SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Reuters
இரான் உடனான அமெரிக்க – இஸ்ரேல் போரின் இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ஹோர்மூஸ் நீரிணை வழியாக மொத்தம் 18 கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றுள்ளன (பிஎஸ்டி நேரப்படி வெள்ளிக்கிழமை 13:00 வரை) என்று மரைன் ட்ராஃபிக் கண்காணிப்பு இணையதளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மோதல் வெடிப்பதற்கு முன்பு, தினசரி சராசரியாகக் கடந்து சென்ற சுமார் 140 கப்பல்களோடு ஒப்பிடும்போது இது மிகக் குறைவு.
இந்த கப்பல்களில் நான்கு, எண்ணெய், எரிவாயு அல்லது ரசாயனங்களை ஏற்றிச் செல்லும் டேங்கர் ரகக் கப்பல்கள். மற்றவை பல்வேறு வகையான சரக்குக் கண்டெய்னர் கப்பல்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளன.
உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான இதில் “பாதுகாப்பான பயணத்திற்கு” அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பது போர் நிறுத்த நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தபோதிலும், அனுமதி இன்றி பயணிக்க முயலும் கப்பல்கள் “குறிவைக்கப்பட்டு அழிக்கப்படும்” என்று இரான் எச்சரித்துள்ளது.
ஐந்து வாரங்களுக்கு முன்பு மோதல் தொடங்கிய பிறகு, இரான் இந்த நீரிணையைத் தற்காலிகமாக மூடியதால், வளைகுடா பகுதியில் சுமார் 800 கப்பல்கள் சிக்கித் தவிப்பதாகக் கப்பல் போக்குவரத்துப் பகுப்பாய்வு நிறுவனமான லாயிட்ஸ் லிஸ்ட் தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலானவை சரக்குகள் ஏற்றப்பட்ட நிலையில் உள்ளன.
பட மூலாதாரம், MarineTraffic
புவியியல் அமைப்பைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் இரான்
ஃபிராங்க் கார்ட்னர், பிபிசி
இந்த போர் தொடங்குவதற்கு முன்பு, அதாவது வெறும் ஆறு வாரங்களுக்கு முன்பு வரை, இரான் பொருளாதாரத் தடைகளால் முடக்கப்பட்டிருந்தது. அப்போது அது ஹோர்மூஸ் நீரிணையைக் குறிவைக்கவில்லை.
ஆனால் இப்போது, அந்தப் பாதையைப் பயன்படுத்த ஒரு சுங்கக் கட்டணத்தை அது முன்மொழிகிறது. மேலும், கப்பல்களின் சரக்குகளைத் தனது ராணுவம் சோதனை செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறது. இது வளைகுடா நாடுகளுக்கு ஏற்க முடியாத ஒன்று. சுருக்கமாகச் சொன்னால், புவியியல் ரீதியாகத் தனக்குள்ள சாதகத்தைப் பயன்படுத்தி, ஹோர்மூஸ் நீரிணை மீது இரான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
ஹோர்மூஸ் நீரிணையை ராணுவ பலத்தைக் கொண்டு மட்டும் திறந்து வைத்திருப்பது சாத்தியமற்றது. அங்கு ஏராளமான நுழைவுப் பாதைகளும் குகைகளும் உள்ளன. இரான் ஒரே ஒரு ஏவுகணையை மறைத்து வைத்துவிட்டு, தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தினாலே போதும், காப்பீட்டு நிறுவனங்கள் கப்பல் பயணத்திற்கான கட்டணத்தை எக்கச்சக்கமாக உயர்த்திவிடும். அது கப்பல்கள் பயணிக்க முடியாத சூழலை உருவாக்கிவிடும்.
இரான் தனது கடற்படையைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை, அதன் கடற்கரையே அதற்குப் போதுமானது.
பட மூலாதாரம், Islamic Revolutionary Guard Corps
ஹோர்மூஸ் நீரிணையில் கண்ணி வெடிகளைத் தவிர்ப்பது எப்படி?
ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லத் திட்டமிடும் கப்பல்கள், “கடல்சார் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதற்கும், கடல் கண்ணிவெடிகளுடன் ஏற்படக்கூடிய மோதல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கும்” மாற்றுப் பாதைகளை எடுக்க வேண்டும் என்று இரான் புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையை இரான் அரசு ஊடகம் மேற்கோள் காட்டியுள்ளது.
அந்த அறிக்கை மாற்றுப் பாதைகளை விளக்குவதுடன், அவற்றைச் சித்தரிக்கும் வரைபடத்தையும் காட்டுகிறது.
ஓமன் கடலில் இருந்து நுழையும் கப்பல்கள் லாராக் தீவுக்கு வடக்கே பயணம் செய்து, பின்னர் வளைகுடாவை நோக்கித் தொடர வேண்டும்.
மறுபுறம் செல்லும் கப்பல்கள் வளைகுடாவிலிருந்து வெளியேறி, லாராக் தீவின் தெற்கே கடந்து ஓமன் கடலை நோக்கித் தொடர வேண்டும்.
இந்த பாதைகள் இரான் கடற்கரையை ஒட்டி உள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



