Home தேசிய national tamil மலையாள சினிமாவில் தமிழர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்? ‘பாண்டி’ என்பதன் பின்னணி

மலையாள சினிமாவில் தமிழர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்? ‘பாண்டி’ என்பதன் பின்னணி

10
0

SOURCE :- BBC NEWS

கேரளம், தமிழ்நாடு, சினிமா, திரைப்படங்கள்

பட மூலாதாரம், Anugraha Cine Arts

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் கருவேலங்காடு எனும் ஒரு கடைக்கோடி கிராமத்தை, ஆள்பலம் மற்றும் பணபலம் கொண்ட பாண்டித்துரை, கருப்பையா சாமி என்ற இருவர் கட்டுப்படுத்துகிறார்கள். கருவேலங்காடு கிராமத்தில் இவர்களது அனுமதி இல்லாமல் எந்த நிலத்தையும் வாங்க/விற்க முடியாது.

இவர்களது தலையீட்டால் தனது நிலத்தை விற்க முடியாமல் தவிக்கும் அந்த ஊர் பண்ணையார் ஒருவர், “அருகிலுள்ள கேரளாவுக்குச் சென்று, யாரையாவது ஏமாற்றி அழைத்து வந்து இந்த நிலத்தை விற்று விடலாமா?” எனத் தனது உதவியாளரிடம் கேட்க, “கேரளாவில் யாரையும் ஏமாற்ற முடியாது, அவர்கள் புத்திசாலிகள்” என உதவியாளர் கூறுவார்.

“இங்கு இருப்பது போல் அங்கும் சில முட்டாள்கள் இருப்பார்கள்” எனச் சொல்லும் பண்ணையார், பின்னர் கேரளாவுக்கு சென்று நாயகன் புவனேந்திரனை (நடிகர் திலீப்) ஏமாற்றி நிலத்தை விற்றுவிடுவார்.

உண்மை தெரியாமல் நிலத்தை வாங்கும் நாயகன், பாண்டித்துரை என்ற ‘தமிழ் வில்லனை’ எப்படி எதிர்கொள்கிறான் என்பதே ‘பாண்டிபடா’ (2005) என்ற மலையாள திரைப்படத்தின் கதை.

“பாண்டி என்பது பல்வேறு மலையாள திரைப்படங்களில் தமிழர்களைக் குறிக்கும் ஒரு இழிசொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது” என மலையாள திரைப்படங்கள் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.

சமீபத்திய பிரபல உதாரணம், நடிகர் பிரித்விராஜ் நடித்து தமிழ்நாட்டிலும் வரவேற்பைப் பெற்ற ‘ஐயப்பனும் கோஷியும்’ (2020) திரைப்படம்.

“அவன் 13 ‘பாண்டிகளை’ கொன்ற முண்டூர் மாடன்” என்றே ‘ஐயப்பன் நாயர்’ என்ற முக்கிய கதாபாத்திரத்திற்கான பின்கதை சொல்லப்படும்.

கேரளம், தமிழ்நாடு, சினிமா, திரைப்படங்கள்

பட மூலாதாரம், Sun Pictures

இதேபோன்ற உதாரணங்கள், தமிழ் திரைப்படங்களிலும் உண்டு. எடுத்துக்காட்டாகப் பல தமிழ்ப் படங்களில் மலையாளிகள், குறிப்பாக மலையாள பெண்கள் மோசமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று எழுத்தாளர் ஜா.தீபா குறிப்பிடுகிறார்.

சிறுவயதில் இருந்தே தமிழ்ப் படங்களுக்கு சமமாக, ஃபாசில், சிபி மலையில், பரதன், ஸ்ரீனிவாசன், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற மலையாள இயக்குநர்களின் திரைப்படங்களையும் ரசித்தவன் என்ற முறையில், மலையாள திரைப்படங்களில் தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் எவ்வாறு காட்சிப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நான் தொடர்ந்து கவனித்து வந்துள்ளேன்.

மலையாளத்தின் பல திரைப்படங்களில் குறைந்தபட்சம் ஒரு தமிழர் கதாபாத்திரம் அல்லது தமிழ்நாடு குறித்த வசனங்களை அல்லது தமிழ்நாட்டின் ஏதோவொரு கிராமத்தில்/ஊரில் கதை நடப்பது போன்ற காட்சிகளைக் காணலாம்.

கடந்த 1950களில் தொடங்கி தற்போது வரை, இதற்குப் பல முன்னணி மலையாள நடிகர்களின் திரைப்படங்களை உதாரணமாகக் கூறலாம்.

இந்நிலையில், மலையாள திரைப்படங்களில் ‘தமிழர்கள்’ மோசமாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. அது உண்மையா? தமிழ் திரைப்படங்களில் மலையாளிகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்?

கேரளம், தமிழ்நாடு, சினிமா, திரைப்படங்கள்

பட மூலாதாரம், Fahadh Faasil and Friends, Working Class Hero

மலையாள திரைப்படங்களில் தமிழர்கள்

நடிகர் மம்மூட்டியின் புகழ்பெற்ற ‘சிபிஐ’ திரைப்பட பாகங்களில் நாயகன் சேதுராம ஐயர், மிகவும் புத்திசாலியாக சித்தரிக்கப்படுவார். சேதுராம ஐயர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்டவராக இருப்பார்.

ஆனால், அதே மம்மூட்டி நடித்த ‘கருத்த பக்ஷிகள்’ (2006) திரைப்படத்தில் முருகன் என்ற தமிழர் கதாபாத்திரத்தில் அவர் வருவார். அந்தக் கதாபாத்திரத்திற்கும், நடிகை பத்மபிரியா உள்ளிட்ட பிற தமிழ் கதாபாத்திரங்களுக்கும் போடப்பட்டிருக்கும் ‘கருப்புத் தோல்’ ஒப்பனையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தத் திரைப்படத்தில் கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் சிலர் பிச்சை எடுத்துப் பிழைப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

“கடந்த காலங்களில், பிழைப்பு தேடி கேரளாவுக்கு பல தமிழர்கள் குடிபெயர்ந்தனர். அவர்கள் பலரும் உடல் உழைப்பு சார்ந்த கூலி வேலைகளைச் செய்தனர். தேயிலைத் தோட்டங்களில், வீடுகளில், கட்டுமானங்களில் பணிபுரிந்தனர். அவர்கள் சுத்தமற்றவர்கள், படிப்பறிவற்றவர்கள் என்ற முத்திரையும் குத்தப்பட்டனர். இதனால், ‘பாண்டி’ என்ற சொல், அழுக்கான மற்றும் நாகரிகமற்ற ஒருவரைக் குறிக்கும் இழிசொல்லாக கேரளாவில் உள்ளது,” என்று 2013-இல் வெளியான ‘மற்றவரை பிரதிநிதித்துவப்படுத்துதல்: மலையாளத் திரைப்படங்களில் தமிழ் அடையாள உருவாக்கம்’ (Representing the Other: Construction of Tamil Identity in Malayalam Cinema) என்ற தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் முனைவர் மஞ்சு எடச்சிரா.

கேரளம், தமிழ்நாடு, சினிமா, திரைப்படங்கள்

பட மூலாதாரம், K. V. Kaladharan GV productions

மஞ்சு எடச்சிரா தற்போது அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பிராண்டெய்ஸ் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுகள் தொடர்பான விரிவுரையாளராக உள்ளார்.

“தமிழர்கள் பணம் இருந்தாலும் படிப்பறிவு அற்றவர்களாக, முரட்டுத்தனமானவர்களாக, ஆங்கிலம் பேசுவதில் தடுமாறுபவர்களாக அல்லது சற்று நாகரிகம் குறைந்தவர்களாக இருப்பார்கள் மற்றும் மலையாளிகள் படித்தவர்களாக, புத்திசாலிகளாக இருப்பார்கள் என்பதாகவே பல மலையாள திரைப்படங்களில் காட்டப்பட்டது. அதற்குச் சிறந்த உதாரணம் ‘பாண்டிபடா’ திரைப்படத்தில் வரும் பாண்டித்துரை (நடிகர் பிரகாஷ் ராஜ்) கதாபாத்திரம்” என்றும் முனைவர் மஞ்சு எடச்சிரா குறிப்பிடுகிறார்.

மேலும், ‘மணிச்சித்ரதாழ்’ (1993), ‘தென்காசிப் பட்டணம்’ (2000), ‘அன்னக்குட்டி கோடம்பாக்கம் விழிக்குன்னு’ (1989), ‘மலையாளி மாமனு வணக்கம்’ (2002) போன்ற திரைப்படங்களை அவர் உதாரணங்களாக சுட்டிக்காட்டுகிறார்.

கேரளம், தமிழ்நாடு, சினிமா, திரைப்படங்கள்

பட மூலாதாரம், Swargachitra Films

தமிழ்ப் படங்களில் மலையாள நடிகர்கள் பலரும் நடிப்பது போல, மலையாள சினிமாக்களுக்கு தமிழ் கலைஞர்களும் பல ஆண்டுகளாகப் பங்களித்துள்ளனர்.

இதில், 2001-இல் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வந்த ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா’ என்ற மலையாள திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிகர் பார்த்திபன் ஒரு தமிழராகவே நடித்திருப்பார்.

அந்தத் திரைப்படத்தில், ஜானி வெள்ளிக்கலா (நடிகர் இன்னசன்ட்) என்ற கதாபாத்திரம், பார்த்திபனிடம் தமிழருக்கு எதிரான வெறுப்பு வசனங்களைப் பேசுவதும் அதற்கு பார்த்திபன் பதிலளிப்பது போலவும் காட்சிகள் இருக்கும்.

“மலையாளிகள் புத்திசாலிகள், உங்களைப் போல கழுதைப் பால் குடித்து வளர்ந்தவர்கள் அல்ல” என ஜானி கதாபாத்திரம் பேச, முதலில் பொறுமையாக, “ஏன் மலையாளி, தமிழர் என பிரித்துப் பேசுகிறீர்கள்?” என்று பார்த்திபன் உபதேசிப்பார்.

ஒரு கட்டத்தில் ஜானி மற்றும் அவருடன் வந்த கூட்டத்தை பார்த்திபன் அடித்து விரட்டிவிட்டு, “இனி இப்படி பிரிவினை பேசாமல், எல்லோரும் இந்தியர்கள் எனச் சொல்” என்று கூறுவது போல அந்தக் காட்சி முடியும்.

கேரளாவில் பிரிவினை பேசும் ஒரு மலையாளிகள் கூட்டத்தை, ஒரு தமிழர் அடித்து, அறிவுரை கூறுவது போல் அமைந்த அந்தக் காட்சியில், ‘முல்லைப் பெரியார்’ அரசியல் குறித்தும் பேசப்படும்.

“நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா’ திரைப்படத்தில் நடிக்கும்போது என்னை மிகுந்த மரியாதையுடனும், நட்புடனும் நடத்தினார்கள். அந்தத் திரைப்படத்தில் தமிழர்கள் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது” என்று பிபிசி தமிழிடம் கூறினார் நடிகர் பார்த்திபன்.

அதேபோல, நடிகர் சிவாஜி கணேசன் அனந்த சுப்ரமணியம் என்ற தமிழர் கதாபாத்திரத்திலும், நடிகர் மோகன்லால் கதாநாயகனாகவும் நடித்த ‘ஒரு யாத்ர மொழி’ (1997) திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

கேரளம், தமிழ்நாடு, சினிமா, திரைப்படங்கள்

பட மூலாதாரம், Carlton Films

சமூகத்தில் பிரதிபலிக்கிறதா?

“பாண்டி’ என்ற சொல் பொதுவாக பாண்டிய நாட்டைச் (தமிழ்நாடு) சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கவே தோன்றியது. பின்னர் அது ஒரு இழிசொல்லாக மாறியது,” என்கிறார் கேரளாவை சேர்ந்த பத்திரிகையாளர் லக்ஷ்மி ப்ரியா.

“ஓர் எளிய உதாரணம், இங்கு பெண்கள் அடர் வண்ணங்களில் பட்டுப் பாவாடை அல்லது பட்டுச் சேலை உடுத்தி, மல்லிகைப் பூ வைத்துக் கொண்டால், ‘ஏன் பாண்டி போல உடையணிகிறாய்?’ என்பார்கள். அதாவது சாமானிய மக்களை நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் அல்லது படிப்பறிவு அற்றவர்கள் என ஏளனம் செய்ய இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், தமிழர்களைக் குறிக்கவே இந்தச் சொல் கேரளாவில் நடைமுறையில் உள்ளது,” என்கிறார் அவர்.

அதுவே திரைப்படங்களில் பிரதிபலித்தது என்று கூறும் அவர், “ஆனால், சமீப காலமாக அது மாறியுள்ளது. குறிப்பாக பிரேமம் திரைப்படத்திற்குப் பிறகு. அதில் சாய் பல்லவி ஒரு தமிழ் பெண்ணாகத்தான் வருவார். அவரது உறவினராக வரும் இளைஞனைக் கண்டு, கதாநாயகன் பொறாமைப்படுவது போலக் காட்சிகள் இருக்கும். அடுத்த தலைமுறை மலையாள மக்கள் பிரிவினை பேசும் திரைப்படங்களை விரும்புவதில்லை, ‘பிரேமம்’ படத்தின் வெற்றி அதையே உணர்த்தியது.” என்கிறார்.

கேரளம், தமிழ்நாடு, சினிமா, திரைப்படங்கள்

பட மூலாதாரம், Anwar Rasheed Entertainments

தமிழ் திரைப்படங்களில் கேரளா குறித்த பிம்பம்

இதேபோல, “எத்தனையோ தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் மலையாளப் பெண்களை ரவிக்கை-லுங்கி உடையில் கவர்ச்சியாகக் காட்டியுள்ளார்கள். அது தவறு அல்லவா?” என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா.

இவர் சினிமா குறித்து ‘ஒளி வித்தகர்கள்’, ‘கதை டூ திரைக்கதை’ உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

‘பசுபதி மே/பா ராசக்காபாளையம்’ (2006) என்ற திரைப்படத்தில், சாவித்திரி என்ற மலையாள பெண் கதாபாத்திரம், காவல் நிலையம் அருகே தேநீர் கடை வைத்திருப்பது போலவும், அவர் எப்போதும் ரவிக்கை மற்றும் லுங்கி அணிந்திருப்பது போலவும் காட்சிகள் இருக்கும்.

‘பட்ஜெட் பத்பநாபன்’ (2000) திரைப்படத்தில் வரும் ஓமனா (நடிகை மும்தாஜ்) என்ற கேரள பெண்ணின் கதாபாத்திரத்தை மற்றோர் உதாரணமாகச் சொல்லலாம்.

‘அன்பே அன்பே’ (2003) என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் முழுவதுமே, கேரள பெண்களை இதே ரீதியில் காட்சிப்படுத்தி இருப்பார்கள். பாடல் வரிகளும் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தின.

“இன்னும் பல தமிழ்ப் படங்களை இப்படியாகக் கூறலாம். கேரள பெண்கள் என்றாலே கவர்ச்சியாக உடையணிவார்கள் அல்லது மலையாள திரைப்படங்கள் என்றாலே அவை ஆபாசத் திரைப்படங்கள் என்ற போலியான பொது பிம்பத்தை இவை வலுப்படுத்தின,” என்கிறார் ஜா.தீபா.

“இன்று நாம் மலையாள திரைப்படங்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் ஒரு காலத்தில் மலையாள திரைப்படங்களைப் பார்ப்பேன் எனப் பொதுவெளியில் சொன்னாலே கேலியாகச் சிரிப்பார்கள். இவை அனைத்துமே தமிழ் சினிமாக்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுதான்” என்கிறார் அவர்.

“கேரளாவில் உள்ள ‘பாண்டி’ என்ற சொல்லாகட்டும் அல்லது தமிழ்நாட்டில் புழங்கும் ‘வடக்கன்’ என்ற சொல்லாகட்டும், உழைக்கும் அடித்தட்டு மக்களையே ஏளனம் செய்கின்றன. மாற்றம் என்பது இங்கும் நிகழ வேண்டும்” என்று கூறுகிறார் ஜா.தீபா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU