Home Latest news tamil சமீபத்திய செய்தி ஆர்டெமிஸ்-2: 40,000 கி.மீ வேகத்தில் பூமிக்கு வரும் விண்கலன் 32 கி.மீ வேகத்தில் தரையிறங்குவது எப்படி?

ஆர்டெமிஸ்-2: 40,000 கி.மீ வேகத்தில் பூமிக்கு வரும் விண்கலன் 32 கி.மீ வேகத்தில் தரையிறங்குவது எப்படி?

42
0

SOURCE :- BBC NEWS

ஆர்டெமிஸ்-2 பூமிக்குள் எவ்வாறு நுழைந்து, பாதுகாப்பாக தரையிறங்கும்?

பட மூலாதாரம், NASA

மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய பிறகும், மிகவும் ஆபத்தான கட்டங்களில் ஒன்றை ஆர்டெமிஸ்-2 குழு இன்னும் நிறைவு செய்ய வேண்டியுள்ளது. பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்புவதே அந்த ஆபத்தான கட்டம்.

அவர்கள் பயணிக்கும் ஓரியான் விண்கலமானது, அமெரிக்க கிழக்கு நேரப்படி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் (இந்திய நேரப்படி நாளை அதிகாலை சுமார் 5 மணிக்கு), சான் டியாகோவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் தரையிறங்கத் திட்டமிட்டுள்ளது. இது ஸ்ப்லாஷ்டவுன் என்று அழைக்கப்படுகிறது.

“கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நாங்கள் இந்தப் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே, பூமிக்குள் மீண்டும் நுழைவது குறித்து நான் சிந்தித்து வருகிறேன்,” என்று ஆர்டெமிஸ்-2 குழுவின் விமானியான விக்டர் க்ளோவர் சமீபத்தில் விண்வெளியில் இருந்து செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

மேலும் அவர், “நாங்கள் கடந்து வந்த அனுபவங்களை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளும் முயற்சியைக்கூட நான் இன்னும் தொடங்கவில்லை. அத்துடன், வளிமண்டலத்தின் ஊடாக ஒரு ‘நெருப்புப் பந்து’ போலப் பயணித்து வருவது மிகவும் பிரமிக்கத் தக்கதோர் அனுபவமாக இருக்கும்,” என்றும் கூறினார்.

விண்கலம் பூமிக்குள் எப்படி நுழையும்?

விண்வெளியில் தங்கள் கடைசி நாளில், ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்புவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைவதற்கும் கடலில் தரையிறங்குவதற்குமான அனைத்து வழிமுறைகளையும் கவனமாகப் பகுப்பாய்ந்தனர்.

விண்வெளியில் இருந்த பிறகு, மீண்டும் புவியின் ஈர்ப்பு விசைக்குத் திரும்பும்போது ஏற்படக்கூடிய தலைச்சுற்றலைத் தவிர்க்க உதவும், கம்ப்ரஷன் ஆடைகள் எனப்படும் சிறப்பு உடைகளையும் அவர்கள் அணிந்து சரிபார்த்தனர்.

ஓரியான் விண்கலம் பூமியின் வளிமண்டலத்தின் மேல் பகுதியை அடைவதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பு, விண்கலத்தின் இரு பாகங்களான க்ரூ மாட்யூல் (விண்வெளி வீரர்கள் அமரும் இடம்) மற்றும் சர்வீச் மாட்யூல் இரண்டும் பிரிக்கப்படும்.

இதற்குப் பிறகு, வெப்பக் கவசம் முன்னோக்கிப் பார்க்கும் வகையில் விண்கலன் திருப்பப்படும். விண்கலம் மிக அதிக வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது உருவாகும் கடுமையான வெப்பத்தின் முழு தாக்கத்தையும் தாங்கிக் கொண்டு, இந்த வெப்பக் கவசம் விண்வெளி வீரர்களைப் பாதுகாக்கிறது.

வளிமண்டலத்திற்குள் நுழைவதற்கு சுமார் பதினான்கரை நிமிடங்களுக்கு முன்பு, தேவைப்பட்டால், விண்கலம் அதன் பாதையில் ஒரு சிறிய இறுதி சரிசெய்தலை மேற்கொள்ளும். இது, விண்கலம் சரியான கோணத்தில் உள்ளே நுழைகிறதா என்பதை உறுதிசெய்ய உதவுகிறது.

ஆர்டெமிஸ்-2 பூமிக்குள் எவ்வாறு நுழைந்து, பாதுகாப்பாக தரையிறங்கும்?

பட மூலாதாரம், NASA

ஏனெனில், விண்கலம் வளிமண்டலத்திற்குள் நுழையும் கோணம் மிகவும் முக்கியமானது.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஹைப்பர்சோனிக்ஸ் மையத்தின் மூத்த விரிவுரையாளரான கிறிஸ் ஜேம்ஸ், பிழை நிகழ்வதற்கான வாய்ப்பு மிக மிகச் சிறிய அளவிலேயே இருப்பதாகக் கூறுகிறார். அதாவது, ஒரு டிகிரி கூடவோ குறையவோ இருக்கலாம் என்கிறார் அவர்.

மேலும் அவர், “விண்வெளியில் இருந்து புவியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்குக்குள் நுழையத் தொடங்குவதற்கான குறிப்பிட்ட இடத்தை, அதாவது நுழைவுப் புள்ளியை (entry interface) அடையும்போது, அங்குள்ள சூழல் தாங்கள் எதிர்பார்த்தபடியே துல்லியமாக இருக்கிறதா என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று விளக்கினார்.

அதோடு, “தவறான கோணத்தில் நுழைந்தால், விண்கலம் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடக்கூடும். அதில் சிறிதளவு உந்துவிசை இருந்து, அது மிக உயரமாகச் சென்றால், வளிமண்டலத்தில் இருந்து மீண்டும் வெளியேறிவிடக் கூடும். எனவே, அது மிகவும் துல்லியமாக இருப்பதை குழுவினர் உறுதி செய்ய வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எளிதாகக் கூறுவதெனில், பூமியின் வளிமண்டலத்திற்குள் விண்கலம் மிகச் சரியான கோணத்தில் நுழைய வேண்டும் என்பதே இதன் பொருள். அது மிகவும் செங்குத்தாக நுழைந்தால், கடுமையான வெப்பத்தின் காரணமாக எரிந்துவிடக்கூடும். ஒருவேளை மிகவும் ஆழமற்ற கோணத்தில் நுழைந்தால், வளிமண்டலத்தில் இருந்து வெளியேறி மீண்டும் விண்வெளிக்கே சென்றுவிடக்கூடும். எனவே, பாதுகாப்பாகத் திரும்புவதற்கு அனைத்தும் மிகத் துல்லியமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆர்டெமிஸ்-2 பூமிக்குள் எவ்வாறு நுழைந்து, பாதுகாப்பாக தரையிறங்கும்?

பயணத்தின் மிகவும் தீவிரமான, அபாயகரமான பகுதி

ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் பயண இயக்குநரான ரிக் ஹென்ஃப்லிங், புதன்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஓரியான் விண்கலம் பூமிக்கு மேலே 122 கி.மீ உயரத்தில் நுழைவுப் புள்ளியை அடையும் என்று விளக்கினார். அதோடு, “அப்போதுதான் உண்மையான சுவாரஸ்யம் தொடங்குகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

அதாவது, இந்தப் பயணத்தின் மிகவும் தீவிரமான, அபாயகரமான பகுதி இந்த இடத்தில் இருந்துதான் தொடங்குவதாக அவர் குறிப்பிடுகிறார்.

விண்கலம் வளிமண்டலத்திற்குள் மிக வேகமாகச் செல்லும்போது, அதன் வெப்பக் கவசம் சுமார் 2,700 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் மிக அதிகமான வெப்பநிலையை எதிர்கொள்ளும். இது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தில் கிட்டத்தட்ட பாதியளவாகும்.

ஆர்டெமிஸ் ஒன்றின் ஆளில்லா பயணத்தின்போது வெப்பக் கவசம் கடுமையாகச் சேதமடைந்ததால், அதுகுறித்து மிகுந்த கவலை நிலவியது. ஆனால், விண்கலம் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது அதன் கோணத்தை கவனமாகச் சரிசெய்வதன் மூலம் பொறியாளர்கள் இப்போது நிலைமையை மேம்படுத்தியுள்ளனர்.

விண்கலம் வளிமண்டலத்திற்குள் நுழைந்த தருணத்தில் இருந்து, விண்வெளி வீரர்கள் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்க 13 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் ஹென்ஃப்லிங் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

வளிமண்டலத்திற்குள் நுழைந்த 24 விநாடிகளுக்குப் பிறகு, ஓரியான் விண்கலம் சுமார் ஆறு நிமிடங்களுக்கு பூமியுடனான தொடர்பை முற்றிலுமாக இழந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஏன் நிகழ்கிறது என்பது குறித்து விளக்கிய கிறிஸ் ஜேம்ஸ், “விண்கலம் மிக அதிக வேகத்தில் உள்ளே நுழையும்போது, அது தன்னைச் சுற்றியுள்ள காற்றை மிகவும் சூடாக்குகிறது. இதனால், எலக்ட்ரான்கள் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் அணுக்களில் இருந்து பிரிக்கப்படுகின்றன. இது பிளாஸ்மா எனப்படும் ஒன்றை உருவாக்குகிறது. இது ரேடியோ சிக்னல்களை தடுக்கிறது” எனத் தெரிவித்தார்.

சுருக்கமாகக் கூறுவதெனில், இந்த வெப்பம் விண்கலத்தைச் சுற்றி ஒரு மின்னூட்டப்பட்ட அடுக்கை உருவாக்குகிறது. இந்த அடுக்கு பூமியுடனான தொடர்பை ஒரு குறுகிய நேரத்திற்குத் தடை செய்கிறது.

ஹென்ஃப்லிங்கின் கூற்றுப்படி, இந்த ஆறு நிமிட தொடர்புத் துண்டிப்பு முடிந்தவுடன், ஓரியான் விண்கலம் தரையில் இருந்து சுமார் 46கி.மீ உயரத்தில் இருக்கும் மற்றும் வேகமாகத் தொடர்ந்து கீழே விழுந்துகொண்டிருக்கும்.

“அந்த நேரத்தில் நாங்கள் அது தரையிறங்கப் போகும் இடத்தில் இருந்து சில பத்து மைல்களுக்குள் இருப்போம். மேலும் கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்காக அதன் வேகத்தைக் குறைக்க பாராசூட்டுகளை விரிவடையச் செய்வதே அடுத்த கட்டமாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

ஆர்டெமிஸ்-2 பூமிக்குள் எவ்வாறு நுழைந்து, பாதுகாப்பாக தரையிறங்கும்?

பட மூலாதாரம், AFP via Getty Images

விண்கலம் எவ்வாறு தரையிறங்கும்?

ஓரியான் விண்கலம் மணிக்கு 40,000 கி.மீட்டருக்கும் அதிகமான அதீத வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்.

வேகத்தைக் குறைப்பதற்காக, புவியின் வளிமண்டலத்தையே ஒரு பிரேக் போலப் பயன்படுத்துவதே தரையிறங்குதல் செயல்முறையின் முதல் படி என்று கிறிஸ் ஜேம்ஸ் விளக்கினார்.

ஓரியான் விண்கலம் காற்றியக்கவியல் அல்லாத வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதாவது, அது ஒரு விமானத்தைப் போல மென்மையாக நகராது.

“அதுவொரு பறக்கும் செங்கல் போல வளிமண்டலத்தில் வந்து மோதுகிறது. பின்னர் வளிமண்டலத்தின் இழுவிசையைப் பயன்படுத்தி தனது வேகத்தைக் குறைக்கிறது,” என்று அவர் விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, விண்கலம் வலுவான காற்று எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனால் விரைவாக அதன் வேகம் குறைகிறது. இப்படியாக அதிவேகத்தில் வந்து வளிமண்டலத்தில் மோதும்போது, விண்வெளி வீரர்கள் ‘மிகவும் உலுக்கப்படுவார்கள்” என்று ஜேம்ஸ் கூறுகிறார்.

“ஆளில்லா விண்கலங்களால் மிக விரைவாக, சுமார் ஒரு நிமிடத்தில், வளிமண்டலத்திற்குள் நுழைந்து, சுமார் 100G-க்கள் (இது மிகவும் அதிகமான மற்றும் ஆபத்தான வேகம்) என்ற வலுவான விசையை எதிர்கொள்ள முடியும். ஆனால் மனிதர்களால் அந்த வகையான விசையைத் தாங்க முடியாது,” என்றும் அவர் விளக்கினார்.

ஆர்டெமிஸ்-2 பூமிக்குள் எவ்வாறு நுழைந்து, பாதுகாப்பாக தரையிறங்கும்?

பட மூலாதாரம், NASA

எனவே, விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விண்கலம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது. இது, ஒரு நிமிடத்திற்குப் பதிலாக சுமார் ஐந்து நிமிடங்கள் என்ற அளவில் இந்தச் செயல்முறையை மெதுவாக்குகிறது. இதனால், குழுவினரின் உடல்கள் மீதான விசை குறைந்து, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

விண்கலம் மிகவும் ஆபத்தான பகுதியைப் பாதுகாப்பாகக் கடந்தவுடன், அதன் வேகத்தை மேலும் குறைப்பதற்காக பாராசூட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

“எங்களிடம் இரண்டு ட்ரோக் பாராசூட்டுகள் உள்ளன. அவை விரிவடையும். இது சுமார் 22,000 அடி (6.7கி.மீ) உயரத்தில் நடக்கும். அது விண்கலத்தின் வேகத்தை மணிக்கு சுமார் 200 மைல் (322கி.மீ) ஆகக் குறைக்கும்,” என்று விளக்கினார் ரிக் ஹென்ஃப்லிங்.

ட்ரோக் பாராசூட்டுகள் என்பவை, விண்கலத்தை நிலைப்படுத்தவும் அதன் வேகத்தைக் குறைக்கவும் முதலில் திறக்கப்படும் சிறிய பாராசூட்டுகளாகும்.

அதன் பிறகு, பிரதான பாராசூட்டுகள் திறக்கும். இது “சுமார் 6,000 அடி (1.8கி.மீ) உயரத்தில் நிகழும். இது விண்கலத்தையும் அதிலுள்ள நான்கு பயணிகளையும் பசிபிக் பெருங்கடலில் மணிக்கு 20 மைல் (32கி.மீ) வேகத்தில் மென்மையாக விழச் செய்யும்,” என்று ஹென்ஃப்லிங் கூறுகிறார்.

அதாவது, சிறிய வகை ட்ரோக் பாராசூட்டுகள் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்த பிறகு, பெரிய பாராசூட்டுகள் விரிவடைந்து மேலும் வேகத்தைக் குறைக்கின்றன. இதன் மூலம், விண்வெளி வீரர்கள் கடலில் பாதுகாப்பாகவும் மென்மையாகவும் தரையிறங்க முடியும்.

ஆர்டெமிஸ்-2 பூமிக்குள் எவ்வாறு நுழைந்து, பாதுகாப்பாக தரையிறங்கும்?

பட மூலாதாரம், Getty Images

விண்கலம் கடலில் விழுந்த பிறகு என்ன நடக்கும்?

ஆர்டெமிஸ்-2 திட்டம் முடிவடைந்த பிறகு, விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக, கலிஃபோர்னியா கடற்கரைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் ஒரு மீட்புக் குழு காத்திருக்கும்.

ஓரியான் விண்கலம் நீரில் தரையிறங்கும்போது, அது சரியான நிலையில் தரையிறங்காமல் போகலாம். அது நேராகவோ, தலைகீழாகவோ அல்லது அதன் பக்கவாட்டிலோகூட தரையிறங்கக்கூடும்.

இதைச் சரிசெய்ய, பிரகாசமான ஆரஞ்சு நிறத்திலான சிறப்புக் காற்றுப்பைகள் தானாகவே காற்றால் நிரம்பி, விண்கலத்தை சரியான நேர் நிலைக்குத் திருப்ப உதவுகின்றன. இதன் மூலம் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக வெளியே வர முடியும்.

“விண்கலம் கடலில் தரையிறங்கிய இரண்டு மணிநேரத்திற்குள், குழுவினரை மீட்டு மருத்துவப் பகுதிக்குக் கொண்டு போய்ச் சேர்ப்போம் என எதிர்பார்க்கிறோம்,” என்று கடந்த புதன்கிழமை, ஓரியான் திட்டத்தின் துணைத் திட்ட மேலாளரான டெப்பி கோர்த் கூறினார்.

அதாவது, கடலில் தரையிறங்கிய இரண்டு மணிநேரத்திற்குள், விண்வெளி வீரர்கள் பரிசோதனைகளுக்காக ஒரு மருத்துவக் குழுவிடம் அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும், தரையிறங்கிய 24 மணிநேரத்திற்குள் விண்வெளி வீரர்கள் சான் டியாகோ கடற்படைத் தளத்திற்குத் திரும்புவார்கள் எனவும் அவர் கூறினார்.

பிரச்னைகளை பேசுவோம்

தங்கள் பணியை முடித்த பிறகு, விண்வெளி வீரர்கள் இறுதியாக மீண்டும் திடமான தரையில் நடக்கவும், தங்கள் வாழ்நாளில் மேற்கொண்ட மிக முக்கியமான பயணத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.

இந்தப் பணியை முடிப்பதன் மூலம், அவர்கள் மிகவும் சிறப்பான மற்றும் ஒரு சிறிய குழுவின் அங்கமாவார்கள். வரலாற்றில் இதுவரை 24 விண்வெளி வீரர்கள் மட்டுமே நிலவைச் சுற்றி வந்துள்ளனர்.

“கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததிலேயே இதுதான் மிக வேகமான நுழைவு,” என்று கிறிஸ் ஜேம்ஸ் கூறினார்.

மேலும் அவர், “நாசா விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. அவர்களைப் பாதுகாப்பாகத் திரும்பக் கொண்டு வருவதற்குச் சாத்தியமான அனைத்தையும் செய்கிறது,” என்றும் குறிப்பிட்டார்.

ஆனாலும், “அவர்கள் பூமிக்குத் திரும்பிய பிறகே எனக்கு முழு நிம்மதி கிடைக்கும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

அதாவது, எல்லாம் கவனமாகத் திட்டமிடப்பட்டு இருந்தாலும், விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும் வரையிலும் ஒருவித கவலை இருந்துகொண்டே இருக்கும் என்று கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC