Home தேசிய national tamil ஆஸ்திரேலியா லீக் சுற்றுடன் வெளியேறுமா? நிசங்கா அதிரடி சதத்தால் இலங்கை அபார வெற்றி

ஆஸ்திரேலியா லீக் சுற்றுடன் வெளியேறுமா? நிசங்கா அதிரடி சதத்தால் இலங்கை அபார வெற்றி

9
0

SOURCE :- BBC NEWS

டி20 உலகக்கோப்பை, இலங்கை - ஆஸ்திரேலியா, நிசங்கா

பட மூலாதாரம், Getty Images

17 பிப்ரவரி 2026, 03:13 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேநேரத்தில், இரு ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேற்றப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆட்டங்களின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும்.

டி20 உலகக் கோப்பையில் கடந்த 17 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

ஆஸ்திரேலியா அதிரடி தொடக்கம்

இலங்கை கேப்டன் தசுன் ஷனகா டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தேர்ந்தெடுத்தார். இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. தொடக்க வீரர் கமில் மிஷாராவுக்குப் பதிலாக குசல் ஜனித் பெரேரா இலங்கை அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடியாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து முதல் 6 ஓவர்களில் 70 ரன்கள் குவித்தனர்.

6வது ஓவரில், மகேஷ் தீக்ஷனா பந்துவீச்சில் மிட்செல் மார்ஷ் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை அடித்து இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். டிராவிஸ் ஹெட் 27 பந்துகளிலும், மிட்செல் மார்ஷ் 22 பந்துகளிலும் அரைசதத்தை எட்டினர்.

இதற்கிடையில், மதீஷா பதிரானா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், இலங்கை அணிக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டது.

டி20 உலகக்கோப்பை, இலங்கை - ஆஸ்திரேலியா, நிசங்கா

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவை திணறடித்த சுழல்

இருப்பினும், ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் முதல் விக்கெட்டாக டிராவிஸ் ஹெட்டை 56 ரன்களுக்கு துஷான் ஹேமந்தா ஆட்டமிழக்கச் செய்தார். அந்த நேரத்தில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 8.3 ஓவர்களில் 104 ரன்களாக இருந்தது.

அடுத்தபபடியாக, 3 ரன் எடுத்திருந்த நிலையில் துனித் வெல்லலகே வீசிய 9வது ஓவரில் கேமரூன் கிரீன் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 11வது ஓவரில் 54 ரன்களில் இருந்த மிட்செல் மார்ஷை துஷன் ஹேமந்தா ஆட்டமிழக்கச் செய்த பிறகே இலங்கை அணிக்கு நம்பிக்கை துளிர்விட்டது.

மார்ஷ் ஆட்டமிழந்த பிறகு, துஷன் ஹேமந்தா வீசிய அடுத்த பந்தில் ஜோஷ் இங்கிலீஷை ஸ்டம்ப் செய்யும் வாய்ப்பை விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் வீணடித்தார்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 14வது ஓவரில் 6 ரன்கள் எடுத்திருந்த டிம் டேவிட்டின் விக்கெட்டை கமிந்து மெண்டிஸ் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 17வது ஓவரில் 22 ரன்களில் இருந்த கிளென் மேக்ஸ்வெல்லை துஷன் ஹேமந்தா ஆட்டமிழக்கச் செய்தார்.

டி20 உலகக்கோப்பை, இலங்கை - ஆஸ்திரேலியா, நிசங்கா

பட மூலாதாரம், Getty Images

பின்னர், 18வது ஓவரில், துஷ்மந்த சமீர 27 ரன்களில் இருந்த ஜோஸ் இங்கிலீஷின் விக்கெட்டை வீழ்த்திய போது, ​​ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர்போர்டு 6 விக்கெட்டுக்கு 174 ரன் என்று காட்டியது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 19வது ஓவரை வீசிய தீக்ஷனா, 3 ரன்கள் எடுத்திருந்த காப்பர் கோனெல்லியின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் இறுதி பந்தை வீசிய துஷ்மந்த சமீர, மார்கஸ் ஸ்டோய்னிஸின் விக்கெட்டை வீழ்த்தினார்.

முடிவில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் துஷான் ஹேமந்த 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும், மஹிஷ் தீக்ஷனா, கமிந்து மெண்டிஸ் மற்றும் துனித் வெல்லேஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டி20 உலகக்கோப்பை, இலங்கை - ஆஸ்திரேலியா, நிசங்கா

பட மூலாதாரம், Getty Images

இலங்கைக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி

182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் பெரேரா ஒரு ரன்னில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

குசல் பெரேரா விக்கெட் விழுந்த போது, ​​இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 8 ரன்கள் எடுத்திருந்தது.

பிறகு மைதானத்திற்குள் நுழைந்த குசல் மெண்டிஸ், நிசங்காவுடன் இணைந்து இலங்கை இன்னிங்ஸை கட்டியெழுப்பினார்.

நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் திரட்டினர்.

டி20 உலகக்கோப்பை, இலங்கை - ஆஸ்திரேலியா, நிசங்கா

பட மூலாதாரம், Getty Images

குசல் மெண்டிஸின் சாதனைகள்

இந்த உலகக் கோப்பையில் குசல் மெண்டிஸ் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதத்தை அடித்தார். டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை அடித்த இரண்டாவது இலங்கை பேட்ஸ்மேன் குசல் மெண்டிஸ் ஆவார்.

இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே மட்டுமே இதற்கு முன்பு 3 அரைசதங்களை தொடர்ச்சியாக அடித்திருந்தார்.

இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்திருந்தபோது, ​​38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்த குசால் மெண்டிஸ், ஆட்டமிழந்தார். இலங்கை இன்னிங்ஸின் 12வது ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அவரை ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் ஒருவராக குசால் மெண்டிஸ் இருக்கிறார். இதுவரை விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களிலும் அவர் 168 ரன்கள் எடுத்தார்.

டி20 உலகக்கோப்பை, இலங்கை - ஆஸ்திரேலியா, நிசங்கா

பட மூலாதாரம், Getty Images

நிசங்கா அபார ஆட்டம்

இலங்கையை வெற்றிக்கு அழைத்துச் சென்ற நிசங்க, டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கைக்காக சதம் அடித்த இரண்டாவது வீரர் ஆனார்.

அவருக்கு முன், டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கைக்காக சதம் அடித்த ஒரே பேட்டர் மகேலா ஜெயவர்த்தனே ஆவார்.

நிசங்க 52 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையை நிசங்க பெற்றார்.

பவன் ரத்நாயக்க 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்தார்.

நிசங்க மற்றும் பவன் ரத்நாயக்க இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்து இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றர். இரண்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே இலங்கை அணி இலக்கை எட்டி ஆஸ்திரேலியாவை 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையில் வீழ்த்தியது.

டி20 உலகக்கோப்பை, இலங்கை - ஆஸ்திரேலியா, நிசங்கா

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியா வெளியேறுமா?

  • பி பிரிவில் ஜிம்பாப்வே அணி செவ்வாய்க்கிழமை அயர்லாந்தை வென்றாலோ அல்லது வியாழக்கிழமை இலங்கையை வென்றாலோ ஆஸ்திரேலியா வெளியேறிவிடும்.
  • ஜிம்பாப்வே இரண்டு போட்டிகளிலும் தோற்றால், ஆஸ்திரேலியா வெள்ளிக்கிழமை நடைபெறும் கடைசி ஆட்டத்தில் ஓமனை அதிக வித்தியாசத்தில் தோற்கடித்து தனது நிகர ரன் ரேட்டை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
  • ஏனெனில், அவ்வாறான கட்டத்தில் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுடன் ஆஸ்திரேலியாவும் 4 புள்ளிகளுடன் இருக்கும். நிகர ரன் ரேட்டை உறுதி செய்யும் பட்சத்தில் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU