Home தேசிய national tamil ஆங்கிலேயர் உத்தரவிட்டும் இந்தியர்களை சுட மறுத்த சிப்பாய்க்கு என்ன நடந்தது?

ஆங்கிலேயர் உத்தரவிட்டும் இந்தியர்களை சுட மறுத்த சிப்பாய்க்கு என்ன நடந்தது?

6
0

SOURCE :- BBC NEWS

இளமைப் பருவத்தில் சந்திர சிங் கார்வாலி

பட மூலாதாரம், National Book Trust

1930ஆம் ஆண்டில் காந்தியின் உப்புச் சத்தியாகிரகத்தின் தாக்கம் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அதிகமாகத் தென்பட்டது.

‘எல்லை காந்தி’ என்று பிரபலமாக அறியப்பட்ட கான் அப்துல் கஃபார் கானின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கண்டு, ஆங்கிலேய அரசு அவரையும் அவரது சில தோழர்களையும் ஏப்ரல் 23ஆம் தேதி காலையில் கைது செய்தது.

கான் அந்த நேரத்தில் உத்மன்சாயிலிருந்து பெஷாவருக்கு வந்து கொண்டிருந்தார். எல்லை காந்தியின் கைது செய்தியைக் கேட்டதும், ஆயிரக்கணக்கான மக்கள் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சார்சத்தா சிறையை முற்றுகையிட்டனர். பெஷாவர் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அங்கிருந்த பஷ்தூன்கள் கிஸ்ஸா கவானி பஜாரில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில், ஓர் ஆங்கிலேய அதிகாரி மோட்டார் சைக்கிளில் வேகமாக ஊர்வலத்திற்குள் புகுந்து சென்றார், இதனால் பலர் நசுங்கினர் மற்றும் நெரிசல் போன்ற சூழல் உருவானது.

கோபமடைந்த கும்பல் மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தது. அந்த ஆங்கிலேய அதிகாரி தீயில் கருகி உயிரிழந்தார். அங்கு ஆயுதமேந்திய போலீஸ் இருந்தபோதிலும், நிர்வாகம் ராணுவத்தை வரவழைக்க உத்தரவிட்டது. சிறிது நேரத்தில் ராணுவத்தின் நான்கு பட்டாலியன்கள் அங்கு வந்து சேர்ந்தன, ஆயுதம் ஏந்திய வீரர்கள் நகரம் முழுவதும் பரவினர்.

மகாத்மா காந்தியுடன் (இடது) எல்லை காந்தி (வலது)

பட மூலாதாரம், Getty Images

கார்வாலி ‘சீஸ் ஃபயர்’

காபூல் நுழைவாயிலுக்கு எதிரே ஆயிரக்கணக்கான பஷ்தூன்கள் நின்றுகொண்டிருந்தனர். அதற்கு நேர் எதிரே ராயல் கார்வால் ரைபிள்ஸின் ஒரு படைப்பிரிவு (Company) நின்றுகொண்டிருந்தது. கூட்டத்தின் ஆவேசத்தைப் பார்த்த படைப்பிரிவுத் தலைவர், ஊர்வலத்தின் வலது-இடது பக்கங்களில் நிலை கொள்ளுமாறு உத்தரவிட்டார். ஒவ்வொரு சிப்பாயின் துப்பாக்கியிலும் ஐந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தன.

ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ தனது புத்தகமான ‘பெஷாவரின் நாயகன், வீர் சந்திர சிங் கார்வாலி’யில் (Hero of Peshawar, Veer Chandra Singh Garhwali ) எழுதுகிறார், “அவர்களின் துப்பாக்கிகளில் பயோனெட்டுகள் (கத்தி) பொருத்தப்பட்டிருந்தன. கேப்டன் ரிக்கெட் உரக்கக் கத்தி, ‘ஓடிவிடுங்கள் இல்லையென்றால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்’ என்றார். ஆனால் பஷ்தூன்கள் அங்கிருந்து அசையவில்லை. ரிக்கெட், ‘கார்வாலி ஃபயர் த்ரீ ரவுண்ட்ஸ் (கார்வாலி மூன்று முறை சுடுங்கள்)’ என்று உத்தரவிட்டார். அந்த நேரத்தில் ஹவில்தார் மேஜர் சந்திர சிங் கார்வாலி கேப்டன் ரிக்கெட்ஸின் இடதுபுறம் நின்று கொண்டிருந்தார். அவர் உரக்கக் கத்தி, ‘கார்வாலி சீஸ் ஃபயர் (கார்வாலி சுடுவதை நிறுத்துங்கள்)’ என்று உத்தரவிட்டார். உத்தரவைக் கேட்டதும் கார்வாலி படைப்பிரிவினர் தங்கள் துப்பாக்கிகளைத் தரையில் ஊன்றி வைத்தனர். இதைப் பார்த்த கேப்டன் ரிக்கெட் கோபத்தின் உச்சிக்குச் சென்றார். அவர் சிவந்த கண்களுடன் சந்திர சிங்கைப் பார்த்து, ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார். ‘இவர்கள் அனைவரும் நிராயுதபாணிகள். இவர்கள் மீது நாங்கள் எப்படிச் சுட முடியும்?,” என சந்திர சிங் கார்வாலி பதிலளித்தார்,

சந்திர சிங் பற்றி ரமேஷ் பொக்ரியால் எழுதிய புத்தகம்

பட மூலாதாரம், National Book Trust

ஆங்கிலேயர் நடத்திய துப்பாக்கிச் சூடு

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கேப்டன் ரிக்கெட் உடனடியாகத் தனது உதவியாளர் மூலம் காபூலி கேட் மேலே நின்றிருந்த அதிகாரிகளுக்கு ஒரு சீட்டை அனுப்பினார், உடனே 30 ஆங்கிலேயர்கள் கொண்ட ஒரு பிளாட்டூன் படைப்பிரிவு வந்தது. அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது மற்றும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதன் பிறகு மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளில் ஏறி இருபுறமிருந்தும் கற்கள், பாட்டில்கள், கோடாரி என கையில் கிடைத்த அனைத்தையும் சிப்பாய்கள் மீது வீசத் தொடங்கினர். இதில் பல போலீஸ்காரர்களும் படைப்பிரிவு வீரர்களும் காயமடைந்தனர். சந்திர சிங் கார்வாலி மற்றும் அவரது பல தோழர்களும் இதில் காயமடைந்தனர். நகரம் முழுவதும் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

கான் அப்துல் கஃபார் கானின் வாழ்க்கை வரலாறான ‘கஃபார் கான், நான்-வயலண்ட் பாதுஷா ஆஃப் பஷ்தூன்ஸ்’ (Ghaffar Khan: Nonviolent Badshah of the Pakhtuns) என்ற நூலில், “துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் மட்டுமே இறந்ததாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டாலும், போராட்டக்காரர்களின் கூற்றுப்படி, அன்று பெஷாவர் மற்றும் எல்லைப்புற மாகாணத்தின் பிற இடங்களில் ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டில் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டனர். இறுதியில் ஆங்கிலேய ராணுவம் போர் விமானங்களின் உதவியுடன் பெஷாவரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. பின்னர் அரசு உத்தரவை ஏற்காத கார்வால் ரைபிள்ஸ் வீரர்கள் மீது ராணுவ நீதிமன்ற விசாரணை (Court Martial) நடத்தப்பட்டு அவர்களுக்கு நீண்ட சிறை தண்டனைகள் வழங்கப்பட்டன.” என்று ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

சந்திர சிங் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை

பட மூலாதாரம், Indian Post

கார்வாலியின் ராணுவ வாழ்க்கை

1891ஆம் ஆண்டு கார்வாலில் உள்ள ரௌனிசேரா மாசோவில் பிறந்த சந்திர சிங் கார்வாலி, 3 செப்டம்பர் 1914 அன்று இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். முதல் உலகப் போரின்போது அவர் முதலில் பிரான்சுக்கு அனுப்பப்பட்டார்.

அதன் பிறகு அவர் ஆங்கிலேயர்கள் தரப்பில் மெசபடோமியா போரில் பங்கேற்றார், அதில் அவர்கள் வெற்றி பெற்றனர். அதன் பிறகு அவர் 1918இல் பாக்தாத் போரில் பங்கேற்கவும் அனுப்பப்பட்டார். உலகப் போரிலிருந்து திரும்பிய பிறகு 1920இல் அவர் வஜிரிஸ்தான் அனுப்பப்பட்டார். பெஷாவரில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டச் செய்திகள் வரத் தொடங்கியபோது, அவர் அங்கு அனுப்பப்பட்டார்.

இந்த ராணுவக் கிளர்ச்சி பற்றிய செய்தி காட்டுத்தீ போல இந்தியா முழுவதும் பரவியது. ஏப்ரல் 24ஆம் தேதி காலை எட்டு மணிக்கு கார்வாலியின் வீரர்கள் மீண்டும் நகரத்திற்குச் செல்ல உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் அந்த உத்தரவை ஏற்க மறுத்துவிட்டனர்.

படைப்பிரிவின் கேப்டன் சாப்பல் கோபத்துடன், “பயிற்சியின் போது ஒவ்வொரு உத்தரவையும் பின்பற்றுவேன் என்று நீங்கள் சத்தியம் செய்தது உங்களுக்குத் தெரியும் தானே” என்றார். இதற்கு சந்திர சிங் கார்வாலி, “சண்டை எதிரியின் ராணுவத்துடன் இருந்தால் நாங்கள் எங்கள் உயிரையும் கொடுத்திருப்போம், ஆனால் நாங்கள் நிராயுதபாணியான எங்கள் நாட்டு மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மாட்டோம்” என்று பதிலளித்தார்.

சந்திர சிங் தனது தோழர்களுடன் 12 கிலோமீட்டர் நடந்தே ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து கிளர்ச்சி செய்த வீரர்கள் அனைவரும் ரயிலில் அபோதாபாத் கொண்டு செல்லப்பட்டனர்.

சந்திர சிங்

பட மூலாதாரம், National Book Trust

சந்திர சிங் கார்வாலி கைது

ஏப்ரல் 26 மாலையில் ஒரு உதவியாளர் வந்து சந்திர சிங்கிடம் கர்னல் ஐயா கூப்பிடுகிறார் என்று கூறினார்.

ராகுல் சாங்கிருத்யாயன் தனது ‘வீர் சந்திர சிங் கார்வாலி’ புத்தகத்தில் எழுதுகிறார், “சந்திர சிங் உதவியாளரிடம் கர்னல் ஐயா தனியாக இருக்கிறாரா அல்லது அவருடன் வேறு யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார்? அதற்கு அந்த உதவியாளர், அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள், ஜெனரல் ஐயா, அபோதாபாத்தின் துணை ஆணையர் மற்றும் அங்கிருக்கும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உள்ளனர்” என்று பதிலளித்தார்.

இதைக் கேட்டதும், அங்கிருந்து தான் திரும்பி வரப்போவதில்லை என்பதை சந்திர சிங் புரிந்து கொண்டார். அவர் உடனே தனது பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு, சீருடை, பூட்ஸ், ஓவர்கோட் அணிந்து, கூர்க்கா தொப்பியைத் தலையில் வைத்துக்கொண்டு படைப்பிரிவின் அனைத்துச் சிப்பாய்களையும் சந்திக்கப் புறப்பட்டார். அவர் அவர்களிடம், ‘சகோதரர்களே இதுவே உங்களுடனான எனது கடைசிச் சந்திப்பு’ என்று கூறினார்.”

சந்திர சிங் அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றபோது அவர்கள் வெளியே வந்தனர். மேஜர் பிரான்ஸ்கில், ‘சந்திர சிங் இப்போது நீ காவலில் எடுக்கப்பட்டுள்ளாய்’ என்றார். அதே நேரத்தில் கேமராவில் சந்திர சிங்கின் புகைப்படம் எடுக்கப்பட்டது. அவர் வாகனத்தில் ஏற்றப்பட்டார். மேஜர் பிரான்ஸ்கில் தானே வாகனத்தை ஓட்டினார். அவர் சந்திர சிங்கை காகுலுக்குக் கொண்டு சென்றார், அங்கு அவர் ஒரு அறையில் அடைக்கப்பட்டார்.

சந்திர சிங் பற்றி ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய புத்தகம்

பட மூலாதாரம், Gyan Publishing House

ஆயுள் தண்டனை

கார்வாலி வீரர்கள் மீது ஜூன் 2, 1930 முதல் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. காவலில் வைக்கப்பட்டிருந்த வீரர்கள் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களிலும் சந்திர சிங் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து வரப்பட்ட ஒரே நபர் அவர்தான்.

ரமேஷ் பொக்ரியால் எழுதுகையில், “அவர் அமர்வின் தலைவரிடம் ஒரு கேள்வி கேட்டார், ஜெனரல் ஐயா, 60 குற்றவாளிகளில் நானும் ஒரு குற்றவாளி, ஆனால் என் மீது மட்டும் ஏன் இவ்வளவு கடுமை? அதற்கு ஜெனரல், நீ ஆபத்தான ஆள். நீதான் கிளர்ச்சியைத் தூண்டினாய் என்று உனக்கெதிராக உளவுத்துறை அறிக்கை உள்ளது, அதனால்தான் நீ முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளாய் என்று பதிலளித்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சந்திர சிங்கிற்காக பாரிஸ்டர் முகுந்தி லால் வாதாடினார். அவரது வாதங்களைக் கேட்ட அமர்வு, ராயல் கார்வால் ரைபிள்ஸைக் கலைக்கும் அரசின் முடிவை நிராகரித்தது. சந்திர சிங்கிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையையும் அது ஏற்கவில்லை. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மற்ற தோழர்களுக்கு ஒரு வருடம் முதல் பதினைந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.

சந்திர சிங்

பட மூலாதாரம், National Book Trust

கால்களில் விலங்குகள்

சந்திர சிங்கின் அனைத்துச் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன, அவர் ராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

“நீதிமன்ற உத்தரவு வந்ததும் முழு பட்டாலியன் முன்னிலையில் சந்திர சிங் அவமானப்படுத்தப்பட்டார். அவரது வில்லைகள் (Badges), பட்டிகள் அனைத்தும் பிய்த்து எறியப்பட்டன. அவரது சீருடை கத்திரிக்கோலால் வெட்டப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.” என்று ரமேஷ் பொக்ரியால் எழுதியுள்ளார்.

ஆறு ஆண்டுகள் அபோதாபாத் சிறையில் சந்திர சிங் வைக்கப்பட்டார்.

ராகுல் சாங்கிருத்யாயன் எழுதுகையில், “சந்திர சிங் ஆறரை அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட ஒரு மேடை இருந்த ஓர் அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன் அருகே மாவு அரைக்கும் ஒரு இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது. அங்குத் தண்ணீர் குடம் ஒன்று, கிழிந்த இரண்டு பழைய போர்வைகள், முழங்கால் வரையிலான ஒரு கால்சட்டை, முழங்கை வரையிலான அரைக் கை சட்டைகள் இரண்டு, ஒரு சிவப்புத் தொப்பி, ஓர் இரும்புத் தட்டு மற்றும் ஒரு கிண்ணம் மற்றும் ஒரு கோவணம் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. உடலில் குத்தும் அந்தப் போர்வையை விரித்து சந்திர சிங் படுத்தவுடனேயே, மூட்டைப்பூச்சிகள், தெள்ளுப்பூச்சிகள், கொசுக்கள் மற்றும் எறும்புகள் மற்றும் விதவிதமான பூச்சிகள் அவர் மீது படையெடுத்தன. பின்னர் அவரது கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டன.” என்று கூறியுள்ளார்.

சந்திர சிங்கின் சிலை

பட மூலாதாரம், Uttarakhand Government

பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

இந்த விலங்கு அவரது கால்களில் முழுமையாக ஆறு ஆண்டுகள் இருந்தது, 1936 ஏப்ரல் 20 அன்று அவர் பரேலி சிறைக்கு அனுப்பப்பட்ட பின்னரே அது அகற்றப்பட்டது.

இங்கே அவர் கம்யூனிசப் புரட்சியாளர்களான யஷ்பால், சிவ வர்மா மற்றும் விஜய் குமார் சிங் ஆகியோருடன் தொடர்பு கொண்டார்.

தேவேந்திர சிங் அஸ்வால் தனது ‘வீர் சந்திர சிங் கார்வாலி: நிராயுதபாணியான குடிமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மறுத்த சிப்பாய்’ (The Soldier Who Refused to Fire on Unarmed Civilians) என்ற கட்டுரையில், “பரேலி சிறைக் கைதிகள் அவரை ‘ஹவில்தார்’ அல்லது ‘கார்வாலி’ என்று அழைப்பார்கள், அது சந்திர சிங்கிற்குப் பிடிக்கவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போது யஷ்பால் அவரை பெரிய அண்ணன் என்று அழைக்கத் தொடங்கினார். அதன் பிறகு நேரு, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் கோவிந்த் வல்லப் பந்த் ஆகியோர் அவரை பெரிய அண்ணன் என்றே அழைத்தனர். இந்தச் சிறையில்தான் நேருவை அவர் முதன்முறையாகச் சந்தித்தார்.

அதேசமயம் சந்திர சிங்கைத் தவிர பெஷாவர் கிளர்ச்சியின் மற்ற கைதிகளின் தண்டனையைப் பாதியாகக் குறைப்பதாக அரசின் உத்தரவு வந்தது. இதன் பிறகு அவர் லக்னோ சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அங்குச் சுபாஷ் சந்திர போஸ் அவரைச் சந்திக்க வந்தார். ஜவஹர்லால் நேருவும் கைது செய்யப்பட்ட பிறகு அங்கு அனுப்பப்பட்டார். இருவரும் சிறையில் 42 நாட்கள் ஒன்றாகக் கழித்தனர். பல சிறைகளில் இருந்த பிறகு இறுதியாக, 11 ஆண்டுகள், மூன்று மாதங்கள், 18 நாட்கள் சிறையில் இருந்த பிறகு 1941 செப்டம்பர் 20 அன்று சந்திர சிங் கார்வாலி விடுதலை செய்யப்பட்டார்.

1942 செப்டம்பரில் ராயல் கார்வால் ரைபிள்ஸின் இரண்டு பட்டாலியன்கள் சுபாஷ் சந்திர போஸின் ‘இந்திய தேசிய ராணுவத்தில்’ (INA) இணைந்தன. கார்வாலி வீரர்கள் தேசியவாத உணர்வால் நிரம்பியிருந்தனர் என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பிலிப் மேசன் ஒப்புக்கொண்டார். அவர்கள் போஸுடன் இணைந்து இந்தியாவின் சுதந்திரப் போரில் ஈடுபட்டனர்.

சந்திர சிங் கார்வாலி லக்னோ சிறையில் 42 நாட்கள் பண்டித ஜவஹர்லால் நேருவுடன் இருந்தார்.

பட மூலாதாரம், Hulton Archive/Getty Images

காந்தியின் வார்தா ஆசிரமத்தை அடைந்த சந்திர சிங்

அவர் விடுவிக்கப்பட்டாலும், அவர் கார்வால் செல்லத் தடை விதிக்கப்பட்டது. லக்னோவிலிருந்து சந்திர சிங் அலகாபாத் வந்தார், அங்கிருந்து 1942இல் மகாத்மா காந்தியின் வார்தா சேவா கிராம ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு அவர் காந்தியின் நடத்தை, சிந்தனைகள், விதிகள் மற்றும் தர்மத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டதால் அங்கேயே தங்கிப் பணியாற்ற அவர் முடிவு செய்தார்.

சந்திர சிங் சேவா கிராமத்தில் தங்கியிருந்தபோது, காந்தியின் வாழ்க்கை வரலாற்றாசிரியரும் அமெரிக்கப் பத்திரிகையாளருமான லூயி ஃபிஷர் அங்கு வந்தார். சந்திர சிங் பற்றி அவரிடம் காந்திஜி குறிப்பிட்ட போது, அவர் இவரைச் சந்திக்க வந்தார்.

“இரண்டாம் உலகப் போரில் இந்திய ராணுவம் ஆங்கிலேயர்கள் தரப்பில் போரிடுமா என்று சந்திர சிங்கிடம் ஃபிஷர் கேட்டார்? அதற்கு சந்திர சிங், ‘ராணுவம் ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டது, எனவே உத்தரவு வந்தால் அது கண்டிப்பாகப் போரில் பங்கேற்கும், ஆனால் அதற்குத் தன் நாட்டின் மீதும் அக்கறை இருக்கிறது. அது முழு மனதுடன் போரில் ஈடுபடாது’ என்று பதிலளித்தார்.” என்று ராகுல் சாங்கிருத்யாயன் எழுதுகிறார்,

ஃபிஷர் மீண்டும் அவரிடம் துருவித்துருவிக் கேட்டார், “தேசிய இயக்கத்தை நசுக்கச் சொன்னால் என்ன செய்யும்?”

அதற்கு சந்திர சிங், “அது ஒருபோதும் தன் சகோதரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாது. ஆங்கிலேயர்களால் அதை எங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது” என்று பதிலளித்தார்.

ஃபிஷர் இந்த உரையாடலை அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியிட்டார். ஆங்கிலேயர்கள் அதன் பிரதிகளை இந்தியாவிற்குள் வரவிடவில்லை. எங்கே இது ராணுவத்தின் மீது மோசமான விளைவை ஏற்படுத்துமோ என்று அவர்கள் பயந்தனர்.

மகாத்மா காந்தி மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் லூயி ஃபிஷர்

பட மூலாதாரம், Getty Images

தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதால் சந்திர சிங் கார்வாலி மீண்டும் ஒருமுறை காவலில் எடுக்கப்பட்டார். பல சிறைகளில் மூன்று ஆண்டுகள் இருந்த பிறகு 1945இல் அவர் விடுவிக்கப்பட்டார்.

அப்போதும் கார்வாலில் நுழைய அவர் மீது விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தது. பல முயற்சிகளுக்குப் பிறகு, 1946 டிசம்பர் 22 அன்று அவருக்கு கார்வாலில் நுழைய அனுமதி கிடைத்தது.

1950ஆம் ஆண்டில் அவர் தனது குடும்பத்துடன் கோட்வாரில் உள்ள துருவ்பூரில் குடியேறினார். அதன் பிறகு அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பாக 1952, 57 மற்றும் 1962 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டார், ஆனால் எதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

சந்திர சிங்

பட மூலாதாரம், National Book Trust

சுதந்திர இந்தியாவிலும் சிறைவாசம்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் சந்திர சிங் கார்வாலிக்குச் சிறையுடனான உறவு முறியவில்லை. சுதந்திர இந்தியாவில் கூட அவர் இரண்டு முறை சிறை செல்ல நேரிட்டது. முதலில் தவறான வாரண்ட் அடிப்படையில் அவர் 1948இல் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் அப்போதைய முதலமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் தலையிட்டு எழுத்துப்பூர்வமாக வருத்தம் தெரிவித்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு 1962 சீனப் போரின் போதும் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

“அந்த நேரத்தில் நாட்டின் கம்யூனிஸ்டுகள் சீனாவுடன் சேர்ந்துகொண்டதாக அரசு சந்தேகித்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாயின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை அரசு தொடங்கியது. சந்திர சிங் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகக் கருதிக் கொண்டார், எனவே அவரும் கைது செய்யப்பட்டார்.” என்று ரமேஷ் பொக்ரியால் எழுதுகிறார்.

பின்னர் மனைவியின் சிகிச்சைக்காக அரசுக்கு அனுப்பிய விண்ணப்பத்தின் அடிப்படையில் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

1979 அக்டோபர் 1 அன்று, சுதந்திரப் போராட்டத்தின் இந்த நாயகன், நீண்ட நோய்க்குப் பிறகு நிரந்தரமாகக் கண்களை மூடினார். அவர் இறந்து சில நாட்களுக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவருக்கு அஞ்சலி செலுத்த கோட்வாரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார்.

1994இல் இந்திய அரசு அவர் நினைவாக ஒரு தபால் தலையை வெளியிட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU