Home Latest news tamil சமீபத்திய செய்தி சிறுமியை நகத்தால் கீறிய அதேநாளில் தந்தையை கடித்த நாய் – சிறு அலட்சியத்தால் பறிபோன உயிர்

சிறுமியை நகத்தால் கீறிய அதேநாளில் தந்தையை கடித்த நாய் – சிறு அலட்சியத்தால் பறிபோன உயிர்

11
0

SOURCE :- BBC NEWS

ரேபிஸ் பாதிப்பு, வளர்ப்பு நாய், வீட்டில் வளரும் நாய்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வீட்டில் வளர்த்த நாய் நகத்தால் கீறிய பின்னர், ரேபிஸ் தடுப்பூசி ஏதும் செலுத்திக் கொள்ளாத நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

சிறுமியின் தந்தையையும் இதே நாய் கடித்த நிலையில் தடுப்பூசி எடுத்ததால் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் நகக் கீறல் தானே என அலட்சியமாக விட்டதால் சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுமி ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பதால், அவரது உடல் இதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அரசு அதிகாரிகள் கண்காணிப்புடன் தகனம் செய்யப்பட்டது.

ரேபிஸ் நோயின் தாக்கம் என்ன? சிறு அலட்சியம் கூட எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி

2 மாதம் கழித்து தீவிரமான ரேபிஸ் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆயத்த பின்னலாடை தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி லெட்சுமி. இவர்களது மகள் செல்வசுஹாசினி (14 வயது). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஜனவரி 20-ஆம் தேதி வீட்டில் வளர்த்த நாயுடன், செல்வசுஹாசினி விளையாடும்போது நாய் நகத்தால் கீறியுள்ளது. சிறுமிக்கு எந்த தடுப்பூசியும் கொடுக்கப்படவில்லை. பின்னர், கடந்த 28-ஆம் தேதி செல்வ சுஹாசினிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

ரேபிஸ் பாதிப்பு, வளர்ப்பு நாய், வீட்டில் வளரும் நாய்

“நல்லா பேசிட்டு இருந்த பொண்ணு திடீரென இறந்ததை எங்களால நம்ப முடியவில்லை,” என்கிறார் உயிரிழந்த செல்வ சுஹாசினியின் உறவினரான முத்தமிழ் செல்வம்

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “செல்வ சுஹாசினி கடந்த மார்ச் 27-ஆம் தேதி மாலை திடீரென உடல் வலி அதிகமாக இருப்பதாக அவரது தந்தையிடம் தெரிவித்தார்.

மறுநாள் சனிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டதால் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம்.” என்கிறார்.

இரண்டு நாட்களாக உணவு எடுக்காமல் இருந்த சுஹாசினி தண்ணீர் குடிக்க மிகவும் பயந்ததால் ரேபிஸ் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் முத்தமிழ் செல்வம்.

“நாய் எதுவும் கடித்ததா” எனக் கேட்டதற்கு சுஹாசினி கடந்த ஜனவரி மாதம் வீட்டில் வளர்க்கும் நாய் நகத்தால் கீறியதில் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அதற்காக எந்த தடுப்பூசியும் போட்டு கொள்வில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுஹாசினியின் ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ததில் ரேபிஸ் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உடனடியாக “தூத்துக்குடி அரசு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுஹாசினியை சனிக்கிழமை இரவு அனுமதித்தோம்.” என்கிறார் செல்வம்.

ரேபிஸ் பாதிப்பு, வளர்ப்பு நாய், வீட்டில் வளரும் நாய்

பட மூலாதாரம், Getty Images

மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை தனிமைப்படுத்தப்பட்ட அறையில் (Quarantine Ward) வைத்தருந்தனர். இருப்பினும் அவ்வப்போது, “எங்களுடன் இயல்பாக பேசி சிரித்து வந்தார் சுஹாசினி,” என்கிறார் செல்வம்.

ஆனால் திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சுஹாசினியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. “எங்களிடம் மோசமாக கத்தி கூச்சலிட்டு பேசி கடுமையாக நடந்து கொண்டார்” என நினைவு கூர்ந்தார் செல்வம்.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சுஹாசினியை தனிமைப்படுத்தும் அறையை விட்டு வெளியே வராத அளவு அங்கேயே வைத்திருந்த நிலையில் திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2 மணி அளவில் சுஹாசினி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊர் மக்கள்

“எங்களால் சுஹாசினி இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, பேசி சிரித்துக்கொண்டிருந்த குழந்தை திடீரென உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து இதுவரை அவரது தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர்களும் வெளியே வர முடியவில்லை,” என செல்வம் கூறுகிறார்.

சுஹாசினி ரேபிஸ் நோயால் உயிரிழந்ததால் அரசு மருத்துவமனையில் புதியம்புத்தூரைச் சேர்ந்த 75 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லாரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்.” என கூறும் முத்தமிழ் செல்வம், “சுஹாசினியை நகத்தால் கீறிய நாயை கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வருகிறோம். அது நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய்களில் ஒன்று. எந்த நாய் கடித்தாலும், கீறினாலும் உடனடியாக ஊசி போட்டுக் கொள்ளுங்கள் ஊசி போடுவதை தவிர்த்ததால் இன்று எங்கள் பிள்ளையை நாங்கள் இழந்து விட்டோம்.” என்றார்.

ரேபிஸ் பாதிப்பு, வளர்ப்பு நாய், வீட்டில் வளரும் நாய்

பட மூலாதாரம், Getty Images

தடுப்பூசி செலுத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்

நாய் நகத்தால் கீறிய உடனே தடுப்பூசி செலுத்திருந்தால் சிறுமியின் உயிர் போயிருக்காது என்கிறார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் முரளிதரன்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர்,” செல்வ சுஹாசினியை கடந்த ஜனவரி மாதம் அவரது வீட்டில் வளர்த்த நாய் நகத்தால் காலில் கீறியுள்ளது. அதே நாள் அவரது அப்பாவையும் கடித்துள்ளது. அவரது அப்பா உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் நகம் கீறலுக்காக எந்த மருத்துவ சிகிச்சை எடுக்காததால் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு பின் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.” என்றார்.

ரேபிஸ் நோயிக்கு குறிப்பிட்ட சிகிச்சை என்று ஒன்றுமில்லை எனக் கூறும் மருத்துவர் முரளிதரன், “ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த உடனேயே அவருடைய நடவடிக்கைகளை கண்காணித்த நரம்பியல் மருத்துவர் ரேபிஸ் நோயால் சுஹாசினி பாதிக்கப்பட்டு இருப்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்தார்.” எனத் தெரிவித்தார்

சிறுமி நாய் கீறிய உடனே தடுப்பூசி எடுத்திருந்தால் நிச்சயம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ரேபிஸ் பாதிப்பு, வளர்ப்பு நாய், வீட்டில் வளரும் நாய்

பட மூலாதாரம், Getty Images

ரேபிஸ் நோய் தொற்று பாதித்த நாய் நக்கினாலோ, கடித்தாலோ அல்லது நகத்தால் கீறினாலோ ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும். நாய் எச்சில் பட்ட உடனே சோப்பு போட்டு தண்ணீரில் சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், “60 நாட்களுக்கு முன்பு சிறுமியை நாய் நகத்தால் சிறிய அளவு கீறியதால் நரம்பு மண்டலத்தை உடனடியாக பாதிக்கவில்லை, நாட்கள் செல்லச் செல்ல தடுப்பூசி போடாததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.”

“செல்வ சுஹாஷினி ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு வரும்போது ஹைட்ரோபோபியா (hydrophobia) பாதிப்பு அதிகமாக இருந்தது. ஹைட்ரோபோபியா பாதிக்கப்பட்ட நபர் தண்ணீர் குடிக்கவோ அல்லது பார்க்கவோ பயப்படுவார், மேலும் தொண்டையில் கடுமையான வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படும்.” என்றார்

அதன் அடிப்படையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கியதால் சிறுமி உயிரிழந்தாக கூறுகிறார் மருத்துவர் முரளிதரன்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

உடலை ஏன் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை?

மருத்துவர் முரளிதரன் கூறுகையில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட உடல்களைக் குடும்பத்தினரிடம் நேரடியாக ஒப்படைக்க கூடாது. எனவே மருத்துவமனை நிர்வாகம் உடலை உரிய மரியாதையுடன் மாநகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைத்தோம்.

சுகாதார ஆய்வாளர் உடலை முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் ஒப்புதலின் படி அவர்களின் முறைகளை பின்பற்றி தகனம் செய்துள்ளனர்.

“ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட மாட்டாது. உடலில் இருந்து வெளியாகும் உமிழ்நீர் உள்ளிட்ட திரவங்கள் மற்றவர்கள் மீது படும்போது ரேபிஸ் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் மருத்துவ நடைமுறைப்படி உடல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்கிறார் முரளிதரன்.

பிரச்னைகளை பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு

வீட்டு நாய்களை பராமரிப்பது எப்படி?

வீட்டில் வளர்க்கும் நாய்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.

“வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்துவது அவசியம். மூன்று மாதம் ஆனதிலிருந்து நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் இந்த தடுப்பூசி அருகே உள்ள அனைத்து அரசு கால்நடை மருத்துவமனையிலும் போடப்படும்.”

“வீட்டில் வளர்க்கும் நாய் தான் என அலட்சியமாக இருக்கக்கூடாது, கவனத்துடன் பழக வேண்டும். நாய் நகத்தால் கீறினாலோ கடித்தாலோ அல்லது நாய் எச்சில் பட்டாலோ உடனடியாக மருத்துவர்களை அணுகி தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் கடித்ததாக சந்தேகம் ஏற்பட்டாலே உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.”

“நாய் எந்த அளவு நம்மளை கடினமாக கடிக்கிறதோ அந்த அடிப்படையில் அதனுடைய பாதிப்பு ஏற்படும். மூளைக்கு அருகே உள்ள பகுதியில் கடித்தால் உடனடி பாதிப்பு ஏற்படும் கால் போன்ற இடங்களில் கடித்தால் அதனுடைய தாக்கம் சற்று குறைவாக இருக்கும் ஆனால் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்,” என்கிறார் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராமகிருஷ்ணன்.

விலங்குகள் கடித்த உடனேயே தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ரேபிஸ் தொற்று உறுதியான ஒருவர் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்கிறார் முன்னாள் பொது சுகாதார துறை இயக்குநரான குழந்தைசாமி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் பாதிப்பில் இருந்து ஒருவர் உயிர் பிழைத்ததாக எந்தவொரு ஆவணமும் இல்லை. கிருமியில் இருந்து வைரஸ் பரவுவதற்கு சராசரியாக 10 நாட்கள் ஆகும், கடி ஏற்பட்ட இடத்தைப் பொருத்து இது மாறுபடும். ரேபிஸ் தடுப்பூசி 7 நாட்களில் வேலை செய்ய துவங்கும். எனவே தாமதமின்று தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் இதற்கு ஒரே வழி,” என்றும் தெரிவித்தார்.

ரேபிஸ் நாய்கள் மட்டுமின்றி பூனைகள், கால்நடைகள் வன விலங்குகள் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கும் பரவக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC