Home தேசிய national tamil இந்தியாவில் சிறுபான்மையினர் யார்? ‘சிறுபான்மை’ அந்தஸ்தின் பலன்கள் என்ன?

இந்தியாவில் சிறுபான்மையினர் யார்? ‘சிறுபான்மை’ அந்தஸ்தின் பலன்கள் என்ன?

5
0

SOURCE :- BBC NEWS

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? அரசமைப்பு வரையறை கூறுவது என்ன?

பட மூலாதாரம், AFP

இந்தியாவிலுள்ள எந்தவொரு மக்கள் குழுவும் சிறுபான்மை பிரிவில் சேர்க்கப்பட வேண்டுமெனில் அதற்குத் தேவையான தகுதிகள் யாவை?

இதுவரை எந்த அடிப்படையில் சிறுபான்மையினர் எனக் கருதப்பட்ட சமூகங்கள் அந்த வரையறையில் முடிவு செய்யப்பட்டுள்ளனர்? அரசமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினர் என்ற வார்த்தைக்கு வரையறை உள்ளதா? மத்திய அரசு யாரை சிறுபான்மை சமூகங்களாக அங்கீகரிக்கிறது?

கடந்த 2006 முதல் நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்தக் கேள்விகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளனர்.

சிறுபானமையினர் என்ற பதத்தின் அரசமைப்பு வரையறைகளை அரசு விளக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களுடைய கேள்விகளின் முக்கிய நோக்கம்.

அதேநேரம், நாடோடிகள், சீர்மரபினர் பழங்குடியினங்கள் ஆகியோருக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் உள்ளது.

‘சிறுபான்மை மக்கள் தொகை அதிகரித்துள்ளது’

“சிறுபான்மையினரை அங்கீகரிப்பது தொடர்பான பிரச்னை குறித்த முக்கியமான அரசமைப்புக் கொள்கையில் அவை கவனம் செலுத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சுதந்திரத்திற்குப் பிறகு, சில சமூகங்கள் சிறுபான்மை பிரிவின்கீழ் அங்கீகரிக்கப்பட்டன. இருப்பினும், கடந்த 70 ஆண்டுகளில், அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினரின் மக்கள் தொகை இரட்டிப்பாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ அதிகரித்துள்ளது,” என்று பாஜக எம்.பி. பக்கா சத்தியநாராயணா பிப்ரவரி 10ஆம் தேதி மாநிலங்களவையில் தனது உரையின்போது தெரிவித்தார்.

“இது அரசமைப்பு நிறுவனங்கள் மற்றும் தேர்தல் சீர்திருத்த முறையைப் பாதிக்கும். இது உண்மையான சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே அரசாங்கம் சிறுபான்மை அந்தஸ்து வழங்க பின்பற்றும் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

“மொழியியல் ரீதியாக, சிறிய இந்து பழங்குடி உட்பிரிவினர், நாடோடிகள், சீர்மரபினர் பழங்குடியினங்கள் ஆகியோர் உண்மையான சிறுபான்மையினர். இந்தப் பழங்குடிகளில் பலவற்றைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில பழங்குடிகள் பேசும் மொழி மற்றும் எழுத்து படிப்படியாக மறைந்து வருகிறது. எனவே, அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்,” என்று பக்கா சத்தியநாராயணா கூறினார்.

‘சிறுபான்மை’ என்ற சொல்லுக்கான அரசமைப்பு வரையறையை வழங்குமாறு பக்கா சத்தியநாராயணா மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

நாடோடி, பகுதி நாடோடி, சீர்மரபினர் பழங்குடியினங்களை இந்து பழங்குடி உட்பிரிவினராகக் கருத வேண்டுமா? ஆனால் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் முதலில் தெளிவு இருக்க வேண்டும்.

அவர்களில் ஒபிசி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுகளின் கீழ் உரிமைகள் மற்றும் அரசமைப்புச் சலுகைகளைப் பெறாத பழங்குடியினர் யாராவது இருக்கிறார்களா?

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? அரசமைப்பு வரையறை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Paka Venkata Satyanarayana/facebook

எத்தனை நாடோடி, பகுதி நாடோடி மற்றும் சீர்மரபினர் பழங்குடியினங்கள் உள்ளன?

சீர்மரபினர் பழங்குடியினங்கள், நாடோடி, பகுதி நாடோடி ஆகியோரை ஆய்வு செய்ய, மத்திய அரசு 2014ஆம் ஆண்டு ‘பிகு ராம்ஜி இடேட் கமிஷனை’ அமைத்தது. இந்த ஆணையம் 2017ஆம் ஆண்டு அரசுக்குத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

இந்த ஆணையம் நாட்டில் 1,257 பழங்குடியினரை அடையாளம் கண்டது. அதில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவுகள் அடங்கும். மேலும் 269 பழங்குடியினர் எந்த வகையிலும் வகைப்படுத்தப்படவில்லை, எந்த அடையாளமும் இல்லை, உரிமைகள் அல்லது அரசமைப்பு சலுகைகளின் பாதுகாப்பை அனுபவிக்கவில்லை என்று ‘பிகு ராம்ஜி இடேட் ஆணையம்’ அறிக்கை கூறுகிறது.

மத்திய அரசு, 2026-27ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டில் இந்த 269 பழங்குடியினத்தையும் சேர்க்க சமீபத்தில் முடிவு செய்தது.

இருப்பினும், இந்த 1,257 பழங்குடியினர் அனைவரும் சமமான அரசமைப்பு சலுகைகளைப் பெறவில்லை என்றும், சிலர் வேலை வாய்ப்புகளில் குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்தைக்கூட பெறவில்லை என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

சிறுபான்மை விவகாரங்கள் குறித்து கேள்வி கேட்ட எம்.பி.க்கள்

முழு அளவிலான சிறுபான்மை விவகார அமைச்சகம் முதன்முதலில் 2006இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள சில எம்.பி.க்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுபான்மையினரின் வரையறை மற்றும் அடிப்படை குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

கடந்த 2006இல் பஞ்சாபைச் சேர்ந்த அகாலி தளம் மாநிலங்களவை எம்.பி. வரிந்தர் சிங் பஜ்வா, 2007இல் கோவாவில் இருந்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யான சாந்தாராம் நாயக், 2008இல் மத்திய பிரதேசத்தில் இருந்து பாஜக எம்.பி. பியாரேலால் கண்டேல்வால், 2015இல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியால் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட எம்.பி. பரிமல் நத்வானி, 2021இல் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ் சின்ஹா, 2023இல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா (உத்தவ் தாக்கரே) மக்களவை எம்.பி. அனில் தேசாய், 2026இல் ஆந்திராவை சேர்ந்த பாஜகவின் பக்கா சத்தியநாராயணா ஆகியோர் இந்தப் பிரச்னை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? அரசமைப்பு வரையறை கூறுவது என்ன?

‘சிறுபான்மை’ என்பதை வரையறுக்கும் முயற்சி

பாஜக எம்.பி. ராகேஷ் சின்ஹாவின் கேள்விக்குப் பதிலளித்து சிறுபான்மையினரை வரையறுக்க மத்திய அரசு முயன்றது.

அப்போதைய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி எழுத்துபூர்வ பதிலைக் கொடுத்தார். 1992ஆம் ஆண்டு தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின் பிரிவு 2(c)இன் கீழ் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், பார்சிகள், சமணர்கள் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அரசமைப்பின் பிரிவுகள் 29 மற்றும் 30 சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதாக அரசாங்கம் கூறியது. மொழியியல் சிறுபான்மையினரும் இதில் ஒரு பகுதியாக உள்ளதாகவும் அரசு கூறியது.

இருப்பினும், ‘மொழியியல் சிறுபான்மையினர் ஆணையர்’ என்பதன் நடைமுறை வரையறையின்படி, மொழியியல் சிறுபான்மையினர் என்பது நாட்டின் எல்லைக்குள் வாழும் மற்றும் அவர்களின் சொந்த மொழி மற்றும் எழுத்து வடிவத்தைக் கொண்ட எந்தவொரு மக்கள் குழுவையும் குறிக்கிறது. அவர்கள் பேசும் மொழி அரசமைப்பின் 8வது அட்டவணையின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களில், சிறுபான்மை ஆணைய சட்டத்தின் கீழ் சில சமூகங்களை சிறுபான்மையினராக அறிவித்ததாகக் கூறினர். ஆனால், சிறுபான்மையினரைத் தேர்வு செய்வதற்கு மதம் அடிப்படை என்ற வார்த்தைகளை எங்கும் பயன்படுத்தவில்லை.

மக்கள் தொகை அடிப்படையில் சிறுபான்மையினருக்கு, சிறுபான்மை அந்தஸ்து வழங்கத் தேவையான குறைந்தபட்ச மக்கள் தொகை விகிதத்திற்கான தெளிவான வரையறையை தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டம் 1992 கொண்டிருக்கவில்லை என்றும் மத்திய அரசு கூறியது.

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? அரசமைப்பு வரையறை கூறுவது என்ன?

தேசிய சிறுபான்மையினர் ஆணையம்

தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டம் 1992இல் ‘சிறுபான்மையினர்’ என்ற வார்த்தையின் வரையறை என்ன?

இந்தச் சட்டத்தின் அத்தியாயம் 1இன் பிரிவு 2(c)ஐ செயல்படுத்தும் நோக்கத்திற்காக, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சமூகங்கள் மட்டுமே சிறுபான்மையினராகக் கருதப்படுகின்றன. ஆனால், இந்தச் சட்டத்தில் சிறுபான்மையினர் என்ற வார்த்தைக்கு குறிப்பிட்ட வரையறை இல்லை.

தேசிய சிறுபான்மையினர் ஆணையம் எப்போது நிறுவப்பட்டது?

கடந்த 1992ஆம் ஆண்டுக்கு முன்பு, சிறுபான்மையினர் யார் என்பதற்கான தெளிவான வரையறை இருக்கவில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்துக்கள் அல்லாத மக்கள் சிறுபான்மையினராகக் கருதப்பட்டனர் என்ற பொதுவான கருத்து தொடர்ந்தது.

இதைக் கருத்தில் கொண்டு, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிலையை மதிப்பிடுவதற்காக மத்திய அரசு ஜனவரி 1978இல் சிறுபான்மையினர் ஆணையத்தை நிறுவியது.

இருப்பினும், இந்த ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்படவில்லை. பின்னர் ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டம் 1992 இயற்றப்பட்டது.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகள் ஆகிய ஐந்து சமூகங்களும் முதன்முதலில் 1993ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின்கீழ் சிறுபான்மையினராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. பின்னர் 2014ஆம் ஆண்டு, அதே சட்டத்தின் பிரிவு 2(c)இன் கீழ் சமணர்கள் சிறுபான்மை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? அரசமைப்பு வரையறை கூறுவது என்ன?

அரசமைப்பில் சிறுபான்மைக்கான வரையறை இல்லையா?

அரசமைப்பில் ‘சிறுபான்மை’ என்பதற்கு எந்த வரையறையும் இல்லையா? சட்டப் பிரிவுகள் 29 மற்றும் 30 கூறுவது என்ன?

சட்டப் பிரிவு 29

பிரிவு (1): சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கிறது. இந்திய எல்லைக்குள் வசிக்கும் எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த குடிமக்களுக்கும், அவர்களுக்கென தனித்துவமான மொழி, எழுத்து மற்றும் கலாசாரத்தைக் கொண்டிருந்தால், அவற்றைப் பாதுகாக்க உரிமை உண்டு.

பிரிவு (2): அரசாங்கத்தால் நடத்தப்படும் அல்லது அரசின் நிதி உதவியை பெறும் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் எந்தவொரு குடிமகனுக்கும் மதம், சாதி, இனம் அல்லது மொழி அடிப்படையில் அனுமதி மறுக்கப்படக்கூடாது.

பிரிவு 30: கல்வி நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிக்க சிறுபான்மையினருக்கு உரிமை உண்டு.

பிரிவு (2): அனைத்து சிறுபான்மையினரும், மதம் அல்லது மொழியியல் ரீதியாக இருந்தாலும், அவர்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிக்க உரிமை உண்டு.

பிரிவு (2): மதம் அல்லது மொழி அடிப்படையில் சிறுபான்மையினராக கருதப்படும் நபர்களால் எந்தவொரு கல்வி நிறுவனமேனும் நிர்வகிக்கப்படும் இடத்தில், அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் அத்தகைய நிறுவனங்களுக்குத் எதிராக எந்தப் பாகுபாடும் காட்டப்படக்கூடாது.

நிபுணர்கள் கூறுவது என்ன?

முன்னாள் மத்திய தகவல் ஆணையர், அரசமைப்பு நிபுணர் மற்றும் பேராசிரியர் மடபூஷி ஸ்ரீதர் இதுகுறித்துப் பேசியபோது, “சிறுபான்மை என்ற பதத்தின் வரையறை அரசமைப்பின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளின் ஒரு பகுதியாகும். இந்தப் பிரிவுகளை விரிவாகப் பார்க்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

“அரசமைப்பின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளில் விரிவான வரையறைகள் உள்ளன. அடிப்படை உரிமைகளுக்கான 14 முதல் 16 வரையிலான பிரிவுகள், சட்டத்தின் முன்பிருக்கும் சமத்துவத்தை விவரிக்கின்றன. பிரிவு 15 பாகுபாட்டைத் தடை செய்கிறது. இது மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாட்டைத் தடை செய்கிறது.

பிரிவு 16, அரசு வேலைகள் மற்றும் பதவிகளில் சம வாய்ப்புகளை வழங்குகிறது. மதம், சாதி, பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்கு இடமில்லை,” என்று மடபூஷி ஸ்ரீதர் விளக்கினார்.

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? அரசமைப்பு வரையறை கூறுவது என்ன?

‘இதுவொரு தேன் கூட்டைப் போன்றது’

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் லோக்சத்தா தலைவருமான முனைவர் ஜெயபிரகாஷ் நாராயண், சிறுபான்மையினர் பிரச்னையைச் சுற்றி நிறைய விவாதங்கள் நடந்துள்ளதாகவும், இப்போது இதையெல்லாம் மறுபரிசீலனை செய்து ஒரு புதிய வரையறையைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தேன் கூட்டைக் கிளறுவதைப் போன்றது எனவும் கருத்து தெரிவித்தார்.

“இந்திய சமூகம், பல மதங்கள், இனங்கள், சாதிகள் மற்றும் பழங்குடிகளைக் கொண்ட மிகவும் சிக்கலான சமூகம். அத்தகைய சமூகத்தைச் சீராக இயங்க வைப்பது நமது அரசமைப்புச் சட்டம்தான். இப்போது சிறுபான்மையினர் பிரச்னையைச் சுற்றி ஒரு விவாதத்தைத் தூண்டினால், சமூகத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவது சாத்தியமில்லை,” என்கிறார் முனைவர் ஜெயபிரகாஷ் நாராயண்.

இருப்பினும், மதத்தின் அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கான ஏற்பாடு இல்லாதபோது, சிறுபான்மை இந்து பழங்குடி உட்பிரிவினர் மற்றும் இந்துக்கள் தேசியளவில் ஏன் சிறுபான்மையினராக கருதப்படுவதில்லை என்பதை விளக்க சில எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேள்விகளைக் கேட்டனர்.

அதுகுறித்து பிபிசியிடம் பேசிய பக்கா சத்தியநாராயணா, “கடந்த சில தசாப்தங்களாக சிறுபான்மையினராகக் கருதப்படும் மக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ உள்ளது. சில மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். சுமார் 28 பழங்குடியினரின் எழுத்து வடிவங்கள், மொழிகள் மறைந்து போகும் அபாயத்தில் உள்ளன. இவற்றில் புடபுக்கலா, பூசலா, டோம்மாரா, கங்கிரெட்டுலா, பமுலா, வீரமுஷ்டி, கஞ்சர பட்டா, யாதா, வத்தேரா, பார்த்தி, போயா போன்ற பழங்குடியினரும் அடங்குவர். அவர்கள் சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? அரசமைப்பு வரையறை கூறுவது என்ன?

“பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அடையாளம் காணவும், அவர்கள் அரசமைப்பு சலுகைகளைப் பெறுவதை உறுதி செய்யவும் சிறப்புச் சட்டங்களை இயற்றலாம். ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக பகுத்தறிவற்ற கோரிக்கைகளை முன்வைப்பது சமூகத்திற்கு எவ்வித நன்மையையும் செய்யாது,” என்று முனைவர் ஜெயபிரகாஷ் நாராயண் கூறினார்.

இதேபோல, ‘சிறுபான்மை’ என்ற வார்த்தையை பரந்த அர்த்தத்தில் பார்க்க வேண்டும், மத சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கும் இது பொருந்தும் என்று அவர் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களில் அர்ப்பணிப்பு குறைவாக இருப்பதாக மடபூஷி ஸ்ரீதர் கூறினார்.

“சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவை குறைபாடுகளைக் கொண்டுள்ளன என்பதால் அவை பெரும்பாலும் நீதிமன்றங்களில் ரத்து செய்யப்படுகின்றன. அரசியல் ஆதாயத்திற்காக தோல்வியடையும் சட்டங்களைக் கொண்டு வருவது நியாயமற்றது” என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

‘இங்கு சிறுபான்மையினர் அங்கு பெரும்பான்மையினர்’

கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவு ஆகியவை நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள். அதேநேரத்தில், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா ஆகியவை குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ பெரும்பான்மையைக் கொண்டுள்ளன.

இந்தியாவில் சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? அரசமைப்பு வரையறை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

சுதந்திரத்திற்கு முன்பு எட்டு முறையும், பின்னர் ஏழு முறையும் என மொத்தம் 15 முறை இந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது.

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில் சிறுபான்மை மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளதைக் குறிக்கும் குறிப்பிட்ட தரவு அல்லது ஆதாரங்கள் எங்கும் கிடைக்கவில்லை.

இதேபோல, இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள மாநிலங்களில் கிறிஸ்தவ பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் தேசிய அளவில் அவர்கள் சிறுபான்மையினராக எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்றும் பக்கா சத்தியநாராயணா கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநில அளவில் சிறுபான்மையினராக உள்ள மக்களுக்கு தேசிய அளவில் சிறுபான்மை அந்தஸ்து வழங்குமாறு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

யார் பொறுப்பு? மத்திய அரசா, மாநிலங்களா?

கடந்த 2021ஆம் ஆண்டு பாஜக எம்.பி. ராகேஷ் சின்ஹாவின் கேள்விக்குப் பதிலளித்த அப்போதைய மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, மாநில அளவில் மத மற்றும் மொழி சிறுபான்மையினரை அடையாளம் கண்டு அறிவிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்று கூறினார்.

கடந்த 2023ஆம் ஆண்டு சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி. அனில் தேசாய் கேட்ட கேள்விக்கு அப்போதைய மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘மத்திய அரசு மாநில அளவில் அல்ல, தேசிய அளவிலான சிறுபான்மையினரையே அடையாளம் கண்டு அறிவிக்கும்’ என்று பதிலளித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

‘சிறுபான்மை’ அந்தஸ்து பெறுவதன் பலன்கள் என்ன?

சிறுபான்மையினரின் உரிமைகள் அரசமைப்பு சட்டப்பிரிவு 29 மற்றும் 30இன் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.

மத சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில், அந்தச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிகபட்சமாக 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும். மீதமுள்ள இடங்கள் பிறருக்கு வழங்கப்பட வேண்டும்.

அவர்களின் எழுத்து, மொழி, கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கான அரசமைப்பு உரிமைகள் மரபுரிமையாகக் கிடைக்கின்றன.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக நலத் திட்டங்கள் பின்தங்கிய வகுப்புகளாக அடையாளம் காணப்பட்ட சிறுபான்மையினருக்கு மட்டுமே பொருந்தும்.

இதேபோல, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அடையாளம் காணப்பட்ட சிறுபான்மையினர், தேசிய அளவில் செயல்படுத்தப்படும் 27% ஒபிசி இட ஒதுக்கீட்டில் அரசு வேலைகளுக்குப் போட்டியிட வேண்டும். ஆனால், நாட்டில் இதுவரை ‘சிறுபான்மை அந்தஸ்து’ என்ற பெயரில் தேசிய அளவில் சிறப்பு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதாக வரலாறு இல்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU