Home தேசிய national tamil ஹாட்ரிக் தோல்வி: சிஎஸ்கே அணிக்கு நெருக்கடிக்கு மத்தியில் தெரியும் தூரத்து வெளிச்சம்

ஹாட்ரிக் தோல்வி: சிஎஸ்கே அணிக்கு நெருக்கடிக்கு மத்தியில் தெரியும் தூரத்து வெளிச்சம்

10
0

SOURCE :- BBC NEWS

தொடர்ந்து மூன்றாவது தோல்விக்கு வித்திட்ட விரீயமற்ற சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு

பட மூலாதாரம், Getty Images

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து மூன்றாவது போட்டியாக தோல்வியை சந்தித்திருக்கிறது. 250 என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த சூப்பர் கிங்ஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது.

டாஸ் மற்றும் பந்துவீச்சின்போது முதல் 6 ஓவர்கள் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தன. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஓரளவு சாதகமாக இருக்க, சிஎஸ்கே பௌலர்கள் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். அதிகம் விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும் சிக்கனமாகப் பந்துவீசினார்கள். பவர்பிளேவில் ஆர்சிபி அணி 51 ரன்களே எடுத்தது.

ஆனால், அதன்பிறகு எதுவுமே சூப்பர் கிங்ஸுக்கு சாதகமாகச் செல்லவில்லை. பவர்பிளேவில் அவ்வளவு சிறப்பாகப் பந்துவீசிவிட்டு கடைசியில் 250 ரன்கள் விட்டுக்கொடுப்பது என்பது மிகவும் ஏமாற்றம் தடுவதாக இருந்தது. சிஎஸ்கே-வுக்கு பேட்டிங் பலமாக இருக்கிறது, பந்துவீச்சுதான் பிரச்னை என்று முன்பே பேசியிருக்கிறோம். ஆனால், இப்படியான செயல்பாடு மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கிறது.

சூப்பர் கிங்ஸ் பௌலர்களால் சரியான லென்த்தில் பந்தை பிட்ச் செய்ய முடியவில்லை. சீராக அவர்களால் செயல்பட முடியவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது ‘X Factor’ என்பதே இந்த அணியின் பந்துவீச்சில் இல்லை. நூர் அஹமதுக்கு இந்த ஆடுகளத்தில் பந்து சுழலவில்லை. அதனால் அவரை ஆர்சிபி பேட்டர்கள் எளிதாகக் கையாண்டுவிட்டார்கள்.

தொடர்ந்து மூன்றாவது தோல்விக்கு வித்திட்ட விரீயமற்ற சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு

பட மூலாதாரம், Getty Images

அதேசமயம் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரேமாதிரியாகவே செயல்படுகிறார்கள். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அஷோக் ஷர்மா மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுகிறார். லக்னோ அணியில் கூட பிரின்ஸ் யாதவ் மிரட்டலாக செயல்படுகிறார். அதுபோன்ற பௌலர்கள் சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை. அனைவருமே மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுபவர்களாகவே இருக்கிறார்கள். அதிவேகம் இல்லை, வேரியேஷன்கள் இல்லை – இதெல்லாம் இன்று டி20 கிரிக்கெட்டில் மிகவும் முக்கியம்.

பேட்டர்களின் அதிரடிக்கு சிஎஸ்கே பந்துவீச்சாளர்களிடம் பதிலே இருப்பதாகத் தெரியவில்லை. நிறைய பந்துகளை ஸ்லாட்டிலேயே வீசினார்கள். யார்க்கர்கள் அதிகம் வீசவில்லை. அன்ஷுல் கம்போஜ் ஒரு யார்க்கரை மிகச் சிறப்பாக வீசினார். ஆனால், அதுவும் நோ பாலாக மாறிவிட்டது.

சூப்பர் கிங்ஸ் பௌலர்களின் வீரியமற்ற பந்துவீச்சை ஆர்சிபி பேட்டர்களும் இதை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். தேவ்தத் படிக்கல் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடினார். அந்த ஃபார்மை தற்போது ஐபிஎல் அரங்கில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். சால்ட் ஒரு நல்ல தொடக்கம் கொடுத்திருந்தார். கேப்டன் ரஜத் பட்டிதார் ஒரு மிகமுக்கிய வீரராக அந்த அணிக்கு உருவாகியிருக்கிறார். கடைசி கட்டத்தில் டிம் டேவிட் ஒவ்வொரு பந்தையுமே மாயமாக மறைய வைத்துக் கொண்டிருந்தார். அந்த அணியின் ஒவ்வொரு பேட்டருமே இந்தப் போட்டியில் அனுபவித்து பேட்டிங் செய்தனர்.

இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது, பெரிய ஸ்கோர் எடுக்கக்கூடியது என்றாலும், 250 என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே அல்ல.

சூப்பர் கிங்ஸ் பௌலர்களால் விக்கெட் எடுக்கவும் முடியவில்லை. ரன்களைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. எதிரணி பேட்டர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவும் முடியவில்லை. அவர்கள் இந்தப் போட்டிகளில் எந்தவித நேர்மறையான தாக்கத்தையுமே ஏற்படுத்திடவில்லை.

தொடர்ந்து மூன்றாவது தோல்விக்கு வித்திட்ட விரீயமற்ற சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு

பட மூலாதாரம், Getty Images

இந்த பௌலிங் செயல்பாட்டுக்குப் பிறகு தான் மீண்டும் அவர்கள் ஏலத்தில் எடுத்த முடிவுகள் மீது பார்வை திரும்புகிறது. இரண்டு இளம் வீரர்களை வாங்கியது நல்ல விஷயம் தான். ஆனால், இருவருக்கும் தலா 14.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. குறைந்தபட்சம் ஒருவரை மட்டும் அவ்வளவு செலவு செய்து வாங்கிவிட்டு, மீதித் தொகையை ஒரு தரமான பந்துவீச்சாளரில் முதலீடு செய்திருக்கலாம். அதிவேகமாக வீசும், வேரியேஷன்கள் காட்டும் ஒரு பௌலரை வாங்க அந்தத் தொகையை முதலீடு செய்திருக்கலாம். ஏலத்தில் அப்படி நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், சிஎஸ்கே அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறவிட்டது.

இதற்கு நேர்மாறாக இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சு. ஹேசில்வுட் இடத்தை ஜேக்கப் டஃபி சிறப்பாக நிரப்பிக் கொண்டிருக்கிறார். நல்ல பவுன்சர்கள் வீசுகிறார்கள். ரன் கொடுத்தாலும், புதிய பந்தில் விக்கெட்டுகள் எடுக்கிறார். புவனேஷ்வர் குமார் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தற்போது 200 ஐபிஎல் விக்கெட்டுகள் கைப்பற்றிவிட்டார். குருனால் பாண்டியாவோ பவுன்சர் வீசுவது, சைட் ஆர்ம் வீசுவது என்று என்னென்னவோ செய்கிறார். பேட்டர்களை குழப்பிக் கொண்டிருக்கிறார். இது பார்ப்பதற்கு முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால், அது அவர்களுக்கு நல்ல முடிவுகளைக் கொடுக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பிரச்னையைப் பற்றித்தான் சீசன் தொடங்கியது முதல் பேசியிருக்கிறோம். பேட்டிங் நன்கு பலமாக இருக்கிறது என்று நினைத்திருந்தவர்களுக்கு அங்கேயும் சில பிரச்னைகள் எட்டிப்பார்க்கவே செய்கிறது.

ஒரு மிகச் சிறந்த டி20 உலகக் கோப்பைக்குப் பின் வந்த சஞ்சு சாம்சன் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் அந்த உலகக் கோப்பை ஃபார்மை ஐபிஎல்லில் சூப்பர் கிங்ஸுக்கு எடுத்து வர முடியாமல் தடுமாறுகிறார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடிடவில்லை. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவும் இந்தப் போட்டியில் விரைந்து வெளியேறினார். நெருக்கடியான சூழ்நிலை அவர்களின் செயல்பாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 250 போன்ற ஸ்கோரை சேஸ் செய்யும் போது ஒவ்வொரு டாட் பாலுமே கூட மலையளவு நெருக்கடியை அதிகரிக்கும். அதனால், அவர்கள் எல்லா பந்துமே அடிக்க முயற்சி செய்யவேண்டும். ஆனால், அது இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸுக்கு பலன் தரவில்லை.

தொடர்ந்து மூன்றாவது தோல்விக்கு வித்திட்ட விரீயமற்ற சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு

பட மூலாதாரம், Getty Images

“பிரெவிஸ், தோனி இல்லாதது பெரும் குறை”

இன்னொரு முக்கியமான விஷயம் டெவால் பிரெவிஸ் மற்றும் மஹேந்திர சிங் தோனி ஆகியோரையும் சிஎஸ்கே மிஸ் செய்கிறது. பிரெவிஸ் மிடில் ஆர்டரில் அணிக்குப் பெரும் உத்வேகம் கொடுத்திருப்பார். கடைசி கட்டத்தில் தோனியின் ஹிட்டிங் அணிக்கு வலுசேர்த்திருக்கும். ஆனால், அவை இரண்டுமே தற்போது இல்லாமல் போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் களத்தில் தோனியின் அனுபவம் இல்லாததுமே சூப்பர் கிங்ஸுக்குப் பின்னடைவு தான். அவர் களத்தில் இருந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும்.

சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை தரும் விஷயங்கள்

இந்த பிரச்னைகள் இருந்தாலும் சர்ஃபராஸ் கானின் செயல்பாடு தூரத்தில் தெரியும் ஒளிபோல் இருக்கிறது. அவர் தனி ஆளாக அந்த டாப் ஆர்டரில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவர் தங்கம் போல. அடிப்படை விலையான 75 லட்ச ரூபாய்க்கு அவர் கிடைத்தார். சையது முஷ்தாக் அலி தொடரில் அவர் ஆடிய விதம் பிரமாதமாக இருந்தது. அப்படியொரு செயல்பாட்டுக்குப் பின் அவரை எப்படி 75 லட்ச ரூபாய்க்கு எடுக்க முடிந்தது என்று நான் ஆச்சர்யப்பட்டேன். சூப்பர் கிங்ஸுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் அது. இப்போது பார்த்தால் அவர்தான் 14 கோடி ரூபாய் வீரரைப் போல் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அவர் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரால் லேப் ஷாட்கள் ஆடமுடியும். ஸ்கொயர் திசைக்கு முன்னாலும் ஆடமுடியும். தற்போது நன்கு ஃபிட்டாகவும் மாறியிருக்கிறார். நிச்சயமாக சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசன் போகப்போக அவர் மிகவும் முக்கியமான வீரராகத் திகழ்வார்.

சிஎஸ்கேவுக்கு இன்னொரு பாசிடிவ் என்றால் அது லோயர் மிடில் ஆர்டரில் பிரஷாந்த் வீர் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரின் செயல்பாடு. பந்துவீச்சில் அதிக ரன்கள் கொடுத்திருந்தாலும் ஓவர்டன் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார். அவர் விளையாடிய 2 போட்டிகளிலுமே அவர் நல்ல பங்களிப்பைக் கொடுத்தார். அதேபோல் இளம் பிரஷாந்த் வீர் தன்னிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பேட்டிங் செயல்பாட்டைக் காட்டினார். ஆரம்பத்தில் மெதுவாக இன்னிங்ஸைத் தொடங்கினாலும் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை பின்னர் காட்டினார். இந்த விஷயங்கள் நிச்சயம் சூப்பர் கிங்ஸுக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல விஷயங்கள்.

தொடர்ந்து மூன்றாவது தோல்விக்கு வித்திட்ட விரீயமற்ற சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு

பட மூலாதாரம், Getty Images

‘போராட்ட குணம் அவசியம்’

எப்படிப் பார்த்தாலும் சூப்பர் கிங்ஸ் அணி சரி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. இன்னும் அவர்கள் 11 லீக் போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கிறது. அதனால் விரைவில் செய்யப்படும் மாற்றங்கள் நன்மை விளைவிக்கலாம். அதேசமயம் இது ஒரு வீரரின் திறனில் மாற்றம் கொண்டு வரக்கூடிய காலகட்டமும் அல்ல. அவர்களின் மன உறுதியில் மாற்றம் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். அதற்கு முக்கியமாக களத்தில் போராட்ட குணத்தைக் காட்டத் தொடங்கவேண்டும், வெற்றி பெறத் தொடங்கவேண்டும்.

இதற்கு முன்பும் சூப்பர் கிங்ஸ் இப்படியான சூழ்நிலைகளில் இருந்திருக்கிறது. 2010ல் இப்படி கடினமான சூழ்நிலைகளில் இருந்து வந்து கோப்பையையே வென்றிருக்கிறார்கள். ஆனால், அப்போது அணி இருந்த மனநிலையே வேறு. தோல்வியே பெற்றாலும் எப்படி தோற்கிறோம் என்பது முக்கியம். சூப்பர் கிங்ஸின் இந்தத் தோல்விகள் மிகவும் மோசமாக வந்திருக்கின்றன. விளையாடிய 3 போட்டிகளிலுமே அந்த அணி படுதோல்வி அடைந்திருக்கிறது. எதிரணிகள் மிகவும் எளிதாக வென்றிருக்கிறார்கள். இந்த வீரர்கள் எந்தவொரு போட்டி மனப்பான்மையையும் காட்டாமல், தயார் நிலையிலும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த இடத்தில் ஆர்சிபி முற்றிலும் மாறுபட்ட அணியாக இருக்கிறது. கிரிக்கெட் நம்பிக்கையால் தீர்மானிக்கப்படும் விளையாட்டு என்பார்கள். அந்த வகையில் ஆர்சிபி-யின் நம்பிக்கை அளவுகடந்து இருக்கிறது. அனைத்துத் துறைகளிலுமே அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். மீண்டும் கோப்பை வெல்லக்கூடிய அணியாகத் தெரிகிறார்கள்.

இந்த இடத்தில் அவர்களின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளாரின் பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்டாகவேண்டும். தடுமாறும் ஒரு அணியை தூக்கி நிறுத்துபவர் தான் சிறந்த பயிற்சியாளர். ஆண்டி ஃபிளார் ஆர்சிபி-யை அப்படித் தூக்கி நிறுத்தியிருக்கிறார். உதாரணமாக 2024 சீசனில் முதல் 8 போட்டிகளில் அந்த அணி 7 போட்டிகளைத் தோற்றிருந்தது. ஆனால், அதன்பிறகு 6 போட்டிகளை வென்று அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதிலிருந்து அவர்கள் கொஞ்சம் கூட பின்தங்கவேயில்லை.

தொடர்ந்து மூன்றாவது தோல்விக்கு வித்திட்ட விரீயமற்ற சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு

பட மூலாதாரம், Getty Images

‘எதிரெதிர் திசையில் பயணிக்கும் சிஎஸ்கே, ஆர்சிபி’

ஐபிஎல்லில் அதிக கவனம் பெறும் இந்த இரண்டு அணிகளும் எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன. ஆர்சிபி ஐபிஎல் கிரிக்கெட் உலகின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சூப்பர் கிங்ஸோ உச்சத்தில் இருந்து பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியுமே இந்த இரு அணிகளின் சமீபத்திய பயணத்தின் பிரதிபலிக்காகவே இருந்தது.

நான் சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவன். அது ஒரு மிகச் சிறந்த சூழலாக இருந்திருக்கிறது. ஆனால், இப்போது அது பெருமளவு மாறியிருக்கிறது. ஒரு முன்னாள் வீரராக இது எனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கிறது. இருந்தாலும் இது மிகப் பெரிய தொடர். இன்னும் 11 லீக் போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கிறது. அதனால் இங்கு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது. விரைவில் சூப்பர் கிங்ஸ் எழுச்சி பெற்று அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.

ஆனால், சூப்பர் கிங்ஸ் அணியும் வீரர்களும் நம்பிக்கையோடு இருந்தால் மட்டும் போதாது. களத்தில் தாக்கம் ஏற்படுத்தவேண்டும்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU