Home தேசிய national tamil ‘விண்ணப்பித்த 2 நிமிடங்களில் நிராகரிப்பு’: வேலை கிடைப்பதை ஏஐ நேர்காணல் கடினமாக்குகிறதா?

‘விண்ணப்பித்த 2 நிமிடங்களில் நிராகரிப்பு’: வேலை கிடைப்பதை ஏஐ நேர்காணல் கடினமாக்குகிறதா?

18
0

SOURCE :- BBC NEWS

பல வேலை விண்ணப்பங்கள் மனிதர்களால் பார்க்கப்படுவதே இல்லை என்று புவனா சிலுகுரி உறுதியாக நம்புகிறார்.

“இது இயந்திரத்தனமானது. இது கொடூரமானது,” என்கிறார் புவனா சிலுகுரி – 100-க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்து, ஒவ்வொன்றிலும் நிராகரிக்கப்பட்ட மூன்றாம் ஆண்டு வணிகவியல் மாணவி.

“நான் விண்ணப்பித்த சில தருணங்களில், இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திலேயே எனக்கு நிராகரிப்பு செய்தி வந்தது, இது உண்மையிலேயே மிகவும் மோசமானது,” என்கிறார் 20 வயதான அவர்.

புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை அதிகளவில் பயன்படுத்துவதால், தனது விண்ணப்பங்களில் மிகச் சிலவற்றை மட்டுமே மனிதர்கள் பார்க்கிறார்கள் அல்லது எதுவுமே பார்க்கப்படுவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

“முதல் படி செயற்கை நுண்ணறிவு உங்கள் சுயவிவரக் குறிப்புகளை (Curriculam Vitae) பரிசீலிப்பதாகும். அந்த நிலையிலேயே நீங்கள் மிக விரைவாக நிராகரிக்கப்படலாம். அடுத்த செயல்முறை ஒரு ஏஐ வீடியோ நேர்காணலாக இருக்கலாம்,” என்கிறார் புவனா.

பல பணி அனுபவங்கள் மற்றும் இன்டர்ன்ஷிப் காலங்கள் இருந்தபோதிலும், இந்த கோடையில் லண்டனில் உள்ள குயீன் மேரி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும்போது சேருவதற்கு ஒரு வேலையை அவரால் இன்னும் உறுதி செய்ய முடியவில்லை.

அவரின் விரக்தி அவரது வயதிலுள்ள பலராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு வேலை என்ற ஏணியின் முதல் படி எட்டாத உயரத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது.

பெருந்தொற்றுக்கு பிந்தைய உச்சத்திலிருந்து வேலை காலியிடங்கள் பாதியாகக் குறைந்துவிட்டன,

நிறுவனங்கள் ஆட்களை வேலைக்கு சேர்க்கும்போது, பெருமளவிலான விண்ணப்பங்களைச் சலித்தெடுக்க உதவ அவர்கள் ஏஐ-யை நோக்கித் திரும்புகிறார்கள். லிங்க்ட் இன் (LinkedIn) சமீபத்திய தரவுகளின்படி, பிரிட்டனில்(UK) வேலைவாய்ப்பு வழங்குநர்களில் சுமார் 89% பேர் இந்த ஆண்டு பணியமர்த்தல் செயல்பாட்டில் அதிகமாக ஏஐ-யைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

புவனாவைப் பொறுத்தவரை, இதன் பொருள் வேலைவாய்ப்பு இணையதளங்களில் நுழைந்து, அவை கேட்கும் கேள்விகளுக்குத் தனது சொந்த பிம்பத்தையே திரையில் பார்த்தபடி பதில்களை வீடியோவாகப் பதிவு செய்வதாகும்.

“நான் ஒரு ரோபோவைப் போல உணரத் தொடங்குகிறேன், ஏனென்றால் திரையில் உங்களையே நீங்கள் பார்க்கிறீர்கள், கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்குக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறீர்கள். நீங்கள் ஒருவிதமான சலிப்பான தொனிக்கு மாறுகிறீர்கள். நீங்கள் யாரிடமும் பேசுவதில்லை, அது உங்கள் ஆளுமையைப் பறித்துவிடுகிறது. இது மிகவும் வருத்தமானது,” என்று அவர் கூறுகிறார்.

வேலைவாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

பதிலடி கொடுத்தல்

உலகின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு நிபுணர்களில் ஒருவரான நிறுவனத்தின் தலைவர், ஏஐ மூலமான நேர்காணல் செயல்முறை மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்டார்.

“ஒரு வேலைவாய்ப்பைப் பெற மக்கள் சராசரியாக 200 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியுள்ளது,” என்கிறார் ஆள் தேர்வு முன்-பரிசீலனையில் ஏஐ-யைப் பயன்படுத்தும் அடெக்கோ குரூப் தலைமை நிர்வாக அதிகாரி டெனிஸ் மச்சுவல்.

“ஏஐ கொண்டு வருவது அளவுகோலைத் தான் (scale). முன்பு, நீங்கள் 50 பேரைத் தொடர்புகொள்வீர்கள், அதில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பீர்கள், எனவே 49 பேர் விரக்தியடைவார்கள். இப்போது, நீங்கள் 500 பேரை தொடர்புகொண்டால், நீங்கள் 499 பேரை விரக்தியடையச் செய்கிறீர்கள்,” என்கிறார் அவர்.

நிறுவனங்கள் ஏன் பணியமர்த்தல் செயல்பாட்டில் ஏஐ-யைப் பயன்படுத்துகின்றன என்பதையும், சில வேலை தேடுவோர் ஏன் அதையே பயன்படுத்திப் பதிலடி கொடுக்கிறார்கள் என்பதையும் தான் புரிந்துகொள்வதாகப் புவனா கூறுகிறார்.

“அவர்களுக்கு விண்ணப்பங்கள் வெள்ளம் போல் குவிகின்றன. அதனால் நான் அவர்களைக் குறை சொல்லவில்லை. ஆனால் மாணவர்கள் சோம்பேறிகளாக மாறும் ஒரு கட்டம் வருகிறது. ‘நீங்கள் ஏஐ கொண்டு பரிசீலித்தால், நான் ஏஐ கொண்டு விண்ணப்பிப்பேன்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்புகளை (CV) எழுத ஏஐ-யைப் பயன்படுத்துகிறார்கள். நான் அவர்களையும் குறை சொல்லவில்லை. அனைவரும் இதைப் புரிந்துகொள்ள முயல்கிறார்கள்,” என்கிறார் அவர்.

மிஷ்கான் டி ரேயா எனும் சட்ட நிறுவனம், கடந்த முறை 35 இடங்களுக்கு 5,000 விண்ணப்பங்களைப் பெற்ற பிறகு ஏஐ-யை நாடும் பல நிறுவனங்களில் ஒன்றாகும்.

“எங்களிடம் அதிக சட்டப் பட்டதாரிகள் உள்ளனர், குறைவான பட்டதாரி பணியிடங்களே உள்ளன. விண்ணப்பங்களை எழுத ஏஐ-யைப் பயன்படுத்தும் அதிகமான விண்ணப்பதாரர்கள் எங்களிடம் உள்ளனர்,” என்கிறார் அந்த நிறுவனத்தின் ஆரம்பகால தொழில் மேலாளர் டாம் விக்ஸ்டெட்.

“எனவே ஒரு முதலாளியாக எங்களுக்கு விண்ணப்பங்களின் மிகுதி ஏற்பட்டுள்ளது, அந்த விண்ணப்பங்களுக்கு இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிவது கடினமாக உள்ளது,” என்கிறார் அவர்.

அவர்கள் பிரைட் நெட்வொர்க் எனும் பட்டதாரி தொழில் ஆலோசகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஏஐ சாட்பாட்டை சோதித்து வருகிறார்கள். இது ஆரம்ப கட்டங்களில் விண்ணப்பதாரர்களைப் பரிசீலித்து, உண்மையான நேரத்தில் தொடர்ச்சியான கேள்விகளைக் கேட்கிறது. இந்த கருவி, ஏஐ மூலம் எழுதப்பட்டிருக்கக் கூடிய விண்ணப்பத்தின் பகுதிகளைக் கூட முன்னிலைப்படுத்தும்.

பிரச்னைகளை பேசுவோம்

விண்ணப்பதாரர்களிடமிருந்து இதுவரை தங்களுக்குக் கிடைத்துள்ள கருத்துகள் நேர்மறையானவை என்று விக்ஸ்டெட் வலியுறுத்துகிறார். ஏஐ பணியமர்த்தல் கருவிகள் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் மிகவும் நியாயமானதாக மாற்றக்கூடும் என்று கூறுகிறார்.

“எந்தவொரு பணியமர்த்தல் செயல்பாடும் பாகுபாடற்றது என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறுகிறார். “எனவே ஏஐ என்ன செய்யக்கூடும் என்றால், பழைய முறையை விட மிகவும் நிலையானதாகவும், மிகவும் நியாயமானதாகவும் இருக்க முடியும்.”

செயல்பாட்டின் பிந்தைய கட்டத்தில் மனித நேர்காணல் செய்பவர்கள் இன்னும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்வார்கள் என்றும், வேலைக்கு எடுப்பது குறித்த இறுதி முடிவை அவர்களே எடுப்பார்கள் என்றும் அவர் அழுத்தமாகக் கூறினார்.

“மனிதர்களை போல ஏஐ அதே முடிவுகளை எடுக்க முடியுமா, அல்லது அதைவிடச் சிறந்த, மிகவும் நிலையான முடிவுகளை எடுக்க முடியுமா என்பதைத் தான் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்கிறார் அவர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...   https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

புவனாவைப் பொறுத்தவரை இயந்திரங்கள் மனிதர்களுக்கு ஈடாக முடியாது.

“நான் ஏஐ-யை நம்பவில்லை, நான் எப்போதும் ஒரு மனிதரையே நம்புவேன் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த மனிதரைச் சந்திப்பதற்கான வாய்ப்பைப் பெறுவது கடினமாக உள்ளது,” என்கிறார் அவர்.

வருங்கால ஊழியர்களுக்கும் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கும் சிறந்த முடிவைப் பெற ஏஐ மற்றும் மனிதர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அடெக்கோவின் டெனிஸ் மச்சுவல் கூறுகிறார்.

“என்ன நடக்க வேண்டும் என்றால், சரியான தருணத்தில் ஏஐ-யின் புத்திசாலித்தனத்தைச் செயல்பாட்டில் புகுத்த வேண்டும், அதன் மூலம் ஏஐ-யின் செயல்திறனை மனிதர்களின் முடிவு மற்றும் மனிதத் தன்மையுடன் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். “அந்தக் கலவைதான் இந்தப் பந்தயத்தில் வெற்றி தேடித் தரும்.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU