Home தேசிய national tamil ஆணுறை விலையை 30% உயர்த்தப்போகும் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் – இரான் போரின்...

ஆணுறை விலையை 30% உயர்த்தப்போகும் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் – இரான் போரின் விளைவு

26
0

SOURCE :- BBC NEWS

காரெக்ஸ் தலைமை செயல் அதிகாரி கோ மியா கியாட்

பட மூலாதாரம், Reuters

இரான் போர் காரணமாகத் தங்களது தயாரிப்புகளுக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களின் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், விலையை 30 சதவீதம் அல்லது அதற்கும் மேலாக உயர்த்தப் போவதாக உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனமான ‘காரெக்ஸ்’ தெரிவித்துள்ளது.

இரான் போர் தொடங்கியதில் இருந்து உற்பத்தி செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக காரெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோ மியா கியாட் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மலேசியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், ஆண்டுக்கு ஐந்து பில்லியனுக்கும் அதிகமான அணுறைகளை உற்பத்தி செய்கிறது.

இது ‘டியூரெக்ஸ்’ மற்றும் ‘ட்ரோஜன்’ போன்ற முன்னணி உலகளாவிய பிராண்டுகளுக்கும், பிரிட்டனின் என்.எச்.எஸ் போன்ற அரசு சுகாதார அமைப்புகளுக்கும் விநியோகம் செய்கிறது.

ராய்ட்டர்ஸ் மற்றும் புளூம்பெர்க் ஆகியவற்றுக்கு அளித்த பேட்டியில் கோ இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்மூஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களை இலக்கு வைப்பதாக இரான் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து, உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இரான் அந்த நீர்வழியை மூடியுள்ளதால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு மற்றும் பிற பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் வழக்கமாக இந்த நீரிணை வழியாகவே கடந்து செல்கின்றன.

காரெக்ஸ் நிறுவனம் எண்ணெயிலிருந்து பெறப்படும் பொருட்களை நம்பியுள்ளது.

லேடெக்ஸை பதப்படுத்தப் பயன்படும் அம்மோனியா மற்றும் சிலிகான் அடிப்படையிலான உயவுப் பொருட்கள் (லூப்ரிகண்டுகள்) உள்ளிட்ட கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்களையே ‘காரெக்ஸ்’ நிறுவனம் பெரிதும் சார்ந்துள்ளது.

ஆணுறை விலையை 30% சதவீதம் உயர்த்தப்போகும்  உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் -  இரான் போரின் விளைவு

பட மூலாதாரம், Getty Images

வேறு என்னென்ன துறைகள் பாதிப்பு?

இந்த ஆண்டு அணுறைகளுக்கான தேவை சுமார் 30% அதிகரித்துள்ளதாகவும், சரக்குக் கட்டண உயர்வு மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தாமதங்கள் தட்டுப்பாட்டை மோசமாக்கியுள்ளதாகவும் கோ மியா கியாட் தெரிவித்துள்ளார்.

“சூழல் மோசமாக இருக்கும்போது, அணுறை பயன்படுத்த வேண்டிய அவசியம் இன்னும் அதிகமாகிறது. ஏனெனில் உங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையும், அடுத்த ஆண்டு வேலை இருக்குமா என்ற அச்சமும் உங்களுக்குள் இருக்கும்,” என்று அவர் புளூம்பெர்கிடம் கூறினார்.

“தற்போது உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால், நீங்கள் இன்னொருவருக்கும் உணவளிக்க வேண்டியிருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அணுறை விலையேற்றம் என்பது, உலகளாவிய எரிசக்தி சந்தைகளை ஏற்கனவே உலுக்கி வரும் அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர், நுகர்வோருக்கான மற்ற பொருட்களின் விலையையும் எவ்வாறு உயர்த்துகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தப் போரின் விளைவாக விமானக் கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன. புதிய ஆய்வின்படி, குறைந்த விலை எகானமி வகுப்பு டிக்கெட்டுகளின் சராசரி விலை கடந்த ஆண்டை விட 24% அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், வளைகுடா வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் உரங்களின் விலை உயர்விற்கும், கணினி சிப்கள் தயாரிக்கப் பயன்படும் ஹீலியம் வாயுத் தட்டுப்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது.

மூலப்பொருட்களைப் பெறுவதில் உற்பத்தியாளர்கள் சந்திக்கும் சவால்களால், பாட்டில் குடிநீர் தொழிற்துறையும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து வருவதால் சர்க்கரை, பால் பொருட்கள் மற்றும் பழங்களின் விலைகள் உயரும் என்று இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் எச்சரித்திருந்தது.

புதன்கிழமை நிலவரப்படி, அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் நிலை குறித்த தெளிவற்ற சூழலே நீடிக்கிறது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் வரை இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நீட்டிக்கப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU