Home Latest news tamil சமீபத்திய செய்தி அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் தாக்குதல்களை தாங்கி இரான் அரசு நிலைத்திருப்பது எப்படி?

அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் தாக்குதல்களை தாங்கி இரான் அரசு நிலைத்திருப்பது எப்படி?

17
0

SOURCE :- BBC NEWS

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும், இரான் அரசு உள்நாட்டுப் பாதுகாப்பின் மீதான தனது பிடியைத் தளர்த்திக் கொள்ளவில்லை. தலைமையின் மீது மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தி இருந்தபோதிலும், போரின் போது பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறவில்லை.

சில நிபுணர்கள் இதனைப் போர் தொடங்கிய பிறகு உருவான அடக்குமுறைச் சூழலோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு எதிர்ப்புப் போராட்டங்களை இரானிய அரசு ஒடுக்கிய விதம், மக்களிடையே அச்சத்தைப் பரப்பியுள்ளது.

சோதனைச் சாவடிகள், பலத்த பாதுகாப்புப் படைகளின் குவிப்பு மற்றும் தினசரி கைதுகள் மூலம் அரசு தனது கட்டுப்பாட்டை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள், மாற்றுக்கருத்து உள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்குப் போர் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்படுபவர்கள் கூட குறி வைக்கப்படுகிறார்கள்.

ஏறத்தாழ முழுமையான இணைய முடக்கம் காரணமாக, மக்கள் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் இன்னும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நெட்வொர்க்குகள் பெருமளவில் உடைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், அரசு ஆதரவாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட இணைய வசதி வழங்கப்பட்டு, அரசு சொல்ல விரும்பும் கருத்துகள் (Narrative) இரான் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. இதன் விளைவாக, அரசு எதிர்ப்பு என்பது ஆபத்தானது மட்டுமல்லாமல், மக்களை ஒருங்கிணைப்பதும் மிகவும் கடினமாகிவிட்டது – குறிப்பாகப் போர்க்காலத்தில், மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.

விவரிப்பு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், TABNAK

இந்த அனைத்து முறைகளுடன் சேர்த்து, போர் குறித்த மக்களின் பார்வையை மாற்றவும் அரசு முயற்சிக்கிறது. அதிகாரிகள் இந்த மோதலை இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரானது என்று சொல்லாமல், இரான் நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று சித்தரிக்கிறார்கள்.

இந்த வேறுபாடு முக்கியமானது. அரசு மீது அதிருப்தி கொண்டவர்கள் கூட வெளிநாட்டுத் தாக்குதலின் போது தேசியவாத உணர்வுகளால் ஈர்க்கப்படலாம். இது பெரும்பாலும் ‘தேசிய ஒற்றுமைக்கான திரட்சி’ (Rally-around-the-flag) விளைவு என்று அழைக்கப்படுகிறது. இது ஜூன் 2025-ல் நடந்த 12 நாட்கள் போரிலும் காணப்பட்டது.

இதன் காரணமாக, தற்போது அரசு எதிர்ப்பு அணி திரட்டலுக்கான வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது.

அரசு ஊடகங்கள் பொதுமக்களின் மரணங்களை சுட்டிக்காட்டுவதன் மூலமும், தங்கள் தாக்குதல்களைத் தற்காப்பு நடவடிக்கை (Defensive) என்று கூறுவதன் மூலமும் இந்த விவரிப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன.

அதேபோல், அரசு ஆதரவு பேரணிகள் மற்றும் போராட்டங்கள் ‘கட்டுப்பாடு, உறுதித்தன்மை மற்றும் வலிமை’ என்ற பிம்பத்தை வெளிப்படுத்துகின்றன.

அதிர்ச்சிகளைத் தாங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், TASNIM

உயர் மட்டத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், இந்த அமைப்பு வீழ்ச்சியடையாததற்குக் காரணம் அதன் கட்டமைப்பாகும். இரான் நாட்டின் அமைப்பு ஒரு தனி நபரைச் சார்ந்தது அல்ல, மாறாக மதம், ராணுவம், அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களின் வலைப்பின்னலில் நிலைபெற்றுள்ளது.

அதிகாரம் ராணுவம், மதத் தலைமை மற்றும் பாதுகாப்பு முகமைகள் எனப் பல நிறுவனங்களிடையே பிரிக்கப்பட்டுள்ளது, இதனால் ஒரு உயர்மட்டத் தலைவர் அகற்றப்பட்டாலும் அமைப்பு தொடர்ந்து இயங்குகிறது.

வாரிசுரிமைக்கான முறையான மற்றும் முறையற்ற ஏற்பாடுகளும் தொடர்ச்சியைப் பேண உதவுகின்றன.

இந்த வலிமையின் மையத்தில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உள்ளது. இது வெறும் ராணுவம் மட்டுமல்ல, அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு சக்தியாகவும் நாடு முழுவதும் ஆழமான பிடியைக் கொண்டுள்ளது.

மூத்த தளபதிகள் கொல்லப்பட்ட போதிலும், இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் விஷயங்களையும், மக்களின் எதிர்வினைகளையும் கட்டுப்படுத்துகிறது.

மிக முக்கியமாக பொதுவாக ஒரு ஆட்சி வீழ்வதற்கான ஒரு பெரிய அறிகுறியான ராணுவம் அல்லது பாதுகாப்பு அமைப்பில் பெரிய அளவிலான பிளவு அல்லது கிளர்ச்சிக்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.

போரில் ‘பிழைத்திருப்பதே’ உத்தி

இரான் இந்தப் போரில் ஒரு பாரம்பரியமான வெற்றியைப் பெற முயற்சிக்கவில்லை, மாறாக ஒரு தனித்துவமான உத்தியைக் கடைப்பிடிக்கிறது – அதாவது எதிரிக்கு பாதிப்புகளை அதிகரிப்பது மற்றும் மோதலை நீட்டிப்பது.

இரானிய தலைமைக்கு ‘வெற்றி’ என்பது போருக்குப் பிறகும் அதிகாரம் நிலைத்திருப்பதே ஆகும். இதற்கேற்ப, அது தனது வலிமையை, குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தி உலகளாவிய எரிசக்தி சந்தையின் மீது அழுத்தத்தை உருவாக்கி வருகிறது.

இதன் மூலம் போர் வெறும் ராணுவ மோதலாக மட்டுமின்றி, எஞ்சி நிற்பதே வெற்றி என்ற போராக மாறியுள்ளது. யார் சோர்வடைகிறார்களோ அவர்கள் தோற்பார்கள்.

அதேநேரத்தில், சித்தாந்தமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஷியா பாரம்பரியத்துடன் தொடர்புடைய ‘எதிர்ப்பு, தியாகம் மற்றும் வீர மரணம்’ போன்ற சிந்தனைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படுகின்றன.

இந்தக் கட்டமைப்பில், வீரர்களின் மரணம் தோல்வியாகப் பார்க்கப்படாமல், வீரமாகச் சித்தரிக்கப்படுகிறது. இது 1980-களின் இரான் – இராக் போரில் காணப்பட்டது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

எதிர்க்கட்சிகள் எங்கே?

இரான் நாட்டில் அதிருப்தி பரவலாக உள்ளது, ஆனால் அதனை ஒரு ஒருங்கிணைந்த அரசியல் சவாலாக மாற்றக்கூடிய ஒரு கூட்டுத் தலைமை இல்லை.

எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ளன, பல தலைவர்கள் நாட்டிற்கு வெளியே உள்ளனர், உள்ளே இருப்பவர்கள் சிறையில் உள்ளனர்.

அதிருப்தி மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது என்று வரலாறு கூறுகிறது. அதற்கு அமைப்பு, தலைமை மற்றும் மாற்றுத் திட்டம் ஆகியவையும் அவசியம்.

வெளிநாட்டு அழுத்தத்தால் இந்த அமைப்பு பலவீனமடைந்தாலும், அடுத்தது என்ன நடக்கும் என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.

லிபியா மற்றும் இராக் போன்ற உதாரணங்கள், ஒரு தயார் நிலையிலான மாற்றுத் திட்டம் இல்லாமல் போனால் நாட்டில் அராஜகமும் நீண்டகால ஸ்திரமற்ற தன்மையும் ஏற்படும் அபாயத்தைக் காட்டுகின்றன.

இரானின் இந்த வலிமை எப்போதும் நிலைத்திருக்குமா?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Majid Saeedi/Getty Images

தற்போதைக்கு இரானின் அமைப்பு – நிறுவன வலிமை, ஒடுக்குமுறை திறன், உத்தி ரீதியான நெகிழ்வுத்தன்மை மற்றும் புவி-அரசியல் நிலை காரணமாக நிலைத்து நிற்பதாகத் தெரிகிறது, ஆனால் இதற்கென ஒரு விலையையும் கொடுக்க வேண்டியிருக்கலாம்.

மக்கள் மீதான தேவைக்கு அதிகமான கட்டுப்பாடு விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் மற்றும் தகவல்களைச் சார்ந்துள்ள அமைப்புகள் காலப்போக்கில் பலவீனமடையலாம், இது எதிர்காலத்தில் பெரிய அதிர்ச்சிகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இறுதியில், இரான் நாட்டின் எதிர்காலம் வெளிநாட்டுத் தாக்குதல்களை விட, உள்நாட்டுக் காரணிகளான – சமூக அமைப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுப்பாடு மற்றும் அழுத்தத்திற்கு இடையிலான சமநிலை ஆகியவற்றையே அதிகம் சார்ந்து இருக்கும்.

இதனால்தான் அரசு வீதிகளிலும் ஒரு சமாந்தரப் போரை நடத்தி வருகிறது. இதன் மூலம் சாத்தியமான எந்தவொரு கிளர்ச்சியையும், மக்களின் கோபத்தையும் ஆரம்பத்திலேயே ஒடுக்க முடியும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC