Home தேசிய national tamil பும்ரா பந்துவீச்சிலேயே பறந்த பவுண்டரிகள் – மும்பையின் இமாலய இலக்கை எளிதாக துரத்திய ஹைதராபாத்

பும்ரா பந்துவீச்சிலேயே பறந்த பவுண்டரிகள் – மும்பையின் இமாலய இலக்கை எளிதாக துரத்திய ஹைதராபாத்

16
0

SOURCE :- BBC NEWS

மும்பை வான்கடே மைதானம், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஐபிஎல் 2026

பட மூலாதாரம், ANI

2026 ஐ.பி.எல் சீசனுக்கு முன்பான ஏலத்தில் மற்ற அணிகள் எல்லாம் தங்கள் அணியில் தொடர்ந்து ஆடப்போகும் வீரர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இருக்க, ஒரே ஒரு அணி மட்டும் ஆடப்போகும் 11 வீரர்கள், அவர்களுக்கான பொருத்தமான பேக்கப் வீரர்கள் என அனைவரையும் ஏலத்திற்கு முன்பாகவே செட் செய்துவிட்டு மற்ற அணிகளை வேடிக்கை பார்ப்பதற்காகவே அபுதாபிக்கு பறந்து சென்றது. அந்த அணி மும்பை இந்தியன்ஸ்.

கிரிக்கெட் ஒரு வினோதமான கணிக்கவே முடியாத விளையாட்டு என அடிக்கடி கூறப்படுவதுண்டு. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த சீசன் அதைத்தான் பிரதிபலிக்கிறது. 11 வீரர்களும் தயார், இவர்களுக்கு ஏலமே தேவையில்லை என சொல்லப்பட்ட மும்பை அணிதான் இந்த சீசனில் அதிக வீரர்களை களத்தில் பயன்படுத்தியிருக்கும் அணி.

நேற்றைய (ஏப்ரல் 29) போட்டியோடு சேர்த்து மொத்தம் 22 வீரர்களை பயன்படுத்தியிருக்கிறது மும்பை. ஒரு அணி அதிகபட்சம் வைத்துக்கொள்ள முடிந்த வீரர்களின் எண்ணிக்கையே 25 தான். ஆனால் போட்டிகளின் முடிவு என்னமோ அதேதான். தோல்விக்குப் பின் தோல்வி.

மற்றொரு பக்கம் தடுமாற்றத்தோடு தொடங்கினாலும் தொடர்ந்து நான்கு போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் டாப் 4-இல் இருக்கும் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இந்த இரு அணிகளுக்குமான மோதல் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில்.

சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த மைதானம் எப்போதுமே சாதகமாய் இருந்ததில்லை. இங்கு மும்பை அணியோடு மோதிய ஒன்பது போட்டிகளில் இரண்டில் மட்டுமே சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும் இந்த இரு அணிகளும் கடைசியாய் மோதிய ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஹைதராபாத்திற்கு வெற்றி கிடைத்தது.

‘அதிரடி காட்டிய ரிக்கெல்டன்’

மும்பை வான்கடே மைதானம், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஐபிஎல் 2026

பட மூலாதாரம், ANI

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பேட்டிங் தேர்வு செய்தார். ‘வழக்கத்தை விட காற்று அதிகமாய் இருந்ததால் செகண்ட் இன்னிங்சில் பனி இருக்காது, பவுலர்களுக்கு பந்துவீசுவது எளிதாக இருக்கும்’ என்பது அவரின் கணிப்பு.

கடந்த வாரம் காயமடைந்த ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்திலும் இல்லை. அவர் குணமாகி விளையாட இன்னும் இரண்டு ஆட்டங்களாவது ஆகும் என்கிறார் ஹர்திக். டி காக்கிற்கும் மணிக்கட்டில் காயம் என்பதால் அவருக்கு பதில் ரிக்கெல்டன். இத்தனை நாட்களாக வருவாரா மாட்டாரா என கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்த வில் ஜாக்ஸ் ஒருவழியாக வந்து சேர, அவருக்கும் அணியில் இடம்.

ஹைதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றம். ஷிவாங் குமாருக்கு பதில் ஹர்ஷ் தூபே.

கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் வெறும் ஆறு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ப்ரஃபுல் ஹிங்கே வீசிய இரண்டாவது ஓவரிலிருந்து அதிரடியை தொடங்கினார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள் வில் ஜாக்ஸும் ரிக்கெல்டன்னும். அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள். கம்மின்ஸ் வீசிய மூன்றாவது ஓவரில் 16 ரன்கள்.

ரன்ரேட் 12-ஐ தாண்டவும் வழக்கமாய் பத்தாவது ஓவருக்குப் பின் பந்துவீசும் இஷான் மலிங்காவை அழைத்து வந்தார் கேப்டன் கம்மின்ஸ். அந்த ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அதற்கும் சேர்த்து அடுத்த இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் எடுத்தார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 78/0 என இருந்தது.

இந்த சீசனில் மும்பையின் இரண்டாவது அதிகபட்ச பவர்ப்ளே ஸ்கோர் இது. ஏழாவது ஓவரில் மேலும் 15 ரன்கள். மீண்டும் ஒரு பவுலிங் மாற்றம். இந்தமுறை நிதிஷ்குமார் ரெட்டி. அவரின் முதல் பந்திலேயே இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் வில் ஜாக்ஸ். ஆனாலும் மறுமுனையில் ரிக்கெல்டன் வேகம் குறைக்கவில்லை. அதே ஓவரில் சிக்ஸர் அடித்து தன் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

ஒருபக்கம் சூரியகுமார் யாதவ், நமன் தீர் என அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தாலும் ரன்ரேட்டை 12-க்கு குறையாமல் பார்த்துக்கொண்டார் ரிக்கெல்டன். 15வது ஓவரின் இறுதிப்பந்தில் சதத்தையும் அடைந்தார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட பந்துகள் 44. ஐ.பி.எல்லில் ஒரு மும்பை பேட்ஸ்மேன் அடித்திருக்கும் அதிவேக சதம் இது. இந்தத் தொடரில் இதுவரை பெரிதாக அடிக்காத பாண்ட்யாவும் தன் பங்கிற்கு 15 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க ஸ்கோர் 16 ஓவர்களில் 200-ஐ தாண்டியது.

கம்மின்ஸும் மலிங்காவும் முடிந்தவரை இழுத்துப் பிடித்தார்கள். ஆனால் மற்ற பவுலர்களால் அதேவித நெருக்கடியை தரமுடியாமல் போனதால் 20 ஓவர்கள் முடிவில் 243 ரன்கள் எடுத்தது மும்பை. ஐ.பி.எல்லில் முதலில் பேட்டிங் செய்து மும்பை அணி எடுத்திருக்கும் அதிகபட்ச ரன்கள் இது. கடைசிவரை ஆட்டமிழக்காத ரிக்கெல்டன் 55 பந்துகளில் 123 ரன்கள்.

‘இன்று மதியம் மூன்றரை மணிவரை ரிக்கெல்டன்னுக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை என்கிற நிலைமைதான் இருந்தது. அவர் ஹோட்டலில் பொறுமையாக நீச்சல்குளத்தில் குளித்துக்கொண்டிருந்தார். ஆட்டத்திற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பாகத்தான் அவர் அன்றைய போட்டியில் ஆடுவதே உறுதியானது. ஆனாலும் வந்த வேகத்தில் சதம் அடித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது’ என வியப்பாக சொன்னார் அதே ஹோட்டலில் தங்கியிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேல் ஸ்டெயின்.

‘சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ்’

மும்பை வான்கடே மைதானம், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஐபிஎல் 2026

பட மூலாதாரம், ANI

இமாலய இலக்கை நோக்கி ஆடத்தொடங்கிய சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்டத் தொடங்கினார்கள். முன்னொரு காலத்தில் பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்பட்ட போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே 11 ரன்கள். பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் 14 ரன்கள். மீண்டும் மூன்றாவது ஓவருக்கு போல்ட் வர, அதில் மூன்று சிக்ஸர்கள் என 18 ரன்கள்.

இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் ஆஃப் ஸ்பின்னரான வில் ஜாக்ஸிடம் நான்காவது ஓவரைக் கொடுத்தார் பாண்ட்யா. ஆனாலும் பயனில்லை. அந்த ஓவரில் 19 ரன்கள்.

கஸன்பர் வீசிய ஐந்தாவது ஓவரில் பேக்வர்ட் பாயிண்ட் பக்கம் ஹெட் தூக்கியடிக்க கைக்கு வந்த கேட்ச்சை தவறவிட்டார் நமன் தீர். அந்த கேட்ச் எவ்வளவு முக்கியமானது என்பதை அடுத்த ஓவரிலேயே நிரூபித்தார் ஹெட். பும்ரா வீசிய பந்தை ஹெட் அவரின் தலைக்கு மேலேயே தூக்கியடிக்க 99 மீட்டர்கள் பறந்து போய் பவுண்டரிக்கு வெளியே கூட்டத்தில் விழுந்தது பந்து. அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள். ஸ்கோர் ஆறு ஓவர்கள் முடிவில் 92/0.

டாஸின்போது இன்றைய ஆட்டத்தில் பனி பெரிதாக இருக்காது எனக் கணித்திருந்தார் பாண்ட்யா. ஆனால் இப்போது பனியும் சேர்ந்துகொள்ள மும்பை பவுலர்களை எதிர்கொள்வது ஹைதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் எளிதானது. அஷ்வனி குமார் வீசிய ஏழாவது ஓவரில் சிக்ஸரோடு அரைசதம் கடந்தார் ஹெட். எந்தவித பவுலர் மாற்றமும் பலனளிக்காததால் இம்பேக்ட் பிளேயராக மற்றொரு பவுலரான ஷ்ரதுல் தாகூரை களமிறங்கியது மும்பை.

இறுதியாக ஒன்பதாவது ஓவரில் கஸன்பர் வீசிய பந்தில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அபிஷேக் சர்மா. மூன்றாவதாக களமிறங்கிய இஷான் கிஷனும் முதல் பந்திலேயே அவுட். அடுத்த ஓவரில் ஹெட்டும் வெளியேற மும்பை பக்கம் லேசாக வெற்றியின் வெளிச்சம் தென்பட்டது. ஆனால் அந்த வெளிச்சத்தை உடனே ஊதி அணைத்தார் க்ளாஸன். அவர் ஒருபக்கம் பந்தை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட மற்றொரு பக்கம் விக்கெட் போகாமல் பார்த்துக்கொண்டார் நிதிஷ்குமார் ரெட்டி.

ஓவருக்கு பத்து ரன்கள் தேவை என்கிற நிலையில் இவர்கள் இருவரும் ஓவருக்கு 13 ரன்கள் என்கிற ரன்ரேட்டை தொடர்ந்து தக்கவைக்க இலக்கை நெருங்கிக்கொண்டே இருந்தது சன்ரைசர்ஸ். அதுவும் பும்ராவையே எக்ஸ்ட்ரா கவர் பக்கம் சிக்ஸர் அடித்து மிரளவைத்தார் க்ளாஸன்.

கடைசி ஐந்து ஓவர்களில் 51 ரன்கள் தேவை என்கிற நிலையில் கஸன்பர் வீசிய 16வது ஓவரில் மட்டும் 19 ரன்கள். அப்போதே வெற்றி யாருக்கு என்பது தீர்மானமாகிவிட்டது. 18.4 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ். ஐ.பி.எல்லில் வெற்றிகரமான நான்காவது அதிகபட்ச சேஸிங் இது.

கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த க்ளாஸன் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்தார். அவரே ஆட்டநாயகனும் கூட.

பும்ரா இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்தார். ஐ.பி.எல்லில் அவரின் மூன்றாவது மோசமான பவுலிங் ஸ்பெல் இது.

தொடர்ந்து சில போட்டிகளாக, ‘பும்ராவிற்கு ஓய்வு தேவை. அவரை இரண்டு ஆட்டங்களுக்காவது கட்டாய ஓய்வில் அனுப்புங்கள்’ என முன்னாள் வீரர்கள் அனைவரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் மும்பை அணி நிர்வாகம் கேட்பதாக தெரியவில்லை. இம்பேக்ட் பிளேயராக கொண்டுவரப்பட்ட ஷ்ரதுல் ஒரு பந்துகூட போடவில்லை. பின் ஏன் இம்பேக்ட் பிளேயராக வந்தார் என்பது அணி நிர்வாகத்திற்கே வெளிச்சம்.

எங்கே போனார் ஆல்ரவுண்டர் பாண்ட்யா?

மும்பை வான்கடே மைதானம், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஐபிஎல் 2026

பட மூலாதாரம், ANI

ஐ.சி.சி சர்வதேச டி20 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இப்போது இரண்டாமிடத்தில் இருக்கிறார் பாண்ட்யா. ஆனால் ஐ.பி.எல்லிலோ கடந்த இரு சீசன்களாகவே பாண்ட்யாவால் தன் முழுத்திறனை வெளிப்படுத்தவே முடியவில்லை.

2024-லிருந்து ஐ.பி.எல்லில் மும்பைக்காக ஆடியிருக்கும் 31 போட்டிகளில் அவர் எடுத்திருக்கும் ரன்கள் 531, சராசரி 20.7. இதே காலகட்டத்தில் இந்தியாவிற்காக ஆடிய 38 போட்டிகளில் அவர் எடுத்திருப்பது 940 ரன்கள், சராசரி 33.5.

பவுலிங்கிலும் அவரின் சமீபத்திய ஐ.பி.எல் தரவுகள் இதேரீதியில் தான் இருக்கின்றன. 2024லிருந்து ஐ.பி.எல்லில் மும்பை அணிக்காக 32 ஆட்டங்களில் பந்துவீசி அவர் வீழ்த்தியிருப்பது 28 விக்கெட்கள் தான், எகானமி 10.7.

இதே காலகட்டத்தில் இந்திய அணிக்காக அவர் பந்துவீசிய 44 ஆட்டங்களில் 41 விக்கெட்கள் வீசியிருக்கிறார். எகானாமியும் குறைவு, 8.6 தான்.

சர்வதேச அரங்கில் சாதித்து இந்தியாவிற்காக இருமுறை தொடர்ந்து கோப்பை வெல்லமுடிந்த ஒரு வீரரால் ஐ.பி.எல்லில் அதேபோன்று விளையாட முடியவில்லை எனும் தரவுகள் நிரூபிப்பது ஒன்றுதான். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும்போது அதீத அழுத்தத்தில் இருக்கிறார் என்பதுதான் அது.

‘மும்பை அணி வீரர்கள் மொத்தமாகவே ஒரு அடையாள சிக்கலுக்குள் சிக்கியிருக்கிறார்கள். அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு தங்களால் இலக்கை சேஸ் செய்யமுடியுமா என்கிற சந்தேகம் இருக்கிறது. அந்த அணியின் பவுலர்களுக்கு தங்களால் ஸ்கோரை டிஃபென்ட் செய்யமுடியுமா என்கிற சந்தேகம் இருக்கிறது’ என நேற்றைய ஆட்டம் முடிந்தபின் சொன்னார் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா.

ஹர்திக் பாண்ட்யாவிற்கும் தன்னால் மற்ற மூத்த வீரர்களை அரவணைத்து அணியை வழிநடத்த முடியுமா என்கிற சந்தேகம் நிறையவே இருக்கிறது. அவரின் சந்தேகத்திற்கு விடை தெரிந்தால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU