SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், @Akracingoffl/X
நடிகர் அஜித்திற்கு திரைப்படக் கலைஞர் என்ற முகம் தவிர, ‘கார் ரேஸர், போட்டோகிராபர், துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டவர், ஏரோ மாடலிங் ஆர்வலர், பைக் டிரிப் செல்பவர், சமையல்காரர்’ என பல முகங்கள் உண்டு என அவருடன் பணியாற்றிய திரைப்படக் கலைஞர்கள் கூறினர்.
‘என் வீடு என் கணவர்’ திரைப்படத்தில் பள்ளி மாணவராக சிறு வேடத்தில் தோன்றியவர், பிரேம புஸ்தகம் (1993) என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். தமிழில் அமராவதி (1993) அவர் நடிப்பில் வந்த முதல் படம்.
அதைத் தொடர்ந்து ‘ஆசை, காதல்கோட்டை, வாலி, அமர்க்களம், தீனா’ திரைப்படங்கள் வெற்றியைத் தேடி தர, முன்னணி நடிகராக மாறினார். இன்று (மே 1) நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள்.
தமிழ் சினிமாவில் அஜித் அளவுக்கு தோல்வி படங்களை கொடுத்தவர் கிடையாது. ரசிகர் மன்றம் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம், தல என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுடனும் கண்டிப்பான நிலைப்பாடுகளையே அஜித் எடுத்துள்ளார்.
அஜித், ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனது திரைப்படத்தின் ப்ரோமோஷன்களிலும் அவர் கலந்துகொள்வதில்லை என சிலர் விமர்சித்தாலும், அவரை திரையில் பார்க்கும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.
நடிகர் அஜித்துடன் பணியாற்றிய அனுபவங்களை திரைப்பட பிரபலங்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
‘குறைவான சம்பளம்’
பட மூலாதாரம், Sivasakthi Movie Makers
“நான் இயக்கிய வான்மதி படத்தில் அஜித் ஹீரோ. அந்த படம் குறித்து அவரிடம் மந்தைவெளி வீட்டில் பேச சென்றபோது எனக்கு முதுகில் ஒரு பிரச்னை. அதனால், நான் படுத்துக்கொண்டே பேசட்டுமா என்று அவர் கேட்டது நினைவில் இருக்கிறது” என்று கூறுகிறார் அஜித் நடித்த ‘காதல் கோட்டை’ உள்ளிட்ட சில திரைப்படங்களின் இயக்குநர் அகத்தியன்.
“அந்த படத்தில் ஏற்பட்ட நல்ல நட்பில் காதல்கோட்டை திரைப்படத்திலும் நடிக்க வைத்தேன். அப்போது இந்த அளவுக்கு அஜித் பெரிய ஸ்டார் இல்லை. ஆனாலும் அப்போதே அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள். அவரின் இன்றைய வளர்ச்சியில் காதல் கோட்டைக்கும் ஒரு முக்கியமான பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை” என்கிறார் அவர்.
“சரியான நேரத்துக்கு படப்பிடிப்பு தளம் வருவார். அந்த காலத்தில் அவருக்கு சம்பளம் மிகவும் குறைவு தான்.” என்கிறார் அகத்தியன்.
புதிய இயக்குநருக்கு வாய்ப்பு
பட மூலாதாரம், VZ Durai/Facebook
அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான முகவரி திரைப்படத்தின் இயக்குநர் வி.இசட் துரை பேசுகையில், “நான் எந்த இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றாதவன். ஆனாலும், என் கதையை நம்பி முகவரி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “அந்த படம் முடிவதற்குள் எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது. அந்த படத்தின் காட்சிகள் அவருக்கு பிடித்துபோக, படம் வெற்றி அடையும் என நம்பினார். பட ரிலீசுக்கு முன்பே எனக்கு கார் பரிசு கொடுத்தார்” என்கிறார்.
“படப்பிடிப்பு தளத்தில் யார் உதவி கேட்டாலும் செய்வார்” என்று கூறினார் வி.இசட் துரை.
நடிகர் அப்புகுட்டி கூறியது என்ன?
பட மூலாதாரம், @Akracingoffl/X
அஜித்துடன் வீரம், வேதாளம் திரைப்படத்தில் நடித்த நடிகர் அப்புக்குட்டி, ”வீரம், வேதாளம் படங்களில் அவருடன் நடித்தேன். வேதாளம் படத்தில் என் நடிப்பை உன்னிப்பாக கவனித்தவர். என்னை அழைத்து போட்டோஷூட் எடுப்பதாக சொன்னார். முதலில் நான் நம்பவில்லை. ஆனால், அவரோ அதை ஆர்வமாக செய்தார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், ” என் இமேஜை மாற்ற வேண்டும் என்று அவர் நினைத்து இருக்கிறார். அதற்காக அந்த போட்டோஷூட் செய்தார்.” என கூறும் அப்புகுட்டி, “எந்த பெரிய ஹீரோ இப்படி செய்வார்கள்?” என கேள்வி எழுப்புகிறார்.
“அவருடன் நடிப்பதும் எளிது, படக்குழுவினருக்கு அவ்வப்போது பொங்கல், பிரியாணி சமைத்துக் கொடுப்பார். ” என்கிறார் அப்புக்குட்டி.
‘பெரிய ஹீரோக்கள் இப்படிச் செய்வது அரிது’
பட மூலாதாரம், Stunt Silva/Facebook
நடிகர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்டண்ட் சில்வா, அஜித் குறித்து பேசுகையில், ”நான் ஸ்டண்ட் உதவியாளராக அவர் படங்களில் பணிபுரிந்துள்ளேன். ” என்கிறார்.
“நான் அவருடன் வேலை செய்ததில் மங்கத்தா, என்னை அறிந்தால், வீரம் போன்ற படங்கள் பெரிய ஹிட். மங்காத்தாவில் சண்டைக் காட்சிகள், கார் சேசிங் பேசப்பட்டது. பைக் காட்சிகளில் 200 கிமீ வேகத்தில் சென்று எங்களை ஆச்சரியப்படுத்தினார். ஆனால், எனக்கு பயமாக இருக்கும். ஹீரோவை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நடுங்கிக்கொண்டு இருப்பேன்” என நினைவுகூர்கிறார் ஸ்டண்ட் சில்வா.
” ஒரு சமயம் படப்பிடிப்பு தளத்தில் எனக்காக பிரியாணி செய்து கொடுத்தார். ” என்கிறார்.
பட மூலாதாரம், Kaniha/Facebook
‘வரலாறு’ திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த கனிகா பிபிசி தமிழிடம் பேசுகையில், “வரலாறு படத்தில் அஜித்சாருக்கு இரட்டை வேடம். நான் ஒரு கதாபாத்திரத்திற்கு மனைவியாகவும், மற்றொரு கதாபாத்திரத்திற்கு அம்மாவாகவும் நடித்தேன். அந்த சமயத்தில் நான் சினிமாவுக்கு புதிது. அந்த படப்பிடிப்பில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.” என்று கூறினார்.
பட மூலாதாரம், @Akracingoffl/X
தேசிய விருது பெற்ற நடன இயக்குநரும், சினிமா நடனகலைஞர்கள் சங்க தலைவருமான தினேஷ், நடிகர் அஜித் உடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
“‘ஜி’ திரைப்படத்தின் பாடல் காட்சியை கும்பகோணத்தில் எடுத்தபோது, கும்பகோணத்தின் ஒரு பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதை கேள்விப்பட்டு உடனே மருத்துவமனைக்குச் சென்றார். அந்த சமயத்தில் பலருக்கு அவசர மற்றும் மருத்துவ தேவைகளுக்கு உதவி செய்தார். ” என்கிறார் தினேஷ்.
பட மூலாதாரம், @Akracingoffl/X
நடிகர் அஜித்துடன் பல திரைப்படங்களில், பல நிகழ்ச்சிகளில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் அனுவர்தன். அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “பில்லா திரைப்படத்துக்கு பின் அவருக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறேன். அவருக்கு உடை விஷயத்தில் ஈடுபாடு அதிகம்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ” நேரம், சுத்தம் விஷயத்தில் அவரை மிஞ்ச ஆள் இல்லை. அஜித்திடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ஒழுக்கம். ” என்கிறார்.
‘மனஸ்தாபம் வந்தது உண்டு…ஆனால்’
அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
“1991ம் ஆண்டு அவரை முதலில் சந்தித்தேன். அவரின் சினிமா முயற்சி, வளர்ச்சி, வெற்றி, தோல்வி அனைத்தையும் நேரில் பார்த்து இருக்கிறேன். வெற்றியில் ஆடமாட்டார். தோல்விகள், பிரச்னைகள் வந்தால் இன்னும் வலிமையாக இருப்பார். அதுதான் அவரிடம் நான் பார்த்து வியந்த விஷயம்.” என்கிறார்.
“அவருக்கு சினிமா தவிர கார் ரேஸ், பைக் ரேஸ் என பல விஷயங்களில் ஆர்வம். நேரத்தை வீணடிக்காமல் எதாவது கற்றுக்கொண்டே இருப்பார்.” என்றார்.
“இத்தனை ஆண்டுகளால சினிமா பயணத்தில் எனக்கும் அவருக்கும் மனஸ்தாபம் வந்தது உண்டு. ஆனால், அவர் என்னை நண்பராக பார்ப்பதால், எல்லாருமே சீக்கிரம் முடிந்து விடும்” என்று கூறுகிறார் சுரேஷ் சந்திரா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



