Home Latest news tamil சமீபத்திய செய்தி இந்தியாவில் சித்திரவதை, என்கவுன்டர்களை எவ்வளவு போலீசார் ஆதரிக்கின்றனர்? புதிய அறிக்கை வெளிப்படுத்தும் அதிர்ச்சி தகவல்கள்

இந்தியாவில் சித்திரவதை, என்கவுன்டர்களை எவ்வளவு போலீசார் ஆதரிக்கின்றனர்? புதிய அறிக்கை வெளிப்படுத்தும் அதிர்ச்சி தகவல்கள்

2
0

SOURCE :- BBC NEWS

காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

2011 முதல் 2022 ஆம் ஆண்டு வரை, போலீஸ் காவலில் இருந்த 1,100 பேர் இறந்துள்ளனர். இந்தத் தரவு தேசிய குற்றப் பதிவுப் பணியகத்திலிருந்து (NCRB) பெறப்பட்டது.

இது மட்டுமல்லாமல், இதுவரை இந்த மரணங்களுக்கு காரணமான நபர்கள் யாரும் கண்டறியப்படவில்லை.

போலீஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது நடக்கும் சித்திரவதை பொதுவான ஒன்றாக கருதப்படுகிறது.

ஆனால் இதில் முக்கிய கேள்வி என்னவென்றால், எத்தனை காவல்துறையினர் சந்தேக நபர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும், காவலில் இருக்கும்போது அவர்களை சித்திரவதை செய்ய வேண்டும் என்றும் நம்புகிறார்கள்?

இதைத் தெரிந்து கொள்ள, இந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் 8,200 காவலர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் அறிக்கை மார்ச் இறுதியில் வெளியிடப்பட்டது.

‘இந்தியாவில் காவல் துறையின் நிலை குறித்த அறிக்கை 2025: காவல்துறை துன்புறுத்தல் மற்றும் பொறுப்பற்றத்தன்மை’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வு அறிக்கை, ‘Common cause’ என்ற சமூக அமைப்பாலும், ‘Centre for the Study of Developing Societies’ (CSDS) என்ற ஆராய்ச்சி அமைப்பாலும் தயாரிக்கப்பட்டது.

சித்திரவதைக்கு எவ்வளவு ஆதரவு?

மூன்றில் இரண்டு பங்கு காவல்துறை அதிகாரிகள் சித்திரவதையை நியாயப்படுத்துவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தம் 30 சதவீதம் காவல்துறையினர் சித்திரவதையை பெருமளவில் சரி எனவும், 32 சதவீதம் பேர் இதனை ஓரளவுக்கு சரி எனவும் கருதுகின்றனர். 15 சதவீதம் பேர் சித்திரவதைக்கு மிகக் குறைந்த ஆதரவைக் கொண்டிருந்தனர்.

இந்தக் கருத்துகளைக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்.

சித்திரவதைக்கு அதிக ஆதரவு ஜார்க்கண்ட் (50%) மற்றும் குஜராத் (49%) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளிடமும், குறைவான ஆதரவு கேரளா (1%) மற்றும் நாகாலாந்து (8%) ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளிடமும் காணப்பட்டது.

“உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், அதாவது ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில், சித்திரவதையை ஆதரிப்பதும், சட்டத்தின் நடைமுறைகளைப் பின்பற்றாததும் கவலைக்குரிய போக்காக இருக்கிறது” என்று அறிக்கை கூறுகிறது.

எந்த அளவுக்கு நியாயமானது?

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கும் சித்திரவதைக்கும் காவல் அதிகாரிகள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை அறிய அவர்களிடம் வெவ்வேறு வகையான கேள்விகள் கேட்கப்பட்டன.

உதாரணமாக, கடுமையான குற்றங்களில் சந்தேகப்படும் நபர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துவது சமூகத்தின் நன்மைக்கு நியாயமானதா? என்று கேட்டபோது, சுமார் மூன்றில் இரண்டு பங்கு காவல்துறை அதிகாரிகள் ஏதோ ஒரு வகையில் அதை ஆதரித்தனர்.

மூன்றாம் தர சித்திரவதைக்கு ஆதரவு

30 சதவீத அதிகாரிகள் கடுமையான குற்றங்களை தீர்க்க ‘மூன்றாம் தர’ சித்திரவதைகளைப் பயன்படுத்துவது சரியானது என்று நம்புகின்றனர்.

உள்ளங்காலில் அடித்தல், கை கால்களில் மிளகாய்ப் பொடியைத் தூவுதல், குற்றம் சாட்டப்பட்டவரை தலைகீழாகத் தொங்கவிடுதல் போன்ற சித்திரவதை முறைகள் ‘மூன்றாம் தர சித்திரவதையின்’ கீழ் வருகின்றன.

சந்தேக நபர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை அடிக்கடி விசாரிக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பெரும்பாலும் மூன்றாம் தர சித்திரவதையை அதிகம் நியாயப்படுத்துகிறார்கள்.

‘என்கவுன்டர்’ கொலை

‘மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை’ கொல்வது அல்லது ‘என்கவுன்டர் செய்வது’, அவர்களுக்கு விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்பளிப்பதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று 22 சதவீத காவல்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

இது சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும் 74 சதவீத காவல்துறையினர், குற்றஞ்சாட்டப்பவர்களை காவல்துறை கைது செய்து சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

“காவல்துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்களை சட்டத்தின் முதல் பாதுகாவலர்களாகக் கருதுகின்றனர். மேலும் நீதிமன்றங்களும் சட்டமும் ஒரு தடையாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்” என்று அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

காவல்துறையினரில் நான்கில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 28 சதவீத அதிகாரிகள், சட்டத்தின் செயல்முறைகள் குற்றங்களைத் தடுப்பதில் பலவீனமாகவும், தாமதமாகவும் இருப்பதாக நம்புகின்றனர். 66 சதவீத அதிகாரிகள் சட்டத்தில் ஓட்டைகள் இருந்தாலும் அவை குற்றங்களைத் தடுப்பதாக நம்புகிறார்கள்.

காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

கைது செய்யும்போது சட்டத்தை பின்பற்றுதல்

40 சதவீத அதிகாரிகள் மட்டுமே, ஒருவரைக் கைது செய்யும்போது கைது செய்வதற்கான சட்ட நடைமுறைகளை எப்போதும் பின்பற்றுவதாக ஒப்புக் கொண்டனர்.

சட்ட நடைமுறையைப் பின்பற்றுவது என்பது கைது குறிப்பைத் தயாரிப்பது, கைது செய்யப்பட வேண்டிய நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவரது கைது குறித்துத் தெரிவிப்பது, மருத்துவ பரிசோதனை செய்வது போன்ற விஷயங்களைப் பின்பற்றுவதைக் குறிக்கிறது.

கும்பல் வன்முறைக்கு எவ்வளவு ஆதரவு?

பாலியல் வன்முறை, குழந்தைகள் கடத்தல், சங்கிலி பறிப்பு மற்றும் பசு வதை போன்ற குற்றங்களில், சந்தேகப்படும் நபர்களை பொதுமக்களின் கும்பல் கூடித் தண்டிப்பது சரியானது என்று காவல்துறையினரில் ஒரு பகுதியினர் நம்புகின்றனர்.

“கும்பல் வன்முறைக்கு குஜராத்தில் காவல்துறையினரிடையே அதிக ஆதரவு காணப்பட்டது, கேரளாவில் காவல்துறையினரிடையே மிகக் குறைந்த ஆதரவு காணப்பட்டது”, என்று அறிக்கை கூறுகிறது.

குற்றங்கள் எந்த சமூகத்துடனும் தொடர்புடையதா?

எந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் ”இயல்பாகவே குற்றம்” செய்பவர்களாக கருதுகிறீர்கள் என்று காவல்துறையினரிடம் கேட்கப்பட்டது.

அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்களும், செல்வாக்குமிக்கவர்களும் குற்றச் செயல்களில் அதிக நாட்டம் கொண்டவர்கள் என்று கருதினர். இதற்குப் பிறகு இஸ்லாமியர்கள் , குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், புலம்பெயர்ந்தோர் போன்றோரை குறிப்பிடுகின்றனர்.

இந்த புள்ளிவிவரங்களை மதக் கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்தபோது, இந்து மதத்தைச் சேர்ந்த 19 சதவீத காவல்துறையினர், முஸ்லிம்கள் இயல்பாகவே குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் ”அதிக” வாய்ப்புள்ளவர்கள் என்றும், 34 சதவீத பேர் அவர்கள் குற்றச் செயல்களில் “ஓரளவு” ஈடுபடுகிறார்கள் என்றும் கூறினர்.

அதே நேரத்தில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 18 சதவீத காவல்துறையினர் முஸ்லிம்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் ”அதிக” வாய்ப்புள்ளவர்கள் என்றும், 22 சதவீதம் பேர், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு ”ஓரளவு” வாய்ப்புள்ளவர்கள் என்றும் நம்பினர்.

டெல்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள பெரும்பாலான காவல்துறையினர் முஸ்லிம்கள் இயல்பாகவே குற்றச் செயல்களில் ஈடுபடும் வாய்ப்புள்ளவர்கள் என்று நம்புகிறார்கள். மறுபுறம், குஜராத்தில் மூன்றில் இரண்டு பங்கு காவல்துறை அதிகாரிகள் தலித்துகள் பற்றி அத்தகைய கருத்தைக் கொண்டுள்ளனர்.

தரவு இல்லாமை

போலீஸ் காவலில் ஏற்படும் இறப்புகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை என்பதையும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ஆகியவை வெவ்வேறு புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளன.

2020 ஆம் ஆண்டில், NCRBபடி, 76 பேர் போலீஸ் காவலில் இருக்கும்போது இறந்தனர். அதேசமயம், NHRCபடி, 90 பேர் இறந்துள்ளதாக அதன் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில்தான் அதிக போலீஸ் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

என்கவுன்டர்களைப் பொறுத்தவரை NHRC தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில், காவல்துறை என்கவுன்டர்களில் அதிக இறப்புகள் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்தன.

இந்த அறிக்கையை தயாரிப்பதில் ராதிகா ஜாவுக்கு முக்கிய பங்கு உண்டு.

பிபிசி இந்தியிடம் பேசிய அவர், “ஆரம்பத்தில் இந்த தலைப்பில் ஆராய்ச்சி செய்ய நாங்கள் கொஞ்சம் தயங்கினோம். இந்த தலைப்பு மிகவும் சர்ச்சைக்குரியது. காவல்துறையினர் ‘அரசியல் ரீதியாக சரியான’ பதிலை வழங்குவார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் காவல்துறை எந்த அளவிற்கு வன்முறையை, குறிப்பாக சித்திரவதையை வெளிப்படையாக ஆதரிக்கிறது என்பதைப் பார்ப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.”

ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரி பிரகாஷ் சிங் இந்த அறிக்கையைப் பற்றி ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாளில் எழுதியுள்ளார்.

”இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அதிர்ச்சியளிக்கின்றன, ஆனால் சில நல்ல விஷயங்களும் உள்ளன. உதாரணமாக, 79 சதவீத பேர் மனித உரிமை சார்ந்த பயிற்சியில் நம்பிக்கை கொண்டுள்ளனர், 71 சதவீத அதிகாரிகள் சித்திரவதையைத் தடுப்பதற்கான பயிற்சியில் நம்பிக்கை கொண்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

அறிக்கையில் ஒரு கடுமையான குறைபாடு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் காலத்திலிருந்து பெறப்பட்ட காவல்துறை கலாசாரம், அரசியல்வாதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளால் ஏற்படும் அழுத்தம் மற்றும் ‘குறுக்குவழி’ நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு போன்ற சித்திரவதை செயல்பாடுகளுக்கான அடிப்படை காரணிகள் குறித்து இந்த அறிக்கை பேசவில்லை என அவர் எழுதியுள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC