Home தேசிய national tamil விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – அடையாளம் காணப்படாத 23 உடல்கள்

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – அடையாளம் காணப்படாத 23 உடல்கள்

14
0

SOURCE :- BBC NEWS

தீவிபத்து ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை

(எச்சரிக்கை: இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்த நிலையில் ஆறு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வாச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டனார்பட்டி பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. முன்புற வராண்டாவில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தால் மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் சிதறி சேதமடைந்ததுடன், சில கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாகின.

விபத்து ஏற்பட்ட பகுதி

ஞாயிற்றுக்கிழமை நடந்த விதிமீறல்

“இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் , ஆலையின் முன்புற வராண்டா பகுதியில் பட்டாசு உற்பத்தி மற்றும் மூலப்பொருள் கையாளும் பணிகள் குறைவான பணியாளர்களுடன் நடைபெற்றது” என மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் பிபிசி தமிழிடம் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் கூறும் போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பட்டாசு ஆலையில் தொழிலாளர்களை பணி அமர்த்தியது விதிமீறல் என குறிப்பிட்டார்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். முதல் கட்ட தகவல்களின்படி 23 பேரின் உடல்களை மீட்டதாக கணேசன் கூறினார்.

மேலும் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), சாரதா (40), திருத்தங்கலைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56), சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்த வீரபத்திரன் (45), இவரது மனைவி சங்கிலித் தங்கம் (40), கோவிந்தன் நல்லூரைச் சேர்ந்த அருண்குமார் (23) ஆகியோர் பலத்த காயமடைந்தததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குப் பின்னரும் இடைவிடாமல் பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டது. முழுமையான விவரங்கள் மீட்பு பணிகள் நிறைவடைந்த பிறகே தெளிவாக தெரியவரும் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் கூறினார்.

மீட்புப் பணிகள்

உடல்களை அடையாளம் காண முயற்சி

கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் அதே மாவட்டத்தில் இவ்வளவு பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய பட்டாசு ஆலை விபத்தாகவும் இது கருதப்படுகிறது.

பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,”பட்டாசு ஆலைகளில் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதே முதல் விதிமீறல்தான்” என்றார். மேலும் ஆலை உரிமம் பெற்றே இயங்கி வந்ததாக கூறிய அவர், வேறு விதிமீறல்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகக் கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், உயிரிழந்தவர்களில் எத்தனை ஆண்கள், பெண்கள் என்பதை அடையாளம் காணும் முயற்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ பணியாளர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா செய்தியாளரிடம் பேசுகையில், “வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உரிமையாளர் போர்மேன் ஆகியோர் தலைமறைவாக உள்ளதால் அவர்களை பிடிப்பதற்கு நான்கு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

உரிமம் இல்லாமல் இயங்கும் பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரித்தார்.

“உயரும் மூலப்பொருட்களின் விலை”

தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை விற்பனை செய்பவரான மாரிச்சாமி பிபிசி தமிழிடம் பேசுகையில், ஒரு வாரத்திற்கு அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது என்றார்.

ஏற்கெனவே இரான் போர் காரணமாக சல்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறிய அவர், சட்டமன்றத் தேர்தல் காரணமாகவும் இந்த ஒரு வார விடுமுறை அமலாக இருப்பதாக கூறினார்.

எனவே பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தி நடைபெறுவதை பார்க்க முடிகிறது என்று அவர் கூறினார்.

முதல்வர், பிரதமர் இரங்கல்

விபத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை கேட்டுக்கொண்டுள்ளேன். மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU