images
“ஐ.சி.சி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான பேச்சுவார்த்தையில், நேர்மை, நடுநிலைமை மற்றும் ஒத்துழைப்புடன் கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த நலன்களுக்காகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், ஒருமித்த நோக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் இணைந்து செயல்படுவதிலும் இரு தரப்பும் ஒன்றுபட்டுள்ளன,” என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
“அந்த மனப்பான்மையில், ஐ.சி.சி தொடர்களில் பங்கேற்பதற்கான நிபந்தனைகளின்படி அனைத்து உறுப்பினர்களும் தங்களது கடமைகளை மதிப்பார்கள் என்றும், தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமான தொடராக்கத் தேவையான அனைத்தையும் செய்வார்கள் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.”
முன்னதாக திங்கள்கிழமை மாலை, பாகிஸ்தான் இந்தப் போட்டியில் விளையாட வேண்டும் என்று வங்கதேசம் கோரிக்கை விடுத்தது. இது இந்தப் பிரச்னை முடிவுக்கு வருவதற்கு வழிவகுத்தது.
ஞாயிற்றுக்கிழமை லாகூரில் பாகிஸ்தான் வாரியம், ஐ.சி.சி மற்றும் வங்கதேச வாரியம் அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
பட மூலாதாரம், PCB
“ஒட்டுமொத்த கிரிக்கெட் கட்டமைப்பின் நலனுக்காக” இந்தப் போட்டி நடைபெற வேண்டும் என்று வங்கதேச வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் கேட்டுக்கொண்டார்.
“இந்தக் காலகட்டத்தில் வங்கதேசத்திற்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் எங்களை நெகிழச் செய்துள்ளன. எங்களது சகோதரத்துவம் நீண்ட காலம் செழிக்கட்டும்” என்றும் அவர் கூறினார்.
திங்கள்கிழமை ஷெரீப்புடன் பேசிய இலங்கை அதிபரும், பாகிஸ்தானை இந்தப் போட்டியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார். இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மற்றும் பார்வையாளர்களின் வருகை மூலம் இலங்கை பயனடையும்.
டி20 உலகக்கோப்பையை புறக்கணித்தற்காக வங்கதேசத்தின் மீது எந்தவித தடையும் விதிக்கப்படாது என்று ஐ.சி.சி அறிக்கை உறுதிப்படுத்தியது.
2028 முதல் 2031 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் வங்கதேசம் ஒரு ஐ.சி.சி தொடரை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் எந்தத் தொடரை நடத்தும் என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
2031 வரை அனைத்து ஆடவர் போட்டிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன, வங்கதேசம் இந்தியாவுடன் இணைந்து 2031 உலகக் கோப்பையை நடத்துவது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிர் போட்டிகளை நடத்தும் நாடுகள் 2027 வரை தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைகளையும் நடத்துகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் ஏற்கனவே இலங்கையில் நடக்கும் என திட்டமிடப்பட்டிருந்தன.
அதாவது, அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் ஐ.சி.சி தொடர்களில் இரு நாடுகளும் நடுநிலையான இடங்களில் விளையாடும் என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது.
ஏப்ரல் 2025-ல் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் நான்கு நாள் ராணுவ மோதலில் ஈடுபட்ட பிறகு பதற்றம் அதிகரித்தது.
அதற்கு முன்பே, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்துவிட்டது, இதனால் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டன. வங்கதேசத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போது இதுவே ஒரு முக்கிய விவாதப் புள்ளியாக இருந்தது.
கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் சந்தித்தபோது, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் வார இறுதியில் நடந்த தங்களது முதல் உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறும் தனது இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் விளையாடுகிறது. இந்தியா வியாழக்கிழமை டெல்லியில் நமீபியாவை எதிர்கொள்கிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



