Home தேசிய national tamil ‘கடையை மூடுவதில் தொடங்கிய பிரச்னை’ – சாத்தான்குளம் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? முழு பின்னணி

‘கடையை மூடுவதில் தொடங்கிய பிரச்னை’ – சாத்தான்குளம் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? முழு பின்னணி

5
0

SOURCE :- BBC NEWS

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

சாத்தான்குளத்தில் 58 வயதான ஜெயராஜும் 31 வயதான அவரது மகன் பென்னிக்சும் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தனர்.

பொது முடக்கத்தின் காரணமாக கடைகள் திறப்பதற்கு நேர வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில், 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடுவது தொடர்பாக பென்னிக்சுக்கும் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.

இதற்குப் பிறகு, ஜெயராஜை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரைத் தேடி அவரது மகன் பென்னிக்சும் அங்கே சென்றார். அவரும் அங்கே அடைக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு இவர்கள் இருவரையும் ஜூன் 21ஆம் தேதி கோவில்பட்டி துணைச் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே “தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திங்கட்கிழமை இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
தண்டனை அறிவிக்கப்பட்ட அன்று நீதிமன்றம் வந்திருந்த ஆய்வாளர் ஸ்ரீதர்

“ஜூன் 22ஆம் தேதி, திங்கள்கிழமை மாலை நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பென்னிக்சை பணியில் இருந்த வார்டன்கள் மீட்டு துணைச் சிறையின் கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், இரவு 9 மணியளவில் அவர் இறந்துவிட்டார். அதற்கு சிறிது நேரத்திலேயே பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார்” என சிறை அதிகாரிகள் அந்தத் தருணத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாத்தான்குளத்தில் போராட்டத்தில் இறங்கினர்.

இவர்களுக்கு ஆதரவாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இருவர் உயிரிழப்புக்கு காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினார்.

ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ்

காவல்துறை மீது நடவடிக்கை?

இந்த விவகாரம் மாநிலம் தழுவிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு உதவி ஆய்வாளர்களும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

காவல்நிலையத்தில் பணியாற்றிய அனைவருமே முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தானாகக் கையில் எடுத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது.

காவல்துறையினரால் தாக்கப்படுவது கொரோனா பெருந்தொற்றைப் போல பரவியிருக்கிறது என்றும் இந்த விவகாரத்தை தாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்த விவகாரம் குறித்து விசாரிக்கச் சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசனுக்கு அங்கிருந்த காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்பதோடு, ஒரு காவலர் அவரிடம் மிக மோசமாகப் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

நீதித் துறை நடுவர் பாரதிதாசன் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார்.

பிறகு சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஆதாரங்களை பாதுகாக்கவும், போலீஸ் தலையீட்டைத் தடுக்கவும், வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு

பட மூலாதாரம், Getty Images

சிபிஐயிடம் சென்ற வழக்கு

பிறகு இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில் இரு கட்டங்களாக 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்தது.

மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டன.

மரண தண்டனை

இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு மார்ச் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

அதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தவிர, குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.

தண்டனை விவரங்களை அறிவிக்கும்போது இது அரிதினும் அரிதான வழக்கு என நீதிபதி கூறினார்

”இப்படி ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, 14 வருடங்களில் வெளியில் வந்துவிடலாம் என அவர்கள் நினைக்கலாம். ஆனால், அப்படி விட்டுவிட நீதிமன்றம் தயாராக இல்லை” என்று நீதிபதி கூறினார்.

”பென்னிக்சின் தாயாரின் துக்கத்தை யாரும் தீர்க்க முடியாது. ஒரு குடும்பத்தின் ஆணி வேரே பிடுங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது.” என்றார் நீதிபதி.

பென்னிக்சின் தாய் மற்றும் சகோதரி

பட மூலாதாரம், Handout

தண்டனை விவரங்கள் என்ன?

முதல் குற்றவாளி ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது தவிர, பல சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, 3 ஏழாண்டு சிறை, மூன்றாண்டு சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 24,10,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றவாளி, பாலகிருஷ்ணனுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழே ஒராண்டு, ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை மரண தண்டனையும் 16,80,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மூன்றாவது குற்றவாளி ரவி கணேஷுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஓராண்டு, ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை தூக்கு தண்டனையும் 5,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. நான்காவது குற்றவாளியான தலைமைக் காவலர் முருகனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 10,10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஐந்தாவது குற்றவாளி சாமிதுரைக்கு இரட்டை மரண தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 5,60,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆறாவது குற்றவாளி முத்துராஜாவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை தண்டனை, மூன்று ஏழாண்டு சிறை தண்டனை, ஒரு மூன்றாண்டு சிறை தண்டனை, இரட்டை மரண தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 3,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஏழாவது குற்றவாளி செல்லதுரைக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 14,40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எட்டாவது குற்றவாளி தாமஸ் பிரான்சிஸிற்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஒன்பதாவது குற்றவாளி வெயில் முத்துவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

பிரச்னைகளைப் பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

குறுங்காணொளிகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

  •  பூமியுடன் 40 நிமடங்களுக்கு தொடர்பை இழக்கும் ஆர்டெமிஸ் குழு

  •  குற்றவாளிகளில் ஒருவர்

  • மாநிலங்களவையில் பதவி ஏற்ற  தமிழக எம்.பிக்கள்

  • தாய்லாந்து: குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிய காரணம் காற்று மாசுபாடா?

  • காணொளி: ஏவுகணை தாக்குதல் காரணமாக இஸ்ரேல் தெருக்களில் வெள்ளம்

  • காணொளி: இரானில் ராணுவ நிலையம் அருகே பெரிய வெடிப்பு

  • 'இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்' - என்ன நடந்தது?

  • வளைவில் கவிழ்ந்த டிராக்டர் - நூலிழையில் தப்பிய நபர்

  • நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் கலர் படம்

  •  இரானில் மிகப்பெரிய பாலத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்

  • காணொளி: மனைவி குறித்த டிரம்பின் கருத்துக்கு மக்ரோங் பதில்

  • விமானத்தில் இருந்தபடி ஆர்டெமிஸ்-2 ஏவுதலை ரசித்த பயணிகள்

  • காணொளி: கிரீஸ் நாட்டில் ஆரஞ்சு நிறமாக மாறிய வானம்

  • காணொளி: விண்வெளியில் எவ்வாறு கழிவறையை பயன்படுத்துகிறார்கள்?

  • 'அதுதான் அவர்களுக்குரிய இடம்' -  இரான் பற்றி டிரம்ப் பேசியது என்ன?

  • ஆளூர் ஷாநவாஸுக்கு ஏன் சீட் வழங்கப்படவில்லை - திருமாவளவன் விளக்கம்

  • இரானில் முக்கிய தளங்கள் கொண்ட நகரத்தில் பெரும் வெடிப்பு

  • Keyframe #4

  • திமிங்கிலம்

  • விபத்து

SOURCE : THE HINDU