Home Latest news tamil சமீபத்திய செய்தி அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் – தவிர்க்கும் வழிகள்

அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் – தவிர்க்கும் வழிகள்

9
0

SOURCE :- BBC NEWS

கண்ணுக்கு மையிடுவதற்காக நீங்கள் பயன்படுத்தும்  பென்சில் தான் மிகவும் அசுத்தமான மாதிரி

பட மூலாதாரம், Getty Images

நேர்மையாகச் சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் அழகுசாதனப் பொருட்களின் காலாவதி தேதிகளைக் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?

காலாவதியான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை மட்டும் சேதப்படுத்துமா அல்லது உங்கள் மொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்குமா?

ஒப்பனைக்குப் பயன்படுத்தும் அழகு சாதன பிரஷ்களை எத்தனை முறை நீங்கள் சுத்தப்படுத்துகிறீர்கள்?

எப்போதாவது இமைகளை அழகுபடுத்த உதவும் மஸ்காராவை நண்பரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கியிருக்கிறீர்களா? அல்லது உதட்டுச் சாயத்தை கடைகளில் நேரடியாகப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறீர்களா?

அழகுசாதனப் பொருட்கள் உள்ள உங்களது பையில் எந்தப் பொருளில் அதிகளவு பாக்டீரியாக்கள் உள்ளன? மஸ்காரா, ஐலைனர், ஸ்பாஞ்சு அல்லது பிரஷ்?

ஒப்பனை செய்ய உதவும் பொருட்களைச் சுத்தம் செய்வதில் அல்லது காலாவதி தேதிகளைச் சரிபார்ப்பதில் நான் அதிக அக்கறை காட்டவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதனால்தான் பிரிட்டனில் உள்ள லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சியாளரின் நுண்ணோக்கியின் கீழ் அவற்றைப் பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்தேன்.

மனித அறிவியல் பள்ளியில் உயிரியல் அறிவியலில் மூத்த விரிவுரையாளராக உள்ள முனைவர் மரியா பிலர் போட்டே-சலோ இந்த ஆய்வை மேற்பார்வையிட்டார்.

எழுபதுக்கும் மேற்பட்ட காலாவதியான ஐலைனர்கள், மஸ்காராக்கள், உதட்டுச் சாயங்கள், பவுண்டேஷன்கள், ஒப்பனைக்கு உதவும் பிரஷ்கள் மற்றும் ஸ்பான்ஜகள் (எனது சொந்த ஸ்பான்ஜ் உள்பட) ஆகியவற்றின் ஆய்வகப் பகுப்பாய்வுக்கு அவர் தலைமை தாங்கினார்.

அவற்றில் இருந்து மாதிரிகள் பிரித்தெடுக்கப்பட்டு அகரது தட்டுகளில் வைக்கப்பட்டன. பின்னர், அவற்றில் மறைந்திருக்கும் நுண்ணுயிரிகளை வெளிப்படுத்துவதற்காக, அவை இன்குபேட்டரில் வைக்கப்பட்டன.

ஒப்பனைப் பொருட்கள் எவ்வளவு மாசுபட்டுள்ளன?

நுண்ணோக்கியில் எனது மாதிரிகளை வைத்துப் பார்த்தபோது, அதில் உருவாகியிருந்த பாக்டீரியாக்களின் தொகுப்பு எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரியதாக இருப்பது தெரிய வந்தது.

“கண்ணுக்கு மையிடுவதற்காக நீங்கள் பயன்படுத்தும் பென்சில்தான் மிகவும் அசுத்தமானதாக உள்ளது. ஒப்பனைக்காக நீங்கள் பயன்படுத்தும் மற்ற பொருட்களைக் காட்டிலும் இதுதான் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமான பாக்டீரியாக்களை கொண்டிருந்தது,” என்று கூறினார் போட்டே-சலோ.

கண் இமையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டதால், ஸ்டேஃபிலோகோகஸ் உள்ளிட்ட தோலில் இருந்த பாக்டீரியாவை அந்த பென்சில் கொண்டிருக்கலாம் என்றும் அவர் விளக்கினார்.

முனைவர் போட்டே-சலோ (இடது)

நான் வழக்கமாக ஒப்பனைக்குப் பயன்படுத்தும் பொருட்கள் உள்ள பையை குளியலறையில் வைத்திருப்பதோடு, ஐலைனரை பயன்படுத்திய பிறகு சில நிமிடங்கள் அதை மூடாமல் விடுவதையும் ஒப்புக்கொண்டேன்.

“ஆம், அதுவே காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழலில் இருந்து ஈரப்பதத்தைப் பெற்றால், அது நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். ஆய்வில் பிரஷ், ஸ்பாஞ்சு, மஸ்காரா உள்ளிட்ட பிற மாதிரிகளிலும் ஸ்டேஃபிலோகோகஸ் இருப்பதைக் கண்டறிந்தோம்” என்று போட்டே-சலோ கூறினார்.

ஸ்டேஃபிலோகோகஸ் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக இருக்கலாம். லேசான எரிச்சல்களில் இருந்து கண் அழற்சி (கான்ஜுன்க்டிவிடிஸ்), எரிசிபெலாஸ், இம்பெடிகோ போன்ற தீவிர தொற்றுகள் வரை பல்வேறு தொற்றுகளுக்குக் காரணமாக அமையலாம். இங்கு ஒரு கேள்வி எழுகிறது.

இத்தகைய அபாயங்கள் உள்ளன என்றால், நான் இந்த ஐலைனரை பலமுறை பயன்படுத்தி இருந்தாலும் ஏன் எந்தத் தொற்றும் ஏற்படவில்லை?

“உங்கள் தோல் நன்றாக இருந்தால், அது ஒரு வலுவான பாதுகாப்பு அரணாகச் செயல்படும். எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், உங்கள் தோலில் காயம் அல்லது புண் இருந்தால், அங்கு பாக்டீரியா ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவராக இருந்தால், இது கூடுதலாக கவலை அளிக்கலாம்” என்றும் மருத்துவர் போட்டே-சலோ விளக்கினார்.

கைகளைக் கழுவுதல் அவசியம்

பரிசோதனை மாதிரிகள்

ஒப்பனை செய்வதற்கு முன்பு உங்கள் கைகளைக் கழுவுகிறீர்களா? ஏனென்றால், கைகளில் இருந்து அனைத்து வகையான கிருமிகளையும் பரவக் கூடும். மேலும் போதிய சுகாதாரமின்றி இருந்தால், இந்தக் கிருமிகள் அழகு சாதனப் பொருட்களுக்குப் பரவும் அபாயமும் உள்ளது.

குறிப்பாக, கைகளை நேரடியாகப் பயன்படுத்தி ஐஷேடோ, லிப் பாம் மற்றும் ஃபவுண்டேஷன் போன்றவற்றை உபயோகிக்கும்போது இதற்கான அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

“சில அழகு சாதனப் பொருட்களில், பொதுவாக மனிதக் குடலில் காணப்படும் எண்டோரோபாக்டர் குளோகே என்ற பாக்டீரியாவை கண்டறிந்தோம்,” என்று கூறி போட்டே-சலோ அதிர்ச்சியூட்டும் சில கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார்.

“இது, கைகளைச் சுத்தமாக கழுவாததாலும், கழிப்பறையில் இருந்து தெறித்த துகள்களின் வழியாகவும் மாசடைந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.”

ஆராய்ச்சியின்படி, கழிப்பறையைச் சுத்தப்படுத்தும்போது, சில நொடிகளிலேயே, 2 மீட்டர் உயரம் வரை ஏரோசோல் செய்யப்பட்ட நீர்த் துளிகள் வெளியிடப்படலாம். இந்த நீர்த் துளிகள் எண்டோரோபாக்டரால் பாக்டீரியாவால் நஞ்சாகக்கூடும். எனவே, உங்கள் அழகு சாதனப் பொருட்கள் இந்த வரம்புக்குள் இருந்தால், அவை இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்

பட மூலாதாரம், Getty Images

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், சுவாச நோய்த்தொற்றுகள், ஆஸ்டியோமைலிடிஸ் மற்றும் எண்டோகார்டிடிஸ் உள்ளிட்ட நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய சில எண்டோரோபாக்டர் இனங்கள் கவலையளிக்கின்றன.

முந்தைய ஆய்வுகள், மலத்தில் ஏற்படும் மாசுபாட்டுடன் தொடர்புடைய ஈ.கோலி (E.coli) பாக்டீரியா ஒப்பனைப் பொருட்களில் உயிர் வாழக்கூடும் எனk கண்டறிந்துள்ளன. இந்தp பொருட்கள் முகத்திலும் கண்களுக்கு அருகிலும் பயன்படுத்தப்படுவதைக் கருத்தில் கொள்ளும்போது ஆபத்தானதாக உள்ளது.

மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழு, அழகுசாதனப் பொருட்களில் கேண்டிடா என்ற பூஞ்சை இருப்பதையும் கண்டறிந்துள்ளது. இந்தப் பூஞ்சை, தோலில் ஊடுருவினால், அது பெண்களின் பிறப்புறுப்பில் கேண்டிடியாஸிஸ் அல்லது வாய்வழி கேண்டிடியாஸிஸ் ஏற்படக் காரணமாக அமையலாம்.

பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாமில் அமைந்திருக்கும் ஆஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஏறக்குறைய 500 அழகுசாதனப் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மக்கள் பயன்படுத்தும் 79-90 சதவிகித அழகுசாதனப் பொருட்களில் சில வகையான ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகள் இருப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இவற்றில் குறைந்த ஆபத்து கொண்ட பாக்டீரியாவில் இருந்து உயிருக்கு ஆபத்தான ஈ.கோலி வரை காணப்படுகின்றன.

இந்த நீர்த் துளிகள் என்டோரோபாக்டரால் பாக்டீரியாவால் மாசுபடக் கூடும்.

பட மூலாதாரம், Getty Images

“பயன்படுத்தப்பட்ட அழகுசாதனப் பொருட்களில் உள்ள பாக்டீரியாக்கள், அந்தப் பொருட்கள் மாசுபட்டிருப்பதை உணர்த்துகின்றன. ஆனால் அவற்றால், எப்போதுமே குறிப்பிடத்தக்க தொற்று ஏற்படுவதற்கான அபாயம் ஏற்படுவதில்லை.

வெட்டுக் காயங்கள், உடல் துவாரங்கள் அல்லது அந்தப் பொருட்களின் துகள்கள் உடலுக்குள் செல்லுதல் போன்றவற்றால், நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன,” என்கிறார் ஆய்வின் முதன்மை ஆய்வாளரான முனைவர் அம்ரீன் பஷீர் குறிப்பிடுகிறார்.

“பொருட்களைக் கழுவி தூய்மையாக வைத்தல், கிருமி நாசினி பயன்படுத்துதல் மற்றும் காலாவதியான பொருட்களைக் குப்பையில் போடுதல் ஆகிய சுகாதார நடைமுறைகள் இந்த அபாயத்தை மேலும் குறைக்க உதவும்” என்கிறார் முனைவர் அம்ரீன் பஷீர்.

காலாவதி தேதிகளைக் கண்காணிப்பதன் முக்கியத்துவம்

காலாவதி தேதிகளைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் தயாரிக்கப்பட்ட பொருட்களில் உள்ள பாதுகாப்புச் செயல்பாடுகள், நுண்ணுயிர்களின் வளர்ச்சியை எவ்வளவு காலத்துக்குத் திறம்பட தடுக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக, அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பொருட்களைத் திறந்தவுடன், அவை மாசுபடுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. ஏனெனில் அவை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை வளர்வதற்கான ஏற்ற சூழலை உருவாக்குகின்றன.

ஒவ்வொரு பொருளையும் பொறுத்து, அந்தக் குறிப்பிட்ட பொருள் திறக்கப்பட்டவுடன், அதற்கான காலாவதி தேதி 3 முதல் 12 மாதங்கள் வரை இருக்கும்.

“ஓர் அழகுசாதனப் பொருளுக்கு காலாவதி தேதி இல்லையெனில், அதை மூன்று மாதங்களுக்குப் பிறகு அல்லது மாசுபட வாய்ப்புள்ள நிலையில் உள்ளபோது, உதாரணமாக, அந்தப் பொருள் தரையில் விழுந்தவுடன் அல்லது மற்றவர்கள் பயன்படுத்தியவுடன், அதை உடனடியாக உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். இது மாசுபாடு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கும்,” என்கிறார் முனைவர் பஷீர்.

“நுகர்வோருக்குத் தங்களது ஒப்பனைப் பொருள் காலாவதியாகி விட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றால், அது ஏதோவொரு வழியில் மாசுபாட்டை ஏற்படுத்தலாம் என்ற அபாயத்தைவிட, புதியதொரு பொருளை உபயோகிக்கத் தொடங்குவது பாதுகாப்பானதாக இருக்கும்,” என்கிறார் பஷீர்.

அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் யாவை? அவற்றைத் தவிர்ப்பது எப்படி?

மிக மோசமானதாக இருப்பவை, திரவ ஃபவுண்டேஷனை பயன்படுத்துவதற்கான பிரஷ்கள் மற்றும் ஸ்பாஞ்ச்கள்.

லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக ஆய்வின்படி, மஸ்காரா மற்றும் திரவ நிலையில் இருக்கும் ஃபவுண்டேஷனில் தான் அதிக மாசுபாடும் பல்வேறு நுண்ணுயிரிகளும் காணப்படுகின்றன. இதில் மிக மோசமானதாக இருப்பவை, திரவ ஃபவுண்டேஷனை பயன்படுத்துவதற்கான பிரஷ்கள் மற்றும் ஸ்பாஞ்சுகள்.

“ஸ்பாஞ்சுகள், ப்ரஷ்கள் போன்ற அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பொருட்கள், நுண்ணுயிரிகளை அதிக அளவில் தக்க வைப்பதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், எங்கள் ஆய்வு காலாவதியான அழகுசாதனப் பொருட்களையும், ஒப்பனை செய்யப் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் அடிப்படையாகக் கொண்டது” என்று போட்டே-சலோ கூறினார்.

மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கான உதவிக் குறிப்புகள்

மாசுபாட்டைத் தவிர்க்க முனைவர் போட்டே-சலோ பின்வரும் உதவிக் குறிப்புகளை வழங்கினார்:

  • ஒப்பனை செய்ய தொடங்கும் முன் கைகளை கழுவுங்கள்.
  • கடைகளில் உள்ள ஒப்பனைப் பொருட்களுக்கான சோதனை மாதிரிகளைப் பயன்படுத்த வேண்டாம்.

ஏனென்றால் முன்பு அதைப் பயன்படுத்தியவர்கள் கைகளைக் கழுவியிருந்தார்களா என்பது உங்களுக்குத் தெரியாது.

  • ஸ்பாஞ்சு, பிரஷ் போன்ற பொருட்களை வெந்நீர் மற்றும் சோப் பயன்படுத்தி சுத்தம் செய்யவதை வழக்கமாகக் கொள்ளவும். பின்னர், அவற்றை நன்கு உலர வைக்க வேண்டும். இதற்காக விலை உயர்ந்த பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்ற தேவை இல்லை. பாக்டீரியா மற்றும் ஏரோசோல் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, அழகு சாதனப் பொருட்களை முழுமையாகக் காற்றில் உலர்த்திய பின்னர் தனியொரு சிறிய பையில் சேமிக்கவும்.
  • ஒப்பனைப் பொருட்களை வைத்திருப்பதற்கு மிகவும் மோசமான இடம் என்றால் அது குளியலறை. ஏனெனில் அப்பகுதி ஈரப்பதம் மிக்கதாகவும், இருள் சூழ்ந்தும் இருக்கும்.
  • திரவ வடிவ பவுண்டேஷன்கள், மஸ்காராக்கள் மற்றும் ஐலைனர்களின் மீது காற்றிலுள்ள நுண்ணுயிரிகள் மற்றும் தூசு படிவதைத் தவிர்க்க அவற்றை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பொருளின் காலாவதி தேதியிலும் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு அழகுசாதனப் பொருளிலும் ஒரு குறிப்புச் சீட்டை ஒட்டி வைத்து, எப்போது மாற்ற வேண்டும் என்பதை நினைவூட்டிக் கொள்ளுங்கள்.
  • உங்கள் அழகுசாதனப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குறிப்பாக நீங்கள் ஏதேனும் ஆபத்துக்கு உட்பட்டிருந்தால், உதாரணமாக, உங்களது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அதிக கவனம் செலுத்துவது முக்கியம் என்று முனைவர் போட்டே-சலோ கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC