Home தேசிய national tamil இந்தியாவுக்கு 5 ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவை – வெற்றி யாருக்கு?

இந்தியாவுக்கு 5 ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவை – வெற்றி யாருக்கு?

17
0

SOURCE :- BBC NEWS

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

1 மார்ச் 2026, 13:30 GMT

புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

டி20 உலகக் கோப்பையின் மிக முக்கிய சூப்பர் 8 பிரிவு போட்டியில், இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்கள் இலக்காக வைத்துள்ளது.

கொல்கத்தாவில் நடக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.

பவர்பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா

196 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி முதலிரு ஓவர்களில் நிதானமாக பேட்டிங் செய்தது. 2 ஓவர்கள் முடிவில் இந்தியா 12/0 என்ற நிலையில் இருந்தது.

அகீல் ஹொசைன் வீசிய மூன்றாவது ஓவரில் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 1 பவுண்டரியும், 2 சிக்ஸர்களும் விளாசினார். ஆனால், அதே ஓவரின் கடைசிப் பந்தில் அபிஷேக் ஷர்மா (11 பந்துகளில் 10 ரன்கள்) விக்கெட்டைக் கைப்பற்றினார் அகீல் ஹொசைன்.

அடுத்து வந்த இஷான் கிஷன் அதிரடியாக 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால், அவர் ஹோல்டர் வீசிய ஷார்ட் பாலை தூக்கி அடிக்க, பவுண்டரி எல்லையில் இருந்த ஹெட்மெயர் பந்தை கேட்ச் பிடித்தார். இந்தியா 41/2 என்ற நிலைக்குச் சென்றது.

பவர்பிளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

சாம்சன் சிறப்பான ஆட்டம்

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யா பக்கபலமாக இருக்க, அதன் அதிரடியான ஆட்டத்தால் இந்தியாவின் ரன்ரேட்டை தொடர்ந்து அதிகப்படுத்திக்கொண்டே இருந்தார் சாம்சன்.

ஸ்பின், வேகம் என அனைத்தையுமே அவர் அடித்து ஆடினார். ஜேசன் ஹோல்டர், குடகேஷ் மோட்டி, ரொமாரியோ ஷெபர்ட் என அனைவரின் பந்துவீச்சிலும் பவுண்டரிகள் அடித்த அவர், 26 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்தது.

அரைசதம் அடித்த பிறகு சாம்சனின் ஆட்டம் கொஞ்சம் கூட வேகம் குறையவில்லை. அவர் தொடர்ந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடித்தார். ஆஃப் சைட், ஆன் சைட் என அனைத்து திசைகளிலும் பவுண்டரிகள் அடித்துக்கொண்டே இருந்தார். அதனால் இந்திய அணியின் ரன் ரேட் தொடர்ச்சியாக 9+ என்ற அளவிலேயே இருந்தது.

18 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஷமார் ஜோசஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மாவும் அதிரடியைக் கையில் எடுத்தார். அவர் 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இந்திய அணி 15 ஓவர்களில் 146/4 என்ற நிலையில் இருக்கிறது.

பவர்பிளேவில் வெஸ்ட் இண்டீஸ் நிதான பேட்டிங்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

வெஸ்ட் இண்டீஸ் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கியது. பவர்பிளேவின் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தது.

கேப்டன் ஷாய் ஹோப் மிகவும் நிதானமாக விளையாடி 25 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்திருக்கிறார். பிராண்ட கிங்குக்குப் பதிலாக இந்தப் போட்டியில் ஓப்பனராகக் களமிறக்கப்பட்ட ராஸ்டன் சேஸ் சற்று அதிரடி காட்டி 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறார்.

அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் பட்டேல், ஜஸ்ப்ரித் பும்ரா என நான்கு பௌலர்களை இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பயன்படுத்தியும் விக்கெட் எதுவும் வீழ்த்த முடியவில்லை.

அதேசமயம் இந்திய அணி அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியது. மூன்றாவது ஓவரில் ஒரு ரன் அவுட் வாய்ப்பு தவறிய நிலையில், ஐந்தாவது ஓவரில் ராஸ்டன் சேஸ் கொடுத்த கேட்சை அபிஷேக் ஷர்மா தவறவிட்டார்.

முதல் விக்கெட்டை வீழ்த்திய வருண்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

விக்கெட் விழாமல் பவர்பிளேவைக் கடத்திய பிறகு வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் அதே அணுகுமுறையைத் தான் கையாண்டார்கள்.

ஷாய் ஹோப் நிதானமாகவும், ராஸ்டன் சேஸ் அதிரடியாகவும் பேட்டிங் செய்தார்கள். 6.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களைக் கடந்தது.

அக்‌ஷர் பட்டேல் பந்துவீச்சில் ரன் எடுக்க ஷாய் ஹோப் தொடர்ந்து தடுமாறினார். இந்நிலையில், 9-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் அவர் போல்டாகி வெளியேறினார். ஹோப், 33 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

அதன்பிறகு களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மெயர் ஹர்திக் பாண்டியா வீசிய 10-வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரில் 3 வைட்கள் உள்பட 13 ரன்கள் கிடைத்தன.

10 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது.

ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய பும்ரா

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

மூன்றாவது பேட்டராகக் களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மெயர், தன்னுடைய அதிரடி பேட்டிங்கை இந்தப் போட்டியிலும் தொடர்ந்தார்.

ஹர்திக் பாண்டியா வீசிய 10-வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த ஹெட்மெயர், வருண் சக்கரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார்.

அதனால், 11-வது ஓவரில் பும்ராவை பந்துவீச அழைத்தார் சூர்யகுமார் யாதவ். அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ஹெட்மெயரையும் (12 பந்துகளில் 27 ரன்கள்), ராஸ்டன் சேஸையும் (25 பந்துகளில் 40 ரன்கள்) அதே ஓவரில் வெளியேற்றினார் பும்ரா. அதனால் 102/3 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது வெஸ்ட் இண்டீஸ்.

அதன்பிறகு போட்டியில் இந்தியாவின் கை சற்று ஓங்கியது. 15-வது ஓவரின் முதல் பந்தில் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்டை அவுட் ஆக்கினார் ஹர்திக் பாண்டியா. தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால், அதன்பிறகு களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் மிகவும் நிதானமாகவே இன்னிங்ஸை தொடங்கினார். அதனால், 15-வது ஓவரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.

பவல் – ஹோல்டர் அதிரடி

தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராவ்மன் பவல் – ஜேசன் ஹோல்டர் இணை அதிரடியாக விளையாடியது.

அர்ஷ்தீப் வீசிய 16-வது ஓவரில் 24 ரன்கள் சேர்த்த அவர்கள், அதன்பிறகு வருண், பும்ரா என அனைவரின் ஓவர்களிலும் பவுண்டரிகளாக அடித்தனர். 17-வது ஓவரில் 14 ரன்கள், 18-வது ஓவரில் 12 ரன்கள், 19-வது ஓவரில் 6 ரன்கள், 20-வது ஓவரில் 14 ரன்கள் என அவர்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.

பவல் 19 பந்துகளில் 34 ரன்களுடனும், ஹோல்டர் 22 பந்துகளில் 37 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இந்தியா பந்துவீச்சு தேர்வு

இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

டாஸுக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ஆடுகளம் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கிறது. இது சேஸிங்குக்கு சாதகமான மைதானம். ஆட்டம் போகப் போக ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், பனிப்பொழிவு இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு சேஸ் செய்வதே சரியான முடிவாக இருக்கும் என்று முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

டாஸ் வென்றிருந்தால் தானும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்பேன் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்தார். அந்த அணியில் தொடக்க பேட்டர் பிராண்டன் கிங் நீக்கப்பட்டு, சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹொசைன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆல்ரவுண்டர் ராஸ்டன் சேஸ் ஹோப் உடன் தொடக்கவீரராகக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் டாஸ் முடிவு பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய “ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் இருக்கிறது. அதனால் அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும். முதலில் பந்துவீசுவதால் அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அதை நன்கு பயன்படுத்தி தாக்கம் ஏற்படுத்தக்கூடும்” என்று இந்திய அணியின் முன்னாள் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்தார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

பிளேயிங் லெவன் எப்படி இருக்கிறது

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ராஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மெயர், ராவ்மன் பவல், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஜேசன் ஹோல்டன், ரொமாரியோ ஷெபர்ட், மேத்யூ ஃபோர்ட், குடகேஷ் மோட்டி, அகீல் ஹொசைன், ஷமார் ஜோசஃப்.

இந்த வெற்றி ஏன் முக்கியம்

சூப்பர் 8 சுற்றின் குரூப் 1-ல் பிரிவில் தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகளையும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இரு அணிகளும் 1 வெற்றி, 1 தோல்வி என 2 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருக்கின்றன. ஜிம்பாப்வே 3 போட்டிகளிலும் தோற்றுவிட்டது. அதனால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, இந்தப் பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும். அதனால் இதுவொரு ‘நாக் அவுட்’ போட்டி போலவே கருதப்படுகிறது. ஒருவேளை இந்தப் போட்டியில் முடிவு எட்டப்படாவிட்டால், இந்தியாவை விட சிறந்த ரன்ரேட் வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும். இன்னொரு அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU