SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
துபையின் ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் கடற்கரை கிளப்புகள் நிறைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பனை மர வடிவத் தீவான பாம் ஜுமேராவில் உள்ள ஒரு பாரில், ஸ்டெஃபனி பேக்கர் நண்பர்களுடன் தன் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
ஆனால், அந்த குழுவினர் அருகிலுள்ள மற்றொரு இடத்திற்குச் செல்வதற்காக வெளியே வந்தபோது, வழக்கத்திற்கு மாறான ஒன்று இரவு வானில் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது.
சற்று நேரத்திலேயே, ஒரு டிரோனின் சிதறிய பாகங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஃபேர்மாண்ட் மீது மோதின. பேக்கரும் அவரது நண்பர்களும் அந்தத் தெருவிற்கு நேர் எதிரேதான் நின்று கொண்டிருந்தனர்.
பட மூலாதாரம், AFP
“நாங்கள் அனைவரும் பயந்துவிட்டோம். இப்படி ஒன்றைப் பார்ப்பது முற்றிலும் எதிர்பாராதது.” என்று அவர் கூறினார்.
ஓராண்டுக்கு முன்பு இந்த நகரத்திற்குக் குடிபெயர்ந்த பிரிட்டிஷ் ரியல் எஸ்டேட் ஆலோசகரான பேக்கர், துபையை எப்போதும் இப்பிராந்தியத்தின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகவே கருதி வந்ததாகக் கூறுகிறார்.
இரான் போருடன் தொடர்புடைய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் இரண்டு வாரங்களாக நீடித்த போதிலும், அங்கிருந்து வெளியேறும் எண்ணம் தனக்கு இல்லை என்று அவர் கூறுகிறார்.
“சொல்லப்போனால், இந்தச் சூழல் கையாளப்பட்ட விதம் எனக்கு கூடுதல் பாதுகாப்பையே உணர வைக்கிறது,” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Stephanie Baker
துபையின் முக்கிய இடங்களில் தாக்குதல்
பேக்கரைப் போலவே லட்சக்கணக்கான வெளிநாட்டினர் துபையில் வசிக்கின்றனர். இதில் பிரிட்டனை சேர்ந்த 2,40,000 பேரும் அடங்குவர். துபையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள் 10% மட்டுமே உள்ளனர்.
தசாப்தங்களாக, கொந்தளிப்பான ஒரு பிராந்தியத்தில் துபை நகரம் தனது நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பான பிம்பத்தை வளர்த்து எடுத்துள்ளது.
துபையின் வானளாவிய கட்டடங்கள், வரி இல்லாத சம்பளம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான நற்பெயர் ஆகியவை மத்திய கிழக்கின் வளர்ந்து வரும் வணிக மற்றும் சுற்றுலா மையமாக மாற உதவியுள்ளன.
இது சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் நம்பிக்கையில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வந்து சேரும் இடமாகும்.
சமீபத்திய ஆண்டுகளில் மோதல்கள் இந்த பிராந்தியத்தின் பெரும்பகுதியை மாற்றியமைத்துள்ளன, ஆனால் துபை பெரும்பாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்து வந்தது. அந்த பிம்பம் தற்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, இரானின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு, 285 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,567 டிரோன்களைக் கையாண்டுள்ளனர். இவற்றில் 90%-க்கும் அதிகமானவை இடைமறித்து அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், முக்கிய குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நகரத்தின் விமான நிலையத்திற்கு அருகில் சில சிதறிய பாகங்கள் விழுந்துள்ளன.
ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு, ஒரு ஆடம்பர ஹோட்டல் மற்றும் விமான நிலையத்தைத் தாக்கும் பாகங்களின் படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன.
அந்நாட்டு அதிகாரிகளின் தகவல்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 141 பேர் காயமடைந்துள்ளனர்.
பட மூலாதாரம், Planet Labs PBC via REUTERS
மக்கள் கூறுவது என்ன?
அங்கு குடியிருக்கும் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் பிபிசி பேசியது. அவர்களில் சிலர் பல தசாப்தங்களாக துபையில் வசிப்பவர்கள், மற்றவர்கள் சமீபத்தில் வந்தவர்கள்.
சமீபத்திய நாட்களின் நிகழ்வுகளால் தாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஆனால் கிட்டத்தட்ட அனைவரும் தங்களுக்கு வெளியேறும் திட்டம் இல்லை என்றே கூறுகின்றனர்.
“இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை,” என்கிறார் தனது குடும்பத் தொழிலில் ஈடுபட்டு வரும் இந்தியரான எட்டி பாசின். அவர் தனது முழு வாழ்க்கையையும் துபையில்தான் வாழ்ந்திருக்கிறார்
“துபை ஒரு பிரமாண்டமான நகரமாக வியக்கத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. ஆனால் எங்களுக்கு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இருக்கிறது. இது எனது வீடு. நாங்கள் இதோடு உறுதியாக நிற்போம்.”
பட மூலாதாரம், Eti Bhasin
அங்கு குடியிருக்கும் சிலருக்கு, கடந்த இரண்டு வாரங்கள் கவலையளிப்பதாக இருந்தன.
ஆடம் காலோ, அவரது மனைவி மற்றும் அவர்களின் இரண்டு இளம் மகன்கள், துபையின் பாதுகாப்பு குறித்த நற்பெயரால் கவரப்பட்டு, 2024-இல் பிரிட்டனில் இருந்து இங்கு குடிபெயர்ந்தனர்.
நகரம் முழுவதும் வெடிச்சத்தங்கள் எதிரொலித்த போரின் முதல் சில நாட்களில், அந்தக் குடும்பம் ஒரே அறையில் உறங்கியது. ஜன்னல்களுக்கு அருகில் படுக்க குழந்தைகள் மிகவும் பயந்தனர்.
“நாங்கள் இங்கேயே தங்குவதற்கும், பாதுகாப்பாக உணருவதற்கும் தேவையானவற்றை அதிகாரிகள் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் நிம்மதியற்ற நிலையையும் உணர்கிறோம்,” என்று காலோ கூறுகிறார்.
“இதுவே புதிய இயல்பாக மாறிவிடுமோ என்பதுதான் கவலை.”
நான் வேலை நிமித்தமாக தங்கியிருக்கும் துபை நகரம், ஒரு சிறிய வளைகுடா வர்த்தகத் துறைமுகத்திலிருந்து உலகளாவிய நகரமாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி பெரும்பாலும் நல்ல போக்குவரத்து மற்றும் இணைப்புகள் காரணமாக ஏற்பட்டது. சர்வதேச பயணிகளுக்கான உலகின் பரபரப்பான விமான நிலையமான துபை சர்வதேச விமான நிலையம் கடந்த ஆண்டு சுமார் 90 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.

மோதல் தொடங்கியது முதல் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இது இப்பிராந்தியத்தின் பரபரப்பான போக்குவரத்து மையங்களில் ஒன்றை முடக்கியுள்ளது.
சமீபத்திய நாட்களில், தற்காலிக செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னதாக, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இத்தகைய பரபரப்பான நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறு, தெளிவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இங்கிருந்து தள்ளியிருக்க விரும்பும் பயணிகளால், ஏராளமான விமான மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் ரத்து செய்யப்படுவதை அந்த நாடு கண்டு வருகிறது. சில ஆடம்பர ஹோட்டல்களில் அறைகள் அவற்றின் வழக்கமான கட்டணத்தில் ஒரு சிறு பகுதிக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
ஆடம்பரமான வாழ்க்கை
“துரதிர்ஷ்டவசமாக, மே மாதம் வரை முன்பதிவுகள் ரத்து செய்யப்படுவதை நாங்கள் காண்கிறோம்,” என்று கேட்ஸ் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான நயிம் மாதத் கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக துபையில் வசித்து வருகிறார்.
“முதல் காலாண்டு மோசமாகத் தொடங்கினால், அந்த ஆண்டின் மீதமுள்ள நாட்கள் இழந்ததை ஈடுகட்டும் ஓட்டமாகவே மாறிவிடும்.”
ஆடம்பரமான வாழ்க்கை முறை என்ற துபையின் பிம்பத்தால் பல பார்வையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். மேற்கூரை நீச்சல் குளங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள சூப்பர் கார்கள் மற்றும் தனியார் கடற்கரைகளில் வெயில் காயும் சுற்றுலாப் பயணிகளின் வீடியோக்களை இன்ஃப்ளூயன்சர்கள் இணையத்தில் பதிவிடுகின்றனர்.
ஆனால் அந்தப் பிம்பத்திற்குப் பின்னால் வேறொரு யதார்த்தம் மறைந்துள்ளது.
பட மூலாதாரம், Dr Naim Maadad
துபையின் மறுபக்கம்
இந்த நகரத்தின் வாய்ப்புகள் முற்றிலும் மாறுபட்ட முரண்பாடுகளைக் கொண்டவை.
துபையின் பளபளப்பான பிம்பம் இணையத்தில் அதிகமாகக் காணப்பட்டாலும், இங்கு பொருளாதாரத்தை இயக்க உதவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பலர் குறைந்த ஊதியமே பெறுகின்றனர்.
மேலும் அவர்கள் நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில், பகிரப்பட்ட தங்குமிடங்களில் வசிக்கின்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பணியாளர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினரே.
நகரத்தின் வேகமாக விரிவடைந்து வரும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் கட்டுமானம், தளவாடங்கள் மற்றும் விநியோக சேவைகளில் பணியாற்றுகின்றனர்.
பலருக்கு, இந்தப் போர் அன்றாட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்த டெலிவரி டிரைவரான ஹம்சா, போரின் முதல் சில நாட்களில் அதிகமான மக்கள் வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்ததால் ஆர்டர்கள் அதிகரித்தன என்று கூறுகிறார்.
“வெடிப்புச் சத்தங்களைக் கேட்கும்போதோ அல்லது சிதறிய பாகங்கள் விழுவதைப் பார்க்கும்போதோ ஒருவித பயம் ஏற்படுகிறது,” என்று அவர் கூறுகிறார்.
“ஆனால் என்னால் வேலையை நிறுத்த முடியாது. நாட்டிலுள்ள எனது குடும்பம் என்னைத்தான் நம்பியிருக்கிறது. பயத்தின் காரணமாக வீட்டிலேயே தங்கியிருக்கும் சொகுசு வாழ்க்கை எனக்குக் கிடையாது.”
மத்திய கிழக்கில் குறைந்த ஊதியம் பெறும் சில தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் பணி அமர்த்துபவர்களின் ஸ்பான்சர்ஷிப் விதிகள் தொடர்பான கவலைகளை மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாக எழுப்பி வருகின்றன.
ஹம்சா உட்பட பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தாங்கள் இங்கேயே தங்குவதாக கூறினாலும், விமானம் கிடைக்கப்பெற்ற ஒரு சிலர் இங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.
பட மூலாதாரம், AFP
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு விமான நிறுவன ஊழியர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்குத் திரும்பியதாக என்னிடம் கூறினார்.
“ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்களைக் கேட்பது எனக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது,” என்று அவர் கூறுகிறார்.
“தற்போதைக்கு இங்கிருந்து வெளியேறி, நிலைமை சீரான பிறகு மீண்டும் வருவது பாதுகாப்பானது என்று தோன்றியது.”
இருப்பினும், தான் மீண்டும் வரத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
பல மேற்கத்திய நாடுகள் குடியேற்றக் கொள்கைகளைக் கடுமையாக்கி, குடியேற்றத்தின் தாக்கம் குறித்து விவாதித்து வரும் வேளையில், துபை ஒரு மாறுபட்ட மாதிரியைப் பிரதிபலிக்கிறது.
துபை உலகளாவிய திறமையாளர்கள் மற்றும் செல்வந்தர்களை ஈர்க்கும் ஒரு காந்தமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
பெருந்தொற்றுக்கு பிறகு கோடீஸ்வரர்களின் வருகையை இது அதிகளவில் கண்டுள்ளது. மேலும் வளரும் நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், இந்தியப் பொறியாளர், எகிப்திய மருத்துவர் அல்லது பிலிப்பின்ஸ் செவிலியர் என யாராக இருந்தாலும் ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவை விட துபையில் வேலைக்கான விசாக்களைப் பெறுவது மிகவும் எளிதானது, சில சமயங்களில் அதிக ஊதியமும் கிடைக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
சர்வதேச ஊடகங்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளின் விசாரணைகள், சில சந்தேகத்திற்கிடமான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் துபையைத் தளமாகக் கொண்டு செயல்படுவதை முன்னரே சுட்டிக்காட்டியுள்ளன.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் பல நாடுகளுக்கும் இடையே நாடு கடத்தல் தொடர்பான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.
நிலைத்து நிற்க முடியுமா?
கொந்தளிப்பான ஒரு பிராந்தியத்தில் நிலையான ஒரு புகலிடம் என்பதுதான் இந்த நகரத்தின் மிகப்பெரிய ஈர்ப்பாக இருந்து வந்துள்ளது. இப்போது அந்த பிம்பத்திற்கு நிரந்தர அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறித்து விரிவாக எழுதியுள்ள மத்திய கிழக்கு அரசியல் பொருளாதார நிபுணரான கிறிஸ்டோபர் டேவிட்சன், இந்தத் தாக்குதல்கள் குறுகிய காலத்துக்கு துபையின் ஈர்ப்பைக் குறைக்கக்கூடும் என்று நம்புகிறார்.
“ஆனால் உள்கட்டமைப்பு, விதிமுறைகள், வானிலை மற்றும் புவியியல் போன்ற அடிப்படை அம்சங்கள் மாறாமல் உள்ளன,” என்று அவர் கூறுகிறார்.
“நீண்ட கால அடிப்படையில் அதன் ஈர்ப்பு அப்படியே இருக்கும்.”
தாக்குதல்கள் குறித்த தினசரி நிலவரங்களை வெளியிடுவதற்கும், சாத்தியமான தாக்குதல்கள் குறித்து வழக்கமான மொபைல் எச்சரிக்கைகளை அனுப்புவதற்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து அதிகாரிகள் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.
அதிபர் ஷேக் முகமது பின் சயீத், நாடு தங்களைப் பாதுகாக்கும் என்று குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளார். அதே வேளையில் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் “எளிதான இரை அல்ல” என்றும் எச்சரித்துள்ளார்.
பட மூலாதாரம், NurPhoto/Getty Images
மூத்த தலைவர்கள் துபையில் பொது நிகழ்ச்சிகளில் தோன்றி, வாழ்க்கை வழக்கம் போல் தொடர்வதை உணர்த்தியுள்ளனர்.
இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சிப்பது அரிதானது. ஏனெனில் அங்கு அரசை அல்லது அதன் தலைமையை விமர்சிக்கும் வகையிலான பேச்சுகளுக்கு சட்டரீதியான கட்டுப்பாடுகள் உள்ளன.
மோதல் தொடர்பான சரிபார்க்கப்படாத காட்சிகளை இணையத்தில் பகிர்வது கடும் அபராதம் அல்லது சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை, நகரத்தின் மேலே இரான் ஏவுகணைகள் பறப்பதை படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 60 வயதுடைய பிரிட்டிஷ் நபர் ஒருவர் மீது துபையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கத்திற்கு மாறாக சில நாட்கள் அமைதியாக இருந்த தெருக்களில், தற்போது போக்குவரத்து மற்றும் மக்கள் கூட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
துபை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான நீண்டகால தாக்கம், இந்த மோதல் எவ்வாறு நகர்கிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“பலவீனமடைந்த இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்தக்கூடும்,” என்று டேவிட்சன் கூறுகிறார்.

ஆனால் அந்த ஆட்சி நிலைத்திருந்தால், அதன் அண்டை வளைகுடா நாடுகளுடனான பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்று முதலீட்டு வங்கியாளர் ஒருவர் என்னிடம் கூறினார்.
“அது ஒரு கவலைக்குரிய விஷயம். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் ஏதேனும் தாக்கப்பட்டால், அது வணிகங்களுக்கான மனநிலையைப் பாதிக்கக்கூடும்,” என்று அவர் கூறுகிறார்.
இரானிய வங்கி ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் வங்கி நலன்களை இலக்கு வைக்கப்போவதாக இரானிய ராணுவம் புதன்கிழமை எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து, துபையில் உள்ள பல நிதி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகங்களிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டன.
தற்போதைக்கு, துபையில் உள்ள பெரும்பாலான குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடனும் அதே சமயம் நம்பிக்கையுடனும் உள்ளனர். 2008-ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி முதல் 2020-ஆம் ஆண்டு பெருந்தொற்று வரை, இந்த நகரம் முன்பே பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, முன்பை விட வலுவாக உருவெடுத்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“துபை எப்போதும் விரைவாக மீண்டு வரும்,” என்கிறார் மாதத்.
“மீண்டு எழும் திறன் என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டிஎன்ஏ-விலேயே உள்ளது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



