Home தேசிய national tamil அமெரிக்கா – சீனா வர்த்தப் போரால் இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்

அமெரிக்கா – சீனா வர்த்தப் போரால் இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்

6
0

SOURCE :- BBC NEWS

அமெரிக்கா - சீனா, இந்தியாவுக்கு புதிய சவால்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் காரணமாக அதிகரித்து வரும் பதற்றம் உலகிலுள்ள பல நாடுகளுக்குப் புதிய வாய்ப்புகளுக்கான சாத்தியங்களை உருவாக்கியுள்ளது.

இந்தியா மீது அமெரிக்கா 26 சதவிகித வரியை விதித்துள்ளது. இது இந்தியாவுக்கு சில இடங்களில் வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால், இந்த வாய்ப்புகளுடன் கூடவே சவால்களும் உள்ளன.

அமெரிக்கா விதிக்கும் அதீத வரியால், சீனா தனது தயாரிப்புகளைக் கொண்டு வந்து கொட்டும் இடமாக இந்திய சந்தை மாறலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

வரிப் போர் ஏற்படுத்தியுள்ள பதற்றத்தால் சீன உற்பத்தியாளர்கள், அமெரிக்க சந்தையில் விற்பதில் சவால்களைச் சந்திக்கும் பொருட்களை இந்திய சந்தையில் கொண்டு வந்து கொட்டலாம்.

அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை

அமெரிக்கா - சீனா, இந்தியாவுக்கு புதிய சவால்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 99.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

மின்னணுப் பொருட்கள், சோலார் செல்கள் மற்றும் பேட்டரிகளின் இறக்குமதி அதிகரித்து வருவதும் இதற்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

இந்தியா, சீனா இடையிலான வருடாந்திர வர்த்தகம் என்பது 2025ஆம் நிதியாண்டில் 127.7 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியா 14.2 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ள நிலையில், சீனாவிலிருந்து 113.4 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை இறக்குமதி செய்துள்ளது.

சீனா ஆதிக்கம் செலுத்தும் விநியோகச் சந்தையான மின்னணுப் பொருட்கள், சோலார் செல்கள், மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் இதர தொழிற்சாலை தயாரிப்புகள் போன்றவற்றின் தேவை அதிகரித்துள்ளதால் சீனாவிலிருந்து இறக்குமதி 11.5 சதவிகிதம் கூடியுள்ளது. அதே வேளையில், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் 14.5 சதவிகிதம் சரிந்துள்ளது.

இதுவும் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகரித்து 99.2 பில்லியன் டாலரை எட்டுவதற்கு வித்திட்டுள்ளது.

மார்ச் மாதம் மட்டும் இந்தியா 9.7 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. சீனா, இந்தியாவில் தன்னுடைய பொருட்களைக் கொட்டினால், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.

சீனா மீது கடும் வரிகளை விதித்த அமெரிக்கா

அமெரிக்கா - சீனா, இந்தியாவுக்கு புதிய சவால்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீதான வரிகளைக் கணிசமாக அதிகரிக்கும் அதே வேளையில் இந்தியா உள்ளிட்ட முக்கிய வர்த்தக நாடுகளுக்கான வரிகளை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கும் நேரத்தில் இந்தத் தரவுகள் வந்துள்ளன.

சீனா மீது அமெரிக்கா கடுமையாக வரிகளை விதித்திருப்பதால், அமெரிக்க சந்தைக்கு வெளியே சீனா தனது சரக்குகளுக்கான மாற்றுகளைத் தேடலாம், தேவைப்பட்டால் இந்தியாவுக்கும் சரக்குகளை அனுப்பலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.

குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் ஆய்வு அமைப்பின் இயக்குநர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “எட்டு முக்கியமான தொழில் துறை தயாரிப்புகளில் சீனாதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஏற்றுமதியாளர். அனைத்து முக்கியமான தொழில் துறை தயாரிப்புகளுக்கும் இந்தியா சீனாவின் விநியோகச் சங்கிலியையே சார்ந்துள்ளது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருவதற்கான காரணமும் இதுதான்” என்றார்.

சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருவது இந்தியாவுக்கு மிகவும் கவலைக்குரியது என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

மேலும் அவர், “இந்தியா இந்தத் தரவுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது தொழில் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் மட்டுமல்ல. இது போட்டியின் நெருக்கடி. இந்தியா தனது தொழில் துறை உற்பத்தியில் உள்ள குறைபாடுகளை நீக்கி தொழில் துறை திறன்களை அதிகரிப்பதில் முதலீடு செய்ய வேண்டும். இது நடக்காவிட்டால், இந்த வர்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரித்து சீனாவை நாம் சார்ந்திருப்பதை அதிகரிக்கும்” என்றார்.

இந்தியாவுக்கு புதிய சவால்

அமெரிக்க சந்தைக்கான வழிகள் மூடப்பட்டால், சீன உற்பத்தியாளர்கள் அவர்களின் சரக்குகளை இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளுக்கு அனுப்பலாம் என்பதே இந்தியாவின் முதல் கவலையாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஓர் உற்பத்தியாளர் தனது சரக்குகளை சந்தை விலையைவிட குறைவான விலைக்கு விற்றால் அது ‘திணிப்பது’ என்று அழைக்கப்படும்.

“சீன உற்பத்தியாளர்கள் தங்களுடைய சரக்குகளைக் குறைந்த விலைக்கு இந்திய சந்தைக்கு அனுப்பலாம் என்கிற அச்சத்தை மறுக்க முடியாது. நிச்சயமாக பொருட்கள் அதீதமாகத் திணிக்கப்படும் என்கிற அச்சம் உள்ளது” என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

இந்திய சந்தையில் பொருட்கள் அதிகளவில் கொட்டப்படுவதைக் கண்காணிக்க வர்த்தகத் தீர்வுகளுக்கான இயக்குநர் அலுவலகம் (டிஜிடிஆர்) உள்ளது. அவ்வாறு பொருட்கள் கொட்டப்படும் போது டிஜிடிஆர் வரி விதிக்கலாம்.

அமெரிக்கா - சீனா, இந்தியாவுக்கு புதிய சவால்

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், டிஜிடிஆர் அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் சீன தயாரிப்புகளுக்கு எந்தப் புதிய வரியும் விதிக்கவில்லை. டிஜிடிஆர் சீனா மற்றும் பல இதர நாடுகளில் இருந்து வரும் சில ராசயனப் பொருட்கள் மீது எழும் ‘திணித்தல்’ குற்றச்சாட்டுகளை விசாரித்துள்ளது.

டிஜிடிஆர் இந்திய சந்தையில் வெளிநாட்டுப் பொருட்கள் அதீதமாகக் கொட்டப்படுவதைக் கண்காணித்து தேவைப்படும் நேரங்களில் வரிகளையும் விதிக்கிறது.

“சீன தயாரிப்புகளின் மிகப்பெரிய வாடிக்கையாளராக அமெரிக்கா உள்ளது. நிச்சயமாக வரி உயர்வால் இந்தச் சந்தைக்கான கதவுகள் சீனாவுக்கு மூடப்படும். இதனால் சீனா உடனே இந்திய சந்தைக்கு சரக்குகளை அனுப்பிவிடும் என அர்த்தம் கிடையாது. இந்தியாவில் வாங்குபவர்கள் இருந்தால்தான் சீனா சரக்குகளை அனுப்பும். இந்திய சந்தையில், சந்தை விலைக்கும் குறைவாக சீனா பொருட்களை அதிக அளவில் கொட்டினால் அதைக் கண்காணிக்க டிஜிடிஆர் உள்ளது. ஆனால் ஒரு புதிய விநியோக சங்கிலி வளர அதிக சாத்தியங்கள் உள்ளன. அமெரிக்காவுக்கு சீன தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் ஒரு தளமாக இந்தியா மாறலாம்” என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

சீனா தன்னுடைய நாட்டில் உற்பத்தியாகும் உதிரி பாகங்களை இந்தியா, வியட்நாம் அல்லது இதர நாடுகளுக்கு அனுப்பி, அங்கு அவற்றை முழுமையான தயாரிப்புகளாக மாற்றி அமெரிக்காவுக்கு அனுப்பலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

“சீனாவில் உற்பத்தியான உதிரி பாகங்கள் இந்தியா, வியட்நாம், மெக்சிகோ போன்ற நாடுகளின் சந்தைகளுக்கு வரும், அங்கு அவை முழுமை செய்யப்பட்டு அமெரிக்க சந்தைக்கு அனுப்பப்படலாம். இந்தியாவில் உற்பத்திச் செலவு என்பது சீனாவைவிட 20% அதிகம். ஆனால் அமெரிக்கா சீனா மீது கடுமையான வரியை விதித்துள்ளது. எனவே தயாரிப்புகள் விலை உயர்ந்ததாக இருந்தாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வரி விதிக்கப்பட்ட பிறகு சீன தயாரிப்புகளைவிட மலிவானதகாவே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் இந்தியா சீன தயாரிப்புகளைக் குவித்து வைக்கும் இடமாக மாறலாம்” என்று கூறுகிறார் அஜய் ஸ்ரீவஸ்த்வா.

இந்தியா மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

அமெரிக்கா - சீனா, இந்தியாவுக்கு புதிய சவால்

பட மூலாதாரம், Getty Images

இந்த சாத்தியம் என்பது இந்திய உற்பத்தியாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையலாம். ஆனால் இங்கும் நிறைய அச்சங்கள் உள்ளன.

அமெரிக்காவின் நடத்தை மற்றும் சந்தை மீது உள்ள நிலையற்றத் தன்மையால் அவர்களின் உற்பத்தித் திறனில் முதலீடு செய்வதற்கு முன்பாக இந்திய உற்பத்தியாளர்கள் இருமுறை யோசிப்பார்கள் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேலும் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்த உறவு நிலையற்றது. டிரம்ப் எதிர்காலத்தில் தன்னுடைய முடிவை மாற்றலாம். அமெரிக்க அரசியல் சில ஆண்டுகளில் மாறலாம். இத்தகைய சூழ்நிலையில், இந்திய உற்பத்தியாளர்கள் அவர்களின் திறனில் முதலீடு செய்யப் பெரிதும் ஆர்வம் காட்ட மாட்டார்கள்” என்றார்.

அதேவேளையில், சீன நிறுவனங்கள் இந்தியாவை இடை நிறுத்தமாகவோ அல்லது ஏதேனும் வழியில் அமெரிக்காவுக்கு சரக்குகளை அனுப்ப இந்திய சந்தையைப் பயன்படுத்தினாலோ அது இந்திய துறைமுகங்கள் அல்லது தளவாட சேவை வழங்குபவர்களுக்கு குறுகிய காலப் பலன்களைக் கொடுக்கலாம். ஆனால் அமெரிக்கா கோபமடையும் ஆபத்தும் இதில் உள்ளது.

சீன பொருட்களின் வரவை கண்காணித்து வரும் இந்திய அரசு

சமீபத்தில் இந்தியா, மலிவு விலை இறக்குமதிகளை கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் அமெரிக்க வரிகளைத் தவிர்க்க சீனாவுக்கு உதவ வேண்டாம் என்று இந்தியா எச்சரித்துள்ளது.

இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்பின் இயக்குநர் அஜய் சஹாயும் சீனா தனது சரக்குகளை இந்திய சந்தையில் கொட்டுவது தொடர்பான அச்சம் உள்ளது என நம்புகிறார்.

அமெரிக்கா - சீனா, இந்தியாவுக்கு புதிய சவால்

பட மூலாதாரம், Getty Images

“இது பற்றி தொழில்துறை நிச்சயம் கவலையில் உள்ளது. அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் சந்தையை சீனா இழக்கும் போது நிச்சயம் இதர சந்தைகளைத் தேடும். இப்படி ஒரு சூழலில், மலிவான விலைகளில் சீன சரக்குகள் கொட்டப்படுவதற்கான சாத்தியத்தைத் தவிர்க்க முடியாது” என்கிறார் அஜய் சஹாய்.

எனினும் இந்திய அரசாங்கம் சூழ்நிலையைக் கவனித்து வருவதாகவும் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் நம்புகிறார்.

மேலும் சஹாய், “அரசாங்கம் கவனித்து வருகிறது. இறக்குமதிகள் ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்யப்படுகின்றன மற்றும் சில முக்கியமான தயாரிப்புகள் தினமும் கண்காணிக்கப்படுகின்றன. அரசாங்கம் தேவைப்பட்டால் பொருட்களைக் கொட்டுவதற்கு எதிராக வரி விதிக்கும் என நம்புகிறோம். இந்திய வணிகர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்தியா அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தும் எனவும் நம்புகிறோம்” என்றார்.

சீன பொருட்கள் கொட்டப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றாலும், தொழில் துறை அதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறுகிறார் அஜய் சஹாய்.

இந்தியா உற்பத்தி மையமாகத் திகழ வேண்டும் என விரும்புகிறது. எனினும் சீனப் பொருட்கள் மற்றும் சரக்குகள், குறிப்பாக முக்கியமான பொருட்களைச் சார்ந்திருப்பது, இந்தியாவின் லட்சியத்திற்கு இடையூறாக அமையலாம்.

“மலிவான சீன தயாரிப்புகள் இந்திய சந்தையில் கொட்டப்பட்டால், அது இந்திய உற்பத்தியாளர்களுக்கு நிச்சியம் பெரிய அடியாக இருக்கும். இது இந்தியாவின் உள்ளூர் உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதிக்கலாம். இந்திய நிறுவனங்கள் வலிந்து மலிவாக்கப்பட்ட பொருட்களுடன் போட்டியிட முடியாது” என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU