SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், NASA via Getty Images
“எந்தவொரு மனிதரும் இதுவரை கண்டிராத காட்சிகளை நாங்கள் கண்டோம்; அபோல்லோ பயணங்களில் சென்றவர்கள்கூட இவற்றைக் கண்டதில்லை.”
இந்த வார்த்தைகளின் மூலம், ஆர்டெமிஸ்-2 பயணத்தின் கமாண்டரான ரீட் வைஸ்மேன், திங்கள் கிழமையன்று நிலவின் மறுபக்கத்தை நோக்கியபோது தானும் மற்ற மூன்று விண்வெளி வீரர்களும் பெற்ற அனுபவத்தை விவரித்தார்.
மனிதர்களை மீண்டும் நிலவைச் சுற்றி வரச் செய்வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாசா இத்தகைய மனிதர்கள் பயணிக்கும் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
இந்தப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம், அந்த விண்வெளி வீரர்கள் மற்றொரு முக்கிய மைல்கல்லையும் எட்டியுள்ளனர். விண்வெளியில் வரலாற்றிலேயே மிக அதிக தொலைவு பயணித்த மனிதர்களாக அவர்கள் இருக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பல்லோ 13 பயணத்தின் மூலம் நிலைநாட்டப்பட்டிருந்த 400,171கி.மீ என்ற முந்தைய சாதனையை அவர்கள் முறியடித்துள்ளனர்.
ஆர்டெமிஸ்-2 விண்கலம் நிலவின் மறுபக்கத்தை அடைவதற்கு முன்னரே, சீனா அங்கு இரண்டு ரோபோட்டிக் ஆய்வுக் கலங்களை அனுப்பியிருந்தது. அவை 2019-இல் அனுப்பப்பட்ட சாங்’இ 4 மற்றும் 2024இல் அனுப்பப்பட்ட சாங்’இ 6 ஆகியவையாகும். சாங்’இ 6 பயணத்தின்போது, நிலவில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்காக அவை பூமிக்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டன.
தற்போது, நிலவை, குறிப்பாக அதன் மறுபக்கத்தை, ஆய்வு செய்வதில் மீண்டும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இப்போது எழும் கேள்வி என்னவெனில், நாடுகள் ஏன் மீண்டும் நிலவின் இந்தப் பகுதியின் மீது அதிக கவனம் செலுத்துகின்றன?
இந்தக் கேள்விக்கும், அது தொடர்பான பிற கேள்விகளுக்கும் இந்தக் கட்டுரை எளிய முறையில் விடையளிக்கிறது.
பட மூலாதாரம், Joe Raedle/Getty Images
பூமியில் இருந்து மறைந்திருக்கும் மறுபக்கம்
பூமியில் இருந்து பார்க்கவே முடியாது என்பதால் நிலவின் மறுபக்கம் ஒரு தனித்துவமான பகுதியாக உள்ளது.
இதன் காரணமாக, நிலவின் அந்தப் பக்கம் எப்போதும் இருட்டாகவே இருக்கும் என்று பலரும் முன்பு நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில், நம்மால் பார்க்கக்கூடிய நிலவின் பக்கத்தைப் போலவே இதற்கும் அதே அளவு சூரிய ஒளி கிடைக்கிறது.
மனிதர்கள் முதன்முதலில் 1959-ஆம் ஆண்டில்தான் இந்த மறைக்கப்பட்ட பக்கத்தின் படங்களைக் கண்டனர். அப்போது, முன்னாள் சோவியத் யூனியனால் அனுப்பப்பட்ட லூனா-3 விண்கலம் அந்தப் படங்களை எடுத்திருந்தது.
அப்படியானால், நிலவின் இந்தப் பக்கத்தை நம்மால் பூமியில் இருந்து ஏன் பார்க்க முடியவில்லை?
அதற்குக் காரணம், பூமியும் நிலவும் தத்தமது அச்சுகளில் சுழல்கின்றன. ஆனால், நிலவு ஒருமுறை சுழல்வதற்கு எடுக்கும் அதே அளவு நேரத்தையே பூமியை ஒருமுறை சுற்றி வருவதற்கும் எடுத்துக் கொள்கிறது. இது ஒத்திசைவான சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.
இதன் காரணமாக, நிலவின் ஒரு பக்கம் மட்டுமே பூமிக்குத் தெரிகிறது. மறுபக்கம் எப்போதும் நம்மிடம் இருந்து மறைந்தே இருக்கிறது.
இது மற்றொரு சிக்கலையும் உருவாக்குகிறது. பூமியில் இருந்து வரும் நமது ரேடியோ சிக்னல்களால் நிலவின் மறுபக்கத்தை நேரடியாகச் சென்றடைய முடியாது. எனவே, அங்கு விண்கலங்களை அனுப்புவத்கு ஆபத்தானது, ஏனெனில் அவற்றுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினமாகிவிடும்.
லெய்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் பார்ஸ்டோவ், பிரிட்டிஷ் நாளிதழான தி கார்டியனுக்கு இதை விளக்கினார்.
அப்போது அவர், “பூமியில் இருந்து மறுபக்கத்துடன் நம்மால் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியாத காரணத்தால், கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கட்டளைகளை அனுப்பவும் தரவுகளைப் பெறவும் மற்றொரு விண்கலத்தை நிலவைச் சுற்றி சுற்றுப்பாதையில் செலுத்த வேண்டும்,” என்று கூறினார்.
எளிதாகக் கூறுவதெனில், பூமிக்கும் மறுபக்கத்தில் உள்ள விண்கலத்திற்கும் இடையே சமிக்ஞைகளை முன்னும் பின்னுமாக அனுப்பும் ஒரு தூதுவனைப் போலச் செயல்பட விஞ்ஞானிகளுக்கு நிலவின் ஒரு கூடுதல் விண்கலம் தேவைப்படுகிறது.
பட மூலாதாரம், NASA via Reuters
நிலவின் மீதான விண்கல் மோதல்
பூமியில் இருந்து நாம் பார்க்கும் நிலவின் மறுபக்கம், அதன் தோற்றத்தில் இருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படுகிறது. அது பழமையான, தடிமனான ஒரு மேலோட்டைக் கொண்டுள்ளது. அதன் மேற்பரப்பு சொரசொரப்பாகவும், பல பள்ளங்கள், மலைகள் நிறைந்ததாகவும் இருப்பதால், அது மேலும் சமமற்றதாகவும், கரடுமுரடானதாகவும் காட்சியளிக்கிறது.
இந்த வேறுபாட்டுக்கான காரணம் குறித்து விஞ்ஞானிகளிடையே ஒரு கருத்து உள்ளது. நிலா உருவாகத் தொடங்கிய ஆரம்பக் கட்டங்களில், பூமி அதன் வெப்பநிலையைப் பாதித்தது. பூமியை நோக்கிய நிலவின் பக்கம் நீண்ட காலத்திற்கு அதிக வெப்பத்துடன் இருந்தது. அதேநேரம் மறுபக்கம் வேகமாகக் குளிர்ச்சியடைந்தது. இதன் காரணமாக, மறுபக்கத்தில் தடிமனான மேலோடு உருவானது.
இந்த வேறுபாடு விஞ்ஞானிகளுக்கு முக்கியமானது. மறுபக்கம் அதன் அசல் அம்சங்களை சிறப்பாகப் பாதுகாத்துள்ளது. எனவே, பூமி போன்ற பாறைக் கோள்கள் எவ்வாறு உருவாகி, காலப்போக்கில் மாறின என்பதைப் புரிந்துகொள்ள இது விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.
கோர்டோபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கலாடி என்ரிக்வெஸ் தி கான்வர்சேஷன் இதழில் வெளியான ஒரு கட்டுரையில், “நிலவின் மறுபக்கம் நாம் காணும் பகுதியில் இருந்து ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பது முழுமையாகத் தெளிவாகவில்லை. ஆனால், முன்வைக்கப்படும் அனைத்து விளக்கங்களும், நிலவின் மறுபக்கத்தில் இருந்து கேட்கவோ, பார்க்கவோ முடியாத, மனிதர்கள் வாழும் ஓர் அசாதாரணமான கிரகமான பூமியின் தாக்கமே இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர்,” என்று எழுதியுள்ளார்.

அதாவது, விஞ்ஞானிகள் முழு உறுதியுடன் கூறவில்லை என்றாலும், நிலவின் இரு பக்கங்களையும் வேறுபடுத்துவதில் பூமி ஒரு முக்கியப் பங்கு வகித்ததாகப் பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.
ஆர்டெமிஸ்-2 விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்பட்ட பணிகளில் ஒன்று, இந்தக் கரடுமுரடான மேற்பரப்பை மேலிருந்து ஆய்வு செய்வதாகும். அவர்கள் தாங்கள் கண்ட அனைத்தையும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்தனர்.
இந்தப் பகுதியில், மாரே ஓரியண்டேல் எனப்படும் மிகப்பெரிய நிலப்பகுதி ஒன்று உள்ளது. இது சுமார் 930கி.மீ அகலம் கொண்டது, நிலவிலுள்ள மிகப்பெரிய மற்றும் இளமையான பள்ளங்களில் ஒன்றாகும். சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பல சிறுகோள்கள் நிலவைத் தாக்கிய ‘லேட் ஹெவி பம்பார்ட்மென்ட்’ எனப்படும் காலகட்டத்தில் இது உருவானது.
ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் முன்னணி விஞ்ஞானியான கெல்சி யங், நேச்சர் இதழிடம், “சூரிய மண்டலம் முழுவதும் விண்கல் மோதல் பள்ளங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஓரியண்டேல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது,” என்று கூறினார்.
அவரது கூற்றுப்படி, இங்குள்ள பள்ளங்களை ஆய்வு செய்வது, பிற கோள்கள் மற்றும் அவற்றின் நிலவுகளில் இதேபோன்ற பள்ளங்கள் எப்படி உருவாகின என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.
தானியங்கி விண்கலங்கள் இதற்கு முன்பு இந்தப் பகுதியைப் புகைப்படம் எடுத்திருந்தாலும், இந்தத் திட்டத்தின் மூலம்தான் மனிதர்கள் முதன்முறையாக இதைத் தங்கள் கண்களால் நேரடியாகப் பார்க்க முடிந்தது.
சமீபத்தில் சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட திட்டங்களும், நிலவின் மறுபக்கம் அதன் அருகிலுள்ள பக்கத்தைவிட 100 டிகிரி செல்ஷியஸ் வரை மிகவும் குளிராக இருப்பதைக் கண்டறிந்துள்ளன. நிலவின் மறுபக்கத்தில் நீர் குறைவாகவே உள்ளது என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் வெளியிட்ட ஒரு கட்டுரையில் சாரா ரஸ்ஸல், “நிலவில் உள்ள பெரும்பாலான நீர், விண்கற்களின் மோதல்கள் மூலமாகவே வந்தடைந்தது என்பதே இதன் முக்கியக் கருத்து,” என்று விளக்கினார்.
அதாவது, நிலவின் மேற்பரப்பில் வெகு காலத்திற்கு முன்பு மோதிய விண்கற்களில் இருந்தே நிலவிலுள்ள நீர் பெரும்பாலும் வந்தடைந்தது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
பட மூலாதாரம், China News Service/VCG via Getty Images
சுரங்கம் மற்றும் விண்வெளி தளம்
நிலவின் மறுபக்கம் விண்வெளி ஆய்வின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாக மாறக்கூடும்.
இந்தப் பகுதியை ஆய்வு செய்வதன் மூலம், நிலவுத் தூசு எவ்வாறு நகர்கிறது, நிலவில் நிழல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள முடியும். எதிர்கால விண்வெளி தளங்களை வடிவமைப்பதற்கும், விண்வெளி வீரர்கள் நீண்டகாலம் தங்கும் பயணங்களைத் திட்டமிடுவதற்கும் இந்தத் தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.
உதாரணமாக, ஐரோப்பிய விண்வெளி நிலையம் நிலவின் மறுபக்கத்தில் ஒரு நிரந்தர தளத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் தளம் பிரபஞ்சத்தைக் கண்காணிக்கவும், செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் எதிர்காலப் பயணங்களுக்கு ஓர் இடைநிறுத்தப் புள்ளியாகவும் செயல்படக்கூடும்.
நிலவின் மறுபக்கம் ரேடியோ சிக்னல்கள் இல்லாமல் அமைதியாக இருப்பதும் ஒருவகையில் நன்மை பயக்கும் விஷயமாக கருதப்படுகிறது. பூமியில் இருந்து வரும் ரேடியோ சிக்னல்கள் அங்கு எளிதில் சென்றடைய முடியாத காரணத்தால், ரேடியோ தொலைநோக்கிகளை நிறுவி விண்வெளியை ஆராய்வதற்கு இதுவொரு சரியான இடமாக இருக்கும். இந்தத் தொலைநோக்கிகள் பூமியின் ரேடியோ சிக்னல்களுடைய குறுக்கீடு இல்லாமல் விண்வெளியை ஆய்வு செய்ய முடியும்.

நிலவின் மறுபக்கம், ஹீலியம்-3 எனப்படும் ஒரு சிறப்பு வாயுவை கொண்டிருக்கக்கூடும் என்பதாலும் உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வாயு அடுத்த 10,000 ஆண்டுகளுக்கு பூமியின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுமென விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேலும், இந்தப் பகுதியின் மேற்பரப்புக்குக் கீழே அரிய தனிமங்களும் பிற மதிப்புமிக்க கனிமங்களும் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இவை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியமானவையாகவும், அதிக பொருளாதார மதிப்பு கொண்டவையாகவும் உள்ளன.
இந்தக் காரணங்கள் அனைத்தும், நிலவுக்குத் திரும்பிச் செல்வதற்கான ஆர்வம் ஏன் மீண்டும் ஏற்பட்டுள்ளது என்பதை விளக்குகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்காவும் சீனாவும் மட்டுமின்றி, இந்தியாவும் ரஷ்யாவும் நிலவுக்குப் பயணங்களை மேற்கொண்டுள்ளன. மேலும் அவை எதிர்காலத்தில் இன்னும் பல பயணங்களைத் திட்டமிட்டு வருகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



